சகித்தவர்கள்...

15 Oct 2011

இடம்: உன் வீடு------> நேரம்:இன்றிரவு 8 மணி

இம்முறை குருதி மை கொண்டு ஒரு குறுங்கதை 
பூஜை அறையில் மூச்சு முட்டுமளவிற்கு இருந்த புகையிலிருந்து சந்தன கவசமிட்ட மேனியுடன் பரவசமாய் வெளியே வந்தார் சத்யமூர்த்தி..வெள்ளை நிற கதர் சட்டைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு வழுக்கை விட்டு வைத்த சொச்ச மயிர்களில் ஹேர்டை மங்கிய இடங்களை கவலையுடன் கண்ணாடியில் பார்த்துவிட்டு ஓட்டுனரை ஏவினார்,"தம்பி,கார் ரெடியாப்பா? கெளம்பலாமா?".."வெளில எடுத்து நிப்பாட்டிட்டேன் சார்,கெளம்பலாம்" போலி மரியாதையுடன் பதிலொன்றும் வந்தது ...அன்றைய தினம் சத்தியமூர்த்தியின் மனைவி,அவர்களது மருமகளின் தங்கை வளைகாப்பிற்காக நாகர்கோவில் சென்றிருந்தார்.."இன்னைக்கு சரவணபவன் பொங்கல்வடை நமக்கு"என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டார்..
அப்போதுதான் வந்தது அந்த தொலைப்பேசி அழைப்பு ...

"ஹலோ,வணக்கம்",சத்யமூர்த்தி இந்த முனையில் 

மறுமுனையில் அமைதி மட்டுமே பதிலாய் இருந்தது..

"ஹலோ யாரு பேசுறீங்க சார்..?ஒண்ணுமே கேக்கலியே?"

"பேசுனாதானே கேக்கும் மிஸ்டர் ஆர்.எஸ்.எம்", ஆர்.சத்யமூர்த்யின் சுருக்கம் அது...

சிறு நிதானத்திற்கு பிறகு,"யாருன்னு வெளங்கலியே...கொரல் புதுசா இருக்கு,யார் சார் பேசறீங்க?",குழப்பமாய் இம்முனையிலிருந்து சத்யமூர்த்தி...

"அடுத்த ரெண்டு நிமிஷத்துக்கு பேசாம இரு...நா பேசி முடிச்சுக்கிறேன்.."

"ஏய் யாரு யா  நீ?என்ன பேசி கிழிக்க போற?"

"மணி இப்போ சரியா பத்தாகுது..வாசல்ல நிக்கிற உன் ட்ரைவர வீட்டுக்கு போக சொல்லிடு..உன்னோட செல் ஃபோன ஆஃப் பண்ணி வை..வேனும்ன கடைசியா ஒரு தடவ உன் பொண்டாட்டி புள்ளைட்ட பேசிக்கோ.."

"யார்ரா பேசுறது? ******* ******* மொவனே...என்ன பத்தி தெரியாம பேசிட்டு இருக்க.."

"சார்...என்ன சார்..டீசன்ட்டா பேசிகிட்டு இருக்கும்போது இப்டி பொசுக்குனு கேட்ட வார்த்தைல திட்டிடீங்க...ஹ்ம்ம்..வேணும்னா நேர்ல இன்னைக்கு பாக்றப்போ உன்ன பத்தி தெரிஞ்சுக்கிறேன்..இப்ப நா சொல்றத மட்டும் கேட்டு பொத்திகிட்டு  இரு.."குரல் கொஞ்சமாய் கனமாக தொடங்கியது மறுமுனையில்...சத்யமூர்த்தி பயத்தை காட்டிக்கொள்ள மறுத்து வியர்வையை அவசரமாய் துடைத்துக்கொண்டார்...ஆனாலும் அவரிடம் வார்த்தைகள் இல்லை இப்போது,"யாரு நீ,என்ன வேணும் உனக்கு?"என்பதைத் தவிர...

"சொல்ல விட மாட்றியே..உனக்கு ஒரு தகவல் சொல்லலாம்னு ஃபோன் செஞ்சா..பேச விட மாட்றியே?,குறுக்க பேசாம கேளு..சரியா? ட்ரைவர் இன்னும் வாசல்லயே நிக்குறான்..??"சத்தியமூர்த்திக்கு வியர்வையைத் துடைக்க தோன்றவில்லை இப்போது...தொலைப்பேசி குரல் தொடர்ந்தது.."சரி அவன போக சொல்லிட்டு கதவ இழுத்து மூடிட்டு வீட்லயே இரு...மொட்ட மாடி.கொள்ள கதவும் சேத்து..புதுசா ஒரு பிளாஸ்மா டிவி வாங்கிர்க்கேல்ல..அதுல எதாவது பாத்துகிட்டு எனக்காக வெயிட் பண்ணிட்டு இரு..சாப்பாட்டுக்கு வெளிலலாம் போக வேணாம்..நேத்து உங்க  வீட்டு சமையக்காரி மார்க்கெட் ல வாங்குன பழம் எல்லாம் ஃப்ரிட்ஜ்ல இருக்கு..அப்புறம் என்கிட்டே பேசி முடிச்சதும் இந்த ஃபோன் ஒயரையும் அறுத்துவிட்ரு.. "

"இதெ...ல்..லாம் எ..து..க்கு நா செய்யனும்?"சத்தியமூர்த்தியின் குரல் தடுமாற தொடங்கிவிட்டது... 

