சகித்தவர்கள்...

30 Nov 2011

யதேச்சையான எழுத்துகள் #1அன்பிற்குரிய விருப்பதாரர்களே..

     கடந்த சில வாரங்களாய், நீண்ட நாட்களுக்கு முன் எழுத விரும்பிய தொகுப்பு கட்டுரைகள் எழுத தொடங்கவேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி என்னை  உந்த தொடங்கிவிட்டது.. எனவே 'சரி..முயற்சி பண்ணிப் பாப்போம்' என்று பேனாவை எடுத்துவிட்டேன்.. இதைத்தொடர்ந்து, மாதம் இருமுறை தொகுப்பு கட்டுரைகளுக்கான எனது இடுகை இதே தலைப்பில் மயிலிறகில் பதிவு செய்யப்படும்.. இவ்வித இடுகை எழுதமுனைவதில் பதிவுலக நண்பர் பிரபாகரன் அவரது தொடர்பதிவான 'பிரபா ஒயின் ஷாப் ' மூலம் (அவருக்கே தெரியாமல் ) என்னை அதிகம் பாதித்திருக்கிறார் என்பதை இவ்விடம் தெரிவித்துக்கொள்கிறேன்..இதுவரை என் பதிவுகளை சளைக்காமல் சகித்துக்கொண்டவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ளவேண்டி இங்கே சமர்ப்பிக்கிறேன்..

   #  பேராசிரியர் ஒருவருக்கு அறுவை சிகிச்சையில் துணை புரிய அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்..கொஞ்சம் மேலும் கீழும் பார்த்த ஊழியர் ஒருவர்.."யார பாக்கணும் பாஸ்..?", என்றதும் வந்த வேலையை சொன்னேன்..அதன் பின் அவரின் பதில்களில் 'பாஸ்' இடத்தில் நுழைந்துகொண்ட 'சார்'-இல் அவ்வளவாக உண்மை இல்லை..சரியாக நினைவிருக்கும் பட்சத்தில் சுமார் 18 வருடங்களுக்கு முன், அதே மருத்துவமனையில் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் வேலை, அப்போது அவ்விடத்தில் இருந்த படிக்கட்டில் ஒரு சிறுவனாய் விளையாடிக்கொண்டிருந்த ஞாபகம் வந்துவிட்டது..அந்த கட்டமைப்பு இப்போது நவீனமயமாக்கப்பட்டு இடையே ஒரு லிஃப்ட் வேறு செருகப்பட்டிருந்தது.. உடனே அம்மாவை  கைப்பேசியில் அழைத்து அங்கே நின்று கொண்டிருப்பதை சொன்னேன்... அவர் குரலில் ஒரு நெகிழ்ச்சி தெரியத்தான் செய்தது.. பேசிக்கொண்டே படியேறும் போது அங்கே ஒரு ஆறு வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான்...எதிரே திரியும் அந்த சிறுவனும்,காதில் கேட்கும் அம்மாவின் குரலும் என் கண்களை ஈரமாக்க தவறவில்லை...ஏனென்று யோசிப்பதற்கெல்லாம் அப்போது நேரமும் இல்லை...

   #  சென்னையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் வாரம் ஒருமுறையேனும்  பத்து ரூபாய்க்கு முன் வரிசை டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதில் "சத்யம் ல பத்து ரூபாய்க்கு பாத்தோம்ல..." என்ற விதத்தில் ஒரு தனி பெருமை.. (இடைவேளையில் பாப்கார்ன், black forest சாப்பிடும் செலவில் மற்ற திரையரங்குகளில் இரண்டு படங்கள் பார்த்துவிடலாம் )... இருந்தாலும் நண்பர்கள் கூடி அடித்துபிடித்து அந்த டிக்கெட்டை வாங்கிவிடுவதில் பண்ணையார் மகளுக்காக காளையை அடக்கிய வெற்றிக்களிப்பு ஒன்று சொட்டுவிடும்..ஆனால் இன்றோ கொசுவும் மூட்டைப்பூச்சியும் இடைவிடாது கொஞ்சி தீர்க்கும் தஞ்சை திரையரங்குகளில்,கட்டம் போட்ட கைலியை மடித்து கட்டிக்கொண்டு, அக்குளில் ஒரு தோல்ப்பையை வைத்துக்கொண்டு, "ஏழாம் அறிவு 200 ...வேலாயுதம் 150 " என்று கூவிக்கொண்டிருப்பவனிடம், ஏதும் பேசாமல் பொத்திக்கொண்டு டிக்கெட்டை வாங்கி செல்கிறேன்...( # டீசென்சி )

  #  இரசித்த புகைப்படம்:


தெய்வத்திருமகள் 

#  இரசித்த கவிதை :

facebook தளத்தில் தோழி திவ்யா என்பவர் பகிர்திருந்த மிக எளிமையான யதார்த்தமான வரிகள்..


பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி…
ஆனாலும்,
இவள் ஆறுதல் தேடியதில்லை
மதுவிலோ போதையிலோ..
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை
மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில்...
இவள் சோகத்தை மறந்ததில்லை
கானா மெட்டுக்கள் பாடி..
இவள் பழி சுமத்தியதில்லை
ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று..
இவள் கவனிக்கத் தவறியதில்லை
கேட்கக் கூசும் விமர்சனங்களை..
இவளுக்கு தெரிந்தது, முடிந்தது,
அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தல்” மட்டுமே...!! 


#  இரசித்த இடுகை :ஐயா இரா.எட்வின் அவர்களின் அழுத்தமான பதிவுகளில் ஒன்று எனினும் இது அவரது நடையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதாய் தெரிந்தது.. நிகழ்கால அரசியலை ஒரு புனைவு அரசனை வைத்து நேர்த்தியாக சாடியிருந்தார்...கொஞ்சம் பொறாமைப்பட வைத்த பதிவு என்றே சொல்ல வேண்டும்...

( பின்குறிப்பு :  முதல் முயற்சி என்பதால் எட்டிப்பார்க்கும் அனைவரும் கருத்து சொல்லிவிட்டு செல்லுமாறு கட்டாயப்படுத்த படுகிறார்கள்..)
28 Nov 2011

காரணப்பெயர்...


"மூக்கு அப்புடியே அப்பா மாதிரி...
சிரிப்புல பாட்டி சாயல் தெரியுதுல்ல...
இந்த தலைமுடிய பாரு...
கோரக்கோரயா தாத்தா மாதிரி...
கண்ணு ரெண்டும் அச்சுப்பிசுங்காம
அம்மாவ உரிச்சு வெச்சுருக்கு..."
என்று உன் அழகு அனைத்திற்கும்
ஒருவரைக் காரணம் காட்டிவிடும்
ஊராருக்கு தெரிய வாய்ப்பில்லை
நான் 'அம்முகுட்டி' என்றுனை
அழைக்கும்போது
நீ பிரகாசித்துவிடும் அந்த
வெட்கம் மட்டும்
பழைய காதலி சாயலென்று...

19 Nov 2011

தேவதை உண்டு பூமியில்...


முச்சத நாட்கள் கருவில் 
களிப்பாய் சுமந்து 
நிமிடங்கள் சில மூச்சடக்கி 
கிடைத்த முத்தாய் 
எனை  வெளிக்கொணர்ந்து 
கருப்பாய் இருந்தும் 
அழகனாய் அன்று ஆராதித்தாள் !

பிறர் கண்பட்டுவிடாமல் மையிட்டு 
பிஞ்சு பாதம்தனை தரையில் ஊன்றவும் 
கீழே சிந்தாமல் சோறுண்ணவும் 
தானாய் தலைவாரிக் கொள்ளவும் 
மாற்றிக்கொள்ளாமல் காலணி அணியவும் 
வலதுகை கொண்டு எழுதிடவும் 
கைக்குவித்து கடவுளை வணங்கவும் 
அழகு தமிழில் பேசிடவும் 
அக்கறையாய் கற்றுத்தந்து 
கரைசேர்ந்திட என்றோ ஒரு நாள் 
அனுப்பிவைத்தாள்...!

