சகித்தவர்கள்...

19 Sep 2011

பூங்காநகர் முதல் தாம்பரம் வரை...(பயணத்தின் தொடர்ச்சி)


இதன் முதற்பகுதியைப் படிக்காத நண்பர்கள் அதில் பயணித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
கிண்டி இரயில் நிலையம்..காதலித்த நாட்களின் நினைவு பெட்டகமாவே அது அவனுக்கு ஒவ்வொரு அணுவிலும் தெரிந்தது..தினமும் கடந்து செல்லும் இடம்தான் என்றாலும் இவ்வளவு நேரம் பயணித்த நினைவுகளால் அவனை அந்த இரயில் நிலையம் உணர்ச்சிவசப்பட வைக்க தவறவில்லை...உச்சிமுகர்ந்து எல்லா திசைகளையும் பார்ப்பதற்குள் ஒரு கனமான வெட்டுடன் இரயில் காட்சிகளை நகர்த்தி விரையத் தொடங்கியது...நடைமேடையைக் கடக்கும் முன்பு காலியாக இருக்கும் அந்த காத்திருப்பு பலகை அவன் கண்களில் இருந்து தப்ப மறுத்தது..தனக்கும் மணிமொழிக்கும் பிறகு அந்த பலகையைக் காதலர்கள் கண்டுகொள்வதில்லை போலும் என்று சிரித்துக்கொண்டான்..காதலித்த காலங்களில்,இரயில் நிற்கும் திசைக்கு எதிர்முனை நோக்கி அமர்ந்து மணிமொழியின் கைகளைப் பிடித்துக்கொண்டு,"அடுத்த ட்ரைன் ல கெளம்பிடலாம்...அடுத்தது..அடுத்தது..."என்று ஒவ்வொரு இரயிலாக தவறவிட்டு ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது இருவருக்கும் சலித்தே போகாத விளையாட்டு...பேச்சு முடிந்து அங்கே ஒரு மௌனம் குடிவருவதுப் போல தோன்றினால்,"அந்த பொண்ண பாரேன்..க்யூட் டிரெஸ்ஸிங் சென்ஸ் ல??"என்று மணிமொழியை உஷ்ணபரிச்சை செய்து பார்ப்பான்.."யாரு?டாலா இருக்காளே..அவளா? அதும் அது மூஞ்சியும்...துப்பட்டாவ கழுத்துல தூக்கி போட்டு திரியிறா..டிரெஸ்ஸிங் சென்ஸாம்..நீங்க மோசம்.."என்று பதிலுக்கு அவள் பொரிந்துகொண்டிருக்கும் போது அடுத்த இரயில் வந்து அழைக்கும்..."இந்த ட்ரைன் வேணாம்...அடுத்தது"என விளையாட்டு தொடர்ந்து கொண்டிருக்கும்...

காதலித்த நாட்களிலும் சரி,திருமணத்திற்கு பிறகும் சரி,தன்னை விட நான்கு மாதங்கள் வயதில் மூத்தவள் என்றாலும் ஒரு முறைக்கூட  அவனை மணிமொழி பெயர் சொல்லி அழைத்ததோ, 'டா' என விளித்ததோ இல்லை..அதனால் அருந்ததி பிறந்த பிறகு மாமனார் மாமியாரும் இவர்களை ஏற்றுக்கொண்டு இவர்களோடே வந்து தங்கியபோது அவனை அழைப்பதில் மணிமொழிக்கு சிரமம் ஏதும் இருந்ததில்லை..சிரமமெல்லாம் காலையில் அவன் வேலைக்கு செல்லும் முன் தவறாமல் வாங்கிக்கொள்ளும் முத்ததில்தான்...'ஐயோ,மாமி வர்றாங்க..அந்த பக்கம் வேணாம் மாமா பேப்பர் படிச்சிட்டு இருக்காங்க...ஏங்க,பாப்பாக்கு முன்னாடியா?ஹுஹும்..வேணாம்'..என காதலைப் பொழியும் முன்பே கலவரப்படுத்திவிடுவாள்.."ஈவ்னிங் லேட்டா வந்தா ஆனந்த பவன் ல அல்வா வாங்கிட்டுதான் வரணும்" என்று ரேடியோ விளம்பரத்தைப் பழித்துக்காட்டி சிரித்துவிட்டு,குழந்தையைத் தூக்கிவைத்துக்கொண்டு,"பாப்பா அப்பாக்கு டாட்டா ச்சொல்லுடா..டாட்டா",என அந்த பிஞ்சு கைகளைக் காற்றில் ஒரு கவிதை  போல வீசிக்காட்டுவாள்..ஆனால் ஒரு நாளும் அவன் தாமதமாய் வந்தது இல்லை..அதற்காக அல்வா வாங்காமலும் சென்றதுமில்லை..கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு எதிரில் இருப்பவரிடம் கேட்டான்,"லாஸ்ட் ஸ்டேஷன் என்ன சார்?"...பதிலுக்கு அவர்,"கவனிக்கல சார்,மீனம்பாக்கம்னு நெனக்கிறேன்" என்றார்.."இட்ஸ் ஓகே" என்று சொல்லி கண்களை வெளியே மேய விட்டு மீனம்பாக்கம் கடந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டான்...

வானம் மெல்லியதாய் கருத்திருந்தது...மழை வரும் என்று உள்ளுணர்வு உரைத்தது,உண்மையில் மனம் அதை வேண்டியது...மூன்று ரூபாய்க்கு கடலை கொஞ்சம் வாங்கி கொறித்துக்கொண்டும்,அருகில் ஒரு கல்லூரி ஜோடி மிக சத்தமாய் கடலை வறுப்பதைப் பொறுத்துக்கொண்டும் கண்களுக்கு கட்டாய பசை தடவினான்...தன் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் ஏதேனும் இரவில் மொட்டை மாடியில் அமர்ந்திருக்கும் போது மணிமொழியிடம் சொல்ல முற்பட்டால்,"மொக்க போடாதீங்க,போங்க...பாப்பா,அப்பா மொக்கதான டா?" என்று கேட்டு குழந்தையின் தலையை ஆமொதிப்பதுப்போல ஆட்டி காண்பித்து சில்லறைகள் சிதறுவதைப் போல சிரித்துமுடிப்பாள்..."குழந்தைய உன்கூட சேத்துட்டியா? ரெண்டாவது குழந்தைய உன்கூட சேரவே விடக்கூடாது" என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் "ஹோ,இன்னும் சாருக்கு அந்த நெனப்பெல்லாம் வேற இருக்கா?யாரு இப்ப உங்களுக்கு பெத்து தர்றேன் னு சொன்னாங்க?" என்று கேலி செய்து அவன் செல்ல அடிகளை வாங்கிக்கொள்வாள்...அருந்ததியைப் பள்ளியில் சேர்த்த பிறகு,இவன் அலுவலகத்தில் இருக்கும்போது தொலைபேசியில் "ஏங்க,பாப்பா இல்லாம டே டைம்ல வீட்ல போர் அடிக்குதுங்க,நாம வேணா நீங்க அடிக்கடி கேக்றமாதிரி அடுத்ததா ஒரு...."என்று இழுத்து இழுத்து அவனை மறுமுனையில் நெளிய வைப்பாள்.."மொதல்ல ஃபோன வை நாய்குட்டி.."என்று சிரித்துக்கொண்டே வழிந்துமுடிப்பான்..தொலைபேசி அழைப்பு வந்ததும்,அதை காதில் ஏற்று,"யா,தாம்பரம் ரீச் ஆகா போறேன்,ஜஸ்ட் டூ மோர் மினிட்ஸ்..நோ ப்ராப்ஸ்..நாளைக்கு ஆஃபீஸ் ல மீட் பண்லாம்" என்று ஒரு நச்சரிப்பை கட் செய்துவிட்டு எழுந்து நின்று இறங்க ஆயத்தமானான்...

பதினாறு மைல்கள் கடந்து வந்து களைப்பு இரயிலுக்குக் கூட சற்று இருந்திருக்கும்...ஆனால் இந்த பயணம் அவனை உற்சாகப்படுத்தியிருந்தது..டையின் இறுக்கத்தை இன்னும் கொஞ்சம் குறைத்துக்கொண்டு டூ வீலர் ஷெட்டை நோக்கி நடக்க தொடங்கினான்..அங்கிருந்து கிளம்பிய அவனது பல்சர் ஆனந்த பவனில் போய் நின்றது...மல்லிகைப்பூவோடு கொஞ்சம் அல்வாவும் சேர்ந்துக்கொண்டது..அவனது உள்ளுணர்வு பொய்க்கவில்லை..தூறல் அவன் சட்டையில் ஒரு புது ஓவியம் வரைந்து,அவன் வீடு சென்று முடிப்பதற்குள் கழுவியும் முடித்தது அடைமழையாய் மாறி..சொட்ட சொட்ட சென்று கதவைத் தட்டியதும்,"நல்லா நெனஞ்சுட்டியா பா?நேரா பாத்ரூம்க்கு  போ,வெந்நீர் போட்டு வெச்சுருக்கேன்...குளிச்சிட்டு வந்துரு"என அம்மா தன் சேலை முகப்பை வைத்து அவன் தலையை துவட்டிக்கொண்டே சொன்னார்கள்..

அவனும் உடைகளைக் களைந்து,ஒரு குளியலாடி,பாதி துவட்டிய தலையுடன்,வாங்கி வந்திருந்த மல்லிகைப்பூக்களை அறைக்குள் எடுத்து சென்றான்..அவனது நடை கொஞ்சமாய் பலவீனப்பட்டது...படத்தானே வேண்டும்..சுவற்றில் சன்னமாக தொங்கிகொண்டிருக்கும் மணிமொழியின் புகைப்படத்திற்கு அதை சூட்டிவிட்டு எதிரே இருந்த கண்ணாடியில் தன்னையே வெறுமையே முறைத்தபடி நிற்க,"அப்பா,என்ன வாங்கிட்டு வந்த?"என துள்ளிக் குதித்து ஓடி வந்த குழந்தையைக் கையிலேந்தி மழைநின்று ஓய்ந்து கிடக்கும் மொட்டைமாடிக்கு சென்றான்..தன்னை நிதானப் படுத்திக்கொண்டு வாங்கிவந்த அல்வாவை குழந்தைக்கு ஊட்டிவிடத் தொடங்கினான்...சிறிது நேரத்தில் அவன் தோளிலே உறங்கிய குழந்தையைத் தட்டிக்கொடுத்துக் கொண்டே..சிறிதாய் வலியுடன் புன்னகைத்து அவன் எண்ணியது, 'இன்று ஒரு நாள் மட்டும் தாம்பரம் இன்னும் கொஞ்சம் தொலைவில் இருந்திருக்கலாம்'....தூரத்தில் இரயில் கூவும் ஓசைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தது..                            நினைவுகளாய் என்றும் மணிமொழி.....பயணம் மட்டும் இங்கு முடிகிறது...

11 comments:

suresh14feb said...

sirapana sinthanai..

vazthungal.

thodaratum ungal karuthu sevai..

sowmiya mohan said...
This comment has been removed by the author.
மயிலன் said...

பலரும் இந்த எதிர்பார்க்க பட்ட முடிவினால் ஏமாற்றப்பட்டதை உணர்கிறேன்...ஏமாற்றமடைந்தவர்கள் மன்னிக்கவும்...
சுட்டி காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

bandhu said...

கதையின் ஓட்டத்தில் சில குறிப்புகளில் இந்த முடிவை நோக்கித்தான் என்று புரிந்து கொள்ள முடிந்தது..

மயிலன் said...

பலரும் அதையேதான் சொன்னார்கள் தோழர்...நன்றி தங்களின் கருத்திற்கு...

ஹ ர ணி said...

மயிலன்.. ரயில் பயணம் அற்புதமானது. அது நாளுககொரு அனுபவம தரும். அது சுகமானது. நான் தினமும் தஞசையிலிருந்து சிதம்பரம் வரை அதை அனுபவிக்கிறேன். அருமை.

மயிலன் said...

நான் தஞ்சையிலிருந்து மயிலாடுதுறை செல்பவன்...ஆனால் அந்த ஒன்றரை மணி நேர பயணம் அத்தனை அழகு..அதுவும் தனிமையில் பயணிப்பதால்..

Unknown said...

ரசனையான ஆளு சார் நீங்க..

Unknown said...

ரசனையான ஆளு சார் நீங்க..

deen Eshwaran said...

Mudivu sogamaha dan irukum enpathai arinthirunthen... irupinum Kaachigalai kan mun vara vaitha kathai nadai arumai. Nandri...

Anguraj Chelladurai said...

என்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டே இதை எழுதுகிறேன். சமீபத்தில தான் உங்களை தெரிந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். நேத்து முகநூலில் இட்ட மணிமொழியும் மரணித்த பொழுதுகளும் பதிவு என்னை ஈர்த்தது. அதாவது உங்கள் மொழி நடை, காட்சிப்படுத்தும் தொனி என அனைத்தும் சிறப்பானதாய் இருந்தது. பிடித்தது. அப்படி இருக்கையில், இன்றைக்கு உங்கள் வலைத்தளத்தை படிக்கலாம் என்றெண்ணி உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

முதலில் 2011 கடைசி பதிவுகளிலிருந்து பின்னோக்கி படித்துக்கொண்டிருந்தேன். பின்னர் நான் கொண்ட எண்ணத்தை மாற்றிக்கொண்டு, 2011 தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.

அதன்வழி வாசித்து வருகையில் "பூங்காநகர் முதல் தாம்பரம் வரை" வாசிக்கலானேன். அதன் தொடர்ச்சியையும் படித்துமுடித்தேன்.

என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வீரிட்டு அழுதுவிட்டேன். மன்னிக்கவும். இதனை தட்டச்சு செய்யும் பொழுதும் விசைப்பலகையில் உள்ள எழுத்துகள் யாவும் என் கண்களுக்கு மங்கலாகவே தெரிகின்றன.

தற்போது தான் தெரிந்து கொண்டேன். 'மணிமொழியும் மரணித்த பொழுதுகளும்' பதிவு 2013லேயே எழுதப்பட்டது என்று. இவ்வளவு காலங்கள் இந்த வலைத்தளங்களோ முகநூலோ உங்களை என்னிடம் காட்டக்கூட இல்லையே என்ற ஏக்கம் தான் இருக்கிறது.

இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். உங்கள் எழுத்துகளுக்கு பின்னால் ஒரு காவியமே இருக்கின்றது. அதுதான் உங்கள் எழுத்துகளுக்கு வர்ணம் பூசி அழகுப்பார்க்கின்றது என்று. இன்னும் மேலும் படிக்க விழைகிறேன். படித்துக்கொண்டுருப்பேன்.