சகித்தவர்கள்...

7 Oct 2012

மழையானவள்...1 Oct 2012

விபத்து பகுதி... கவனமாக....


ப்ரல் மாதம் இரண்டாம் வாரம் ஒரு மாலை பொழுதில் அம்மாவிடம் இருந்துதான் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு..அழுகைக்கும் மூச்சு தேம்பலுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாய்தான் வந்து விழுந்தது வார்த்தைகள்...

 "பாலுவுக்கு ஆக்சிடன்ட் ஆயிருச்சுப்பா... ரொம்ப சீரியசா இருக்கான்ப்பா... கும்பகோணத்துலதான் சேத்திருக்கோம்... தஞ்சாவூர் கூட்டிட்டு வந்துரலாமாப்பா?"

நான் பதினோராம் வகுப்பு படித்திருந்த காலத்தில் எங்கள் பக்கத்து பிளாட்டில் வீடு கட்டி குடிபெயர்ந்த குடும்பத்தில், அன்றைய பாலுவிற்கு வயது இரண்டு.. மழலையாய் பேச தொடங்கிய நாட்களில் என் அப்பா அந்த பேச்சைக் கேட்கவே காம்பவுண்டு சுவற்றோடு சாய்ந்து நின்று கொண்டிருப்பார்... படு சுட்டி... பின்னாட்களில் கொஞ்சம் தெளிவாய் பேச தொடங்கிய பின்னர் யாரும் அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது... வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடைய சினிமா குழந்தை போலத்தான் எனக்கு தெரிவான்.. என்னைக் காட்டி அவனின் அம்மா, "அண்ணன போல படிச்சு டாக்டர் ஆகணும்" என்று சொல்லிமுடிக்கும் முன் சொன்னான், "எப்ப படிச்சு எப்ப சம்பாதிக்கறது? டோனி ய பாரு.. எப்படி சம்பாதிக்கிறான்...?" சொல்லும் போது இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்... கிரிக்கெட் வெறியன்.. கில்க்ரிஸ்ட் அபிமானி... பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய வேகத்தில் ஒரு விக்கெட்கீப்பிங் கையுறை ஜோடியை எடுத்துக்கொண்டு பறந்திடுவான்..."இந்த நிலைமைல transport வேணாம்மா... அங்க எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க.. நான் சொல்றேன்... கொஞ்சம் பதட்ட படாம இருங்க"

"பொழச்சுடுவானாப்பா?"

தப்பிதவறிக்கூட பொய்யாய் யாருக்கும் ஆறுதல் சொல்லி வழக்கம் கிடையாது.. அம்மாவின் குரலைத் தாண்டி அங்கு நடந்திருக்கும் சம்பவத்தின் ஆழத்தை வேறேதும் விவரிக்க தேவையில்லை...மறுபடி மறுபடி அம்மாவிடம் இருந்து அதே கேள்வி... நாற்பது மைல்களுக்கு அப்பாலிருந்து ஏதோ ஒரு வார்த்தையளவிலான ஆறுதலாவது அவர்களுக்கு தேவைப் படுகிறது.. 

"எங்க அடி பட்டிருக்கும்மா?"

பதிலேயில்லை... ஏதேதோ கூச்சல்... போன் கட்டானது... சிறிய காயம் மட்டும்தானா? எதற்காக மயிலாடுதுறையில் இருந்து refer செய்யவேண்டும்...? பெரிய அடியா? வயிற்றிலா? கை கால்களிலா? நெஞ்சிலா? தலையிலா? மீண்டும் அழைப்பு அரை மணி கழித்து...

"தலைல அடிப்பட்டிருக்காம்ப்பா... ஸ்கேன்ல ஏதோ மூளைல ரத்தம் உறைஞ்சு இருக்குன்னு சொல்றாங்கப்பா..."

"consultant பேரு என்னம்மா?"

"பொழச்சுடுவானாப்பா?" 

