சகித்தவர்கள்...

31 Dec 2011

குட்டியாய் ஓர் ஓவிய கண்காட்சி..

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,


               Facebook தளத்தில் பகிர்ந்திருந்த எனது ஓவியங்கள் சிலவற்றை மயிலிறகில் பதியவேண்டி நண்பர்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்..நேரம் பணிக்கும் போது பார்த்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்..              பள்ளி பருவத்தில் கவிதைகளுக்கு முன்பே எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது நிச்சயமாய் ஓவியங்கள்தான்..அந்த நாட்களில் எப்போதெல்லாம் அடங்காத கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் ஓவியம் தீட்டுவதைத்தவிர வேறேதும் செய்ய முடியாத கையாலாகாத்தனமே என் தூரிகையின் திறனை கொஞ்சமாய் மெருகேற்றியது..சைக்கிள் ரிக்ஷாவில் பள்ளிக்கு செல்லும் வழிமுழுதும் உள்ள கடைகளின் முகப்பு பலகைகளில் வரைந்த ஓவியங்களைப் பார்த்துக்கொண்டேதான் செல்வேன்..

               ஓவியப்பள்ளிகள் ஏதும் அப்போதெல்லாம் இருந்ததாய் தெரியவில்லை..எனக்கு தெரிந்தவரை,என்னால் முடிந்தவரை,எனக்கு பிடித்ததை மட்டும் ஆசையாய் வண்ணமாக்கிக்கொள்வதுண்டு..உறவினர்கள் யாரும் அவைகளைப் பார்க்க நேரிடும்போது உடனே,"அப்பன மாதிரியே புள்ளையும்..!" என்று கூறுமிடத்தில் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போவேன்..தாத்தாவின் சொத்துக்கள் பெரியப்பன்களால் மறுக்கப்பட்டு,படிப்பைத் தொடர வழியின்றி இருந்த போது பேனர் ஓவியங்கள் வரைந்துதான் அப்பா மேற்படிப்பை தொடர்ந்தாராம்..ஸ்ருதி ஹாசனை வைத்து என் அப்பாவிற்கும் எனக்குமான ஓவியக்கலைக்கான மரபணுக்களை ஒப்பிட்டு பார்த்தால்,வெறும் சொற்ப விழுக்காடுகளே பொருந்தும்..அவர் அந்தளவிற்கு ஓர் அசாத்திய திறனாளி..

               வரையும் ஓவியங்களை நான் ஒரே மூச்சில் வரைந்து முடிப்பதில்லை..காரணங்கள் கண் சோர்வும்,ஈடுபாடு இல்லாத மனமுமே..அப்பாவிடம்,"எப்படி நீங்க வரைஞ்சா மட்டும்,தொடர்ந்து வரையுறீங்க?" என்று எட்டாம்/ஒன்பதாம் வகுப்பு படித்த நாட்களில் ஒரு முறை கேட்டபோது,"உனக்கு இது வெறும் பொழுதுபோக்கு,ஆனா எனக்கு ஒரு காலத்துல இதுதான் சோறு போட்டுச்சு" என்று மிக சாதாரணமாக சொல்லியதன் அழுத்தம் நீண்ட நாட்களுக்கு எனக்கு இருந்தது..இப்போதெல்லாம் வரையும்போது எவ்வளவு நேரம் எடுத்துகொள்கிறேன் என்றும் குறித்துகொள்கிறேன்..

                நாளை புத்தாண்டு தினம்,ஜனவரி முதல் ஞாயிற்று கிழமை என்பதால் முறைப்படி நாளை பதிவிட வேண்டிய "மயில் அகவும் நேரம்-04 :௦௦" கட்டுரையை தொகுக்க முற்படும் போதுதான்,2011 இல் 49 பதிவுகள் எழுதியாகியுள்ளது என்பதை கவனித்தேன்..அவசரமாய் ஓர் அரை சதம் அடித்து ஆண்டை நிறைவு செய்யலாம் என்று முடிவெடுத்ததும்,நினைவில் வந்தது நீண்ட நாளாய் மனதில் நின்ற இந்த இடுகையே...இதில் நான் இந்த ஓராண்டில் வரைந்த நான்கு ஓவியங்களை மட்டுமே பகிர்கிறேன்..மற்றவை பின்னாளில் நேரம் பணிக்கும் போது..


நண்பர்கள் படங்களை சொடுக்கி கொஞ்சம் பெருந்திரையில் காண வேண்டுகிறேன்..


'இயற்கை காட்சிகள் தண்ணீரோ சூரியனோ இல்லாமல் வரைந்து பழகிக்கொள்'
 என்று நண்பன் ஒருவன் அறிவுறித்தியுள்ளான்...
இனிமேல்தான் முயற்சிக்கவேண்டும்..

'டேய்..பெயிண்டிங் ஃபினிஷ் நல்லா இல்லன்னு மாடர்ன் ஆர்ட்டா மாத்தி சமாளிச்சிட்டியா?'
என்று அதே நண்பன் கேலி செய்த ஓவியம்..

பென்சிலோடு நிறுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று அதிமேதாவித்தனமாக யோசித்ததால் வண்ணம் தீட்டவில்லை..
எனினும் இன்றும் என் தங்கையின் பொக்கிஷம் இதுவே..

என் அப்பா பாணியில் ஒரே மூச்சில் நான் வரைந்து முடித்த முதல் ஓவியம்..
A3 அளவில் தொடர்ந்து பதினொரு  மணி நேரங்கள் வரைந்து முடித்ததும் இனிமேல் இத்தகைய வீராவேச முயற்சி எடுக்க கூடாது என்று அன்றே முடிவு செய்துவிட்டேன்..


நண்பர்கள் அனைவருக்கும் 2011 ஆண்டில் நிகழ்ந்த நல்லவைகள் வரும் ஆண்டிலும் தொடர வாழ்த்துக்கள்...

நன்றியுடன்...சி.மயிலன்..

30 Dec 2011

கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்...

அன்பிற்குரிய விருப்பதாரர்களே..
"ச்சேட்டா..ஒரு ச்சாயோ..", "ஹோ..இவ்விடே கரிமீன் உண்டோ", "குட்டியோ?...எவ்விடே"...இவ்வாறு இழுத்து இழுத்து ஐந்து நாட்கள் பேசியே வாய் ஒரு பக்கமாய் வலிப்பதையும் பொறுத்துக்கொண்டு இந்த பதிவினை எழுத தொடங்குகிறேன்..

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக காத்திருந்த ஒரு பயணத்தை முடித்துவந்த திருப்தி ஒரு ஓரமாய் இருந்தாலும், ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு கி.மீ. சாலைவழி பயணம் உடம்பை ஒருவிதமாய் பதம் பார்த்துவிட்டது....அகில இந்திய அளவிலான அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாடு இம்முறை கேரளமண்ணில்...தமிழகம்-கேரளம் இடையேயான இந்த பதற்றமான சூழலில்,கண்டிப்பாக வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அனுமதி கேட்கவே இல்லை...தங்கை,சில நண்பர்கள் மற்றும் சில நலம்விரும்பிகளின் ஏகோபித்த எதிர்ப்புடன் ஒரு வழியாய் 24ஆம் தேதி இரவு நண்பர்கள் ஐந்து பேர் ஒரு காரில் கிளம்பிவிட்டோம்..


