சகித்தவர்கள்...

31 Oct 2011

கேட்கக்கூடாத கேள்வியா அது?கேட்கும் கேள்விகள் 
அனைத்திற்கும் 
கேள்விகளாகவே 
பதில் சொல்லும் நீ 
அடிக்கடி கேட்கும் 
ஒரு கேள்வியைக் காதில் 
கேட்டும் கேட்காதவாறு 
நான் இருந்தாலும் 
என்னிடமிருந்து 
"சீக்கிரம்" என்ற பதிலைக் 
கேட்டேவிடவேண்டுமென்று 
குடைந்து குடைந்து 
கேட்டுத் தவிக்கிறாய்,
"அம்மா திரும்ப எப்பப்பா 
வருவாங்க....சாமிக்கிட்டேர்ந்து?"20 Oct 2011

இடம்: உன் வீடு---> நேரம்:இன்றிரவு 8 மணி (பகுதி - 3)

பகுதி 1  மற்றும் 2 வாசித்தவர்கள் மட்டும் தொடரவும்...


மணி கணக்கிலிருந்த அவகாசம் நிமிட கணக்கிற்கு அழுத்தமாய் குறைக்கப்பட்டுவிட்டது...சத்யமூர்த்தி பித்து பிடித்தவராய் தெரிந்தார்...திடீரென அறுக்கும் சத்தமும் நின்றுவிட்டது...மெதுவாக நடந்து சென்று ஜன்னலைத் திறந்து பார்க்கலாம் என்று தன்னைத் தேற்றிக்கொண்டு நகரத் தொடங்கினார்..தடாரென ஏ.சி. வெளியே இழுக்கப்பட்டது...அப்போது தான் வெளிப்புறம் முழுமையாய் அறுக்கப்பட்டுவிட்டது என அவருக்கு புரிந்து அவரின் முகம் வெளுத்துப் போனது...நிராயுதபாணியாய் நின்ற அவர் 'இறந்துவிட்டோம்' என்ற முடிவிற்கே வந்துவிட்டார்...கடைசி முயற்சியாய் வாசல் கதவை திறந்து ஓடிவிடலாம் என முடிவு செய்து அவர் திரும்புவதற்குள் ஏ.சி முழுவதுமாய் வெளியே இழுத்துப்போடப்பட்டது..

சத்யமூர்த்தி தாமதிக்க விரும்பவில்லை..ஓட தொடங்கிவிட்டார்...அறையை விட்டு வெளியேறுவதற்குள் யாரோ உள்ளே குதித்து விட்ட சத்தத்தை அவரால் கேட்க முடிந்தது..திரும்பிகூட பார்க்காமல் வாசல் கதவை நோக்கி விரைந்தார்...தடதடவென ஓடி கீழே விழுந்து எழ தடுமாறிக் கொண்டிருந்தார்...
"சார்.சார்...நாதான்...வெயிட்.."குரலைக் கேட்டதும் அவருக்கு திரும்பி பார்க்க தைரியம் வந்துவிட்டது...

பார்த்ததும் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை அவருக்கு.."சார்,நீங்க ஏன் சார் இப்ப...?ஐயோ..என்ன நடக்க போகுதுன்னு தெரிலையே.."வெள்ளை நிற டி-ஷர்ட்டில் வியர்த்துபோய் வந்து நிற்கும் திலீபன் இந்த கேள்வியை சத்யமூர்த்தியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை..அவர் பதற்றத்தில் இருப்பதைப் புரிந்துக்கொண்டு சிறிது மௌனமாய் இருந்தார் திலீபன்.."மொதல்ல இங்கிருந்து கெளம்புங்க சார்...உங்க உதவி எனக்கு வேணாம்..ப்ளீஸ்..கடவுளே..சார்...கெளம்புங்க சொன்னா கேளுங்க சார்..ஐயோ.."சத்யமூர்த்தி வாசல் கதவையும் கொள்ளை கதவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே கெஞ்சினார்...

"சார்..ப்ளீஸ் ரிலாக்ஸ்..எதுக்காக இப்போ தேவ இல்லாம டென்ஷன் ஆகுறீங்க..?நா உள்ள வந்ததும் சந்தோஷ படுவீங்கன்னு எதிர்ப் பாத்தேன்...ஓகே..இட்ஸ் ஆப்வியஸ்.."என்று சொல்லிக்கொண்டே வீட்டின் உள்ளமைப்பை நோட்டமிட்டார்..

"சார் நா சாகபோறது உறுதி ஆய்டுச்சு..என் பொண்டாட்டி புள்ளையாவது பொழச்சுகிட்டும்...அதுக்காகதான் சொல்றேன்...தயவு செஞ்சு கெளம்புங்க சார்..."

"எனக்கு புரியல..என்ன சொல்றீங்க நீங்க...?"என்று திலீபன் கேட்டதும் சத்யமூர்த்தி மீண்டும் வந்த தொலைப்பேசி அழைப்பைப் பற்றி பதற்றத்துடன் விவரித்தார்..

"சார் ரெண்டாவது தடவ நா கால் பண்ணபோது நீங்க அட்டென்ட் பண்னாதப்போவே ஐ சஸ்பெக்டெட் திஸ்.."என்று சொல்லி அவரது மகன் மற்றும் மனைவியின் மொபைல் எண்களை வாங்கிக் கொண்டார்.."லெட் அஸ் சீ...அவங்க எங்க இருக்காங்கனு..."என்று சொல்லி எண்களை அழுத்த தொடங்கினார்..சத்யமூர்த்திக்கு பயம் கண்களையும் காதுகளையும் அடைத்தது..இருவரிடமும் பேசிவிட்டு திலீபன் சத்யமூர்த்தியிடம் திரும்பினார்,"தே ஆர் சேஃப்..அவங்கள நா பக்கத்துல இருக்ற போலீஸ் ஸ்டேஷன்க்கு போய்ட்டு எனக்கு மறுபடி கால் பண்ண சொல்லிர்கேன்..வி வில் வெயிட்.."என்றதும் சத்யமூர்த்தி கொஞ்சம் நிதானத்திற்கு திரும்பினார்..சிறிது நேரத்தில் மனைவியிடம் இருந்து அழைப்பும் வந்து அவரின் பாதுகாப்பான நிலை தெரிந்ததும் சத்யமூர்த்தி மேலும் கொஞ்சம் நிம்மதி அடைந்தார்.. 

"என்ன சார்..டென்ஷன் கொறஞ்சுதா..?மொதல்ல பயப்படறத ஸ்டாப் பண்ணுங்க ...உங்க பையன்கிட்ட இருந்தும் கால் வந்துரும்..அப்றமா நீங்க ரொம்ப ரிலாக்ஸ் ஆயடுவீங்க.."என்று சொன்னதும் சத்யமூர்த்தி  நீண்ட நேரத்திற்கு பிறகு சந்தோஷம் என்பதை கொஞ்சமாய் உணர்ந்தார்..அடுத்த அழைப்பும் வந்தது.."உங்க பையன்கிட்ட நீங்களே பேசுங்க.."என்று மொபைலை அவரிடம் கொடுத்தார் திலீபன்..சத்யமூர்த்தி ஆர்வமாய் அதை வாங்கி அழைப்பை ஏற்று காதில் வைத்தார்...

"டேய் திலீபா..அடிங்*****....பெரிய *******யா நீ? உனக்கு ஏன்டா தேவ இல்லாம இந்த பொழப்பு..."அதே குரல்...சத்யமூர்த்திக்கு மறுபடியும் வியர்க்க தவறவில்லை...

"ஹ...ஹ...ஹலோ..."

"ஹோ...சத்யமூர்த்தியா?? என்ன சார்...பொண்டாட்டி புள்ளையெல்லாம் சேஃப் ஆய்ட்டாங்கன்னு ரொம்ப ரிலாக்ஸா இருங்கீங்க போல..ஹ்ம்ம்..குட்..தனியா சாகக்கூடாதுன்னு ஜோடிக்கு அந்த லூசு பய திலீபனையும் சேத்துக்கிட்ட போல இருக்கு..ஆமாமா..எனக்கும் கொஞ்சம் அவன்கிட்ட கணக்கு இருக்கு..ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.."என்று சொல்லி வழக்கம் போல தொலைப்பேசி அறையப்பட்டது..

"என்ன சார்...ஒண்ணுமே பேசாம வெச்சுட்டு இருக்கீங்க..."சோஃபாவில் சிகரெட் புகைத்தபடி அமர்ந்து கேட்ட திலீபனிடம்..."இது...இது..அவனோட குரல் சார்..."என்று வார்த்தையை மென்று விழுங்கினார் சத்யமூர்த்தி..
"வாட்....? யு மீன் தட் இடியட்?"என்று கேட்கும் திலீபனைத் திசைத்திருப்பியது அடுத்த அழைப்பொலி.."ஹலோ..ஓகே..ஃபைன்..ஃபைன்...குட்.."என்று பேசிமுடித்துவிட்டு சத்யமூர்த்தியிடம்,"யுவர் சன் இஸ் சேஃப்"என்றார்...

"அதையும் அவனே சொல்லிட்டான் சார்..."

"ஹ்ம்ம்..ஹீ இஸ் ஃபாஸ்ட் ...எனக்கு அவன பாக்கணும்..ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி..
 இந்த மாதிரி ஒரு வேட்டையாடி..."  

"வேணாம் சார்...நாம இந்த எடத்தவிட்டு கெளம்பிடலாம்...என் பொண்டாட்டியும் புள்ளையும் பத்தரமா இருக்காங்க..நாம நம்மள அடுத்தது காப்பாத்திகிறத பாக்கறது நல்லதுன்னு நெனைக்குறேன்.."திலீபன் அருகில் இருக்கும் தைரியத்தில் சத்யமூர்த்தியால் தெளிவாய் பேசமுடிந்தது இப்போது ...

"சீ...ஐ கான்ட் கிவ் திஸ் அப்..வெளில போய்ட்டா,மே பீ,அவன் யாருன்னே தெரியாம போய்டும்...அவன் வரணும்..ஐ வான்ட் டு மீட் ஹிம்..எஸ்..ஐ ஹாவ் டு.."திலீபனின் வீராவேசம் சத்யமூர்த்திக்கு தேவையற்றதாக தோன்றியது..."சார் சொன்னா கேளுங்க..ப்ளீஸ்..கெளம்பிடலாம்"

"ஜஸ்ட் ஃபர்கெட் தட் ஆப்ஷன்...வி வில் வெயிட்..என் மேல நம்பிக்க இல்லையா உங்களுக்கு...?"

"ஐயோ அப்படிலாம் இல்ல சார்.."என்று தெளிவாய் பொய் சொன்னார் சத்யமூர்த்தி..

"குட்...செரி...யாரா இருக்கும்?எனி கெஸ்?"

"யாரையுமே குறிப்பிட்டு சொல்ல முடில சார்..பிசினஸ்ல எதிரிங்க இருக்காங்கதான்...ஆனா இந்தளவுக்கு கொலவெறி யாருக்கும் இருக்குமுன்னு தோனல...""சாரி டு ஆஸ்க் திஸ்..உங்க பையன் மேல ஏதும் உங்களுக்கு டவுட் இருக்கா சார்?பிகாஸ் அந்த யூஸ் பண்ணாத சிம்க்கு கால் வந்தது..உங்க வீட்டோட எல்லா பக்கமும் தெரிஞ்சுகிட்டு மெரற்றது..நா அவனுக்கு கால் பண்ணதும் கொஞ்ச நேரத்துல என்னோட மொபைலுக்கு மெரட்டல் வந்தது...இதெல்லாம் வெச்சு பாக்கும்போது......"என்று திலீபன் கேட்கும்போதே சத்யமூர்த்தி குறுக்கிட்டு ,"சேச்சே...அவன் சின்ன பையன் சார்..என்னோட பிசினஸ் உலக வாடைகூட தெரியாம அவன வளத்துருக்கேன்..அவனப்போய்..."என்று கடகடவென சொல்லிமுடித்தார்..

"ஏதாவது நம்பிக்க துரோகம்..ஏமாத்துனது,,,அப்டி இப்டின்னு ஏதும் இருக்கா?"

"அதெல்லாம் இல்லாம பிசினஸ் பண்ண முடியாது சார்..ஆனா அதுல்லாம் இதுக்கு காரணமா இருக்கும்னு யோசிக்கமுடில.."

"வேற என்னவா இருக்கும்?எனி ரிவென்ஜ்?"

"அப்டியும் இருக்க முடியாது சார்..எந்த காரியத்தையும் நா நேரா எறங்கி செய்ய மாட்டேன்..கூலிக்கு ஆள் வெச்சுதான் செய்வேன்..அப்பப்போ ஆம்னி'அரசு',தூத்துக்குடிலேந்து பாஸ்கருன்னு பசங்கள வெச்சுதான் செய்வேன்..நேரடியா எதுக்கும் நாதான் காரணம்னு யாருக்கும் தோணாது.."

"உங்கள பத்தி தெரிஞ்ச இந்த மாதிரி கூலி ஆளுங்களா இருக்கும்னு தோணுதா?"

"இல்ல சார்..அவனுங்க பணத்துக்காக கொல செய்றவனுங்க..ஆனா ஃபோன்ல பேசுனவனுக்கு பணம் தேவ படல..."

"பணத்துக்காக அந்த பசங்க உங்கள பத்தி யாருகிட்டயாவது சொல்லிர்கலாம்ல?மோரோவர் உங்களோட பிசினஸ் பார்ட்னர் ராமதுரையையும் ஃபோன்ல பேசுனவன்தான் லாரி வெச்சு மோதி கொன்னுருக்கான்..இது அப்டினா நீங்க ரெண்டு பேரும் சேந்து செஞ்ச ஏதோ ஒரு காரியத்துக்கு பதிலடி மாதிரி தெரியுதுல்ல"

"இருக்கலாம் சார்..ஆனா சொல்லிர்ந்தாலும் அது பிரெச்சனையா வரும்ன்னு தோனல...ஏன்னா பணக்காரனுக்கும் ஏழைக்கும் தான் பழிவாங்க தைரியம் இருக்கும்..மிடில் கிளாஸ்க்கு இருக்காது.. நானும் ராமனும் சேந்து செஞ்சது எங்களோட ஆடிட்டர் அசோகனையும் அவனோட ஒய்ஃபையும்தான்..."

"ஐ சீ..எத்தன வருஷத்துக்கு முன்னாடி அது?" 

நேரம் ஆக ஆக,வேகவேகமாய் பதில் சொல்லத்தொடங்கினார் சத்யமூர்த்தி.."நாலு வருஷத்துக்கு முன்னாடி சார்..கேஸ் ரெகார்ட் கூட அது சூசைட்ன்னுதான் இருக்கு..எங்க மேல யாருக்கும் சந்தேகமே வந்திருக்காது..அப்டி இருக்கும்போது யாரு பழிவாங்க போறா சார்?அதோட இல்லாம அசோகனுக்கு அண்ணன்,தம்பி,புள்ளகுட்டின்னு யாருமே கெடையாது..அப்பறம் வேற ஒரு பொம்பள விஷயத்துல ராமன் மாட்டிகிட்டான்..அப்ப நாதான் தலையிட்டு அவள மெரட்டி பிரெச்சனைய முடிச்சு வச்சேன்..இது ரெண்டுதான் நானும் ராமனும் சேந்து செஞ்சது..மத்தபடி தனிதனியா நாலஞ்சு பண்ணிர்கோம்..ஆனா எதுலையுமே என் மேலையோ..அவன் மேலையோ துளிக்கூட யாருக்கும் சந்தேகமே வந்திர்காது சார்..."

"தட்ஸ் ஃபைன்..அப்ப நீங்களும் சாதரணமான ஆளில்ல"என்று சொல்லி திலீபன் சிரிக்க சத்யமூர்த்தியும் ஒரு கடின புன்னகையை முகத்தில் வைத்துக்கொண்டார்..ஆம்னி'அரசு',தூத்துக்குடி பாஸ்கர்,இராமதுரை,சத்யமூர்த்தியின் பிசினஸ் எதிரிகள் என திலீபன் கேள்விக்குறிகளை சுளித்துக்கொண்டிருந்தார்...ஈடுபாடே இல்லாமல் நேரத்தைப் பார்த்துக்கொண்டே சத்யமூர்த்தி அவருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்..

"ஹ்ம்ம்..என்னாலயும் தெளிவா ஒரு முடிவுக்கு வர முடில..காம்ப்ளிகேட்டட்
நாட்ஸ்...லெட் அஸ் சீ...கூ தட் பாஸ்டர்ட் இஸ்..."என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது சத்யமூர்த்தியின் கண்கள் கடிகாரத்தை மொய்த்துக்கொண்டிருந்தது.."சார்..ரொம்ப டென்ஸ்டா இருக்கீங்க..வேணும்னா ஒய்ஃப்டயோ,பையன்டையோ ஃபோன் பண்ணி பேசுங்க..."திலீபன் அவரைத் தேற்றினார்..."நானும் அதான் சார் யோசிச்சேன்..கொஞ்சம் அவங்கக்கிட்ட பேசுனா மனசு நிம்மதியா இருக்கும்"என்றதும்,"ஷூர்...பேசுங்க...ஐ வில் ஜஸ்ட் பீ ஹியர்"என்று சொல்லி திலீபன் மீண்டும் புகைக்கத் தொடங்கினார்..காலையிலிருந்து இறந்துகிடந்த தொலைப்பேசிக்கு சத்யமூர்த்தி இணைப்பை சரிசெய்து உயிர்கொடுத்தார்..மனைவியிடமும் மகனிடமும் நடந்தது அனைத்தையும் கூறி தான் இப்போது பாதுகாப்பாய் இருப்பதாவும் பயம் கலந்த குரலில் உத்திரவாதம் கொடுத்துவிட்டு...நாற்காலியில் வந்து அமர்ந்து மீண்டும் கடிகாரத்தை வெறித்தார்...அதற்குள் திலீபன் ஆஷ் ட்ரேயை நிரப்பி வைத்திருந்தார்..

"சார்..மணி ஏழாய்டுச்சு...இன்னும் ஒரு மணி நேரம் தான் ...வயித்த கலக்குது சார்...பேசாம கெளம்பிடலாம்",என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க அதைப் பெரிதாய் பொருட்படுத்தாதவராய் திலீபன் மொபைலில் ஏதோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்..

மீண்டும் தொலைப்பேசி அழைத்தது..இருவரும் ஒன்றாய் திரும்பி அதைப் பார்த்தனர்.."ரிலாக்ஸ்டா போய் பேசுங்க சார்.."என்று சத்யமூர்த்தியைத் தேற்றி அனுப்பினார் திலீபன்...  


"ஹ..ஹலோ..."பயத்தின் உச்சியில் சத்யமூர்த்தி..


"டேய்..வீணாபோனவனே உனக்காக இன்னும் ஒரு மணி நேரம் வெயிட் பண்றதெல்லாம் வேஸ்ட் ஃஆப் டைம்..சோ.."அதே குரல்...இம்முறை பின்னாலிருந்தும் கேட்க...சத்யமூர்த்தி திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்..