கும்பகோணத்திற்கு சென்றேன்... ICU வார்டு.. எந்த கோலத்தில் அந்த குழந்தையை பார்க்ககூடாதோ அந்த கோலத்தில்தான் இருந்தான்.. மூக்கு,வாய்களில்  குழாய்கள்... கழுத்தில் செர்விகல் காலர்... சுற்றியிலும் ரீங்காரமிடும் கருவிகள்... அவன் தூங்கிக்கூட நான் பார்த்திருந்ததில்லை...செரிபெல்லத்தில் இரத்தம் உறைந்திருப்பதை ஸ்கேன் சொல்லியது... வெறுமனே அந்த ஸ்கேனை மட்டும் காட்டி யாரேனும் நிலைமையை கேட்டால் "கஷ்டம்" என்பது என் பதிலாய் இருந்திருக்கும்...வார்டை விட்டு வெளியே வர அழுத்தம் எனக்கு போதவில்லை.. ஒரு வழியாய் அம்மாவிடம் மட்டும் அந்த "கஷ்டம்" என்பதை சொல்லிவிட்டு, மற்ற எல்லோரிடமும் ஏதோ சொல்லி ஒப்பேற்றினேன்...

சுய நினைவு சுத்தமாய் இல்லை...ஒரு வாரம் கழித்து tracheostomy செய்யப்பட்டது... அந்த 'எல்' வடிவ குழாய் அவன் தொண்டைக்குள் சென்ற வேளை அன்றைய மழலை முதல் சமீபத்திய குறும்பு பேச்சுவரை எல்லாம் வலித்தது... மூக்கின் குழாய் வழியே நீராகாரம், மூச்சு மட்டும் சுயமாய் முடிந்தது...

முழுதாய் நான்கு மாதம்... கண் விழித்து பார்த்த நிலையில்,தொண்டையில் stome மூடப்பட்ட நிலையில்,கை கால் வராத நிலையில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்... எல்லோரையும் பார்க்க முடிந்தது.. கண்ணீர் சிந்த முடிந்தது... மெலிதாய் புன்னகைக்க முடிந்தது...எங்கள் வீதியே முடமாகி கிடந்தது... எல்லோரின் குரல்வளையும் நெரிக்கபட்டிருந்தது.. எதிர்பாரா நிலையில்,திடீரென ஒரு பின்னிரவில் பேச்சு வந்துவிட்டது.. பழைய வேகம் இல்லை... எல்லோரையும் தெளிவாய் அடையாளம் புரிந்து பேச முடிந்தது... அப்பா பார்க்க சென்றிருக்கிறார்...,"uncle,...அண்ணன் டாக்டர்தானே... அவுங்கள்ட்ட கேளுங்க... நா புரோட்டா சாப்பிடலாமான்னு.. அபிராமி ஹோட்டல்ல வாங்கிட்டு வாங்க..." இந்த சம்பவத்தை அப்பா மொபைலில் என்னிடம் சொல்லும்போது அவரின் குரலில் இருந்த சந்தோஷத்தை சமீப வருடங்களில் நான் கண்டதில்லை...

நேற்றைக்குமுந்தைய தினம் பார்க்க சென்றிருந்தேன்.. இடது கையைத் தவிர மற்றது எல்லாம் மீண்டும் செயலுக்கு வந்துவிட்டது.. சிறுநீர், மலம் கழிப்பதற்கான sphincter control உம் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வந்துவிட்டது...  நண்பர்களை வீட்டிற்கு வர சொல்லி அவர்களை வீடியோ கேம் விளையாடசொல்லி உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.. விஜயதசமி அன்று மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதாய் உத்தேசித்து உள்ளார்கள்... நரம்பு தளர்ந்து முழுமையாய் குணமடையாத காரணத்தினால் கை நடுக்கம் ஏற்பட்டுள்ளது.. நான்கு மற்றும் இரண்டு கோடு நோட்டுகளில் எழுத்துபயிற்சி எடுக்கிறான்...அருகில் இருந்த தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துகொடுத்து வாசித்துக்காட்ட சொன்னேன்...'ழ'கரத்தை தெளிவாய் உச்சரிக்கின்றான்.. ஆங்கங்கே எழுத்துக்கூட்ட வேண்டியிருக்கிறது... தவறாக வாசித்தால் "ச்சீ" என்று சொல்லிகொள்கிறான்... பத்து வருடத்திற்கு முன்பு இருந்தது போல, அப்பா மீண்டும் காம்பவுண்டில் சாய்ந்து நின்று அவனது இந்த மறுமழலையை இரசிக்க தொடங்கியுள்ளார், கொஞ்சம் வலி மறந்து...


சீருடை தோட்டாக்கள்... # 214 Sep 2012

சுந்தரபாண்டியன் அவர்களுக்கு...


சுந்தரபாண்டியன்- மினிமம் கேரண்டிக்கு தேவையான அத்தனை சமாச்சாரங்களும் படத்தில் இருக்கு... அழகாய் ஒரு கிராமம், மிக அழகாய் கதாநாயகி (கன்னத்தின் தழும்பிலேயே மனசு கெடந்து தளும்புது), வட்டார வழக்கில் ஒரு காமடி ட்ராக் (ஆனா மீண்டும் மதுரைதான்), உறுத்தாத இசை,இடைவேளைக்கு முன் ஒரு ட்விஸ்ட், பர பர திரைக்கதை...என அத்தனையும்... இரண்டரை மணி நேரம் மிக திருப்தியாய் போகும்... பொழுதுபோக்கை விரும்பும் பெரும்பாலானோருக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. ஏற்கனவே ஹிட்டடித்த காதல், நட்பு, துரோகம் இந்த சசிகுமார் கம்பெனி கலவைகள் இந்த முறையும்  நிச்சயம் நல்லா ஓடும்.. விகடனும் 43 அல்லது 44 போடும்... என்னுடைய வருத்தம் சசிகுமார் என்ற நடிப்பு தோல் போர்த்திய இயக்குனர் மீதுதான்.. தூரத்தில் சசிகுமார் சரமாரியாக வெட்டப்படும் கோரம் திரையின் ஒரு ஓரத்தில் out of focusஇல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கஞ்சா கருப்பு குற்ற உணர்ச்சியில் எச்சிலை தொண்டை பிதுங்க பிதுங்க விழுங்கி கொண்டு நடந்து வந்து பொத்தென ஒரு மூச்சுடன் உட்காரும் சுப்ரமணியபுரம் பட காட்சி அந்த பட கிளைமாக்ஸ் முடிந்தும் இருக்கையை விட்டு எழும்ப முடியாமல் மனதை பிசைந்தது... மனித மனங்களை வாசிக்கும் அது போன்ற படங்கள் எத்தனை ரத்தம் இருந்தாலும் கொண்டாடத்தான் படுகின்றன... 'இயக்குனர் சசிகுமார்' என்பது ஒரே படத்தில் அமைந்து போன ஒரு brand ... ரியல் ஸ்கிரிப்ட் எழுதும் வெகு சிலரில் ஒருவர்,. 

ஈசன் சறுக்கியதுதான்.. திரைக்கதை சீரோட்டத்தில் ஏதோ குளறுபடி, மிக சாதாரண கதை, நகரம் என்பதன் மீது அவருக்கு இருக்கும் தனிப்பட்ட வெறுப்பை நிலைநிறுத்தும் கருத்துத்திணிப்புதான் அதில் அதிகம் தெரிந்தது... ஆனாலும் அதன் பின்னர் மீண்டும் சுப்ரமணியபுரம் பார்த்தால் இந்த மனிதரின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் குறையவே இல்லை... 

நடிப்பு இவருக்கு பொருந்துகிறதா? இயக்குனராய் இவர் மீது செட் ஆகிப்போன ஒரு மதிப்பே இவர் என்ன செய்தாலும் நம்மை சகித்து கொள்ளவைக்கிறதா? சரி நடனம் வரவல்லை,ரொம்ப பெரிய நடிகரெல்லாம் இல்லை.. தமிழ் சினிமா நடிப்பு என்ற வஸ்துவை எதிர்ப்பார்ப்பதும் இல்லை.. இவருக்கு இது மட்டும்தான் தெரியும் என்றால் ஏதோ ஆசைக்கு செய்துட்டு போகிறார் என்று வைத்து கொள்ளலாம்.. attention to details உள்ள வெகு சில நேர்த்தியான படைப்பாளியில் ஒருவர் எதற்கு அதை பணையம் வைத்து இதை செய்ய வேண்டும்?

இயக்குனர் சார், சுந்தரபாண்டியனில் நடிக்க ஆயிரம் பேர் இருக்காங்க.. ஆனா சுப்ரமணியபுரம் மாதிரி படைப்புகளுக்கு உங்களமாதிரி கொஞ்சம் பேர்தான் இருக்கீங்க.. அதன் making தான் உங்களின் அடையாளமே தவிர, நட்புக்கும் காதலுக்கும் குரல் கொடுப்பவராகவும், இரத்தம் சொட்ட சொட்ட துரோகத்தில் முடங்குபவராகவும் இருப்பது உங்களின் அடையாளம் அல்ல.. "நண்பன்" அல்லது "நட்பு" என்கிற வார்த்தைகளை வைத்து கோர்த்த வசனங்களை கேட்டாலே தியேட்டரில் கைத்தட்ட ஒரு பெருங்கூட்டம் உண்டுதான்.. ஆனால் அந்த வசனங்கள் பேச நீங்கள்தான் தேவை என்றில்லை.. உங்களின் முதல் படைப்பு ஒரு trend setter.. நீங்கள் அடுத்த நிலைக்கு பயணியுங்கள்.. உங்கள் பாணியில் பிறர் எடுக்கும் கதைகளுக்கு உங்களுக்குள் இருக்கும் படைப்பாளி ஊறுகாய் ஆகவேண்டாம்...

நன்றியுடன்...சி.மயிலன்


2 Sep 2012

நிவேதா முதல் நிவேதா வரை...


காட்சி-8
இடம்: புதிய (?)தலைமை செயலகம் எதிரே உள்ளே சிம்சன் சிக்னல் 
தேதி: 03/ 09/ 2012

முன்னாள் நின்று கொண்டிருக்கும் 32B பேருந்து மட்டும் நினைவு படுத்தவில்லை நிவேதாவை.. பக்கவாட்டில் காரோடு லேசாய் உரசி நிற்கும் பைக்கில் அதிகமாய் உரசிகொண்டிருக்கும் ஜோடி,கிழவி ஒருத்தி விற்கும் மல்லிகை பூ, லேசான மேகமூட்டம்...என ஒவ்வொன்றிலும் நிவி... ஒவ்வொரு காட்சியும் அவனை தரிசிக்கிறது... இல்லை...சபிக்கிறது ... இல்லை...வேறேதோ செய்கிறது... சிக்னல் பச்சை விழுந்ததும், லான்சர். விளம்பரத்தில் சொல்லப்படும் வேகத்தை பிடித்து பறக்கிறது...ஆர்மி குவாட்டர்ஸ் ஏரியாவை கடந்ததும், தனிச்சையாக வலது புறம் திரும்புகிறது... மெரீனா... கொஞ்சம் சுண்டல் ...நிறைய அசை... காட்சி- 7
இடம்: வேளச்சேரி, சத்யநாராயணனின் ஃபிளாட் 
தேதி-18/ 03/ 2012

செல்ஃபோனில், நோக்கியா ரிங்டோன்.. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவரையும், பொருள் தேடும் பந்தயத்தில் இருப்பவரையும், மிடுக்கான செல்வந்தர்களையும் இந்த ரிங்க்டோன் அடையாளப்படுத்திவிடும்...சத்யா இம்மூன்றில் எந்த வகையறா? அந்த விவாதம் இங்கு வேண்டாம்.. ஃபோனில்,அசோகசெட்டியார் (சாதி பெயர் பின்னால் சேர்ந்தால் 'ன'கர மெய் தொலைந்து போகும் புணர்ச்சிவிதி, தமிழ்தாய்க்கே வெளிச்சம்)

ஹலோ 

ஹலோ மாப்ள.. பொண்ணு பொறந்திருக்கு.. (அவசரவசரமாய் பேசுகிறார்)

எப்ப ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனீங்க...நிவிக்கு 24th தானே டேட் ? (பதற்றமாய்)

இல்ல நேத்து ரொம்ப வலி... துடிச்சு போய்ட்டா... ஹாஸ்பிடல் வந்ததுமே மெம்ப்ரேன் ரப்ச்சர்...நைட்டு பத்தர மணிக்கு டெலிவரி ஆச்சு..

