சகித்தவர்கள்...

10 Oct 2011

அது ஒரு தனி ஒப்பாரி...


பந்தலின் கீழ் ஆண்கள்
பிளாஸ்டிக் நாற்காலிகளில் நிரம்பி
ஒரு செயற்கை சோகத்திற்கு
முகங்களை வாடகைக்கு விட்டிருந்தனர்!!
தகர வாத்தியமும்,தப்புதாளமும்
தள்ளாட்ட கலைஞர்களும்
தலைவலி உண்டாக்க தவறவில்லை!!
அக்கறையாய் அலங்காரம்
செய்யப்பட்டன பாடையும் பிணமும்!!!

"பெரியவருகென்ன?
பொண்டாட்டியா?புள்ளையா?
வயசான ஒடம்பு..போட்டு வைக்க வேணாம்..
சட்டுபுட்டுன்னு ஆகறத பாருங்கையா!!"
என்று வக்கனையாய்
வரிந்துகட்டிக்கொண்டிருந்தது
முறுக்கு மீசை வைத்த பெருசு ஒன்று!

"என்னைய பெத்த ராசாவே.." என்று
ஒரு சுண்ணாம்பு தலைக்காரி
பல்லவி எடுத்து தர...
சுற்றிக்கொண்டு தலைவிரித்து மாரடித்து
சரணத்தைத் தொடர்ந்தார்கள்
சம வயது கிழவிகள்...
"ஒண்டிக்கட்ட வாழ்க்கய நீ ஒதறிட்டு போய்டீயா?
ஒண்ணுமே வேணாமுன்னு ஒதுங்கி நீ போய்டீயா?"
"எம்பொறவியே...
கட்டயுல போரமட்டும் நீ கண்ணாலம் கட்டலியே...
தூக்க புள்ளக்குட்டி இல்லாம நீ பாடையில போறதென்ன..."
"அய்யனாரு பூசையில நீ சாமியாடி நிப்பியே..
இங்க சாமி வந்தும் காணாம நீ சாம்பலாக போறியே.."
என ஒவ்வொன்றாய் நீட்டி இழுத்துக்கொண்டிருக்க..

ஆறு மைல்கள் தாண்டி வந்து
யாரோடும் பேசாமல் அமர்ந்திருக்கும்
அந்த மூதாட்டியிடம் மட்டும் 
அறுபது வருடங்களுக்கு முன்னரே
தாத்தா சத்தியம் வாங்கிக்கொண்டாராம்,
"நா செத்தாலும் நீ அழக்கூடாது
ஏன்னா,அழுதா நீ அசிங்கமா இருக்க" என்று...


7 comments:

NHTG said...

Silmishakkaara thatha!!!

thaenmozhi said...

pinangal azhuthu naan kelvi pattathilaiye.. manathalavil pinamaagi ponavaluku azhugai engirunthu varum..!!!

மயிலன் said...

#NHTG said...
Silmishakkaara thatha!!!#

தாங்கள் வரிகளை உள்வாங்கவில்லை என நினைக்கிறேன்...:)

மயிலன் said...

#thaenmozhi said...
pinangal azhuthu naan kelvi pattathilaiye.. manathalavil pinamaagi ponavaluku azhugai engirunthu varum..!!!#

அருமையான மறுமொழி..நன்றி தோழி..

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

உங்களது வலைத்தளம் அருமையாக உள்ளது..இன்னும் பதிவுகளை அதிகமாக்குங்கள் ..

வீடு சுரேஸ்குமார் said...

உண்மைதான் நிறைய பிரம்மச்சாரியின் சாவில் யாருக்கும் தெரியாமல் ஒரு சீவன் அழுகின்றது.....

இரா.எட்வின் said...

கடைசி பத்தி எவ்வளவு அழகான கவிதை