சகித்தவர்கள்...

17 Oct 2011

இடம்: உன் வீடு---> நேரம்:இன்றிரவு 8 மணி (பகுதி - 2)

பகுதி 1 வாசிக்காதோர்,மிரட்டலை ஒட்டுக்கேட்டுவிட்டு  வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் ...


காதலைப் போலவேதான் பயமும்..மனிதனை அவ்வளவாய் யோசிக்க விடுவதில்லை..கடிகாரம் பதினொரு மணியாவதைக் காட்டியதும் நேரம் விரைவதையும்,தன்னால் ஏதும் மேற்கொண்டு செய்ய முடியாத நிலையையும் உணர்ந்து தவித்துக்கிடந்தார் சத்யமூர்த்தி..வேஷ்டியை சரிசெய்துக்கொண்டு நிலைதடுமாறி சென்று கொஞ்சம் தண்ணீரை விழுங்கிவிட்டு விட்டத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்தார்...தொலைப்பேசி குரல் யாராக இருக்க முடியும் என்று அவரால் யூகிக்க முடியவில்லை..தொழில் ரீதியாக தனக்கு பல எதிரிகள் இருந்தாலும் 
அவரால் இன்னாரென்று குறிப்பிட்டு முடிவுக்கு வர இயலவில்லை...

சாய்ந்து படுப்பதும்,வியர்வையில் குளிப்பதும்,குழப்பத்தில் தவிப்பதுமாய் பொழுது பறந்துக்கொண்டிருந்தது..12 மணியாக இன்னும் பத்து நிமிடங்களே இருக்கும் வேளையில் சத்யமூர்த்திக்கு நெஞ்சுவலி அதிகமானது..வழக்கமாய் மாத்திரைகள் எடுத்து தரும் மனைவியோ வேலைக்காரியோ இல்லாததால் தானே தள்ளாடி அறைக்குள் சென்று மேசையில் தேடி துளாவினார்..மாத்திரைகள் எடுத்துக்கொண்டு திரும்பும்போது ஏதோ யோசித்தவராய் மேசைக்குள் திரும்பவும் கைகளைவிட்டார்..மெல்லியதாய் ஒரு பெருமூச்சுடன் உள்ளே கிடந்த மகனுடைய பழைய சிம் கார்டைக் கண்டெடுத்தார்...இப்போது அவருக்கு மாத்திரைகள் தேவைப்படவில்லை...

அவசரவசரமாய் தன்னுடைய மொபைல் ஃபோனில் அந்த கார்டை செலுத்தினார்..இணைப்பு இன்னும் காலாவதியாகவில்லை என்று தெரிந்ததும் வந்த சந்தோஷம்,அதில் பாக்கி தொகை மிகக்குறைவாக இருந்ததை அறிந்து சற்றே தளர்ந்தது..இருக்கும் தொகையை யாரவது ஒருவரிடம் பேச மட்டுமே உபயோகிக்க முடியுமென்பதால்,சத்யமூர்த்தி மீண்டும் தலையை மோதிக்கொண்டார்..'மனைவிக்கும் மகனுக்கும் ஃபோன் செய்து எச்சரிக்கலாமா?','அப்படி செய்வதால் என்ன பலன்?','காவல்த்துறைக்கு தெரியப்படுத்தலாமா?','அப்படி செய்து மாட்டிக்கொண்டால் என்ன செய்வது?'என அவர் யோசனைகள் முழுதும் கேள்விக்குறி கொண்டே முடிந்தது...எட்டப்பர்கள் நிறைந்த காவல்துறையை அவர் நம்ப தயங்கினார்..