சலிப்பு தெரியாமல் இருக்க நண்பர்கள் மாறி மாறி காரை விரைந்துகொண்டிருக்க, இசைஞானி மட்டும் மாறாமல் தஞ்சை,திருச்சி,கரூர் என வழிநெடுக்க ஒலித்துக்கொண்டிருந்தார்..ஆங்காங்கே ஐயங்கார் பேக்கரி தேநீர்,நெடுஞ்சாலையோர திறந்தவெளி சிறுநீர் என்று ஒருவழியாக கோவையைக் கடக்கும் நேரம் வந்தது..கேரள எல்லை நெருங்க போகும் நேரம் வந்ததும் "பார்டர் வந்துருச்சா?" "வரலையா?இன்னும் எவ்ளோ தூரம் இருக்கு?" "தாண்டிட்டோமா?" என்று ஏதோ பாகிஸ்தான் எல்லையை தாண்டும் இரகத்தில் கேள்விகள் காருக்குள் கேட்ட வண்ணம் இருந்தது..போதிதர்மனை எத்தனை முறை யோசித்து பார்த்தாலும் அந்த இடத்தில ஏனோ தமிழன் என்ற திமிர் மட்டும் வர மறுத்தது..


பாலக்காட்டில் கிட்டத்தட்ட பத்து கி.மீ. கடந்த பின்னர் ஒரு தேநீர் அருந்தலாம் என்ற ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது..கடைக்குள் சென்றதும் எங்களுள் அதீத குசும்பு பிடித்த நண்பர் ஒருவர், "ச்சேட்டா, நாலு ச்சாய், ஒரு கோஃபி" என்று மலையாள இராகத்தில் கேலியாய் ஆர்டர் செய்ததும் மீதி நால்வருக்கும் சற்றே கிலியானது..தேநீரை கையில் வாங்கிய அவர் மீண்டும் தொடர்ந்தார்,"இது ச்சாய் அல்ல..ஆய்" என்று அவர் முடிக்கும் முன்னரே ,"தக்காளி...இவன் நமக்கு அடி வாங்கி தராம விடமாட்டான் போல" என்று நாங்கள் அவரசமாய் அவரை இழுத்துக்கொண்டு இடத்தை காலி செய்து கொச்சியை நோக்கி விரைந்தோம்..


ஐந்து நாள் மாநாடு கொச்சியிலுள்ள லீ-மெரிடியன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..என்னதான் கலை,பாரம்பரியம் என்றாலும் முகத்தில் சாயமிட்டுகொண்டு,கேப்டன் விஜயகாந்த் மாதிரி கன்னங்களை துடிக்கவிட்டு ஆடும் அந்த கேரள கதக்களி வேடம் எனக்கு அறவே பிடிக்காது..ஆனால் வரவேற்பில் திரும்பும் திசையெல்லாம் கதக்களி முகமே இளித்துகொண்டு எனக்கு கடும்வெறுப்பேற்றியது..அதையும் பொறுத்து உள்ளே சென்றால் பெரும்பாலான விரிவுரையாளர்கள் மலையாள நெடி கலந்த ஒரு மாதிரியான ஆங்கிலம் பேச உஷ்ணம் மேல்மண்டையில் ஆணியடித்தது..(நல்லவேளை,வாசலில் கொடுக்கபட்டிருந்த அன்பளிப்பு பொட்டலத்தில் சில விளம்பர தலைவலி மாத்திரைகளும் அடக்கம்)


மாலைநேரமானதும் கொச்சியில் உள்ள 'marinedrive' பகுதியில் ஒரு படகுசவாரி முடித்துவிட்டு,அரை/முக்கால் கால்சட்டை சகிதம் திரிந்த எங்களை வேஷ்டி கட்டிய சேட்டன்கள் முறைத்து பார்ப்பதுபோலதான் தோன்றியது..சாலையோரங்களில் உள்ள விளம்பர பலகைகள் அனைத்திலும் (அநேகமாக சுடர்மணி ஜட்டி மட்டும் தவிர்த்து) மோகன்லால்,மம்மூட்டி மட்டுமே...ஒரு துணிக்கடையை மட்டும் ஷாருக் திறந்து வைத்திருப்பார் போல..அந்த துணிக்கடைகாரன் கேரள சந்துபொந்துகள் முதற்கொண்டு பேனர் வைத்து அலப்பறை செய்திருந்தான்..ஏம்பா,மோகன்லால் இரசிகருக்கெல்லாம் சொரனையே கிடையாதா? (ஏதோ..நம்மளால முடிஞ்சது..)


சாலையோரமாய் புட்டு,ஆப்பம் வாசம் வீச அந்த கடைக்குள் அணிவகுத்தோம்..மீண்டும் அதே நண்பர்,"ச்சேட்டா..பத்து ஆப்பே" என்று தொடங்க  அவசரமாய் அவரைக் கட்டுபடுத்தி வைத்தோம்.. கண்ட கருமத்திற்கெல்லாம் தேங்காய் எண்ணையை ஊற்றி ருசிக்கும் அவர்களிடம் ஆப்பத்திற்கு தேங்காய் பால் கேட்டதும் என்னமோ அவர்கள் ஊர் அமலாபாலைக் கேட்டதுபோல கோவம் வந்துவிட்டது..போனால்போகிறது என்று புட்டை எடுத்து வாயில் வைத்தால் அதில் மருந்துக்குக்கூட சர்க்கரை இல்லை..கொஞ்சம் சர்க்கரை கேட்டதற்கு அந்த கடையின் பணியாள் கடை முதலாளியிடம் எங்களை ஏளனமாய் காட்டி சிரித்தானே தவிர சர்க்கரை தரவில்லை..அதைவிட கொடுமை கடைசிவரை குடிப்பதற்கு ஒரு குவளை தண்ணீர்கூட தரவில்லை..அந்த மலையாள கபோதியிடம் தண்ணீர் கேட்க ஐவரும் விரும்பாமல் வெளியேறிவிட்டோம்..கொஞ்சம் நடந்து,ஒரு பெட்டிக்கடையில் இரண்டு லிட்டர் தண்ணீர் புட்டியை வாங்கியதும் அந்த கடைக்காரர் அதிசயமாய் 'தேங்க்யூ' என்றார்..தண்ணீர் விஷயத்தில் தமிழர் மீது விசுவாசம் உள்ள மலையாளி போலும்..


