சகித்தவர்கள்...

31 Dec 2011

குட்டியாய் ஓர் ஓவிய கண்காட்சி..

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,


               Facebook தளத்தில் பகிர்ந்திருந்த எனது ஓவியங்கள் சிலவற்றை மயிலிறகில் பதியவேண்டி நண்பர்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்..நேரம் பணிக்கும் போது பார்த்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்..              பள்ளி பருவத்தில் கவிதைகளுக்கு முன்பே எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது நிச்சயமாய் ஓவியங்கள்தான்..அந்த நாட்களில் எப்போதெல்லாம் அடங்காத கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் ஓவியம் தீட்டுவதைத்தவிர வேறேதும் செய்ய முடியாத கையாலாகாத்தனமே என் தூரிகையின் திறனை கொஞ்சமாய் மெருகேற்றியது..சைக்கிள் ரிக்ஷாவில் பள்ளிக்கு செல்லும் வழிமுழுதும் உள்ள கடைகளின் முகப்பு பலகைகளில் வரைந்த ஓவியங்களைப் பார்த்துக்கொண்டேதான் செல்வேன்..

               ஓவியப்பள்ளிகள் ஏதும் அப்போதெல்லாம் இருந்ததாய் தெரியவில்லை..எனக்கு தெரிந்தவரை,என்னால் முடிந்தவரை,எனக்கு பிடித்ததை மட்டும் ஆசையாய் வண்ணமாக்கிக்கொள்வதுண்டு..உறவினர்கள் யாரும் அவைகளைப் பார்க்க நேரிடும்போது உடனே,"அப்பன மாதிரியே புள்ளையும்..!" என்று கூறுமிடத்தில் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போவேன்..தாத்தாவின் சொத்துக்கள் பெரியப்பன்களால் மறுக்கப்பட்டு,படிப்பைத் தொடர வழியின்றி இருந்த போது பேனர் ஓவியங்கள் வரைந்துதான் அப்பா மேற்படிப்பை தொடர்ந்தாராம்..ஸ்ருதி ஹாசனை வைத்து என் அப்பாவிற்கும் எனக்குமான ஓவியக்கலைக்கான மரபணுக்களை ஒப்பிட்டு பார்த்தால்,வெறும் சொற்ப விழுக்காடுகளே பொருந்தும்..அவர் அந்தளவிற்கு ஓர் அசாத்திய திறனாளி..

               வரையும் ஓவியங்களை நான் ஒரே மூச்சில் வரைந்து முடிப்பதில்லை..காரணங்கள் கண் சோர்வும்,ஈடுபாடு இல்லாத மனமுமே..அப்பாவிடம்,"எப்படி நீங்க வரைஞ்சா மட்டும்,தொடர்ந்து வரையுறீங்க?" என்று எட்டாம்/ஒன்பதாம் வகுப்பு படித்த நாட்களில் ஒரு முறை கேட்டபோது,"உனக்கு இது வெறும் பொழுதுபோக்கு,ஆனா எனக்கு ஒரு காலத்துல இதுதான் சோறு போட்டுச்சு" என்று மிக சாதாரணமாக சொல்லியதன் அழுத்தம் நீண்ட நாட்களுக்கு எனக்கு இருந்தது..இப்போதெல்லாம் வரையும்போது எவ்வளவு நேரம் எடுத்துகொள்கிறேன் என்றும் குறித்துகொள்கிறேன்..

                நாளை புத்தாண்டு தினம்,ஜனவரி முதல் ஞாயிற்று கிழமை என்பதால் முறைப்படி நாளை பதிவிட வேண்டிய "மயில் அகவும் நேரம்-04 :௦௦" கட்டுரையை தொகுக்க முற்படும் போதுதான்,2011 இல் 49 பதிவுகள் எழுதியாகியுள்ளது என்பதை கவனித்தேன்..அவசரமாய் ஓர் அரை சதம் அடித்து ஆண்டை நிறைவு செய்யலாம் என்று முடிவெடுத்ததும்,நினைவில் வந்தது நீண்ட நாளாய் மனதில் நின்ற இந்த இடுகையே...இதில் நான் இந்த ஓராண்டில் வரைந்த நான்கு ஓவியங்களை மட்டுமே பகிர்கிறேன்..மற்றவை பின்னாளில் நேரம் பணிக்கும் போது..


நண்பர்கள் படங்களை சொடுக்கி கொஞ்சம் பெருந்திரையில் காண வேண்டுகிறேன்..