யாருக்கு பேசலாம் என்று முடிவெடுக்கும் வரை இணைப்பைத் துண்டித்தே வைக்கலாம் என்று தெளிவாய் செயல்பட தொடங்கினார்..இவருக்கு அவ்வபோது உதவும் 'ஆம்னி'அரசு ஞாபகம் வர,அவனிடம் பேசலாம் என்று முடிவு செய்து அவசரமாய் எண்களை அழுத்த முற்படும்போதே 'அவன் காசுக்காக எதுவும் செய்றவன்,விசுவாசம் எதிர்ப்பார்க்க முடியாது' என்று உள்ளுணர்வு உரக்க குட்ட..முடிவைக் கைவிட்டார்..அதோடு இல்லாமல் அவன் ஒரு இரட்டை கொலை வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளான்..அவனை என்கவுண்டர் செய்யவும் காவல்துறை தயாராக உள்ளது..இதையெல்லாம் பற்றி யோசிக்கும்போது 
புதிதாக வந்திருக்கும் ஏ.சி.பி. திலீபன் பற்றிய ஞாபகம் அவருக்கு வந்தது..

ஏ.சி.பி. திலீபன்-சினிமாக்களில் வரும் போலீஸ் கதாநாயகர்கள் போல விவேகமும் நேர்மையும் சேர்ந்த முப்பத்துநான்கு வயதுக்காரர்..மிக சமீபத்தில் அவரை ஒரு பள்ளி விழாவில் தலைமையேற்ற போது சத்யமூர்த்தி சந்தித்து பேசியிருந்தார்..அவருடைய தனிப்பட்ட தொலைப்பேசி எண்ணும் இவரிடம் உள்ளது..ஆனால் இவர் இப்போது இருக்கும் மன நிலையில் அவரைத் தொடர்புக்கொண்டால் மட்டும் என்னவாகிவிட போகிறது என்றே தோன்றியது...வெறும் யோசிப்புகளில் 
மட்டுமே நேரம் உருகிசெல்வதை எண்ணி வேதனைகொள்ளும் போதே கடிகாரம் மணி மதியம் ஒன்று ஆவதை ரீங்காரமிட்டு அவரை மேலும் பதறச்செய்தது...

பயத்தில் பசியோ,மதிய நேர தூக்கமோ பற்றி அவரால் சிந்திக்க கூட முடியவில்லை..மகன்,மனைவி,காவல்துறை,நண்பர்கள்,கையாள், கடைசியாய் ஏ.சி.பி...இவைகளுக்குள்தான் யாரோ ஒருவருக்கு சீக்கிரம் தெரியப்படுத்த வேண்டும் என்று மீண்டும் வெறித்துப்பார்த்து அமர்ந்தார்,இம்முறை தரையை... கடைசியாய் அவர் முடிவெடுத்து அழுத்தியது ஏ.சி.பி.யின் எண்கள்...மறுமுனையில் தொலைப்பேசி சிணுங்கிக் கொண்டிருந்தது...கடைசிவரை அழைப்பு ஏற்கப்படாதோ என்ற பயத்தில் அவருக்கு அழுகையே வந்துவிட்டது...அழைப்பு முடியும் தருவாயில்,'ஹலோ,திலீபன் ஹியர்..'என்ற வார்த்தைகள் வந்ததும் சத்யமூர்த்தி ஒரு கணம் சந்தோஷத்தில் மூச்சடைத்து நின்றார்..

'சார்,நா சத்யமூர்த்தி பேசறேன்..ஞாபகம் இருக்கா சார்..?'

'ஹோ,நீங்கதானா? எஸ்.எம்.மில்ஸ் னு நம்பர் சேவ் பண்ணிருந்தேன்..ஒன் செகண்ட் யாருன்னு கொஞ்சம் கன்ஃப்யுஸ் ஆய்ட்டேன்..ஒகே..சொல்லுங்க சார் எப்டி இருக்கீங்க.. என்ன விஷயம்..?' சிகரெட் வாயில் இருப்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு பேசுவதுபோல் தெரிந்தது இம்முனையில்...

'விஷயம் ரொம்ப சீரியஸ்..ஃபோன்ல சொல்ல கூட பயமா இருக்கு..ஆனா நேர்ல உங்கள பாக்கவும் முடியாது..என்ன செய்றதுன்னே தெரில சார்..'

'சார்,பதட்ட படாம பேசுங்க..இதுல என்னால ஹெல்ப் பண்ண முடியும் னு நம்பிதானே எனக்கு ஃபோன் பண்ணீங்க..தென்?'