அடுத்தநாள் விடியற்காலை மற்ற சுற்றுலா பயணிகள் தூக்கம் கலைக்கும் முன்னரே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வண்டியை கிளப்பிவிட்டோம்..ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், மணிரத்னமும் ஒரு பேட்டியில் அவ்விடத்தைப்பற்றி அளவிற்கு அதிகமாய் மெச்சியிருந்தார்கள்..அங்கே சென்றபிறகுதான் அவர்கள் கூற்றின் உண்மையுணர்ந்தோம்..அதிகாலையில் கூட்டம் இல்லாததால் தனிமையில் ஒரு தவம் போல் இருந்தது அந்த அனுபவம்..எந்த ஒரு புகைப்படமும் அவ்விடத்தின் எழிலை பிரதிபலிக்க முடியாது என்பதால் கட்டாயமாய் இங்கே புகைப்படத்தை தவிர்க்கிறேன்..மலை வழிகளில் உள்ள கடைகளில் பழங்களை அரிந்து புட்டிகளில் அடைத்திருந்த விநோதத்தை மட்டும் 'இவ்விட நோக்கும்..'
அன்று மாலை ஆலப்புழாவில் அடுத்த நாளுக்கான படகு-வீடு ஒன்றை முன்பதிவு செய்ய சென்றிருந்தோம்..இது கேரளத்தின் சுற்றுலா சமயமாம்..எனவே ஐவருக்கான இரண்டு படுக்கை அரை வசதியுள்ள படகு-வீட்டின் குறைந்தபட்ச அரசாங்க நிர்ணய கட்டணம் பதினைந்தாயிரம் ரூபாய் என்று விசாரித்திருந்தோம்..ஆனால் சென்ற நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்துமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தன..எனவே சில தனியார் சுற்றுலா தரகர்களை அணுகினோம்..முதல் தரகனிடம் ஆங்கிலத்தில் பேசிய வரை பதினெட்டாயிரமாக இருந்த பேரம் தவறி விழுந்த தமிழ் சொற்களால் இருபதுகளைக் கடந்தது..இரண்டாவது தரகர் நேரடியாக "நீங்கள் தமிழா?" என்றார்..சரி இதுவும் ஒத்துவராது என்று நாங்கள் முடிவு செய்யும்முன் "அல்ல,நான் கொறச்சு தமிழ் அறியும்,அதுக்குதான்" என்றார்..கொஞ்சம் நம்பிக்கை வந்தது..
'விண்ணைத்தாண்டி வருவாயா'வில் காண்பிக்கப்பட்ட ஆலப்புழாவின் அழகு கோடியில் ஒரு பகுதியே..படகு கடந்து செல்லும் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வோர் ஓவியம்..கரையோரமாய் வாழும் குழந்தைகளைப் பார்க்கும்போது நிச்சயம் பொறாமை படாமல் இருக்க முடியவில்லை..செல்லும் வழியில் எதிர்ப்படும் படகு-வீடுகளில் உள்ள வெள்ளைக்கார ஜோடிகள் கசமுசா நிலையில் கிடக்க,இங்கே ஒரு ஐந்து பேச்சுலர் மனங்கள் கருகி சாம்பலாகின..கருகும் வாசம் படகை செலுத்தும் சேட்டனுக்கு தெரியவர கரையோரம் உள்ள கள்ளுக்கடையில் நிறுத்திவிட்டார்..என் எட்டாம் வயதிலேயே,என் தாத்தா அவரது பனங்கொல்லையில் அவர் கண் பார்வையில் இறக்கிய சுத்தமான கல்லை என் அம்மாவை எதிர்த்து எனக்கு ஊட்டிவிடுவார்.."உடம்புக்கு ரொம்ப நல்லது" என்பது அவரின் வாதம்..முதல் அரை புட்டி அருந்தும்வரை மட்டும் தாத்தா ஞாபகம் நீங்கவில்லை.. 


கடைசி நாள் "கான்ஃபரன்ஸாவது ஒன்னாவது.." என்று ஆலப்புழாவிலேயே கடலோர குடிலொன்றில் குடியேறிவிட்டோம்..அன்றிரவு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கடற்கரையில் இசை நிகழ்ச்சியும் உணவு திருவிழாவும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..நன்றாக வயிறு முட்ட உண்டுவிட்டு கடற்கரையின் வெண்மணலில் சாய்ந்து இசை நிகழ்ச்சிக்கு ஆயத்தமானோம்..அரங்கேறியவை அனைத்தும் "என்னவளே,அடி என்னவளே..", "உயிரே..உயிரே.." இரக தமிழ் பாடல்களே...வழக்கமாய் கேட்பதைவிட அங்கே கேட்பதில் ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்தது..அடுத்த நாள் அதிகாலை கடற்கரை ஓரம் ஒரு ச்சேச்சி கடையில் ஒரு நல்ல தேநீருடனும், சிறு கடற்கரை நடையுடனும் குடிலை காலி செய்து ஊருக்கு தயாரிகிவிட்டோம்...


திரும்பும்போது இசைஞானிக்கு பதில் இசைப்புயல் எங்களுடன் இணைந்துகொண்டார்..மலையாள மண்ணில் இருந்த ஐந்து நாட்களும் நாங்கள் ஐவரும் தமிழர் என்பதால்மட்டும்,ஏதோ வேற்று கிரக வாசி போல ஒரு நெருடலுடனே சுற்றி திரிந்ததும், நாங்கள் எதிர்ப்படும் வேற்று நாட்டவரான வெள்ளைகாரர்களும் சில கருப்பர்களும் நம் தேசத்தின் ஒரு பகுதியான அங்கே சுதந்திரமாய் அலைவதும் மட்டும் திரும்பிவரும் வழிநெடுக்க ஏதோ ஒரு அழுத்தத்தை தந்துகொண்டே இருந்தது..


பின்குறிப்பு:
"யார்ரா இவன்?..கேரளாவ பத்தி பேசிபுட்டு மாநிலத்தின் அடையாளமான  ஓமனக்குட்டிய கண்டுக்கவே இல்ல.." என்று நினைத்து யாரும் அடியேனை ஏசவேண்டாம்...அடுத்த வாரம் "ஒரு தமிழனின் உளம்கவர்ந்த ஓமனக்குட்டிகள்" என்று ஒரு தனி ஜொள்பதிவே எழுதிவிடலாம் என்று உத்தேசித்துவிட்டேன்...


நன்றியுடன்..சி.மயிலன்
                       
                   


                    

19 Dec 2011

உன் விழியாலே..


அன்றைய தினம் 
தெருமுனை அடைந்த நீ
மெல்ல எனை   
திரும்பி பாராமல்  
சென்றிருந்தால்  
தவிர்க்கப்பட்டிருக்கும் 
என் சுரப்பிகளின் ஆர்பரிப்பும் 
சில பதற்ற நிலைகளும் 
ஒரு சாலை விபத்தும்...!

18 Dec 2011

யதேச்சையான எழுத்துகள் #3


அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

இந்த வருடத்தின் கடைசி அகவல் இது..பதிவுலகத்திற்கு இவ்வாண்டின் புதுவரவான என்னை ஏற்று கொண்ட நண்பர்களுக்கு அடியேனின் நன்றிகள்..

# நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த நாட்களில் என் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பாட்டி (அப்போது வயது கிட்டத்தட்ட எண்பதைத் தாண்டி இருக்கும்) தேர்விற்காக எனக்கு ஒரு புது பேனா ஒன்றை அன்பளித்தார்..அவர் ஒரு ஓய்வு பெற்ற 'அந்த கால' ஆசிரியை..தெளிவாக ஆங்கிலம் பேசக்கூடியவர்..சச்சின் டெண்டுல்கரின் தீவிர அபிமானி..(சதம் தவறினால் உண்ணாவிரதம் தான்)..காலையில் நாளிதழ் வந்ததும் அதிலுள்ள மாதிரி வினாத்தாளை நறுக்கி வந்து என்னிடம் கொடுத்து விடுவார்..அவரளித்த அந்த பேனாவைக் கொண்டுதான் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளை எழுதினேன்..அதன் பின்னர் நான்காண்டு இளநிலை மருத்துவ தேர்வுகள்,முதலாமாண்டு முதுநிலை தேர்வு,கொஞ்சம் அழகான எழுத்தில் சுமார் ரக கவிதைகள்,அசிங்கமாய் கிறுக்கும் மருந்து சீட்டுக்கள்,சில துரதிர்ஷ்ட குழந்தைகளின் பிறப்பு அறிக்கைகள்,சில நோயாளிகளின் மரண அறிக்கைகள் என்று அந்த பேனா பதினோராண்டுகளில் எனக்கோர் ஆறாம் விரலாகவே மாறிப்போய்விட்டது..நண்பர்கள் சிலர்,"இந்த பேனாவ விடவே மாட்டியா..? இதுல ஏதோ இருக்கு...கொடுத்தவங்க ரொம்ப ஸ்பெஷலோ?ஹ்ம்ம்.." என்று கேலி செய்வதுமுண்டு..ஆம் ரொம்ப ஸ்பெஷல் தான்..இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாய்..சில வாரங்களுக்கு முன்பு அந்த பாட்டி மரணித்துவிட்டார்..பேனாவும் சச்சினும் மட்டும் தொடர்கதையாய் இன்றும்..

# சென்னை பாரிமுனையில் என் கல்லூரி விடுதியில் இருந்து நடந்துசெல்ல கூடிய தூரத்தில்தான் இருக்கும் கந்தர்கோட்டம் முருகன் கோவில்..ஞாயிற்றுக்கிழமை  கூட்டம் இருக்காது என்பதால் வாராவாரம் தவறாமல் ஆஜராகிவிடுவேன்..(நாத்திகம் பழகாத காலம் அது)..அம்மாவின் அறிவுரைப்படி சனிபகவானுக்கு விளக்கு ஒன்றும் ஏற்றிவிடுவேன்..வாசலில் பூசை சாமான்கள் விற்கும் கொஞ்சம் பெரிய கடையில் உரிமையாளரின் மகள்தான் விளக்குகள் சரமாய் அடுக்கி விற்று கொண்டிருப்பாள்..பெரிய கண்கள்,தன்மையான மூக்கு என நிச்சயம் மிக அழகானவள்..பார்த்த அடுத்த இருபது வினாடிகள் அவர்களைப் பற்றியே நினைக்க வைக்கும் பெண்களில் ஒருவள் என்று சொல்லலாம்..சில நாட்கள் கடையில் அவள் இல்லையென்றால்,திரும்பும் போது, ஒரு நிறைவு இருக்காது..வழக்கமாய் தனியாய் செல்லும் என்னுடன்,ஒரு நாள் நண்பன் ஒருவன் உடன் வந்தான்..ஏதேதோ பற்றி பேசிக்கொண்டு கோவிலை நெருங்கும் நேரம்,"மச்சி, அந்த கடைல ஒரு செம்ம ஃபிகர் இருக்கும் பாரேன்" என்று பல்லிளித்தான்..ஒரு கனம் நிதானித்து நானும், "அப்டியா..நா கவனிச்சதில்லையே.."என்று முதல்முறை பார்ப்பது போல் அவளைப் பார்க்க,அவள் நான் கேட்காமலே விளக்கை எடுத்து வைத்துவிட்டு, "என்ன சார்..உங்க ஃப்ரெண்டுக்கும் சேத்து வாராவாரம் இனிமே ரெண்டு வெளக்கா?" என்று கேட்க நண்பன் முன் என் கல்லுளிமங்க முகத்திரை கிழிந்து நானும் பல்லிளித்தேன்...( # நம் இராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே...)

இரசித்த புகைப்படம்:


யாரு இந்த வெள்ளக்கார ஃபிகரு...?

இரசித்த இடுகை:

     சுயமுன்னேற்ற நூல்களை நான் அதிகம் படிப்பதில்லை..அவை மனதிற்குள் வெற்றிதான் வாழ்வின் பொருள் என்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி தேவையற்ற மன அழுத்தத்தை புகுத்திவிடும்..குறிப்பாக சுகிசிவம் போன்றோர்களின் பேச்சு எனக்கு அறவே பிடிக்காது.. "வாழ்க்கையில் உனக்கு கீழே இருப்பவனைப் பார்க்காதே..மேலே இருப்பவனைப் பார்த்து முன்னேறு" என்பது போன்ற வீராவேச பேச்சுக்களைக் கேட்டால் எனக்கு உடனே தோன்றுவது, "மன அழுத்தம் மிக்க வெற்றியாளனாய் இருப்பதை விட சந்தோஷமான சோம்பேறியாக இருந்துவிட்டு போகிறேன்" என்பதுதான்..இது என்னுடைய கருத்துதான்..பலருக்கு இதில் உடன்பாடு இராது..மன அழுத்தம் அதிகமாகி என் உயிர் தோழரொருவர் தற்கொலை செய்துகொண்டதும் கூட என் கருத்திற்கு காரணமாய் இருக்கலாம்..

     நண்பர் முனைவர்.இரா.குணசீலன் தனது சமீபத்திய இடுகையில் மிக எளிய வரிகளில் "வாழ்க்கையில் உனக்கு கீழே இருப்பவனை பார்" என்ற அழகிய கருத்தினை உணர்த்தியிருந்தார்..கட்டாயம் இந்த இணைப்பை சொடுக்கி வாசியுங்கள்..நான் ஏன் வாழக்கூடாது?

இரசித்த நகைச்சுவை:

14/12/11 தேதியிட்டு வெளியாகியிருக்கும் ஆனந்த விகடனில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் கனிமொழியின் 'வைராக்கிய' பேட்டி..குறிப்பாக கழக தொண்டர்கள் வைத்திருந்த பேனர்களை விவரித்திருந்த அந்த இரு பத்திகள்..

இரசித்த கவிதை:

பதிவுலக தோழர் அரசன் அவர்களின் வலைப்பூவில் கிடைத்த 'வரலாறாகும் வாழ்வு'  என்ற ஆதங்க வரிகள்..

சாமத்துல உறங்கி
சேவலுக்கு முந்தி
முழிச்சி, கட்ட
வெளக்கமாரால கட்டுத்தறிய
சுத்தமாக்கி, குளிச்சி முடிச்சி
ரெண்டுவேளைக்கும்
கஞ்சி காய்ச்சி!
மிச்சம் வைச்ச
சாணத்த கரைச்சி
வீதியில தெளிச்சி
பெருக்கி கோலமிட்டு,
பறிச்ச ஒத்த
பரங்கிப்பூவ, கொழைச்ச
சாணியில, கோலமத்தியில
குலுங்காம வைச்சி
நிமிர்ந்து பார்க்கையில,
இவளுக்கு முந்தி
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!
இப்படி வரலாறா வாழ்ந்த நிலை,
இன்னைக்கு சரத்துல
சொருகி வைச்ச
பழைய கடுதாசியா
கிழிஞ்சி தொங்குது
எச்சமும், மிச்சமுமா!
பாழும் இந்த
செயற்கை மோகத்தால!?