'இயற்கை காட்சிகள் தண்ணீரோ சூரியனோ இல்லாமல் வரைந்து பழகிக்கொள்'
 என்று நண்பன் ஒருவன் அறிவுறித்தியுள்ளான்...
இனிமேல்தான் முயற்சிக்கவேண்டும்..

'டேய்..பெயிண்டிங் ஃபினிஷ் நல்லா இல்லன்னு மாடர்ன் ஆர்ட்டா மாத்தி சமாளிச்சிட்டியா?'
என்று அதே நண்பன் கேலி செய்த ஓவியம்..

பென்சிலோடு நிறுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று அதிமேதாவித்தனமாக யோசித்ததால் வண்ணம் தீட்டவில்லை..
எனினும் இன்றும் என் தங்கையின் பொக்கிஷம் இதுவே..

என் அப்பா பாணியில் ஒரே மூச்சில் நான் வரைந்து முடித்த முதல் ஓவியம்..
A3 அளவில் தொடர்ந்து பதினொரு  மணி நேரங்கள் வரைந்து முடித்ததும் இனிமேல் இத்தகைய வீராவேச முயற்சி எடுக்க கூடாது என்று அன்றே முடிவு செய்துவிட்டேன்..


நண்பர்கள் அனைவருக்கும் 2011 ஆண்டில் நிகழ்ந்த நல்லவைகள் வரும் ஆண்டிலும் தொடர வாழ்த்துக்கள்...

நன்றியுடன்...சி.மயிலன்..

11 comments:

மாலதி said...

உண்மையில் எல்லாப்படங்களும் சிறப்பாக இருக்கிறது உயிரோட்டமான பாடங்களை வரைவதில் எனக்கு ஆசை ஆனால் எப்போதும் அது நிகழ்வதில்லை உங்களின் படங்கள் சிச்ரப்ப இருக்கிரதுபரட்டுகள் தொடர்க ...

Anonymous said...

great! ரொம்ப நல்லாருக்கு...சும்மா கமென்ட்டுக்காக சொல்லலை...ஜீவன் இருக்கிறது. மற்ற ஓவியத்தையும் பதிவிடவும்.

dushi said...

கோபம் வரும் பொழுது ஓவியம் தீட்டுவதை பழக்கமாக கொண்டுள்ள சிலரில் நானும் ஒருத்தி... ஆன்னால் தங்களுடைய அளவிற்கு நிச்சயம் முடியாது ......

dushi said...

என்னை மிகவும் கவர்ந்தது தங்களுடைய அண்ணன் தங்கை ஓவியமே .....தங்களுடைய திறமை மேலும் வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

suryajeeva said...

பென்சில் ஓவியமும் கடைசி ஓவியமும் டாப்.... ரசித்தேன்...

veedu said...

வாழ்த்துகள் மயிலன்....மிக அழகாக வரைந்துள்ளீர்கள்....இந்த பொருமையெல்லாம் எனக்கு கிடையாது நான் கையில் வரைந்து பல வருடமாகின்றது...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மரு.சுந்தர பாண்டியன் said...

மயிலிறகிற்கு மென்மேலும் வண்ணம் சேர்த்துள்ளது... அழகு...

மதுமதி said...

ஓவியத் திறமையும் உங்களிடம் இருக்கிறதென்று அறிந்தேன் அனைதும் அருமை..தொடர்ந்து தூரிகையை சுழற்றுங்கள்..வாழ்த்துகள்..


அன்போடு அழைக்கிறேன்..

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

கோவிந்தராஜ்,மதுரை. said...

எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே

திவ்யா @ தேன்மொழி said...

மனதாரப் பொறாமைப்பட வைத்த ஓவியங்கள்.. குறிப்பாக, முகம் அறியப்படாத என்னவளும், வர்ணம் பூசப்படாத பாசமும்..:)

கோமதி அரசு said...

எப்போதெல்லாம் அடங்காத கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் ஓவியம் தீட்டுவதைத்தவிர வேறேதும் செய்ய முடியாத கையாலாகாத்தனமே என் தூரிகையின் திறனை கொஞ்சமாய் மெருகேற்றியது.//

கோபதிற்கு நல்ல வடிகாலாய் அமைந்த ஒவியம் நல்ல கைவரப்பெற்றது ஒரு வரபிரசாதம்.
அண்ணன் வரைந்த ஓவியத்தை தங்கை பொக்கிஷமாய் பாதுகாப்பது மகிழ்ச்சி. அது தான் பாசம்.