சோஃபாவில் சாய்ந்தபடி சிகரெட் புகையிடையே சிரித்துக்கொண்டே மொபைலைக் காதில் பொருத்தி இருந்தார் திலீபன்..அதைக் கண்டதும் சத்யமூர்த்தியின் கையிலிருந்து தொலைப்பேசி தானாக கீழே விழுந்தது..."நீயா?..."என்று சத்யமூர்த்தி தொடங்கும் முன்னே தன் துப்பாக்கியை எடுத்து அவரது நெற்றிப்பொட்டில் அலட்சியமாய் சுட்டார் திலீபன்..குண்டு மூளையைச் சிதைக்கும் முன்னரே சத்யமூர்த்தி பிணமாகிக்கிடந்தார்...
சோஃபாவில் சாய்ந்தபடியே,திலீபன் "பாய்ஸ்" என்றழைக்க..திடுதிடுவென ஜீன்ஸ்,டி-ஷர்டில் ஆறு ஆண்மகன்கள் வாசல் கொள்ளைபுரங்கள் வழியாக உள்ளே வந்து அவருக்கு சல்யுட் அடித்து விறைப்பாய் நின்றார்கள்..ஒரு மெல்லிய புன்னகையுடன் "மிஷன் சக்செஸ்" என்றார்..."குட் ஜாப்..அண்ட் இட் இஸ் எ குட் டீம் வொர்க்...அந்த வீடியோ ரெகார்டிங்க  எடுத்து இந்த நாயோட வாக்குமூலத்தத் தவிர எல்லாத்தையும் எரேஸ் பண்ணிடுங்க..தென் இந்த சினாரியோவ ஒரு டிஃபென்சிவ் என்கவுண்டர் மாதிரி ஃபிரேம் பண்ணிடுங்க..தட்ஸ் இட்.."என்று கையைத் தட்டிக்கொண்டு எழுந்தார்..


சில பெரும் முதலைகளுக்கான போலீஸ் விசாரணையும் தண்டனையும் இப்படிதான் நிகழ வேண்டியுள்ளது..தற்செயலாய் நிகழ்ந்த இராமதுரையின் சாலை விபத்தையும் இந்த விசாரணைக்கு பயனாக்கிக்கொண்டது திலீபனின் சாமர்த்தியம்..


சத்யமூர்த்தியின் பிணத்திற்கு அருகே வந்து,திலீபன் தனது ஷூ காலால் அவன் முகத்தை நிமிர்த்தி புகைந்தார்...இம்முறை மனதிற்குள்,......."மிடில் கிளாஸ்னா அவ்ளோ சாதரணமா போச்சு உனக்கு...சாவுடா.....என்னோட அக்காவும்,அசோகன் மாமாவும் செத்த அன்னிக்கே,***** உன்ன போட்ருக்கனும்,எனிவேஸ் பெட்டெர் லேட் தேன் நெவெர்.." 
சில என்கவுண்டர்களும் பழியுணர்ச்சி உடையவே.....முற்றும்....17 Oct 2011

இடம்: உன் வீடு---> நேரம்:இன்றிரவு 8 மணி (பகுதி - 2)

பகுதி 1 வாசிக்காதோர்,மிரட்டலை ஒட்டுக்கேட்டுவிட்டு  வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் ...


காதலைப் போலவேதான் பயமும்..மனிதனை அவ்வளவாய் யோசிக்க விடுவதில்லை..கடிகாரம் பதினொரு மணியாவதைக் காட்டியதும் நேரம் விரைவதையும்,தன்னால் ஏதும் மேற்கொண்டு செய்ய முடியாத நிலையையும் உணர்ந்து தவித்துக்கிடந்தார் சத்யமூர்த்தி..வேஷ்டியை சரிசெய்துக்கொண்டு நிலைதடுமாறி சென்று கொஞ்சம் தண்ணீரை விழுங்கிவிட்டு விட்டத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்தார்...தொலைப்பேசி குரல் யாராக இருக்க முடியும் என்று அவரால் யூகிக்க முடியவில்லை..தொழில் ரீதியாக தனக்கு பல எதிரிகள் இருந்தாலும் 
அவரால் இன்னாரென்று குறிப்பிட்டு முடிவுக்கு வர இயலவில்லை...

சாய்ந்து படுப்பதும்,வியர்வையில் குளிப்பதும்,குழப்பத்தில் தவிப்பதுமாய் பொழுது பறந்துக்கொண்டிருந்தது..12 மணியாக இன்னும் பத்து நிமிடங்களே இருக்கும் வேளையில் சத்யமூர்த்திக்கு நெஞ்சுவலி அதிகமானது..வழக்கமாய் மாத்திரைகள் எடுத்து தரும் மனைவியோ வேலைக்காரியோ இல்லாததால் தானே தள்ளாடி அறைக்குள் சென்று மேசையில் தேடி துளாவினார்..மாத்திரைகள் எடுத்துக்கொண்டு திரும்பும்போது ஏதோ யோசித்தவராய் மேசைக்குள் திரும்பவும் கைகளைவிட்டார்..மெல்லியதாய் ஒரு பெருமூச்சுடன் உள்ளே கிடந்த மகனுடைய பழைய சிம் கார்டைக் கண்டெடுத்தார்...இப்போது அவருக்கு மாத்திரைகள் தேவைப்படவில்லை...

அவசரவசரமாய் தன்னுடைய மொபைல் ஃபோனில் அந்த கார்டை செலுத்தினார்..இணைப்பு இன்னும் காலாவதியாகவில்லை என்று தெரிந்ததும் வந்த சந்தோஷம்,அதில் பாக்கி தொகை மிகக்குறைவாக இருந்ததை அறிந்து சற்றே தளர்ந்தது..இருக்கும் தொகையை யாரவது ஒருவரிடம் பேச மட்டுமே உபயோகிக்க முடியுமென்பதால்,சத்யமூர்த்தி மீண்டும் தலையை மோதிக்கொண்டார்..'மனைவிக்கும் மகனுக்கும் ஃபோன் செய்து எச்சரிக்கலாமா?','அப்படி செய்வதால் என்ன பலன்?','காவல்த்துறைக்கு தெரியப்படுத்தலாமா?','அப்படி செய்து மாட்டிக்கொண்டால் என்ன செய்வது?'என அவர் யோசனைகள் முழுதும் கேள்விக்குறி கொண்டே முடிந்தது...எட்டப்பர்கள் நிறைந்த காவல்துறையை அவர் நம்ப தயங்கினார்..

யாருக்கு பேசலாம் என்று முடிவெடுக்கும் வரை இணைப்பைத் துண்டித்தே வைக்கலாம் என்று தெளிவாய் செயல்பட தொடங்கினார்..இவருக்கு அவ்வபோது உதவும் 'ஆம்னி'அரசு ஞாபகம் வர,அவனிடம் பேசலாம் என்று முடிவு செய்து அவசரமாய் எண்களை அழுத்த முற்படும்போதே 'அவன் காசுக்காக எதுவும் செய்றவன்,விசுவாசம் எதிர்ப்பார்க்க முடியாது' என்று உள்ளுணர்வு உரக்க குட்ட..முடிவைக் கைவிட்டார்..அதோடு இல்லாமல் அவன் ஒரு இரட்டை கொலை வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளான்..அவனை என்கவுண்டர் செய்யவும் காவல்துறை தயாராக உள்ளது..இதையெல்லாம் பற்றி யோசிக்கும்போது 
புதிதாக வந்திருக்கும் ஏ.சி.பி. திலீபன் பற்றிய ஞாபகம் அவருக்கு வந்தது..

ஏ.சி.பி. திலீபன்-சினிமாக்களில் வரும் போலீஸ் கதாநாயகர்கள் போல விவேகமும் நேர்மையும் சேர்ந்த முப்பத்துநான்கு வயதுக்காரர்..மிக சமீபத்தில் அவரை ஒரு பள்ளி விழாவில் தலைமையேற்ற போது சத்யமூர்த்தி சந்தித்து பேசியிருந்தார்..அவருடைய தனிப்பட்ட தொலைப்பேசி எண்ணும் இவரிடம் உள்ளது..ஆனால் இவர் இப்போது இருக்கும் மன நிலையில் அவரைத் தொடர்புக்கொண்டால் மட்டும் என்னவாகிவிட போகிறது என்றே தோன்றியது...வெறும் யோசிப்புகளில் 
மட்டுமே நேரம் உருகிசெல்வதை எண்ணி வேதனைகொள்ளும் போதே கடிகாரம் மணி மதியம் ஒன்று ஆவதை ரீங்காரமிட்டு அவரை மேலும் பதறச்செய்தது...

பயத்தில் பசியோ,மதிய நேர தூக்கமோ பற்றி அவரால் சிந்திக்க கூட முடியவில்லை..மகன்,மனைவி,காவல்துறை,நண்பர்கள்,கையாள், கடைசியாய் ஏ.சி.பி...இவைகளுக்குள்தான் யாரோ ஒருவருக்கு சீக்கிரம் தெரியப்படுத்த வேண்டும் என்று மீண்டும் வெறித்துப்பார்த்து அமர்ந்தார்,இம்முறை தரையை... கடைசியாய் அவர் முடிவெடுத்து அழுத்தியது ஏ.சி.பி.யின் எண்கள்...மறுமுனையில் தொலைப்பேசி சிணுங்கிக் கொண்டிருந்தது...கடைசிவரை அழைப்பு ஏற்கப்படாதோ என்ற பயத்தில் அவருக்கு அழுகையே வந்துவிட்டது...அழைப்பு முடியும் தருவாயில்,'ஹலோ,திலீபன் ஹியர்..'என்ற வார்த்தைகள் வந்ததும் சத்யமூர்த்தி ஒரு கணம் சந்தோஷத்தில் மூச்சடைத்து நின்றார்..

'சார்,நா சத்யமூர்த்தி பேசறேன்..ஞாபகம் இருக்கா சார்..?'

'ஹோ,நீங்கதானா? எஸ்.எம்.மில்ஸ் னு நம்பர் சேவ் பண்ணிருந்தேன்..ஒன் செகண்ட் யாருன்னு கொஞ்சம் கன்ஃப்யுஸ் ஆய்ட்டேன்..ஒகே..சொல்லுங்க சார் எப்டி இருக்கீங்க.. என்ன விஷயம்..?' சிகரெட் வாயில் இருப்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு பேசுவதுபோல் தெரிந்தது இம்முனையில்...

'விஷயம் ரொம்ப சீரியஸ்..ஃபோன்ல சொல்ல கூட பயமா இருக்கு..ஆனா நேர்ல உங்கள பாக்கவும் முடியாது..என்ன செய்றதுன்னே தெரில சார்..'

'சார்,பதட்ட படாம பேசுங்க..இதுல என்னால ஹெல்ப் பண்ண முடியும் னு நம்பிதானே எனக்கு ஃபோன் பண்ணீங்க..தென்?'

'இல்ல சார்,உங்க டிபார்ட்மென்ட்ல விஷயம் கசிஞ்சா கூட என் குடும்பமே இல்லாம போய்டும் போல இருக்கு சார்..'

'வாட் டூ யு மீன்?...எனி த்ரெட் கால்ஸ்?,ஓகே..இட் வில் பீ கான்ஃபிடென்ஷியல்...பிலீவ் மீ..கொஞ்சம் தெளிவா நடந்தத சொல்லுங்க..'

சத்யமூர்த்தி ஒரு நீண்ட பெருமூச்சுடன்,'ரொம்ப தேங்க்ஸ் சார்..'என்று சொல்லி,அதன் பின்னர் காலையிலிருந்து நடந்ததை மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.. 

'ப்ரெட்டி காம்ப்ளிகேட்டட்...பட் ரிலாக்ஸ்...நா பாத்துகிறேன்..'என்று சொல்லி,வீட்டின் அமைப்பு,லாரி நிற்கும் திசை,அருகாமையில் இருக்கும் வீடுகள் என ஒவ்வொன்றாய் குறிப்பெடுத்துக்கொண்டார்...

'சார்.பேலன்ஸ் முடியப்போகுது..நா என்ன செய்யணும்னு சொல்லிடுங்க..அதோட அமைதியா இருக்ற வீட்ல ஃபோன் பேசிட்டு இருக்றதும் பயமாத்தான் இருக்கு..'  

'நீங்க கவல படவோ,பயப்படவோ வேணாம்..மோரோவர்,நீங்க ஏதும் செய்ய வேணாம்..நா பாத்துகிறேன்..ஒன் மோர் திங் இந்த மொபைல மட்டும் நீங்க எவெரி ஒன் ஹார் ஒன்ஸ் ஆன் பண்ணுங்க..தேவ பட்டா ஐ வில் கிவ் யு சம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்...தென் முக்கியமா...'என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே சத்யமூர்த்தியின் மொபைலில் இரண்டாம் அழைப்பு வந்தது...ஒரு வினாடி அவருக்கு இரத்தமே உறைந்து விட்டது.. உடனே நிலையுணர்ந்து,'சார்,ஏதோ செகண்ட் கால் வருது சார்..இத்தன நாள் யூஸ் பண்ணாம கெடந்த கார்டு ...யாரா இருக்கும்னு தெரில சார்..'பயத்தில் சத்யமூர்த்தியின் வார்த்தைகள் தெளிவிழந்தன..

'அது எதாவது சர்வீஸ் காலா இருக்கும்..ரொம்ப நாள் கழிச்சு ரீ-ஆக்டிவேட்  பண்ணதுக்காக கூட....'என்று அவர் இவரைத் தேற்றிக்கொண்டிருக்கும் போதே தொகை இல்லாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டது...சத்யமூர்த்தி மொபைலை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்..மீண்டும் தன்னை ஏ.சி.பி. தொடர்புக்கொள்வார் என காத்திருந்தார்..எதிர்பார்த்தப்படியே அழைப்பும் வந்தது..ஆனால் இது பதிவு செய்யப்படாத எண்..பயத்தில் இணைப்பைத் துண்டித்துவிட்டார்...முன்பாக வந்த அந்த இரண்டாம் அழைப்பும் தற்போது வந்த எண்ணும் ஒன்றா என்று ஒப்பிட்டு பார்த்தார்...ஒரு கனம்,மூச்சும் நின்றே விட்டது அவருக்கு...

சில வினாடிகளில்,மூன்றாம் முறையாய் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது...சத்யமூர்த்தி செய்வதறியாது விழி பிதுங்கி நின்றார்..அழைப்பொலி நின்றது...நான்காம் முறையாய் தொடர்ந்தது...வேறு வழியில்லாமல்,அழைப்புக்கு செவி கொடுத்தார்...
'ஏன்டா வெங்காயம்..உனக்கெல்லாம் சொல் புத்திங்கறதே கெடையாதா?',காலையில் பேசிய அதே குரல்..சத்யமூர்த்தி தலையில் அடித்துக்கொண்டு தரையில் சரிந்து விழுந்து கதறினார்...'தெரியாம செஞ்சுட்டேன்,என்ன மன்னிச்சுடுங்கையா...'என்று வாய்விட்டு அழுது மன்றாடினார்..இடையில் ஏ.சி.பி. எண்ணிலிருந்து இரண்டாம் அழைப்பு வந்தது...அதை பொருட்படுத்தும் நிலையில் சத்யமூர்த்தி இல்லை..

'அடேய்..காலேல்ல அவ்ளோ சொல்லியும் உனக்கு துளிக்கூட பயமே இல்ல...? உனக்கு டைம் கொடுத்தா நெறையா யோசிப்ப போலிருக்கே..செரி..கொஞ்ச நேரத்துல ஒன்னோட புள்ளைய தட்டிவிட்டுட்டு..சீக்ரமா உனக்கும் வந்து டாட்டா சொல்றேன்..அந்த நாகர்கோயில்ல இருக்ற பொட்டசியயும் ஒருவழியா முடிச்சுட்டே வந்துரட்டா?'என்று கேட்டு முடிப்பதற்குள்,'ஐயோ,வேணாம்யா...நீங்க என்ன சொன்னாலும் நா கேக்குறேன் ...எவ்ளோ பணம் வேணும்னாலும் தர்றேன்யா...விட்ருங்கையா',அடிவயிற்றிலிருந்து ஓலமிட்டு கதறினார்..

'ஏன்டா மூதேவி,பணம் வேணும்னா எனக்கு காலைலயே கேட்க தெரியாதா?எனக்கு தேவையெல்லாம் பொணம்...உன்னோட பொணம்..அத நானா எடுத்துக்கிறேன்,நீ டென்ஷன் ஆகாம இரு..'வார்த்தைகள் பொசுக்கிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் இரண்டாம் அழைப்பில் திலீபன்..சத்யமூர்த்தி தலையிலும் வயிற்றிலும் மாறி மாறி அடித்துக்கொண்டார்... குரல் தொடர்ந்துக்கொண்டிருந்தது'உன்ன இவ்வளவு நேரம் விட்டுவெச்சது தப்பா போய்டுச்சு..******* வர்றேன் இருடா...' என்று சொல்லி தொலைப்பேசி அறைந்து வைக்கப்பட்டது...

மீண்டும் திலீபனிடம் இருந்து அழைப்பு வந்தது...சத்யமூர்த்தி அழுகையும் ஆத்திரமுமாய் மொபைலை எடுத்து சுவற்றில் வீசி அடித்தார்.. தரையில் துவண்டுபோய் வாதம் வந்தவரைப் போல செயலற்று கிடந்தார்...காதைத் தரையோடு சேர்த்து படுத்திருக்கும் அவருக்கு திடீரென கரகரவென அறுக்கும் சத்தம் கேட்டது..திடுக்கிட்டு எழுந்து சத்தம் வரும் திசை நோக்கி நடந்தார்...சத்தம் அவரை படுக்கை அறைக்குள் அழைத்து சென்றது..நடப்பதை நிறுத்தி உற்று கவனித்தார்..கண்கள் சிவந்தது அவருக்கு...உரக்க சத்தமிட வாயை திறந்து முயல்கிறார்...ஆனால் வார்த்தையேதும் துணைவரவில்லை...வேறு வழியற்றவராய் சத்தம் வந்து கொண்டிருக்கும் அந்த சுவற்றைப் பார்த்தபடி நிற்கிறார்...
யாரோ ஒருவன் வெளியிலிருந்து ஏ.சி. பொருத்தபட்டிருக்கும் ஜன்னலை அறுத்துக்கொண்டிருக்கிறான்..

முடிவு நெருங்கிவிட்டது,கதைக்கு...சத்யமூர்த்திக்கு???....காத்திருங்கள்...15 Oct 2011

இடம்: உன் வீடு------> நேரம்:இன்றிரவு 8 மணி

இம்முறை குருதி மை கொண்டு ஒரு குறுங்கதை 
பூஜை அறையில் மூச்சு முட்டுமளவிற்கு இருந்த புகையிலிருந்து சந்தன கவசமிட்ட மேனியுடன் பரவசமாய் வெளியே வந்தார் சத்யமூர்த்தி..வெள்ளை நிற கதர் சட்டைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு வழுக்கை விட்டு வைத்த சொச்ச மயிர்களில் ஹேர்டை மங்கிய இடங்களை கவலையுடன் கண்ணாடியில் பார்த்துவிட்டு ஓட்டுனரை ஏவினார்,"தம்பி,கார் ரெடியாப்பா? கெளம்பலாமா?".."வெளில எடுத்து நிப்பாட்டிட்டேன் சார்,கெளம்பலாம்" போலி மரியாதையுடன் பதிலொன்றும் வந்தது ...அன்றைய தினம் சத்தியமூர்த்தியின் மனைவி,அவர்களது மருமகளின் தங்கை வளைகாப்பிற்காக நாகர்கோவில் சென்றிருந்தார்.."இன்னைக்கு சரவணபவன் பொங்கல்வடை நமக்கு"என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டார்..
அப்போதுதான் வந்தது அந்த தொலைப்பேசி அழைப்பு ...

"ஹலோ,வணக்கம்",சத்யமூர்த்தி இந்த முனையில் 

மறுமுனையில் அமைதி மட்டுமே பதிலாய் இருந்தது..

"ஹலோ யாரு பேசுறீங்க சார்..?ஒண்ணுமே கேக்கலியே?"

"பேசுனாதானே கேக்கும் மிஸ்டர் ஆர்.எஸ்.எம்", ஆர்.சத்யமூர்த்யின் சுருக்கம் அது...

சிறு நிதானத்திற்கு பிறகு,"யாருன்னு வெளங்கலியே...கொரல் புதுசா இருக்கு,யார் சார் பேசறீங்க?",குழப்பமாய் இம்முனையிலிருந்து சத்யமூர்த்தி...

"அடுத்த ரெண்டு நிமிஷத்துக்கு பேசாம இரு...நா பேசி முடிச்சுக்கிறேன்.."

"ஏய் யாரு யா  நீ?என்ன பேசி கிழிக்க போற?"

"மணி இப்போ சரியா பத்தாகுது..வாசல்ல நிக்கிற உன் ட்ரைவர வீட்டுக்கு போக சொல்லிடு..உன்னோட செல் ஃபோன ஆஃப் பண்ணி வை..வேனும்ன கடைசியா ஒரு தடவ உன் பொண்டாட்டி புள்ளைட்ட பேசிக்கோ.."

"யார்ரா பேசுறது? ******* ******* மொவனே...என்ன பத்தி தெரியாம பேசிட்டு இருக்க.."

"சார்...என்ன சார்..டீசன்ட்டா பேசிகிட்டு இருக்கும்போது இப்டி பொசுக்குனு கேட்ட வார்த்தைல திட்டிடீங்க...ஹ்ம்ம்..வேணும்னா நேர்ல இன்னைக்கு பாக்றப்போ உன்ன பத்தி தெரிஞ்சுக்கிறேன்..இப்ப நா சொல்றத மட்டும் கேட்டு பொத்திகிட்டு  இரு.."குரல் கொஞ்சமாய் கனமாக தொடங்கியது மறுமுனையில்...சத்யமூர்த்தி பயத்தை காட்டிக்கொள்ள மறுத்து வியர்வையை அவசரமாய் துடைத்துக்கொண்டார்...ஆனாலும் அவரிடம் வார்த்தைகள் இல்லை இப்போது,"யாரு நீ,என்ன வேணும் உனக்கு?"என்பதைத் தவிர...

"சொல்ல விட மாட்றியே..உனக்கு ஒரு தகவல் சொல்லலாம்னு ஃபோன் செஞ்சா..பேச விட மாட்றியே?,குறுக்க பேசாம கேளு..சரியா? ட்ரைவர் இன்னும் வாசல்லயே நிக்குறான்..??"சத்தியமூர்த்திக்கு வியர்வையைத் துடைக்க தோன்றவில்லை இப்போது...தொலைப்பேசி குரல் தொடர்ந்தது.."சரி அவன போக சொல்லிட்டு கதவ இழுத்து மூடிட்டு வீட்லயே இரு...மொட்ட மாடி.கொள்ள கதவும் சேத்து..புதுசா ஒரு பிளாஸ்மா டிவி வாங்கிர்க்கேல்ல..அதுல எதாவது பாத்துகிட்டு எனக்காக வெயிட் பண்ணிட்டு இரு..சாப்பாட்டுக்கு வெளிலலாம் போக வேணாம்..நேத்து உங்க  வீட்டு சமையக்காரி மார்க்கெட் ல வாங்குன பழம் எல்லாம் ஃப்ரிட்ஜ்ல இருக்கு..அப்புறம் என்கிட்டே பேசி முடிச்சதும் இந்த ஃபோன் ஒயரையும் அறுத்துவிட்ரு.. "

"இதெ...ல்..லாம் எ..து..க்கு நா செய்யனும்?"சத்தியமூர்த்தியின் குரல் தடுமாற தொடங்கிவிட்டது... 

"ஹோ..அத நா சொல்லவே இல்லையா ?ஹ்ம்ம்...வேறொன்னுமில்ல...நீ சாக போற...இல்ல இல்ல..உன்ன கொல பண்ண போறாங்க...?"

"யாரு? எப்போ?எதுக்கு...?"

"யாரு..எதுக்குங்கறதெல்லாம் நேர்ல பேசிப்போம்..எப்போன்னு மட்டும் சொல்லிடறேன்.. இடம்:உன் வீடு...நேரம்-இன்றிரவு 8 மணி...ஓகே தான? வேற அப்பாயின்மென்ஸ் இருந்தா கேன்சல் பண்ணிடு..செரியா?அப்புறம் சினிமாலாம் பாப்பதானே?இந்த மாதிரி சீன்ல நீ போலிஸ கூப்ட கூடாது..மீறி  எதாவது ட்ரை பண்ணா உன் பையன் மெட்ராஸ்லயும் உன் பொண்டாட்டி நாகர்கோவில்லயும் பாக்க சகிக்காத பொணமா கெடப்பாங்க... "கேட்டவுடன் சத்தியமூர்த்திக்கு விழுங்கிக்கொள்ள எச்சில் கூட இல்லை..."அப்புறம் மொட்டைமாடி கதவ சாத்தும் போது கொஞ்சம் எட்டி பாரு...மெயின் ரோடு பக்கமா ஒரு லாரி நிக்கும்...வீட்ட விட்டு வெளில போக நெனச்சேன்னா 'தொழிலதிபர் சத்யமூர்த்தி கார் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதால் சம்பவ இடத்திலேயே  மரணம்'னு நியூஸ் வந்துடும் நாளைக்கு,போன மாசம் உன்னோட அன்புத்தோழன் இராமதுரையைப் பத்தி  வந்த நியூஸ் மாதிரி.." தொடர்ச்சியாய் வந்துவிழும் வார்த்தைகளில் சத்யமூர்த்தி உறைந்து போய் நின்றார்...

"சொன்னதெல்லாம் செய்ய லேட் பண்ணாத..ஏன்னா உன் பையனோட கார் பீச் ரோட்ல நிக்கிது..அவன் சாந்தோம் சர்ச் தாண்டரதுகுள்ள சொன்னதெல்லாம் செஞ்சு முடி...இல்லேனா புள்ளைக்கு அப்பா கொள்ளி வைக்கிற ஒரு சோக காட்சி தேவ இல்லாம இதுல சேந்துடும்...நா லைன்ல வெயிட் பண்றேன்..மேக் இட் ஃபாஸ்ட்..." தொலைப்பேசியை வைத்துவிட்டு மொட்டைமாடிக்கு ஓடிச்சென்று லாரி நிற்கிறதா என்று பார்த்தார்..இவர் பார்த்ததும் லாரியில் இருந்து ஒருவன் கை அசைத்து காட்டினான்...தான் ஒவ்வொரு அணுவாய் நோட்டமிடப்படுவதை உணர்ந்து,தொலைப்பேசி குரலின் கட்டளைகளுக்கு அடி பணிந்தார்..

மீண்டும் வந்து தொலைப்பேசியை எடுத்து,"நீங்க சொன்னதெல்லாம் செஞ்சுட்டேன்...ஆனா எதுக்காக...."என்று இழுக்கும்போதே,"உனக்கு யோசிக்கறதுக்கும் கேள்வி கேக்கறதுக்கும் அவகாசமோ உரிமையோ கெடையாது..ஜஸ்ட் ஃபாலோ மீ..இன்னும் பத்து மணி நேரம் சந்தோஷமா இருந்துக்கோ...நா ரொம்ப பங்க்சுவல்..ஐ வில் பீ தேர் ஆன் டைம்...அண்ட் மிஸ்டர் ஆர்.எஸ்.எம்..அந்த ஃபோன் ஒயர கட் பண்ண மறந்துடாதீங்க..ஓகே சார் ஸ்டே கூல்...சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்.."என்று சொல்லி தொலைப்பேசி வைக்கப்பட்டது..இம்முனையில் செய்வதறியாமல் இமைக்க மறந்து கையில் தொலைப்பேசியுடன் நின்றுகொண்டிருந்தார்...

தொலைப்பேசி இணைப்பை துண்டித்து விட்டு,குழப்பங்களின் நச்சரிப்பில் செய்வதறியாது சாய்ந்து படுத்தார்... வெளியே சென்று பார்க்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு,கதவில் கை வைத்து திறந்த வேகத்தில்,ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது..வீட்டிற்குள் ஒரு கல் வந்து கிடந்தது...அவசரமாய் கதவை அடைத்து,உறைந்துபோய் அமர்ந்தார்...அமைதி பரவிக்கிடந்த இடத்தில் அவரின் மூச்சு காற்று இரைச்சலாய் தெரிந்தது...திடீரென வீட்டு கடிகாரம் ஓசை எழுப்ப நிமிர்ந்து பார்த்தார்...

இன்னும் ஒன்பது மணி நேரம் தான்...காத்திருங்கள்....10 Oct 2011

அது ஒரு தனி ஒப்பாரி...


பந்தலின் கீழ் ஆண்கள்
பிளாஸ்டிக் நாற்காலிகளில் நிரம்பி
ஒரு செயற்கை சோகத்திற்கு
முகங்களை வாடகைக்கு விட்டிருந்தனர்!!
தகர வாத்தியமும்,தப்புதாளமும்
தள்ளாட்ட கலைஞர்களும்
தலைவலி உண்டாக்க தவறவில்லை!!
அக்கறையாய் அலங்காரம்
செய்யப்பட்டன பாடையும் பிணமும்!!!

"பெரியவருகென்ன?
பொண்டாட்டியா?புள்ளையா?
வயசான ஒடம்பு..போட்டு வைக்க வேணாம்..
சட்டுபுட்டுன்னு ஆகறத பாருங்கையா!!"
என்று வக்கனையாய்
வரிந்துகட்டிக்கொண்டிருந்தது
முறுக்கு மீசை வைத்த பெருசு ஒன்று!

"என்னைய பெத்த ராசாவே.." என்று
ஒரு சுண்ணாம்பு தலைக்காரி
பல்லவி எடுத்து தர...
சுற்றிக்கொண்டு தலைவிரித்து மாரடித்து
சரணத்தைத் தொடர்ந்தார்கள்
சம வயது கிழவிகள்...
"ஒண்டிக்கட்ட வாழ்க்கய நீ ஒதறிட்டு போய்டீயா?
ஒண்ணுமே வேணாமுன்னு ஒதுங்கி நீ போய்டீயா?"
"எம்பொறவியே...
கட்டயுல போரமட்டும் நீ கண்ணாலம் கட்டலியே...
தூக்க புள்ளக்குட்டி இல்லாம நீ பாடையில போறதென்ன..."
"அய்யனாரு பூசையில நீ சாமியாடி நிப்பியே..
இங்க சாமி வந்தும் காணாம நீ சாம்பலாக போறியே.."
என ஒவ்வொன்றாய் நீட்டி இழுத்துக்கொண்டிருக்க..

ஆறு மைல்கள் தாண்டி வந்து
யாரோடும் பேசாமல் அமர்ந்திருக்கும்
அந்த மூதாட்டியிடம் மட்டும் 
அறுபது வருடங்களுக்கு முன்னரே
தாத்தா சத்தியம் வாங்கிக்கொண்டாராம்,
"நா செத்தாலும் நீ அழக்கூடாது
ஏன்னா,அழுதா நீ அசிங்கமா இருக்க" என்று...


6 Oct 2011

திகட்ட திகட்ட-காதல்தாவணியின் ஒற்றை கீற்று 
மறைக்க தவறிய உன் இடையைப் 
பார்த்ததும் - அப்போதே எனக்கு 
பரிதாபம் தொற்றிக்கொண்டது...நம் குழந்தை மீது !
வழுக்காமல் எப்படி அதில் அமரப்போகிறது?

------------------------------------------------------------------------------------------

கோவில் வாசலில் விட்டுவந்த என் காலணிகள்
திரும்பிவந்து பார்க்கும்போது
உன்னவைகளோடு பின்னிக்கிடந்தன !
பத்திரமாய் இதயத்தில் இருக்கும் காதலை 
எப்படி நம் உள்ளங்கால் வழி 
உறிந்திருக்க முடிந்தது அவைகளால்?

--------------------------------------------------------------------------------------------

நேற்றுதான் படித்தேன்-
தாய்மை அடைந்ததும் 
பெண்கள் மேலும் அழகடைவார்களென்று!
படித்த தருணம் முதல் என்னை 
ஒரு ஓவியனாய் உணர்கிறேன்!

---------------------------------------------------------------------------------------------

கொடியில் காய்ந்து கொண்டிருந்த உன் தாவணி
மதில் தாண்டி பறந்து என் வீட்டில் விழுந்ததும்
எடுக்க முற்பட்டபோது முடியவில்லை!
அது சரி! அதற்குள் உன் அழகின் எடையும்  
ஒட்டிக்கொண்டு தானே திரிகிறது!

---------------------------------------------------------------------------------------------

உன்னை கால் கடுக்க சுற்றிவரும் நானே 
புத்துணர்ச்சியுடன் அலையும் போது 
நீ நித்தமும் சுற்றிவரும் 
உங்கள் வீட்டு துளசி மாடத்திற்கு 
எதற்கு தேவையில்லாமல் தண்ணீர் ஊற்றுகிறீர்கள்?

----------------------------------------------------------------------------------------------

ஏதாவது ஒரு பொருளைக் காட்டி 
'அழகா இருக்கா?'-என்று கேட்கும் நண்பர்களிடம் 
'இல்லை' என யோசிக்காமல் சொல்லிவிடுகிறேன்..
அழகு என்பதன் அர்த்தம் நீ என்று 
என்னையே கேட்காமல் 
பொருத்திக்கொண்டதுபோலும் 
என் மன அகராதி....

------------------------------------------------------------------------------------------------

என் வரிகளின் வழியே 
என் நண்பர்களும் 
உன் அழகை இரசிக்க நேரிடுமென்பதால் 
இங்கே இப்பதிவிற்கு 
கட்டாய முற்றுப்புள்ளி வைக்கிறேன்...