'இல்ல சார்,உங்க டிபார்ட்மென்ட்ல விஷயம் கசிஞ்சா கூட என் குடும்பமே இல்லாம போய்டும் போல இருக்கு சார்..'

'வாட் டூ யு மீன்?...எனி த்ரெட் கால்ஸ்?,ஓகே..இட் வில் பீ கான்ஃபிடென்ஷியல்...பிலீவ் மீ..கொஞ்சம் தெளிவா நடந்தத சொல்லுங்க..'

சத்யமூர்த்தி ஒரு நீண்ட பெருமூச்சுடன்,'ரொம்ப தேங்க்ஸ் சார்..'என்று சொல்லி,அதன் பின்னர் காலையிலிருந்து நடந்ததை மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.. 

'ப்ரெட்டி காம்ப்ளிகேட்டட்...பட் ரிலாக்ஸ்...நா பாத்துகிறேன்..'என்று சொல்லி,வீட்டின் அமைப்பு,லாரி நிற்கும் திசை,அருகாமையில் இருக்கும் வீடுகள் என ஒவ்வொன்றாய் குறிப்பெடுத்துக்கொண்டார்...

'சார்.பேலன்ஸ் முடியப்போகுது..நா என்ன செய்யணும்னு சொல்லிடுங்க..அதோட அமைதியா இருக்ற வீட்ல ஃபோன் பேசிட்டு இருக்றதும் பயமாத்தான் இருக்கு..'  

'நீங்க கவல படவோ,பயப்படவோ வேணாம்..மோரோவர்,நீங்க ஏதும் செய்ய வேணாம்..நா பாத்துகிறேன்..ஒன் மோர் திங் இந்த மொபைல மட்டும் நீங்க எவெரி ஒன் ஹார் ஒன்ஸ் ஆன் பண்ணுங்க..தேவ பட்டா ஐ வில் கிவ் யு சம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்...தென் முக்கியமா...'என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே சத்யமூர்த்தியின் மொபைலில் இரண்டாம் அழைப்பு வந்தது...ஒரு வினாடி அவருக்கு இரத்தமே உறைந்து விட்டது.. உடனே நிலையுணர்ந்து,'சார்,ஏதோ செகண்ட் கால் வருது சார்..இத்தன நாள் யூஸ் பண்ணாம கெடந்த கார்டு ...யாரா இருக்கும்னு தெரில சார்..'பயத்தில் சத்யமூர்த்தியின் வார்த்தைகள் தெளிவிழந்தன..

'அது எதாவது சர்வீஸ் காலா இருக்கும்..ரொம்ப நாள் கழிச்சு ரீ-ஆக்டிவேட்  பண்ணதுக்காக கூட....'என்று அவர் இவரைத் தேற்றிக்கொண்டிருக்கும் போதே தொகை இல்லாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டது...சத்யமூர்த்தி மொபைலை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்..மீண்டும் தன்னை ஏ.சி.பி. தொடர்புக்கொள்வார் என காத்திருந்தார்..எதிர்பார்த்தப்படியே அழைப்பும் வந்தது..ஆனால் இது பதிவு செய்யப்படாத எண்..பயத்தில் இணைப்பைத் துண்டித்துவிட்டார்...முன்பாக வந்த அந்த இரண்டாம் அழைப்பும் தற்போது வந்த எண்ணும் ஒன்றா என்று ஒப்பிட்டு பார்த்தார்...ஒரு கனம்,மூச்சும் நின்றே விட்டது அவருக்கு...

சில வினாடிகளில்,மூன்றாம் முறையாய் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது...சத்யமூர்த்தி செய்வதறியாது விழி பிதுங்கி நின்றார்..அழைப்பொலி நின்றது...நான்காம் முறையாய் தொடர்ந்தது...வேறு வழியில்லாமல்,அழைப்புக்கு செவி கொடுத்தார்...
'ஏன்டா வெங்காயம்..உனக்கெல்லாம் சொல் புத்திங்கறதே கெடையாதா?',காலையில் பேசிய அதே குரல்..சத்யமூர்த்தி தலையில் அடித்துக்கொண்டு தரையில் சரிந்து விழுந்து கதறினார்...'தெரியாம செஞ்சுட்டேன்,என்ன மன்னிச்சுடுங்கையா...'என்று வாய்விட்டு அழுது மன்றாடினார்..இடையில் ஏ.சி.பி. எண்ணிலிருந்து இரண்டாம் அழைப்பு வந்தது...அதை பொருட்படுத்தும் நிலையில் சத்யமூர்த்தி இல்லை..

'அடேய்..காலேல்ல அவ்ளோ சொல்லியும் உனக்கு துளிக்கூட பயமே இல்ல...? உனக்கு டைம் கொடுத்தா நெறையா யோசிப்ப போலிருக்கே..செரி..கொஞ்ச நேரத்துல ஒன்னோட புள்ளைய தட்டிவிட்டுட்டு..சீக்ரமா உனக்கும் வந்து டாட்டா சொல்றேன்..அந்த நாகர்கோயில்ல இருக்ற பொட்டசியயும் ஒருவழியா முடிச்சுட்டே வந்துரட்டா?'என்று கேட்டு முடிப்பதற்குள்,'ஐயோ,வேணாம்யா...நீங்க என்ன சொன்னாலும் நா கேக்குறேன் ...எவ்ளோ பணம் வேணும்னாலும் தர்றேன்யா...விட்ருங்கையா',அடிவயிற்றிலிருந்து ஓலமிட்டு கதறினார்..

'ஏன்டா மூதேவி,பணம் வேணும்னா எனக்கு காலைலயே கேட்க தெரியாதா?எனக்கு தேவையெல்லாம் பொணம்...உன்னோட பொணம்..அத நானா எடுத்துக்கிறேன்,நீ டென்ஷன் ஆகாம இரு..'வார்த்தைகள் பொசுக்கிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் இரண்டாம் அழைப்பில் திலீபன்..சத்யமூர்த்தி தலையிலும் வயிற்றிலும் மாறி மாறி அடித்துக்கொண்டார்... குரல் தொடர்ந்துக்கொண்டிருந்தது'உன்ன இவ்வளவு நேரம் விட்டுவெச்சது தப்பா போய்டுச்சு..******* வர்றேன் இருடா...' என்று சொல்லி தொலைப்பேசி அறைந்து வைக்கப்பட்டது...

மீண்டும் திலீபனிடம் இருந்து அழைப்பு வந்தது...சத்யமூர்த்தி அழுகையும் ஆத்திரமுமாய் மொபைலை எடுத்து சுவற்றில் வீசி அடித்தார்.. தரையில் துவண்டுபோய் வாதம் வந்தவரைப் போல செயலற்று கிடந்தார்...காதைத் தரையோடு சேர்த்து படுத்திருக்கும் அவருக்கு திடீரென கரகரவென அறுக்கும் சத்தம் கேட்டது..திடுக்கிட்டு எழுந்து சத்தம் வரும் திசை நோக்கி நடந்தார்...சத்தம் அவரை படுக்கை அறைக்குள் அழைத்து சென்றது..நடப்பதை நிறுத்தி உற்று கவனித்தார்..கண்கள் சிவந்தது அவருக்கு...உரக்க சத்தமிட வாயை திறந்து முயல்கிறார்...ஆனால் வார்த்தையேதும் துணைவரவில்லை...வேறு வழியற்றவராய் சத்தம் வந்து கொண்டிருக்கும் அந்த சுவற்றைப் பார்த்தபடி நிற்கிறார்...
யாரோ ஒருவன் வெளியிலிருந்து ஏ.சி. பொருத்தபட்டிருக்கும் ஜன்னலை அறுத்துக்கொண்டிருக்கிறான்..

முடிவு நெருங்கிவிட்டது,கதைக்கு...சத்யமூர்த்திக்கு???....காத்திருங்கள்...No comments: