சகித்தவர்கள்...

5 Nov 2014

சுண்டல் விற்பவன்
சூடா
தேங்கா
மாங்கா
பட்டானி சுண்டல்...'

முதலது
பெரும்பாலும் இருப்பதில்லை.

அவனுக்கு
ஐந்தாவது படிக்கவேண்டிய
வயதாயிருக்கலாம்.
'அண்ணே'
என்ற விளித்தளில்
ஏக்கங்கள் மிச்சமிருந்தன.
ஐந்து ரூபாயுடன்
எண்ணங்களும்
அவனுடன் சென்றுகொண்டன.

கொஞ்சம் அவனைக் கழுவினேன்
முடி திருத்தினேன்
மூக்கை சிந்தவைத்து வழித்துப்போட்டேன்
பவுடர்...ஹ்ம்ம்...தேவையில்லை
கையில் புத்தகம் தந்து
சீருடை அணிவித்துப்பார்த்தேன்.
கடலலை
என்னை இரண்டங்குலங்கள்
புதைத்திருக்கிறது.

சிரித்துக்கொள்கிறேன்

நிஜத்தில் அதோ
உலாவிக்கோண்டிருக்கிறான்.
ஆங்காங்கே முயங்கிக்கிடக்கும்
காளையரும் அவர்களின்
விலையில்லா மாதுகளும்
அவனை உதறுகிறார்கள்.

பஞ்சுமிட்டாய் விற்கும்
தோழனோடு பேசிக்கொண்டிருக்கிறான்.
சிரிக்கிறார்கள்.
வலியேதும் அதில் தெரிகிறதா
என ஆய்வு செய்கிறேன்.

ஏட்டய்யா
சம்சாரத்திற்கும் சேர்த்து
ஓசி வாங்கிக்கொள்கிறார்.

கடலில் கால் நனைப்பதை
அவன் சிலாகிக்கக்கூடாது.

மறு 'அண்ணே'வுடன்
மீண்டும் நெருங்குகிறான்.
'படிக்க விருப்பமில்லையா'
என்றதும்
'ங்கோத்தா' எனத் தொடங்கி
பதிலளித்துக்கொண்டிருக்கிறான்

°