வலித்த ஒரு பதிவு:

12/12/11 அன்று கன்னடக்காரர் ரஜினியின் பிறந்தநாளைத் தமிழ்நாடும் தமிழ் வலைப்பூக்களும் கொண்டாடிகொண்டிருந்த வேலையில் ஐயா ஹரணி அவர்கள் எழுதியிருந்த நினைவுபடுத்தல் என்ற இடுகை..தலைப்பே கொஞ்சம் வலியூட்டிவிட்டது...
என் ஆறாம் விரல்..:)                    


நீங்கள் கவனிக்காமல் கடந்து வந்த நேரங்கள்:
மயில் அகவும் நேரம் 02:00
மயில் அகவும் நேரம் 01:00


15 Dec 2011

அவள் அதுவாம்...!கலையாத மடிப்புடன் 
காட்டன் சேலை
கச்சிதமாய் பொருந்திகிடக்கும் 
கழுத்தோர வைர அட்டிகை சகிதம் 
காலை அலுவலகத்தில் 
காண்போர்க்கெல்லாம் 
செயற்கை புன்னகை 
வீச தெரியும் சகுந்தலாவிற்கு..


மஞ்சளும் மடிசாருமாய் 
மார்கழி காலையில் 
மணமாய் மலர்கோலமிட்டு
புகைமுட்ட பூசைசெய்து 
கோவில் பிரகாரங்களில்
ஆச்சார புரளிகள் 
அனைத்தும் மிச்சமில்லாமல்
பேச தெரியும் ஜானவி மாமிக்கு...


அக்குள் தெரியும் சுடிதாரும் 
முனங்கை மறைக்கும் கையுறையும் 
அரையடி உயர காலணியும் 
கண்டிப்பாய் ஆடம்பர ஆங்கிலமும் 
ஒருசேர அணிந்து 
துப்பட்டா கொண்டு முகம் மறைத்து 
இரகசிய சிநேகிதனைக் கட்டிபிடித்து 
ஊர் சுற்ற தெரியும் ரேஷ்மாவிற்கு...


என் 
உதட்டில் இருக்கும் 
பற்கடி பதிவும் 
முதுகில் நெளிந்தோடும் 
நகக்கீறல் வரைபடமும் 
மார்பில் முளைத்திருக்கும் 
சிகரட் தழும்புகளும் 
என் மகனுக்கு கிடைத்திருக்கும் 
'தேவிடியாள் பிள்ளை' பட்டமும் 
மனதால் கூனிக்குறுகி
உயிர்பிணமாய் நான் ஆனதும்...


முறையே அவர்களது 
மகன், 
கணவன்
காதலன் 
போன்றோர்களால்தான்
என்பது மட்டும் 
அவர்கட்கு தெரிந்திருக்க 
வாய்ப்பில்லை...

14 Dec 2011

முத்தப் பரிசோதனை


அன்றைய
 உனையும்  
இன்றைய 
உனையும் 
வேறுபடுத்தி 
உணரவில்லை
அந்த கோடை கால 
விடுமுறையின் 
மழலை முத்தமும் 
இந்த கார்கால 
மாலையின் 
காதல் முத்தமும்...

10 Dec 2011

குறும்(பு)படம்..

அன்பிற்குரிய விருப்பதாரர்களே..
பொதுவாக அரசியல் கூட்டங்கள், கட்சி தலைவர் வருகை, திருமணம், பிறந்தநாள் விழா, புதுமனை புகுவிழா, பெரிய ஹீரோக்களின்  திரைப்படம் வெளியாகும் நாள், அம்மனுக்கு கூழ் ஊத்தும் திருவிழா, தனுஷ் பாணியில்..'வளர்மதி வயசுக்கு வந்த நாள்' போன்ற பிரசித்தி பெற்ற திருநாட்களில் தெருவோரங்களில் வரிசையாய் ஃப்ளெக்ஸ்-போர்டுகள் விண்ணைநோக்கி வளர்ந்து நிற்கும்...அதுவும் புதுச்சேரி பக்கம் சென்று வந்தால் 'சூப்பரப்பு' இரகத்தில் நம்மை வியக்க வைப்பார்கள் NR அவர்களின் தொண்டர்கள்..பொதுவாக அதன் அமைப்பாளர்கள் கறுப்புகண்ணாடி மற்றும் கைப்பேசி சகிதமே புகைப்படம் சமர்பித்திருப்பர்...


இந்த கலாச்சாரம் வரவேற்க கூடியதா? இல்லை வெறுத்தொழிக்கப்பட வேண்டியதா என்ற ஆராய்ச்சி கட்டுரை சத்தியமாய் இதுவல்ல.. அவ்வாறு வைக்கப்படும் பேனர்களில் கையாளப்படும் சொல்லாடலை நான் அதிகம் இரசித்திருக்கிறேன்..பெரும்பாலானவை நகைப்புக்குரியவையே..


ஒரு கட்டத்தில் எங்கள் நண்பர்களுள் ஒருவருக்கு திடீரென திருமண ஏற்பாடுகள் அரங்கேறின...செய்தி கேள்விப்பட்டதும் 'நம்மக்கூட சுத்திட்டு இருந்த பயபுள்ளைக்கு கல்யாணமா? நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று எங்களில் கொஞ்சம் பேர் பொங்கியதன் விளைவு...நாங்களும் இந்த வேடிக்கை கலாச்சாரத்தை முதன்முறையாய் விளையாடிபார்த்தோம்...


அந்த விவேக முயற்சி உங்கள் பார்வைக்கு...
கல்லூரியின் பிரதான பகுதியான விடுதி வாயிலில் வைத்துவிட்ட இந்த பேனருக்கு கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து சேட்டை தொடர்ந்து பல்லைக் காட்ட தொடங்கிவிட்டது...


சில மாதங்கள் கழித்து, 'திருமணம் ஆகிவிட்டது' என்றே ஒப்புக்கொள்ள முடியாத நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று அறிந்ததும் 'கடுப்பேத்றார் மை லார்ட்' என்ற வகையில் பெரும் சினங்கொண்டு எழுந்தோம்...அந்த விரக்தியை நாங்கள் வெளிப்படுத்துவதோடு இல்லாமல் 'இவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்த இருக்குங்குற மேட்டர எப்டியாவது எல்லா புள்ளைகளுக்கும் தெரிய வைக்கணும் '  என்று முடிவெடுத்ததும் மறுபடியும் பேனரே துணை..


ஆனாலும் எதிர்பார்த்ததை விட விஷயம் 'தீயா பரவிடுச்சு'... அதுக்கப்புறம் ஒரு புள்ள சீண்டலையே... 'சரி..நடந்தது நடந்துபோச்சு..' என்கிற வகையில் 'பசங்கள மன்னிச்சு ஏத்துகிட்டோம்..'  அவரவர் பழைய மாதிரியே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம்...


பயணம்,சினிமா,கூத்து,கும்மாளம் என்று வருத்தத்திற்கே வேலையில்லாத வாழ்க்கையை வழக்கம் போல் தொடர்ந்துகொண்டிருந்த வேளை..  திடீரென நண்பர்களுள் சிலர் "தம்பி நாங்கெல்லாம் final year ..இதுக்குமேல நாங்க படிக்க ஆரம்பிக்க போறோம்" என்று எங்கள் தலையில் ஒரு குண்டைத் தூக்கி போட்டார்கள்..வெகுண்டு எழுந்த சிங்கங்கள் பகிரங்கமாய் எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்க விழைந்து, வேறு வழியின்றி மறுபடியும் பேனர் கட்டிவிட்டோம்...எப்பூடி...?