"ஹோ..அத நா சொல்லவே இல்லையா ?ஹ்ம்ம்...வேறொன்னுமில்ல...நீ சாக போற...இல்ல இல்ல..உன்ன கொல பண்ண போறாங்க...?"

"யாரு? எப்போ?எதுக்கு...?"

"யாரு..எதுக்குங்கறதெல்லாம் நேர்ல பேசிப்போம்..எப்போன்னு மட்டும் சொல்லிடறேன்.. இடம்:உன் வீடு...நேரம்-இன்றிரவு 8 மணி...ஓகே தான? வேற அப்பாயின்மென்ஸ் இருந்தா கேன்சல் பண்ணிடு..செரியா?அப்புறம் சினிமாலாம் பாப்பதானே?இந்த மாதிரி சீன்ல நீ போலிஸ கூப்ட கூடாது..மீறி  எதாவது ட்ரை பண்ணா உன் பையன் மெட்ராஸ்லயும் உன் பொண்டாட்டி நாகர்கோவில்லயும் பாக்க சகிக்காத பொணமா கெடப்பாங்க... "கேட்டவுடன் சத்தியமூர்த்திக்கு விழுங்கிக்கொள்ள எச்சில் கூட இல்லை..."அப்புறம் மொட்டைமாடி கதவ சாத்தும் போது கொஞ்சம் எட்டி பாரு...மெயின் ரோடு பக்கமா ஒரு லாரி நிக்கும்...வீட்ட விட்டு வெளில போக நெனச்சேன்னா 'தொழிலதிபர் சத்யமூர்த்தி கார் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதால் சம்பவ இடத்திலேயே  மரணம்'னு நியூஸ் வந்துடும் நாளைக்கு,போன மாசம் உன்னோட அன்புத்தோழன் இராமதுரையைப் பத்தி  வந்த நியூஸ் மாதிரி.." தொடர்ச்சியாய் வந்துவிழும் வார்த்தைகளில் சத்யமூர்த்தி உறைந்து போய் நின்றார்...

"சொன்னதெல்லாம் செய்ய லேட் பண்ணாத..ஏன்னா உன் பையனோட கார் பீச் ரோட்ல நிக்கிது..அவன் சாந்தோம் சர்ச் தாண்டரதுகுள்ள சொன்னதெல்லாம் செஞ்சு முடி...இல்லேனா புள்ளைக்கு அப்பா கொள்ளி வைக்கிற ஒரு சோக காட்சி தேவ இல்லாம இதுல சேந்துடும்...நா லைன்ல வெயிட் பண்றேன்..மேக் இட் ஃபாஸ்ட்..." தொலைப்பேசியை வைத்துவிட்டு மொட்டைமாடிக்கு ஓடிச்சென்று லாரி நிற்கிறதா என்று பார்த்தார்..இவர் பார்த்ததும் லாரியில் இருந்து ஒருவன் கை அசைத்து காட்டினான்...தான் ஒவ்வொரு அணுவாய் நோட்டமிடப்படுவதை உணர்ந்து,தொலைப்பேசி குரலின் கட்டளைகளுக்கு அடி பணிந்தார்..

மீண்டும் வந்து தொலைப்பேசியை எடுத்து,"நீங்க சொன்னதெல்லாம் செஞ்சுட்டேன்...ஆனா எதுக்காக...."என்று இழுக்கும்போதே,"உனக்கு யோசிக்கறதுக்கும் கேள்வி கேக்கறதுக்கும் அவகாசமோ உரிமையோ கெடையாது..ஜஸ்ட் ஃபாலோ மீ..இன்னும் பத்து மணி நேரம் சந்தோஷமா இருந்துக்கோ...நா ரொம்ப பங்க்சுவல்..ஐ வில் பீ தேர் ஆன் டைம்...அண்ட் மிஸ்டர் ஆர்.எஸ்.எம்..அந்த ஃபோன் ஒயர கட் பண்ண மறந்துடாதீங்க..ஓகே சார் ஸ்டே கூல்...சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்.."என்று சொல்லி தொலைப்பேசி வைக்கப்பட்டது..இம்முனையில் செய்வதறியாமல் இமைக்க மறந்து கையில் தொலைப்பேசியுடன் நின்றுகொண்டிருந்தார்...

தொலைப்பேசி இணைப்பை துண்டித்து விட்டு,குழப்பங்களின் நச்சரிப்பில் செய்வதறியாது சாய்ந்து படுத்தார்... வெளியே சென்று பார்க்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு,கதவில் கை வைத்து திறந்த வேகத்தில்,ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது..வீட்டிற்குள் ஒரு கல் வந்து கிடந்தது...அவசரமாய் கதவை அடைத்து,உறைந்துபோய் அமர்ந்தார்...அமைதி பரவிக்கிடந்த இடத்தில் அவரின் மூச்சு காற்று இரைச்சலாய் தெரிந்தது...திடீரென வீட்டு கடிகாரம் ஓசை எழுப்ப நிமிர்ந்து பார்த்தார்...

இன்னும் ஒன்பது மணி நேரம் தான்...காத்திருங்கள்....No comments: