சகித்தவர்கள்...

19 Sep 2011

பூங்காநகர் முதல் தாம்பரம் வரை...(பயணத்தின் தொடர்ச்சி)


இதன் முதற்பகுதியைப் படிக்காத நண்பர்கள் அதில் பயணித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
கிண்டி இரயில் நிலையம்..காதலித்த நாட்களின் நினைவு பெட்டகமாவே அது அவனுக்கு ஒவ்வொரு அணுவிலும் தெரிந்தது..தினமும் கடந்து செல்லும் இடம்தான் என்றாலும் இவ்வளவு நேரம் பயணித்த நினைவுகளால் அவனை அந்த இரயில் நிலையம் உணர்ச்சிவசப்பட வைக்க தவறவில்லை...உச்சிமுகர்ந்து எல்லா திசைகளையும் பார்ப்பதற்குள் ஒரு கனமான வெட்டுடன் இரயில் காட்சிகளை நகர்த்தி விரையத் தொடங்கியது...நடைமேடையைக் கடக்கும் முன்பு காலியாக இருக்கும் அந்த காத்திருப்பு பலகை அவன் கண்களில் இருந்து தப்ப மறுத்தது..தனக்கும் மணிமொழிக்கும் பிறகு அந்த பலகையைக் காதலர்கள் கண்டுகொள்வதில்லை போலும் என்று சிரித்துக்கொண்டான்..காதலித்த காலங்களில்,இரயில் நிற்கும் திசைக்கு எதிர்முனை நோக்கி அமர்ந்து மணிமொழியின் கைகளைப் பிடித்துக்கொண்டு,"அடுத்த ட்ரைன் ல கெளம்பிடலாம்...அடுத்தது..அடுத்தது..."என்று ஒவ்வொரு இரயிலாக தவறவிட்டு ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது இருவருக்கும் சலித்தே போகாத விளையாட்டு...பேச்சு முடிந்து அங்கே ஒரு மௌனம் குடிவருவதுப் போல தோன்றினால்,"அந்த பொண்ண பாரேன்..க்யூட் டிரெஸ்ஸிங் சென்ஸ் ல??"என்று மணிமொழியை உஷ்ணபரிச்சை செய்து பார்ப்பான்.."யாரு?டாலா இருக்காளே..அவளா? அதும் அது மூஞ்சியும்...துப்பட்டாவ கழுத்துல தூக்கி போட்டு திரியிறா..டிரெஸ்ஸிங் சென்ஸாம்..நீங்க மோசம்.."என்று பதிலுக்கு அவள் பொரிந்துகொண்டிருக்கும் போது அடுத்த இரயில் வந்து அழைக்கும்..."இந்த ட்ரைன் வேணாம்...அடுத்தது"என விளையாட்டு தொடர்ந்து கொண்டிருக்கும்...

காதலித்த நாட்களிலும் சரி,திருமணத்திற்கு பிறகும் சரி,தன்னை விட நான்கு மாதங்கள் வயதில் மூத்தவள் என்றாலும் ஒரு முறைக்கூட  அவனை மணிமொழி பெயர் சொல்லி அழைத்ததோ, 'டா' என விளித்ததோ இல்லை..அதனால் அருந்ததி பிறந்த பிறகு மாமனார் மாமியாரும் இவர்களை ஏற்றுக்கொண்டு இவர்களோடே வந்து தங்கியபோது அவனை அழைப்பதில் மணிமொழிக்கு சிரமம் ஏதும் இருந்ததில்லை..சிரமமெல்லாம் காலையில் அவன் வேலைக்கு செல்லும் முன் தவறாமல் வாங்கிக்கொள்ளும் முத்ததில்தான்...'ஐயோ,மாமி வர்றாங்க..அந்த பக்கம் வேணாம் மாமா பேப்பர் படிச்சிட்டு இருக்காங்க...ஏங்க,பாப்பாக்கு முன்னாடியா?ஹுஹும்..வேணாம்'..என காதலைப் பொழியும் முன்பே கலவரப்படுத்திவிடுவாள்.."ஈவ்னிங் லேட்டா வந்தா ஆனந்த பவன் ல அல்வா வாங்கிட்டுதான் வரணும்" என்று ரேடியோ விளம்பரத்தைப் பழித்துக்காட்டி சிரித்துவிட்டு,குழந்தையைத் தூக்கிவைத்துக்கொண்டு,"பாப்பா அப்பாக்கு டாட்டா ச்சொல்லுடா..டாட்டா",என அந்த பிஞ்சு கைகளைக் காற்றில் ஒரு கவிதை  போல வீசிக்காட்டுவாள்..ஆனால் ஒரு நாளும் அவன் தாமதமாய் வந்தது இல்லை..அதற்காக அல்வா வாங்காமலும் சென்றதுமில்லை..கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு எதிரில் இருப்பவரிடம் கேட்டான்,"லாஸ்ட் ஸ்டேஷன் என்ன சார்?"...பதிலுக்கு அவர்,"கவனிக்கல சார்,மீனம்பாக்கம்னு நெனக்கிறேன்" என்றார்.."இட்ஸ் ஓகே" என்று சொல்லி கண்களை வெளியே மேய விட்டு மீனம்பாக்கம் கடந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டான்...

வானம் மெல்லியதாய் கருத்திருந்தது...மழை வரும் என்று உள்ளுணர்வு உரைத்தது,உண்மையில் மனம் அதை வேண்டியது...மூன்று ரூபாய்க்கு கடலை கொஞ்சம் வாங்கி கொறித்துக்கொண்டும்,அருகில் ஒரு கல்லூரி ஜோடி மிக சத்தமாய் கடலை வறுப்பதைப் பொறுத்துக்கொண்டும் கண்களுக்கு கட்டாய பசை தடவினான்...தன் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் ஏதேனும் இரவில் மொட்டை மாடியில் அமர்ந்திருக்கும் போது மணிமொழியிடம் சொல்ல முற்பட்டால்,"மொக்க போடாதீங்க,போங்க...பாப்பா,அப்பா மொக்கதான டா?" என்று கேட்டு குழந்தையின் தலையை ஆமொதிப்பதுப்போல ஆட்டி காண்பித்து சில்லறைகள் சிதறுவதைப் போல சிரித்துமுடிப்பாள்..."குழந்தைய உன்கூட சேத்துட்டியா? ரெண்டாவது குழந்தைய உன்கூட சேரவே விடக்கூடாது" என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் "ஹோ,இன்னும் சாருக்கு அந்த நெனப்பெல்லாம் வேற இருக்கா?யாரு இப்ப உங்களுக்கு பெத்து தர்றேன் னு சொன்னாங்க?" என்று கேலி செய்து அவன் செல்ல அடிகளை வாங்கிக்கொள்வாள்...அருந்ததியைப் பள்ளியில் சேர்த்த பிறகு,இவன் அலுவலகத்தில் இருக்கும்போது தொலைபேசியில் "ஏங்க,பாப்பா இல்லாம டே டைம்ல வீட்ல போர் அடிக்குதுங்க,நாம வேணா நீங்க அடிக்கடி கேக்றமாதிரி அடுத்ததா ஒரு...."என்று இழுத்து இழுத்து அவனை மறுமுனையில் நெளிய வைப்பாள்.."மொதல்ல ஃபோன வை நாய்குட்டி.."என்று சிரித்துக்கொண்டே வழிந்துமுடிப்பான்..தொலைபேசி அழைப்பு வந்ததும்,அதை காதில் ஏற்று,"யா,தாம்பரம் ரீச் ஆகா போறேன்,ஜஸ்ட் டூ மோர் மினிட்ஸ்..நோ ப்ராப்ஸ்..நாளைக்கு ஆஃபீஸ் ல மீட் பண்லாம்" என்று ஒரு நச்சரிப்பை கட் செய்துவிட்டு எழுந்து நின்று இறங்க ஆயத்தமானான்...

பதினாறு மைல்கள் கடந்து வந்து களைப்பு இரயிலுக்குக் கூட சற்று இருந்திருக்கும்...ஆனால் இந்த பயணம் அவனை உற்சாகப்படுத்தியிருந்தது..டையின் இறுக்கத்தை இன்னும் கொஞ்சம் குறைத்துக்கொண்டு டூ வீலர் ஷெட்டை நோக்கி நடக்க தொடங்கினான்..அங்கிருந்து கிளம்பிய அவனது பல்சர் ஆனந்த பவனில் போய் நின்றது...மல்லிகைப்பூவோடு கொஞ்சம் அல்வாவும் சேர்ந்துக்கொண்டது..அவனது உள்ளுணர்வு பொய்க்கவில்லை..தூறல் அவன் சட்டையில் ஒரு புது ஓவியம் வரைந்து,அவன் வீடு சென்று முடிப்பதற்குள் கழுவியும் முடித்தது அடைமழையாய் மாறி..சொட்ட சொட்ட சென்று கதவைத் தட்டியதும்,"நல்லா நெனஞ்சுட்டியா பா?நேரா பாத்ரூம்க்கு  போ,வெந்நீர் போட்டு வெச்சுருக்கேன்...குளிச்சிட்டு வந்துரு"என அம்மா தன் சேலை முகப்பை வைத்து அவன் தலையை துவட்டிக்கொண்டே சொன்னார்கள்..

அவனும் உடைகளைக் களைந்து,ஒரு குளியலாடி,பாதி துவட்டிய தலையுடன்,வாங்கி வந்திருந்த மல்லிகைப்பூக்களை அறைக்குள் எடுத்து சென்றான்..அவனது நடை கொஞ்சமாய் பலவீனப்பட்டது...படத்தானே வேண்டும்..சுவற்றில் சன்னமாக தொங்கிகொண்டிருக்கும் மணிமொழியின் புகைப்படத்திற்கு அதை சூட்டிவிட்டு எதிரே இருந்த கண்ணாடியில் தன்னையே வெறுமையே முறைத்தபடி நிற்க,"அப்பா,என்ன வாங்கிட்டு வந்த?"என துள்ளிக் குதித்து ஓடி வந்த குழந்தையைக் கையிலேந்தி மழைநின்று ஓய்ந்து கிடக்கும் மொட்டைமாடிக்கு சென்றான்..தன்னை நிதானப் படுத்திக்கொண்டு வாங்கிவந்த அல்வாவை குழந்தைக்கு ஊட்டிவிடத் தொடங்கினான்...சிறிது நேரத்தில் அவன் தோளிலே உறங்கிய குழந்தையைத் தட்டிக்கொடுத்துக் கொண்டே..சிறிதாய் வலியுடன் புன்னகைத்து அவன் எண்ணியது, 'இன்று ஒரு நாள் மட்டும் தாம்பரம் இன்னும் கொஞ்சம் தொலைவில் இருந்திருக்கலாம்'....தூரத்தில் இரயில் கூவும் ஓசைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தது..                            நினைவுகளாய் என்றும் மணிமொழி.....பயணம் மட்டும் இங்கு முடிகிறது...

17 Sep 2011

பூங்காநகர் முதல் தாம்பரம் வரை...

முதன்முறையாக உங்களை ஒரு குறுங்கதையால் வருட வருகிறது  மயிலிறகு ...
வழக்கமான நெரிசல்களின் நடுவே,சட்டை காலரில் இறக்கிவிடப்பட்ட டையுடனும் தோளில் லேப்டோப்புடனும் ஒரு சராசரி இளைஞனாய்தான் அவன் இரயிலுக்கு காத்திருந்தான்...பூங்காநகர் இரயில் நிலையம்..நேரம் 5மணி என்று காட்ட அவனது கடிகாரம் இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்...பூக்காரசிறுவன் அவனைப் பார்த்ததும் இரண்டுமுழம் மல்லிகைப்பூவை கொடுத்துவிட்டு காசுவாங்கி சென்றான்..இது தினசரி வாடிக்கை என்பதால் அவர்களிடையே எந்த பேரமும் இருக்காது...சென்னை மாநகரின் மிக முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றான பூங்காநகர் ஓர் மக்கள்மந்தையைச்  சுமந்து பீத்திக்கொண்டிருந்தது...இமைக்கும் பொழுதில் தாம்பரம் மார்க்கம் செல்லும் ஓர் இரயில் தண்டவாளங்களை நிரப்பிக்கொண்டது...சிறு சலசலப்புகளுக்கு பிறகு மூவர் இருக்கையில் நான்காவதாய் தன்னைப் பொருத்திக்கொண்டு ஆசையாய் வாங்கிவைதிருக்கும் மல்லிகைப்பூக்கள் நசுங்காமல் அடைகாத்து கொண்டிருந்தான்...

இருக்கையில் சிரமப்பட்டு அமர்ந்திருக்கும் இந்த வேளையில் அவனுக்கு அந்த பழைய பேருந்து காட்சி ஞாபகம் வந்துவிட்டது...
'எக்ஸ் க்யூஸ் மீ...இது லேடிஸ் சீட்' -இதுதான் மணிமொழி முதன்முதலில் அவனிடம் உதிர்த்த முத்துக்கள்..அப்போது இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை அந்த முத்துக்கள் முத்தங்களைத் தாண்டிக் கொண்டுசெல்லும் என்பது...எழுந்துகொண்டு அவன் 'சாரி' என்றான்..'இட்ஸ்  ஓகே' என்பதுடன் அந்த சந்திப்பு முடிந்துகொண்டது,இருவர் மனதிலும் பதிந்துகொள்ளாமல்...மறுசந்திப்புக்கும் பொறுப்பேற்றுக்கொண்டது பேருந்துதான்...இடமில்லாமல் அவள் நின்றுகொண்டிருக்க,'இது ஜென்ட்ஸ் சீட் தான்,பட் பரவால்ல உட்காருங்க' என்று கிண்டலாய் சொன்னான்..'இட்ஸ் ஓகே,பரவால்ல' என்றாள் ஒரு புன்னகையோடு...'ஹோ, ஓகே தென்' என்று கிண்டலை முடித்து கொண்டான்..இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஏறிய ஒரு பெண் எந்தவித நெருடலும் இல்லாமல் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துவிட அவன் மணிமொழியை பார்த்து சிரித்தேவிட்டான்...அவளும் பதிலுக்கு சிரித்துதொலைத்தாள்... 'பேசாம அன்னிக்கு பஸ் ல உங்க பக்கத்துல ஒருத்தி உட்காந்தாள்ள....அவளையே நீங்க கல்யாணம் பண்ணிருக்கலாம்' -திருமணத்திற்கு பிறகு வரும் சிறு ஊடல் பொழுதுகளில் எல்லாம் மணிமொழி பொய் கோபத்துடன் உரைக்கும் மொழி இதுதான்..