இனிமேல் ஏதாவது புதுசா ஒரு காரியம் பண்ணனும்னா பயபுள்ளைகளுக்கு மனசுல ஒரு பயம் இருக்கணும்... ச்சொல்லிப்புட்டேன்...


பின்குறிப்பு -1 : நண்பர்கள் நாங்கள் அந்த கடைக்கு சென்றுவிட்டாலே, flex -டிசைனர் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்...இவ்விடத்தில் அவரின் சகிப்புத்தன்மைக்கு ஒரு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்...


பின்குறிப்பு -2 : அந்த கடையில் எங்கள் அருகில் படு சீரியசாக விழா காரியங்களுக்காக ஆர்டர் கொடுக்க வந்தவர்கள் கொஞ்சம் வித்தியாசமாய் எங்களைப் பார்த்துக்கொண்டிருப்பர்... அவர்களுக்கு என்ன புரியவா போகிறது..? "எங்க பேனரோ? அவிங்க பேனரோ? ஊரென்னவோ ரெண்டுக்கும் சிரிக்கத்தான் போகுது" என்பது...


5 Dec 2011

புரிதலும் புரிதல் நிமித்தமும்...


தறிகெட்டு தலைகுனிய வைத்தபோது,
அப்பா,
"என்ன பாவம் செஞ்சேனோ தெரில..
நீ புள்ளையா பொறக்குறதுக்கு..."

எதிர்வாதம் செய்தபோது,
ஆசிரியை,
"நீயெல்லாம் எப்படித்தான் 
வாழ்க்கைல உருப்படபோறியோ.."

புரிதல் தவறி பிரிந்தபோது,
நண்பன்,
"உன்கூடல்லாம் பழகுனேன்னு
நெனச்சாலே அசிங்கமா இருக்குடா.."

வேண்டாமென்று விலகியபோது,
காதலி,
"ஒரே வார்த்தைல சொல்லனும்ன்னா
நீ ஒரு அரக்கன் டா...ச்சீ...."

மதுவருந்தி பின்னிரவில் வீடு சென்றபோது,
மனைவி,
"உனக்கெல்லாம் எதுக்கு...
கல்யாணம், பொண்டாட்டி, புள்ளையெல்லாம்.."

பள்ளி ஆண்டுவிழாவிற்கு செல்லமறந்தபோது,
மகள்,
"உனக்கு என்மேல அக்கறையே இல்லப்பா..
நீ அப்பாவா இருக்றதே வேஸ்ட்...போப்பா.."

பலமுனை வசைகள் 
அப்போதெல்லாம் 
வேதனையாய் வலித்தாலும் 
என் தனிமை 
அனைத்தையும் புரிந்தறிந்து
ஆமோதிக்கதான் செய்கிறது...! 4 Dec 2011

யதேச்சையான எழுத்துகள் #2அன்பிற்குரிய விருப்பதாரர்களே...

இதற்கு முந்தைய அகவலுக்கு  ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி... இதோ இம்மாதத்திற்கான முதல் வருடல் உங்களுக்காக...(மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்று கிழமைகளில் அகவலாம் என உத்தேசம் ) #  சில நாட்களுக்கு முன்பு, தோழர் ஒருவரின் திருமணத்திற்காக பவானி சென்றுவிட்டு நண்பர்கள் நாங்கள் ஒரு எட்டு பேர் இரு கார்களில் திரும்பிக்கொண்டிருந்தோம்..வழியில் ஒரு லாரி தெருவோரம் நிறுத்தப்பட்டும், சிறு கூட்டமாய் மக்கள் கூடியிருந்தும் தெரியும் காட்சியிலேயே சாலை விபத்து ஒன்று அங்கே நிகழ்ந்திருப்பது விளங்கிற்று..நாங்களும் இறங்கி சென்று பார்த்தோம்..சுமார் ஒரு நூறு மீட்டர் தொலைவிற்கு ஒரு மனித உடல் நசுக்கி தேய்க்கப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது..நாங்கள் பார்க்கும்போது போர்த்தவும்பட்டிருந்தது..இடுப்பளவில் துண்டான கால் ஒன்று போர்த்தப்படாமல் அந்த உடல் நசுங்கி வந்த பாதையில் கிடந்தது.."என்ன வயசு இருக்கும்? எப்டி நடந்தது? லாரி டிரைவர் ஓடிட்டானா?" என பல கேள்விகள் சுற்றியிலும் காதில் விழுந்து கொண்டிருந்தன..திடீரென அங்கிருந்த ஒரு 'போதை'தர்மன் டிராஃபிக் போலீசாக மாறி கூட்டத்தைக் கலைத்துவிட்டு நெடுஞ்சாலை போக்குவரத்தை சீர்படுத்தினார்..காரில் கிளம்பி நாங்களும் திரும்புகையில்,அந்த ஊரின் நகராட்சி எங்களுக்கு நன்றி சொல்லும் முன்னரே வேறு எதையோ பற்றி பேசத்தொடங்கிவிட்டோம்... ( இயந்திர உலகமாம்.. )

# இளநிலை முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த வேலை, ஸ்பென்சரைத் தவிர சென்னையில் அப்போதைக்கு தெரிந்த இடமான இரெங்கநாதன் தெருவில் ஒரு மாலை மேய்ந்து முடித்துவிட்டு நானும் ஒரு நண்பனும் மாம்பலம் இரயில் நிலையத்தை நெருங்கினோம்..அந்த தெருமுனையில் விற்கப் பட்டுக்கொண்டிருந்த கோன்-ஐஸ் கிரீமை பார்த்ததும், "மச்சி மச்சி..ஐஸ் டா" என்று குஷியாகிவிட்டான்..சட்டைப்பையைத் துலாவிவிட்டு, 'இந்த பத்து ரூபாய விட்டா ஒரு ஐநூறு ரூபா நோட்டுதான் இருக்கு..அதப்போய் ticket counter ல கொடுத்தா கழுவி ஊத்திருவான்...சோ வேணாம்டா..கெளம்பலாம்" என்றேன்...'ஹே.. டிக்கெட்டுக்கு என்கிட்ட change இருக்குடா.." என்றான்..சரியென்று ஆளுக்கொன்று வாங்கி சப்பலாகினோம்..கடற்கரை நிறுத்தம் மார்க்கம் செல்லும் இரயிலும் வந்துவிட்டது..."ஓடு ஓடு...சீக்ரம் ஏறு..." என விரையத்தொடங்கினான்.. பதிலுக்கு "மச்சி...டிக்கெட் ரா?" என்றதும்..."எவனும் கேக்க மாட்டான்..fine போட்டா நா கட்டுறேன்..நீ மூடிட்டு ஏறு சீக்ரம்..." என்று ஓடிக்கொண்டே அந்த கோன்-ஐஸையும் சப்பி முடித்திருந்தான்... ( # ப்ளானிங்..)

# இரசித்த புகைப்படம் 


என் மதராசப்பட்டினம்... மெரினா ஞாபகங்கள்..


# இரசித்த கவிதை...

தோழர் இரமணா என்பவர், 'பழுப்பேறிய உப்பரிகை' என்ற தலைப்பில் வரைந்திருந்த வரிகள்...

சில ஆண்டுகட்கு பிறகு
பழைய காதலியின் வீட்டை
கடந்து போனேன் ...