நண்பரென பலர் கொண்டும்  
நாகரீக கவசத்தில் கேசம் களைத்தும் 
சிறிதாய் சில களவு கற்றும்
பொய் நிறைய சொல்லியும்  
நரியென நயவஞ்சக பழியறிந்தும்
நாத்திகனாய் நியாயம் உரைத்தும் 
வன்மையாய் பகை சில வென்றும் 
காமமேறியக் காதலொன்று செய்தும் 
அதனில் ஆறாத காயமொன்றும் கண்டும் 
கற்ற தமிழில் சகிக்காத வார்த்தை பல பேசியும் 
மறக்காமல் மதுவெனும் மருந்துண்டும் 
உலகத்தின் கறையனைத்தும் 
ஒருசேர சேர்த்துவந்து இன்று....

'அம்மா'-என்று கதவைத் தட்டும்போது,
'என்னயா இப்புடி எளச்சுப்போய்ட்ட..."
என்றென் கன்னம் வருடி 
கலங்கிய மறுநொடியில் 
மீண்டும் அவள் மடியினில்
மனதில் வெளுத்த,நிறத்தால் கருத்த 
அதே பழைய குழந்தையாகி போகிறேன்..!

13 Nov 2011

எத்தனை கண்ணீரடி தோழி?

புது பென்சில் தொலைந்தபோதும்
விடுமுறை கழித்து பள்ளி செல்லும்போதும்
கண்ணாடி வளையலன்று உடைந்தபோதும்
யாரேனும் பொய்யாய் நீ அழகில்லை எனும்போதும்
அமுதா டீச்சர் அதட்டியபோதும்
தொண்டையில் மீன் முள் சிக்கியபோதும்
விளையாட்டில் நானுனை ஏமாற்றும்போதும்
மதிப்பெண் கொஞ்சமாய் குறைந்தபோதும்
மிதிவண்டி பழக காயம் கண்டபோதும்
பள்ளியை விடுத்து கல்லூரி நுழைந்தபோதும்
பிறந்தநாளுக்கு முதல் வாழ்த்து நான் சொல்லமறந்தபோதும்
நீ கொண்டிருந்த கண்ணீருக்கெல்லாம்
ஆறுதல் சொல்ல எனக்குமட்டுமே முடிந்திருந்தது.!
ஆனால்,உன்
விவாக அழைப்பிதழ் கண்டு
சொல்லாமல் புதைந்த என் 
ஆசையை எண்ணி
எனக்குள் புழுங்கி
விதும்பி நான் நின்றபோது
சொல்லேதும் சொல்லாமல்
அக்கணம்,சிறிதாய் நீ சிந்திய
அதே உனது கண்ணீர்துளியால் 
மட்டுமே எனக்கு ஆறுதல் சொல்லமுடிந்திருந்தது ..!10 Nov 2011

மூணாவது மனுஷனும், அந்த நாலு பேரும்..

" வண்ணத்துப்பூச்சி எழிலுடன்
வெள்ளந்தியாய் விளையாடி திரிந்து
ஆண்-பெண் பேதம் மறந்து
வகுப்பறைக்கு நித்தமும்
கலகலப்பூட்டும் உனை
'வாயாடி' என்று சில வருடங்களும்
   
          வாழ்வாய் எனையேற்று
          சாதீயம் பேசி சவுக்கடியளித்த
          தந்தையை உதறி
          அதிகாலை ஐந்தேகால் மணிக்கு
          அவசரமாய் தாலி கொண்டு
          திருமதியான உனை
          'ஓடுகாலி' என்று சில மாதங்களும்


காதலில் திழைத்திருந்தும்
நாமாய் நமக்காக
முதற்கருவை
ஒத்திவைத்திருந்த வேளையில்
தவறாமல் முன்வந்து,உனை
'மலடி' என்று சில வாரங்களும்


விதவிதமாய்
பெயர் வைத்தழைத்த இந்த
'மூணாவது மனுஷங்க'


           குண்டை இருதயத்தில் சுவாசித்து
           இன்னும் நொடிப் பொழுதுகளில்
           இந்த குருதியோட்டமும் நின்று
           மரணித்த  பின்னராவது
           உனை அழைக்கட்டும்
           'ஓர் வீரத்தமிழனின் மனைவி' என்று "


என்று மயிர் கூச்சலுடன்
அவன் உயிர் துறந்த
கணப்பொழுதில்
பலநூறு நூறு மைல்களுக்கு
அப்பால் அவளருகிலிருந்த அந்த
'மூணாவது மனுஷங்க'
வக்கணையாய் சொன்னார்கள்..


           "போருன்னு போயி புருசனும் செத்துட்டான் !
             'வெதவையா' இருக்குற இவள, எனிமே
             நாலு பேரு நாலு விதமா பேசுவாங்களே..."
            

5 Nov 2011

மரண அறிவிப்பு...

மயிலிறகின் மற்றோர் குறுங்கதை..கொஞ்சம் மனதிற்கு பக்கத்திலிருந்து...


அன்று காலை மிக சாதாரணமாகத்தான் அவன் மருத்துவமனைக்கு கிளம்பினான்..இறுதியாண்டு அறுவை சிகிச்சை பட்டதாரி மாணவன் என்பதால் அவனது அணுகுமுறையில் இயற்கையாகவே ஒரு மிடுக்கு தெரியத்தான் செய்தது..கொஞ்சம் நடக்க நடக்க,விடுதியின் நாற்றம் மறையும் முன்னரே மருத்துவமனையின்  வாசம் நெடியேற்றியது...மருத்துவமனை ஊழியர்களின் சில போலி மரியாதைகளைக் கடந்து,நோயாளிகள் கூட்டத்தில் கொஞ்சமாய் பிதுங்கி,நிறையவே வியர்த்து ஒரு வழியாய் நான்காம் மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்ததும் ஏ.சி. அன்று சிறிதளவு மெனக்கெட்டு இருப்பதை அவனால் உணரமுடிந்தது..

"என்ன சார் இவ்ளோ லேட்டு?",இரவுப்பணி முடிந்து முகத்தில் புதைந்துகிடந்த  கண்களை கொஞ்சம் கடினப்பட்டு முறைக்கவைத்து கேட்டாள் தோழி..
"சாரி டா...நைட் படத்துக்கு போயிர்ந்தேன்..சோ நல்லா தூங்கிட்டேன்.."பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சிக்கூட செய்யவில்லை அவன்..
"அப்றம், நைட் என்ன ஹைலைட்..? அந்த ரெண்டாவது பெட் காலியா இருக்கு? சண்முகம்னு ஒரு கேஸ் தானே அங்க இருந்துச்சு?..",நெற்றியை சுருக்கி கேட்டான் அவளிடம்.. 
 "ஹ்ம்ம்..நைட் 1 . 30 க்கு எக்ஸ்பைர்ட்...", விடுதிக்கு கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டே விடையளித்துக்கொண்டிருந்தாள்.. 
"ஹோ..எக்ஸ்பெக்டெட்தான்..மத்த பேஷண்ட்ஸ்லாம் ?.." என்று அவன் கேட்டதும், "கேஸ் 1 அண்ட் 4 ..சேம் கண்டிஷன்தான்..கேஸ் 3 கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் இருக்கு.." என்று சொல்லி நிறுத்தாமல்... "ஹே..அப்றம் ஒரு ச்சின்ன ஹெல்ப்...செய்வியா?....இன்னிக்கு நமக்கு ICU duty முடியுதுள்ள..? சோ, இப்ப ஊருக்கு போலாம்ன்னு ஒரு ப்ளான்..அதுக்கு..."என்று அவள் இழுத்துக்கொண்டிருக்கும் போதே அவன் குறிக்கிட்டு.. "அதுக்கு என்ன...? உன்னோட நைட்-ட்யூட்டி ய சேத்து நானே பாக்கணும் அதானே.."என்று கேட்டு புருவம் உயர்த்தினான்...
அவளும்,"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்" என குழைந்தாள்..அழகான தோழி வேறு....கொஞ்சம் யோசிப்பதுப்போல் நடித்துவிட்டு ஒப்புக்கொண்டான்..

அது ஒரு நான்கு படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு..கடந்த பதினான்கு நாட்களாக இவர்கள் இருவர் பொறுப்பில்தான் இருந்தது..அன்றுதான் கடைசி நாள்..இரவு அவள் வரப்போவதில்லை என்பதையும் ,இவனே மறுநாள் காலைவரை பணியில் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தையும் கொஞ்சம் சலிப்புடன் ஜீரணித்துக்கொண்டிருந்தான்..இன்னும் சிறிது நேரத்தில் மேற்பார்வையிட பேராசிரியர்கள் வந்துவிடுவார்களென அவசரமாய் கேஸ் ஷீட்களை எடுத்துக்கொண்டு அந்த மூன்று நோயாளிகளின் தேர்ச்சி நிலைகளைக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான்..முதல் நோயாளி இவன் பணியிலிருக்கும் பதினான்கு நாட்களுக்கு முன்பிருந்தே கோமாவில் உள்ளவர்..முன்னேற்றம் பெரிதாய் இல்லாததும் அவனை ஆச்சர்யப்படுத்தவில்லை..இரண்டாவது படுக்கைக்கு நகரும் முன்னரே பேராசிரியர் தன் ஜால்ரா படையோடு வந்து,வழக்கம்போல ஒரு ருத்ர தாண்டவம் ஆடிச்சென்றார்..அவரது அர்ச்சனை எதையும் காதில் நுழைத்துக்கொள்ளாமல் இருப்பதில் கவனமாய் இருந்தான்..

அவர் கடந்து சென்றதும் செவிலியர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே ,"இந்த ஆள் சீக்ரம் ஹார்ட் அட்டாக் வந்து செத்தாலும் செத்துடுவாரு...மனுஷன் இப்புடி டென்ஷன் ஆகுறாரு..?" என்று சொல்லி அவ்வளவு நேரம் வாங்கிய வசைகளால் அவன் பெரிதாய் பாதிக்கப்படாதது போல ஒப்பேத்திக்கொண்டான்..அங்கிருக்கும் ஊழியரிடம் "அண்ணே..டீ வாங்கிட்டு வர்றீங்களா?" என்று அவரை அனுப்பிவிட்டு பணியைத் தொடர்ந்தான்..இரண்டாவது படுக்கையின் வெறுமை நீண்ட நேரம் நீடிக்காது என்று அவனுக்கு தெரியும்...எந்நேரமும் ஒரு புது நோயாளி அங்கே கொண்டுவரப்படலாம் என்பதால் அந்த படுக்கையும் அதை சார்ந்துள்ள சாதனங்களும் நல்ல நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்து கொண்டு நகர்ந்தான்..

மூன்றாம் படுக்கைக்கு சென்றபோதுதான் காலையில் தன் தோழி அந்த நோயாளியிடம் கொஞ்சம் முன்னேற்றம் இருப்பதாய் சொல்லிவிட்டு போனது அவனுக்கு உரைத்தது..அந்த நோயாளி கண் திறந்து பார்த்ததோடு இல்லாமல் கைகளில் கொஞ்சம் அசைவும் தெரிந்தது..ஒரு மிக கோரமான சாலை விபத்தின் பலனாய் பதினோரு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட பெண் அவர்..மூளையில் இரத்தம் உறைந்துபோனதால் இத்தனை நாட்களாக சுயநினைவற்ற நிலையில் இருந்தவர்,இப்போது விழித்திருப்பதும் பேச முயற்சித்திருப்பதும் அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது..சிறிதாய் புன்னகைத்துவிட்டு குறிப்புகளை எடுத்துக்கொண்டு நான்காம் படுக்கைக்கு நகர்ந்து எழுத்துபணிகளை முடித்துக்கொண்டு அவனது இருக்கைக்கு சென்றான்..

ஒருவழியாய் தேநீரும் வந்திருந்தது...அதை உரிந்துக்கொண்டே,இந்த பதினைந்து நாட்களுக்கான பணி அறிக்கையை எழுதி கொண்டிருந்தான்..மொத்தமாய் பன்னிரண்டு மரணங்கள் என்று எழுதும் போது அவனிடம் எந்த ஒரு பதற்றமோ உறுத்தலோ இல்லை...பெரும்பாலும் தீவிர சிகிச்சை பிரிவில் நிகழும் மரணங்கள் தவிர்க்க முடியாதவைகளாக இருப்பதும்,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகால மருத்துவ படிப்பும் அவனது உணர்சிகளை கொஞ்சம் மரத்துப்போகவைத்திருந்தது..ஆனாலும் அவன் எப்போதும் மரணத்தை நோயாளியின் உறவினர்களிடம் அறிவிக்கும்போது அவர்களது உணர்சிகளுக்கு மரியாதை கொடுக்க தவறியதில்லை..நோயாளியின் மோசமான நிலையைக் கனிவான முறையில் அவ்வபோது அவர்களிடம் சொல்லி சொல்லி அவர்களை மனதளவில் தயார் செய்துவிடுவதுண்டு..மரணம் சம்பவிக்கும் போதும் அதை உடனே அறிவித்து விடாமல்,நிலைமை ரொம்பவும் மோசமாகிவிட்டதாக சொல்லிவிட்டு,ஒரு பத்து நிமிடங்கள் தாமதித்தே அறிவிப்பான்..

உயிர் காக்கும் சாதனங்கள் அவனைச் சுற்றியிலும் ரீங்காரமிட்டு கொண்டிருக்க குறுக்கும் நெடுக்குமாய் நடந்து நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்தான்..மதிய உணவிற்கு நேரமானதும்,ஒரு முறை மூன்று நோயாளிகளையும் கண்காணித்துவிட்டு கிளம்ப முற்படும்போது அந்த நோயாளி பெண் அவனிடம் ஏதோ கேட்க முயற்சித்தாள்..ஒன்றும் அவனுக்கு புரியாததால்,"இப்போ தூங்குங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்..இவன் வெளியே வந்ததும்,"இப்போ எப்டி சார் இருக்காங்க..?",என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டார் அவளது அண்ணன்..ஆனால் இவன் வழக்கத்திற்கு மாறாய்,"பரவால்ல கண் முழிச்சு பாக்குறாங்க..பொழைக்க வாய்ப்பு இருக்கு"..என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் திடீரென அவன் காலைப் பிடித்து "ரொம்ப நன்றி சார்..எப்டியாவது காப்பாத்திடுங்க..அவ புருஷன்,மாமனார்,மாமியார் எல்லாம் அந்த ஆக்சிடென்ட்ல ஸ்பாட்லயே செத்துட்டாங்க சார்..இந்த கொழந்த அனாதைய ஆய்டக்கூடாது சார்.."என்று கதறினார்..அவரைத் தேற்றிவிட்டு,கொஞ்சம் கனமான மனதுடன் விடுதிக்கு நடந்தான்..

இத்தனை நாள் தான் வரும்போதும் போகும்போதும் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் அந்த குழந்தை அவளுடையது என்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை..உணவை முடித்துக்கொண்டு திரும்பும்போது,அவர் அந்த குழந்தையை வைத்துக்கொண்டு செவிலியர்களிடம் தன்னை உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார்..சினிமா பாணியில் அவர்கள்,"உள்ளல்லாம் வரக்கூடாது..பேஷண்ட்ட டிஸ்டர்ப் பண்ணாதீங்க.."என்று மேதாவித்தனமாய் பேசிக்கொண்டிருந்தார்கள்..இவன் சென்று,"சிஸ்டர்...,பரவால்ல,அலோ பண்ணுங்க.."என்று சொல்லி தானும் உள்ளே நுழைந்தான்..அந்நேரம் அந்த பெண் மயங்கியிருந்தார்..படுக்கையில் இருந்து கொஞ்சம் தொலைவில் நின்று பார்த்து அழுதுவிட்டு அவர் வெளியேறியதும் இவன் அந்த பெண்ணை நெருங்கினான்..

மொட்டையடித்து,மூக்கில் குழாயிட்டு,உடம்பில் பல இடங்களில் ஒயர்கள் பொருத்தி,எந்நேரமும் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் கருவிகளின் இடையே காண சகிக்காத நிலையில் படுத்து கிடக்கும் அவளை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்..காயங்களால் முகம் அலங்கோலப்பட்டிருந்தாலும் நிச்சயம் அவள் அழகானவளாக இருக்க வேண்டும்..தேவதை போல ஒரு குழந்தை, தன் தாயின் நிலையறியாது விளையாடிக்கொண்டிருப்பதும் அவனுக்கு ஏதோ ஒரு அழுத்தத்தைத் தந்துக்கொண்டிருந்தது..அவள் மறுபடியும் பேச துடிக்கும் பொழுதிற்காக காத்திருந்தான்..ஆனால் அவள் மயங்கியே இருந்தாள்..அவ்வபோது 'அவள் விழிக்கிராளா?' என்று பார்த்துக் கொண்டிருந்தான்..நேரம் விரைந்துக்கொண்டே இருந்தது..மாலை நேர தேநீர்,காதலியின் ஒரு தொலைப்பேசி அழைப்பு என்று அவனும் நேரத்தை நிரப்பிக்கொண்டிருந்தான்..இரவு 8 மணியானதும் இது வழக்கமாய் தான் கிளம்பும் நேரம் என்றாலும்,அன்று இரவும் அவனே பணியைத் தொடரவேண்டும் என்பதால் உணவு இடைவேளை நேரமானது அது..

மறுபடியும் வெளியே வரும்போது அவளது அண்ணன் எதிர்பட்டார்.."இன்னும் கண் முழிக்கல..முழிச்சதும் சொல்றேன்" என்று கடந்து சென்றான்..உணவை முடித்துக் கொண்டு திரும்பியவுடன்,கொண்டு வந்திருந்த புத்தகத்தோடு இருக்கையில் ஐக்கியமானான்..அவ்வபோது அவளின் கண் விழிப்பிற்கான ஏக்கமும் தெரிந்தது அவனிடம்..புத்தகம் வழக்கம்போல தூக்கத்தை கயிறு கட்டி இழுத்தது..மணி நள்ளிரவு பன்னிரெண்டு என்று பார்த்ததும் அவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை தளர்ந்தது..கொஞ்சம் விரக்தியுடன் மொபைலில் வந்திருந்த குட் நைட் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தான்..திடீரென ஒரு முனகல் சத்தம் கேட்கவே கொஞ்சம் உற்சாகமாய் எழுந்து அவளை நோக்கி ஓடினான்...

கொஞ்சமாய் அவனுக்கு சந்தோஷம் பீறிட்டது..அவள் கண்களின் செய்கையால் அருகில் வரும்படி அழைத்தாள்..அவனும் மெல்ல குனிந்து அவளுக்கு செவி கொடுத்தான்..அவள் வாயில் இருந்து வரும் காற்றினைக் கோர்த்து என்ன கேட்கிறாள் என்று புரிந்துக் கொண்டவனாய் நிமிர்ந்து..சிறிதாய் நிதானித்து,"அவரு செலவுக்கு காசு எடுத்துட்டுவர ஊருக்கு போயிருக்கார்..நாளைக்கு வந்துடுவார்.." என்ற கட்டாய பொய்யை ஒரு கனத்த நெருடலுடன் சொல்லிவைத்தான்.."ஒரு நிமிஷம் இருங்க..உங்க குழந்தைய கூட்டிட்டு வரேன்" என்று சொல்லி அவசரமாய் வெளியே சென்று அவர்களை அழைத்து வந்தான்..வரும்போதே கணவன் இறந்ததை சொல்லிவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தான்..

அண்ணனைக் கண்டதும்,"அண்...அண்...ண"..சில நாட்கள் செயற்கை சுவாசம் செலுத்த தொண்டையின் வழியே குழாயிடப் பட்டிருந்ததால்,அவளது குரல் கொஞ்சம் கரகரத்திருந்தது.. தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டதும் வரண்டுக் கிடந்த கண்கள் நிரம்பிக் கொண்டது..அழுகையைக் கூட அனுமதிக்க மறுத்தது அவளது முகத்தின் காயங்கள்..கண்ணீர் மட்டும் கடலென வடிந்துக் கொண்டிருந்தது..சிறிது நேர பார்வை பரிமாற்றங்களுக்குப் பிறகு அவள் அண்ணனைக் கொஞ்சம் தேற்றி வெளியே அனுப்பி வைத்தான்..அவளும் முடிந்தவரை கண்ணீரைக் கசிந்து விட்டு களைப்பாய் கண் மூடினாள்..அவன் புத்தகத்தை ஓரமாய் தள்ளிவைத்து மேசையில் சிறிது போராடி கண்ணயர்ந்தான்..

விடியற்காலை நான்கரை மணிக்கு,"அட இது கோமாவுல கெடக்கும் போது தொல்ல இல்லாம இருந்துச்சு..முழிச்சதும் மனுஷாள தூங்க விடாது போலிருக்கே.." என்று வார்டு ஆயாம்மா சத்தமிட அவன் விழித்துக் கொண்டான்..அவள் மீண்டும் விழித்துக் கொண்டதை உணர்ந்து,அந்த ஆயாம்மாவிற்கு அதட்டல்களை அள்ளி இறைத்து,அவளருகில் சென்றான்..இவனைப் பார்த்ததும் அவள் கண்கள் கொஞ்சம் ஆறுதலுற்றதை உணர்த்தின.."வந்..வந் து..டா...ரா..",என்பதுதான் அவளின் முதல் வார்த்தை.."இன்னும் மதியம் ஆகல...வந்ததும் நானே சொல்றேன்..",இதுவரை யார்க்கும் போலி நம்பிக்கை கொடுக்காதவன் இம்முறை வேறு வழியின்றி மீண்டும் அவளைப் பொய்யால் நம்பிக்கையூட்டினான்..

அவளது ஏக்கமும் வலியும் அவனுக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது..கொஞ்ச நாட்களில் அவளுக்காய் புரிந்துவிடும்..அதுவரைக் கொஞ்சம் மன நிம்மதியாவது எஞ்சட்டும் என விட்டு விட்டான்..பணி நிறையும் நேரம் வந்துவிட்டது..மற்ற இரு நோயாளிகளையும் பார்த்துவிட்டு..கடைசியாய் இவளிடம் வந்து நின்றான்..அவள் புன்னகைக்க முயற்சிக்கிறாள் என்று கண்களில் இருந்து புரிந்துக் கொண்டு,இவனும் பொய்யாய் புன்முறுவினான்..எப்படி உண்மையை அவள் ஏற்க போகிறாள்..?யார் எப்படி அவளிடம் எடுத்துரைப்பார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையில்லை அவனிடம்..

அடுத்த பதினைந்து நாட்கள் பொறுப்பேற்க வரும் நண்பரிடம் இதை எடுத்து சொல்லி அவளிடம் மெல்ல மெல்ல உண்மையை உணரவைக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டான்..நேரம் காலை 8 மணியானது..நண்பனும் வந்து விட்டான்..ஒவ்வொரு நோயாளியைப் பற்றியும் விவரித்து பொறுப்பை ஒப்படைத்துக் கொண்டிருந்தான்..அவளின் படுக்கையருகே வந்ததும்,"இந்த பேஷன்ட் கோமாலேந்து நேத்துதான் வெளிய வந்தாங்க..பிட் சென்சிடிவ் ப்ராப்ளம் இஸ் தேர்..ஆக்சுவலி ஹர் ஹஸ்பன்ட் எக்ஸ்பைர்ட் இன் தி சேம் ஆக்சிடென்ட்...பட் ஷி...."என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் தனது உயிரின் கடைசி வலியையும் தாண்டி வீரிட்டு கதறினாள்...அவளுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்று அவன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை...வழக்கமாய் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் கஷ்டங்களை ஆங்கிலத்தில் உரையாடிக் கொள்ளும் பழக்கத்தில் வளர்ந்த அவன்,ஒரு கணம் உயிரற்று அவளையே உற்று நோக்கி நின்றான்..நண்பன் இவனைத் தேற்றினான்,"ஹே..விட்ரா..ஷி வில் பீ ஓகே..இந்த பக்கம் வா' என்று அவனை இழுத்து சென்றான்..

கொஞ்சம் நிதானித்து,"அவங்கள பாத்துக்கோ டா" என்று நண்பனிடம் சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்க்காமல் வெளியேறினான்..வெளியே வந்ததும் அவளது அண்ணன் ஓடிவந்து,"இப்ப எப்டி சார் இருக்கா?" வழக்கம் மாறாத பதற்றத்துடன் கேட்டார்.. முதன்முறையாக பதிலேதும் சொல்லாமல் கொஞ்சம் கலங்கிய கண்களுடன் கடந்து சென்றான்..நான்கு மாடிகள் இறங்கிய பின்னரும் அந்த கதறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது..அவனுக்கு மட்டும்...

முற்றும்..
2 Nov 2011

அழகின் நிறம் சிவப்பு..


போக்குவரத்தின் 
பச்சை 
மஞ்சள்
சிவப்புக்களைத்  
திமிராய் 
அலட்சியம் செய்தவன் 
தன்னை அறியாமல் 
தெரு நடுவில் 
திடுக்கிட்டு 
நிறுத்திவிட்டேன்
அலட்சியமாய் எனை 
ஏறிட்டு நோக்கிய 
உன் கடைக்கண் 
பார்வையின் 
திமிறும் அழகில்..