சகித்தவர்கள்...

18 Dec 2011

யதேச்சையான எழுத்துகள் #3


அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

இந்த வருடத்தின் கடைசி அகவல் இது..பதிவுலகத்திற்கு இவ்வாண்டின் புதுவரவான என்னை ஏற்று கொண்ட நண்பர்களுக்கு அடியேனின் நன்றிகள்..

# நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த நாட்களில் என் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பாட்டி (அப்போது வயது கிட்டத்தட்ட எண்பதைத் தாண்டி இருக்கும்) தேர்விற்காக எனக்கு ஒரு புது பேனா ஒன்றை அன்பளித்தார்..அவர் ஒரு ஓய்வு பெற்ற 'அந்த கால' ஆசிரியை..தெளிவாக ஆங்கிலம் பேசக்கூடியவர்..சச்சின் டெண்டுல்கரின் தீவிர அபிமானி..(சதம் தவறினால் உண்ணாவிரதம் தான்)..காலையில் நாளிதழ் வந்ததும் அதிலுள்ள மாதிரி வினாத்தாளை நறுக்கி வந்து என்னிடம் கொடுத்து விடுவார்..அவரளித்த அந்த பேனாவைக் கொண்டுதான் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளை எழுதினேன்..அதன் பின்னர் நான்காண்டு இளநிலை மருத்துவ தேர்வுகள்,முதலாமாண்டு முதுநிலை தேர்வு,கொஞ்சம் அழகான எழுத்தில் சுமார் ரக கவிதைகள்,அசிங்கமாய் கிறுக்கும் மருந்து சீட்டுக்கள்,சில துரதிர்ஷ்ட குழந்தைகளின் பிறப்பு அறிக்கைகள்,சில நோயாளிகளின் மரண அறிக்கைகள் என்று அந்த பேனா பதினோராண்டுகளில் எனக்கோர் ஆறாம் விரலாகவே மாறிப்போய்விட்டது..நண்பர்கள் சிலர்,"இந்த பேனாவ விடவே மாட்டியா..? இதுல ஏதோ இருக்கு...கொடுத்தவங்க ரொம்ப ஸ்பெஷலோ?ஹ்ம்ம்.." என்று கேலி செய்வதுமுண்டு..ஆம் ரொம்ப ஸ்பெஷல் தான்..இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாய்..சில வாரங்களுக்கு முன்பு அந்த பாட்டி மரணித்துவிட்டார்..பேனாவும் சச்சினும் மட்டும் தொடர்கதையாய் இன்றும்..

# சென்னை பாரிமுனையில் என் கல்லூரி விடுதியில் இருந்து நடந்துசெல்ல கூடிய தூரத்தில்தான் இருக்கும் கந்தர்கோட்டம் முருகன் கோவில்..ஞாயிற்றுக்கிழமை  கூட்டம் இருக்காது என்பதால் வாராவாரம் தவறாமல் ஆஜராகிவிடுவேன்..(நாத்திகம் பழகாத காலம் அது)..அம்மாவின் அறிவுரைப்படி சனிபகவானுக்கு விளக்கு ஒன்றும் ஏற்றிவிடுவேன்..வாசலில் பூசை சாமான்கள் விற்கும் கொஞ்சம் பெரிய கடையில் உரிமையாளரின் மகள்தான் விளக்குகள் சரமாய் அடுக்கி விற்று கொண்டிருப்பாள்..பெரிய கண்கள்,தன்மையான மூக்கு என நிச்சயம் மிக அழகானவள்..பார்த்த அடுத்த இருபது வினாடிகள் அவர்களைப் பற்றியே நினைக்க வைக்கும் பெண்களில் ஒருவள் என்று சொல்லலாம்..சில நாட்கள் கடையில் அவள் இல்லையென்றால்,திரும்பும் போது, ஒரு நிறைவு இருக்காது..வழக்கமாய் தனியாய் செல்லும் என்னுடன்,ஒரு நாள் நண்பன் ஒருவன் உடன் வந்தான்..ஏதேதோ பற்றி பேசிக்கொண்டு கோவிலை நெருங்கும் நேரம்,"மச்சி, அந்த கடைல ஒரு செம்ம ஃபிகர் இருக்கும் பாரேன்" என்று பல்லிளித்தான்..ஒரு கனம் நிதானித்து நானும், "அப்டியா..நா கவனிச்சதில்லையே.."என்று முதல்முறை பார்ப்பது போல் அவளைப் பார்க்க,அவள் நான் கேட்காமலே விளக்கை எடுத்து வைத்துவிட்டு, "என்ன சார்..உங்க ஃப்ரெண்டுக்கும் சேத்து வாராவாரம் இனிமே ரெண்டு வெளக்கா?" என்று கேட்க நண்பன் முன் என் கல்லுளிமங்க முகத்திரை கிழிந்து நானும் பல்லிளித்தேன்...( # நம் இராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே...)

இரசித்த புகைப்படம்:


யாரு இந்த வெள்ளக்கார ஃபிகரு...?

இரசித்த இடுகை:

     சுயமுன்னேற்ற நூல்களை நான் அதிகம் படிப்பதில்லை..அவை மனதிற்குள் வெற்றிதான் வாழ்வின் பொருள் என்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி தேவையற்ற மன அழுத்தத்தை புகுத்திவிடும்..குறிப்பாக சுகிசிவம் போன்றோர்களின் பேச்சு எனக்கு அறவே பிடிக்காது.. "வாழ்க்கையில் உனக்கு கீழே இருப்பவனைப் பார்க்காதே..மேலே இருப்பவனைப் பார்த்து முன்னேறு" என்பது போன்ற வீராவேச பேச்சுக்களைக் கேட்டால் எனக்கு உடனே தோன்றுவது, "மன அழுத்தம் மிக்க வெற்றியாளனாய் இருப்பதை விட சந்தோஷமான சோம்பேறியாக இருந்துவிட்டு போகிறேன்" என்பதுதான்..இது என்னுடைய கருத்துதான்..பலருக்கு இதில் உடன்பாடு இராது..மன அழுத்தம் அதிகமாகி என் உயிர் தோழரொருவர் தற்கொலை செய்துகொண்டதும் கூட என் கருத்திற்கு காரணமாய் இருக்கலாம்..

     நண்பர் முனைவர்.இரா.குணசீலன் தனது சமீபத்திய இடுகையில் மிக எளிய வரிகளில் "வாழ்க்கையில் உனக்கு கீழே இருப்பவனை பார்" என்ற அழகிய கருத்தினை உணர்த்தியிருந்தார்..கட்டாயம் இந்த இணைப்பை சொடுக்கி வாசியுங்கள்..நான் ஏன் வாழக்கூடாது?

இரசித்த நகைச்சுவை:

14/12/11 தேதியிட்டு வெளியாகியிருக்கும் ஆனந்த விகடனில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் கனிமொழியின் 'வைராக்கிய' பேட்டி..குறிப்பாக கழக தொண்டர்கள் வைத்திருந்த பேனர்களை விவரித்திருந்த அந்த இரு பத்திகள்..

இரசித்த கவிதை:

பதிவுலக தோழர் அரசன் அவர்களின் வலைப்பூவில் கிடைத்த 'வரலாறாகும் வாழ்வு'  என்ற ஆதங்க வரிகள்..

சாமத்துல உறங்கி
சேவலுக்கு முந்தி
முழிச்சி, கட்ட
வெளக்கமாரால கட்டுத்தறிய
சுத்தமாக்கி, குளிச்சி முடிச்சி
ரெண்டுவேளைக்கும்
கஞ்சி காய்ச்சி!
மிச்சம் வைச்ச
சாணத்த கரைச்சி
வீதியில தெளிச்சி
பெருக்கி கோலமிட்டு,
பறிச்ச ஒத்த
பரங்கிப்பூவ, கொழைச்ச
சாணியில, கோலமத்தியில
குலுங்காம வைச்சி
நிமிர்ந்து பார்க்கையில,
இவளுக்கு முந்தி
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!
இப்படி வரலாறா வாழ்ந்த நிலை,
இன்னைக்கு சரத்துல
சொருகி வைச்ச
பழைய கடுதாசியா
கிழிஞ்சி தொங்குது
எச்சமும், மிச்சமுமா!
பாழும் இந்த
செயற்கை மோகத்தால!?

வலித்த ஒரு பதிவு:

12/12/11 அன்று கன்னடக்காரர் ரஜினியின் பிறந்தநாளைத் தமிழ்நாடும் தமிழ் வலைப்பூக்களும் கொண்டாடிகொண்டிருந்த வேலையில் ஐயா ஹரணி அவர்கள் எழுதியிருந்த நினைவுபடுத்தல் என்ற இடுகை..தலைப்பே கொஞ்சம் வலியூட்டிவிட்டது...
என் ஆறாம் விரல்..:)                    


நீங்கள் கவனிக்காமல் கடந்து வந்த நேரங்கள்:
மயில் அகவும் நேரம் 02:00
மயில் அகவும் நேரம் 01:00


19 comments:

மயிலன் said...