கலையிழந்திருந்தது.
கதவுதாண்டி கேட்கும்
சிரிப்பொலி நிசப்தமாயிருந்தது.

வாசலெங்கும் நிறைந்திருந்தன
காய்ந்து சருகான
வில்வமரத்து இலைகள்..


மிச்சமிருந்தது 
காய்ந்து போன சில 
மாத்துண்டுகள் மட்டுமே.
வாசற் கூண்டில்
காதல் பறவைகள்
காணமல் போயிருந்தன.

எப்போதோ கட்டிய
வாஸ்து மணிமட்டும்
காற்றின் கெஞ்சலுக்கேற்ப
ஒரு சோககானம்
பாட,

ராமர்பானமும் , மல்லிகையும்
பூத்துக்குலுங்கிய
அவள் தோட்டத்தில்
காகிதப் பூக்கள்
கேட்பாரற்று வளர்ந்திருந்தன..

என் சிறு வயது
அரண்மனையின் உப்பரிகையில்
சுண்ணாம்பு சற்று பெயர்ந்து
பழுப்பேறியிருந்தது

அங்கே
பச்சை நிறவுடையில்
தேவதை போல்
அவளுமில்லை...
சற்று மேலே கொடியில் காயும்
அவள் உள்ளாடைகளுமில


#  இரசித்த ஒரு பகிர்வு:

facebook தளத்தில் கண்ட இந்த சென்னை தமிழின் தொன்மை பேசும் அறிவுப்பெட்டகம்...

# இரசித்த இடுகை  

தோழர் 'நாஞ்சில் மனோ'வின் உணர்வுப்பூர்வமான கட்டுரை..மரண தண்டனை 'சரி' என்று நினைப்பவர்களை சில நிமிடங்கள் யோசிக்கவைக்கிறார்..கட்டாயம் இந்த இணைப்பை சொடுக்கி வாசியுங்கள்... மரண தண்டனையின் வரலாறு  o+o=0 தான் 
நன்றியுடன்...சி.மயிலன்

3 Dec 2011

மனவாசம்...


இரவில் எனையறியாமல் 
படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டு 
அந்த ஈரத்தில் விழித்தெழுந்து 
தூக்கம் கலையாமல் சிணுங்கி அழுது 
அம்மாவைப் படுத்திய நாட்களின்றும் மறக்கவில்லை...


வீட்டில் வளர்ந்த 
செல்ல நாய்க்குட்டிக்கும்
சொறிகொண்ட தெருநாய்க்கும் 
கொஞ்சல் தழுவல்களில் 
வித்தியாசமேதும் காட்டவில்லை...


மாட்டுச்சாணத்தில் 
தவறிவிழுந்த பந்தை 
அலட்சியமாய் சுவற்றில் தேய்த்து 
கால்சட்டையில் துடைத்துவிட்டு
விளையாட்டைத் தொடரவும் தவறவில்லை..


அதிசயமாய் ஓர் 
அடைமழை பெய்யும்வேலை 
தெருவெனும் சேற்று தொட்டியில் 
மழைநீரும் சாக்கடையும் பிணைந்து கிடக்க 
அதில் நீச்சலிடிக்காமல் விட்டதில்லை...


ஆனால் அன்றெல்லாம் 
எப்போதும் எனக்கு தெரிந்ததில்லை... 


முழுக்கை சட்டை,
முக்கால் அங்குல புன்முறுவல்,
மேதாவித்தனமான மூக்குகண்ணாடி,
தினம் தவறாமல் சவரம் செய்யும் முகம்,
கச்சிதமாய் படிய வாரிய கேசம்...


என மிடுக்காய் திரியும் இன்று 
தனிமையில் இருக்கும்போது 
நான் உணர்ந்துவிடும் 
எனக்குள் உள்ள 
துர்நாற்றம்.... 30 Nov 2011

யதேச்சையான எழுத்துகள் #1அன்பிற்குரிய விருப்பதாரர்களே..

     கடந்த சில வாரங்களாய், நீண்ட நாட்களுக்கு முன் எழுத விரும்பிய தொகுப்பு கட்டுரைகள் எழுத தொடங்கவேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி என்னை  உந்த தொடங்கிவிட்டது.. எனவே 'சரி..முயற்சி பண்ணிப் பாப்போம்' என்று பேனாவை எடுத்துவிட்டேன்.. இதைத்தொடர்ந்து, மாதம் இருமுறை தொகுப்பு கட்டுரைகளுக்கான எனது இடுகை இதே தலைப்பில் மயிலிறகில் பதிவு செய்யப்படும்.. இவ்வித இடுகை எழுதமுனைவதில் பதிவுலக நண்பர் பிரபாகரன் அவரது தொடர்பதிவான 'பிரபா ஒயின் ஷாப் ' மூலம் (அவருக்கே தெரியாமல் ) என்னை அதிகம் பாதித்திருக்கிறார் என்பதை இவ்விடம் தெரிவித்துக்கொள்கிறேன்..இதுவரை என் பதிவுகளை சளைக்காமல் சகித்துக்கொண்டவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ளவேண்டி இங்கே சமர்ப்பிக்கிறேன்..

   #  பேராசிரியர் ஒருவருக்கு அறுவை சிகிச்சையில் துணை புரிய அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்..கொஞ்சம் மேலும் கீழும் பார்த்த ஊழியர் ஒருவர்.."யார பாக்கணும் பாஸ்..?", என்றதும் வந்த வேலையை சொன்னேன்..அதன் பின் அவரின் பதில்களில் 'பாஸ்' இடத்தில் நுழைந்துகொண்ட 'சார்'-இல் அவ்வளவாக உண்மை இல்லை..சரியாக நினைவிருக்கும் பட்சத்தில் சுமார் 18 வருடங்களுக்கு முன், அதே மருத்துவமனையில் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் வேலை, அப்போது அவ்விடத்தில் இருந்த படிக்கட்டில் ஒரு சிறுவனாய் விளையாடிக்கொண்டிருந்த ஞாபகம் வந்துவிட்டது..அந்த கட்டமைப்பு இப்போது நவீனமயமாக்கப்பட்டு இடையே ஒரு லிஃப்ட் வேறு செருகப்பட்டிருந்தது.. உடனே அம்மாவை  கைப்பேசியில் அழைத்து அங்கே நின்று கொண்டிருப்பதை சொன்னேன்... அவர் குரலில் ஒரு நெகிழ்ச்சி தெரியத்தான் செய்தது.. பேசிக்கொண்டே படியேறும் போது அங்கே ஒரு ஆறு வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான்...எதிரே திரியும் அந்த சிறுவனும்,காதில் கேட்கும் அம்மாவின் குரலும் என் கண்களை ஈரமாக்க தவறவில்லை...ஏனென்று யோசிப்பதற்கெல்லாம் அப்போது நேரமும் இல்லை...