எழும்பூர் வந்ததும் ஒருவர் இறங்கிக்கொண்டு,'தம்பி நல்லா வசதியா உட்காந்து போங்க' என்று சொல்லிய போது அவன் நிகழ்காலத்திற்கு திரும்பினான்..மணிமொழியுடன் திருமணம் முடிந்து நான்கரை ஆண்டுகள் ஆகின்றன..ஆனால் கையில் இருக்கும் அந்த மல்லிகைப்பூ தவிர திருமணம் ஆனவனுக்கான அடையாளங்கள் அறவே இல்லாமல்தான் இருந்தான்..மொபைல் ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டு இரயில் கூச்சலில் இருந்து அந்நியப்பட முயற்சித்துக்கொண்டிருந்தான்..ரேடியோ மிர்ச்சியில் வளையோசை சலசலத்து கொண்டிருந்தது..ஜன்னல்வழி தெரியும் சென்னையின் செயற்கையான இயற்கை அவனைப் பரவசப்படுத்த மறுத்தது.. கண்களை மூட அவனைக் கட்டாயப்படுத்தியது..விழிமூடி முடிக்கும் முன்பே இதயம் அவனை நான்கரை ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்றது...சிவப்பு நிற பட்டுப்புடவையில் அவளின் தம்பியோடு மணிமொழி வடபழனி முருகன் கோவிலின் முன்பு காத்துக்கொண்டிருந்த காட்சியில் இருந்து நினைவுகள் விரிய தொடங்கியது...'ஒன்னும் பிரெச்சன ஆகாதுல்ல?'தம்பியிடம் நூறு முறையேனும் கேட்டிருப்பாள்.தம்பி அவளைத் தேற்றிக்கொண்டிருந்தான். தனது தோழர்களோடு சிறிது நேரத்தில் அவனும் அங்கு வந்துவிட பதற்றத்துடன் திருமணம் அரங்கேறியது..இருவர் வீட்டிலும் ஒத்துழையாமை போராட்டம் வெடிக்க தாம்பரத்தில் கணவன் மனைவியாய் குடியேறியிருந்தார்கள்...

ஆரம்ப கால திருமண வாழ்க்கையைப் பற்றி நண்பர்கள் அறிவுரை என்ற பெயரில் இருவரையும் பயமுறுத்த தவறவில்லை..மணி நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவள் என்பதால் அவனுடைய சாஃப்ட்வேர் சம்பளத்தில் குடும்பத்தை நகர்த்துவது அவளுக்கு மிக எளிதாகப்பட்டது...முதல் வருடம் குழந்தை வேண்டாம் என்று இருவரும் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றிய அன்று இரவே முதலிரவு ஆனதுதான் வேடிக்கை..'பெரிய இவரு மாதிரி பேசுனீங்க?போங்க...ஏன் இப்டி பண்ணீங்க?'என்று பொய்யாய் சிணுங்கினாள்..'குழந்த பிறந்தாதானே சீக்ரம் நம்மள வீட்ல சேத்துப்பாங்க,அதுக்குதான்' ,நல்ல பையன் போல பதில் சொன்னதும் அவள் சிரித்துக்கொண்டே தலையணையைக் கொண்டு வலிக்காமல் அடித்தாள்...ஆனால் அவன் சொன்னதிற்கும் மேலாக பிரசவத்தின் ஆறாவது மாத இடையிலேயே மணிமொழியின் குடும்பம் அவர்களை ஏற்றுக்கொண்டது..முதல் பிரசவத்திற்காக அவளை வீட்டிற்கு அழைத்து சென்றபோது அவன் வாழ்வில் முதன்முறையாக தனிமை படுத்தப்பட்டதாக உணர்ந்தான்..நண்பர்கள் எவ்வளவு நெருங்கி வந்தாலும் அவனால் அந்த வெறுமையின் கசப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..அன்று மாலையே அவர்கள் வீட்டிற்கு சென்று அவளை தன்னுடனே வருமாறு அழைத்துவிட்டான்..காத்திருந்தவள் போல் அவளும் அவனை வந்து கட்டிக்கொண்டாள் கண்ணீர் மல்க..கன்னத்தில் உருண்டுவரும் கண்ணீரை ஒரு சிறுபுன்னகையோடு துடைத்துவிட்டு விழித்து பார்க்கையில் இரயில் கிண்டியில் நின்றுகொண்டிருந்தது...


                                                                                                   
                                                                                                  தாம்பரத்திற்கு இன்னும் எட்டு மைல்கள்..... 
                                                                                                                                                               காத்திருங்கள்......

10 Sep 2011

அறிவுத்தேடல்
நியூட்டனும்
ஐன்ஸ்டினும் 
மரணித்துவிட்டார்கள்!!!
இனி யார் வந்து
விளக்க போகிறார்கள்
உன் வெட்கத்தின் விதியை ???