[box][ma]நான் இரசித்த இடுகைகளை நீங்களும் அவ்விணைப்புகளை சொடுக்கி இரசித்துவிட்டு கருத்துரை இடமாறு கேட்டுகொள்கிறேன்.. [/ma][/box]

'royal' LAWYER said...

தம்பி..மேல 'தமிழின்பம்' எழுதிர்க்கே அதுவும் உன் கையெழுத்துதான...?

வே.சுப்ரமணியன். said...

மகிழ்ச்சி நண்பரே! சில சம்பவங்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள், நம் வாழ்விற்கான மிகப்பெரிய தத்துவங்களாகிவிடுகின்றன. தாங்கள் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் அப்படித்தான் என்னை சிந்திக்க வைத்தது. தாங்கள் ரசித்த இடுகைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே! தங்களின் வலைத்தளம் எனக்கு பிடித்திருக்கிறது. நன்றி!

மயிலன் said...

@ வே.சுப்பிரமணியன்: மிக்க நன்றி தோழரே..நமக்கு நம்மைவிட சிறந்த வழி நூல் வேறேதும் இல்லை...

மயிலன் said...

@royal lawyer:
இப்படி ஒரு புனைபெயரில் வருவதற்கு தாங்கள் பெயரிலியாகவே வந்திருக்கலாம்..கொழப்பாதீங்க அண்ணே..

guna thamizh said...

ஒவ்வொரு பதிவையும் இரசித்தேன் நண்பா..

மதுமதி said...

திரும்பிப் பார்க்கும்போதுதான் சில விசயம் சுவைக்கும்..நன்று..பதிவுலகத் தோழர்களின் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி..வாழ்த்துகள்..

பிரேம் குமார் .சி said...

ரசித்த புகைபடத்தை நானும் ரசித்தேன் அருமை

gigily said...

பின்னுது..

மயிலன் said...

மதுமதி said...திரும்பிப் பார்க்கும்போதுதான் சில விசயம் சுவைக்கும்:):)நிச்சயம் நண்பரே..அசைபோடுதலே அழகு..

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்க்கையில் உனக்கு கீழே இருப்பவனை பார்" என்ற அழகிய கருத்தினை உணர்த்தியிருந்தார்//

அருமையான கருத்து அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்...!!!

மனசாட்சி said...

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு...


மயில் படம் அழகு

ananthu said...

"இந்த வருடத்தின் கடைசி அகவல் இது" ஏன் நண்பா இன்னும் நாட்கள் இருக்கிறதே ...! .(நாத்திகம் பழகாத காலம் அது)..ஆத்திகதுக்குள் அனைத்தும் அடக்கம் , நாத்திகம் உட்பட... நல்ல பதிவு வாழ்த்துக்கள் ...

மயிலன் said...

நன்றி நாஞ்சில் மனோ,முனைவர் குணசீலன், பிரேம் குமார்.சி, gigly...

மயிலன் said...

@மனசாட்சி: முதன்முறையாக தளத்திற்கு வருகை தந்துள்ளீர்..மகிழ்ச்சியும் நன்றியும்...

மயிலன் said...

ananthu said...//ஏன் நண்பா இன்னும் நாட்கள் இருக்கிறதே ...! //
இந்த வருடத்திற்கான கடைசி "மயில் அகவும் நேரம்" என்பதை அப்படி குறிப்பிட்டிருந்தேன்.. உங்களைத் தொல்லை செய்யாமல் எல்லாம் விட்டுவிடமாட்டேன் நண்பரே...:)

//ஆத்திகதுக்குள் அனைத்தும் அடக்கம் , நாத்திகம் உட்பட...//
உண்மை..நன்றி நண்பா..

திவ்யா @ தேன்மொழி said...

சொடக்கிய அனைத்திலும் ரசனை சொட்டுகிறது.. ஆறாம் விரலில் இருந்து சொட்டியிருக்கும் கையொப்பம் உட்பட..:)

சீனுவாசன்.கு said...

ஒரு டவுட்டு!மயிலே மயிலே இறகு போடுன்னா இந்த மயிலு போடுமா?

ரசிகன் said...

மயில் படம் அருமை.

வரலாறாகும் வாழ்வு கவிதையும் அருமை. (இதன் இணைப்பை கொடுத்திருக்கலாம். அரசன் அவர்களை நான் இன்னும் அறியவில்லை.)

வரும் வருடம் உங்களுக்கும் சிறப்பானதாக அமையட்டும்.