   #  சென்னையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் வாரம் ஒருமுறையேனும்  பத்து ரூபாய்க்கு முன் வரிசை டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதில் "சத்யம் ல பத்து ரூபாய்க்கு பாத்தோம்ல..." என்ற விதத்தில் ஒரு தனி பெருமை.. (இடைவேளையில் பாப்கார்ன், black forest சாப்பிடும் செலவில் மற்ற திரையரங்குகளில் இரண்டு படங்கள் பார்த்துவிடலாம் )... இருந்தாலும் நண்பர்கள் கூடி அடித்துபிடித்து அந்த டிக்கெட்டை வாங்கிவிடுவதில் பண்ணையார் மகளுக்காக காளையை அடக்கிய வெற்றிக்களிப்பு ஒன்று சொட்டுவிடும்..ஆனால் இன்றோ கொசுவும் மூட்டைப்பூச்சியும் இடைவிடாது கொஞ்சி தீர்க்கும் தஞ்சை திரையரங்குகளில்,கட்டம் போட்ட கைலியை மடித்து கட்டிக்கொண்டு, அக்குளில் ஒரு தோல்ப்பையை வைத்துக்கொண்டு, "ஏழாம் அறிவு 200 ...வேலாயுதம் 150 " என்று கூவிக்கொண்டிருப்பவனிடம், ஏதும் பேசாமல் பொத்திக்கொண்டு டிக்கெட்டை வாங்கி செல்கிறேன்...( # டீசென்சி )

  #  இரசித்த புகைப்படம்:


தெய்வத்திருமகள் 

#  இரசித்த கவிதை :

facebook தளத்தில் தோழி திவ்யா என்பவர் பகிர்திருந்த மிக எளிமையான யதார்த்தமான வரிகள்..


பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி…
ஆனாலும்,
இவள் ஆறுதல் தேடியதில்லை
மதுவிலோ போதையிலோ..
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை
மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில்...
இவள் சோகத்தை மறந்ததில்லை
கானா மெட்டுக்கள் பாடி..
இவள் பழி சுமத்தியதில்லை
ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று..
இவள் கவனிக்கத் தவறியதில்லை
கேட்கக் கூசும் விமர்சனங்களை..
இவளுக்கு தெரிந்தது, முடிந்தது,
அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தல்” மட்டுமே...!! 


#  இரசித்த இடுகை :ஐயா இரா.எட்வின் அவர்களின் அழுத்தமான பதிவுகளில் ஒன்று எனினும் இது அவரது நடையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதாய் தெரிந்தது.. நிகழ்கால அரசியலை ஒரு புனைவு அரசனை வைத்து நேர்த்தியாக சாடியிருந்தார்...கொஞ்சம் பொறாமைப்பட வைத்த பதிவு என்றே சொல்ல வேண்டும்...

( பின்குறிப்பு :  முதல் முயற்சி என்பதால் எட்டிப்பார்க்கும் அனைவரும் கருத்து சொல்லிவிட்டு செல்லுமாறு கட்டாயப்படுத்த படுகிறார்கள்..)
28 Nov 2011

காரணப்பெயர்...


"மூக்கு அப்புடியே அப்பா மாதிரி...
சிரிப்புல பாட்டி சாயல் தெரியுதுல்ல...
இந்த தலைமுடிய பாரு...
கோரக்கோரயா தாத்தா மாதிரி...
கண்ணு ரெண்டும் அச்சுப்பிசுங்காம
அம்மாவ உரிச்சு வெச்சுருக்கு..."
என்று உன் அழகு அனைத்திற்கும்
ஒருவரைக் காரணம் காட்டிவிடும்
ஊராருக்கு தெரிய வாய்ப்பில்லை
நான் 'அம்முகுட்டி' என்றுனை
அழைக்கும்போது
நீ பிரகாசித்துவிடும் அந்த
வெட்கம் மட்டும்
பழைய காதலி சாயலென்று...

19 Nov 2011

தேவதை உண்டு பூமியில்...


முச்சத நாட்கள் கருவில் 
களிப்பாய் சுமந்து 
நிமிடங்கள் சில மூச்சடக்கி 
கிடைத்த முத்தாய் 
எனை  வெளிக்கொணர்ந்து 
கருப்பாய் இருந்தும் 
அழகனாய் அன்று ஆராதித்தாள் !

பிறர் கண்பட்டுவிடாமல் மையிட்டு 
பிஞ்சு பாதம்தனை தரையில் ஊன்றவும் 
கீழே சிந்தாமல் சோறுண்ணவும் 
தானாய் தலைவாரிக் கொள்ளவும் 
மாற்றிக்கொள்ளாமல் காலணி அணியவும் 
வலதுகை கொண்டு எழுதிடவும் 
கைக்குவித்து கடவுளை வணங்கவும் 
அழகு தமிழில் பேசிடவும் 
அக்கறையாய் கற்றுத்தந்து 
கரைசேர்ந்திட என்றோ ஒரு நாள் 
அனுப்பிவைத்தாள்...!

நண்பரென பலர் கொண்டும்  
நாகரீக கவசத்தில் கேசம் களைத்தும் 
சிறிதாய் சில களவு கற்றும்
பொய் நிறைய சொல்லியும்  
நரியென நயவஞ்சக பழியறிந்தும்
நாத்திகனாய் நியாயம் உரைத்தும் 
வன்மையாய் பகை சில வென்றும் 
காமமேறியக் காதலொன்று செய்தும் 
அதனில் ஆறாத காயமொன்றும் கண்டும் 
கற்ற தமிழில் சகிக்காத வார்த்தை பல பேசியும் 
மறக்காமல் மதுவெனும் மருந்துண்டும் 
உலகத்தின் கறையனைத்தும் 
ஒருசேர சேர்த்துவந்து இன்று....

'அம்மா'-என்று கதவைத் தட்டும்போது,
'என்னயா இப்புடி எளச்சுப்போய்ட்ட..."
என்றென் கன்னம் வருடி 
கலங்கிய மறுநொடியில் 
மீண்டும் அவள் மடியினில்
மனதில் வெளுத்த,நிறத்தால் கருத்த 
அதே பழைய குழந்தையாகி போகிறேன்..!

13 Nov 2011

எத்தனை கண்ணீரடி தோழி?

புது பென்சில் தொலைந்தபோதும்
விடுமுறை கழித்து பள்ளி செல்லும்போதும்
கண்ணாடி வளையலன்று உடைந்தபோதும்
யாரேனும் பொய்யாய் நீ அழகில்லை எனும்போதும்
அமுதா டீச்சர் அதட்டியபோதும்
தொண்டையில் மீன் முள் சிக்கியபோதும்
விளையாட்டில் நானுனை ஏமாற்றும்போதும்
மதிப்பெண் கொஞ்சமாய் குறைந்தபோதும்
மிதிவண்டி பழக காயம் கண்டபோதும்
பள்ளியை விடுத்து கல்லூரி நுழைந்தபோதும்
பிறந்தநாளுக்கு முதல் வாழ்த்து நான் சொல்லமறந்தபோதும்
நீ கொண்டிருந்த கண்ணீருக்கெல்லாம்
ஆறுதல் சொல்ல எனக்குமட்டுமே முடிந்திருந்தது.!
ஆனால்,உன்
விவாக அழைப்பிதழ் கண்டு
சொல்லாமல் புதைந்த என் 
ஆசையை எண்ணி
எனக்குள் புழுங்கி
விதும்பி நான் நின்றபோது
சொல்லேதும் சொல்லாமல்
அக்கணம்,சிறிதாய் நீ சிந்திய
அதே உனது கண்ணீர்துளியால் 
மட்டுமே எனக்கு ஆறுதல் சொல்லமுடிந்திருந்தது ..!