இப்ப சாயங்காலம் அஞ்சு மணி...இப்ப சொல்றீங்க...? கொழந்த எப்டி இருக்கு? எந்த ஹாஸ்பிடல்?

இல்ல மாப்ள, அது வந்து.... நிவி உங்களுக்கு ஃபோன் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டா...


காட்சி- 6
இடம்: அசோகசெட்டியார் வீடு... நந்தம்பாக்கம்
தேதி-24/ 12/ 2011

காரில் இருந்து வேகமாய் வீட்டிற்குள் நுழைகிறாள் நிவி.. பின்னாலே நிதானமாய் அசோகன்.. வாசலில் வெறும்வாய்கள் சில அவல் தேடி கூடிநிற்கிறது...

அப்பா, எதுக்கு இப்போ இவ்வளோ பேர் இங்க நிக்குறாங்க...? 

சத்தம் போடாதம்மா.. அவங்களுக்கு கேட்ற போது....

காதுல விழுந்து மட்டும் திருந்த போகுதுங்களா? இது என்னோட லைஃப்.. only i ll decide things... இவுங்க என்ன இப்ப ஆறுதல் சொல்ல போறாங்களா? i really dont need any such bullshit...

நிவி, கொஞ்சம் பொறம்மா.. உன்னோட அம்மா இருந்திருக்கணும்... உனக்கு எடுத்து சொல்லியிருப்பா... எனக்கு... எனக்கு... அவ்வளவு வெவரம் பத்தல... (கலங்குகிறார்)

அப்பா, அம்மா இருந்திருந்தா இந்த முடிவ கொஞ்ச நாள் முன்னாடியே எடுத்திருப்பேன்... நல்லவேள.. அவனும் இதுக்கு ஒத்துக்கிட்டான்...i feel a big relief..

நீ ரொம்ப stress பண்ணதாலதான் ஒத்துக்கிட்டாரு... மாப்ளைக்கு இதுல துளியும் விருப்பமில்ல.. 

அதான் இன்னிக்கு divorce ஆயிடுச்சுல்ல... அப்பறம் என்ன இன்னும் மாப்ள...?


காட்சி- 5
இடம்: சத்யாவின் ஃபிளாட்
தேதி: 11/ 10/ 2011

நீண்ட நேர தொலைபேசி உரையாடல் முடியும் தருவாயில் இருக்கிறது,

so, என்னதான் சொல்லவர்ற நிவி...? 

divorce... அதான இவ்ளோ நேரமா சொல்லிட்டு இருக்கேன்... am just fed up with ur explanations and promises... போதும் சத்யா... நீயும் சந்தோஷமா இரு... நானும் ரொம்ப நிம்மதியா இருப்பேன்..

but nivi, you are a pregnant now... 

ஹோ...உனக்கு அதெல்லாம் வேற ஞாபகம் இருக்கா?

ஏன் நிவி இப்டி கொல்ற? ப்ளீஸ்.. கொஞ்ச நாள்.. கொஞ்ச நாள் அங்கேயே...உன் வீட்லயே இரு... ஒரு change இருக்கும்... இப்போ அவசரமா இந்த முடிவ எடுக்குற அளவுக்கு என்ன ஆச்சு?

என்ன ஆகல? disappointment... அத தாண்டி என்ன நடக்கணும்...? இப்டியே போச்சுன்னா கொஞ்ச நாள்ல நா suicide தான் பண்ணிக்கணும்... i just want to get out of this relationship...


காட்சி 4
இடம்: அதே ஃபிளாட் 
தேதி: 19/ 09 / 2011

கையிலிருந்த டம்ளரை ஓங்கி தரையில் அடிக்கிறாள் நிவி... அது ரெண்டு குதி குதித்து தரையில் விழுந்து, மின்விசிறியின் வழி நடத்தளுக்கு ஏற்ப முன்னும் பின்னும் அசைய தொடங்கும் வரை நிதானித்து மீண்டும்......

come on.. நிவி.. இப்ப ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற... என்னப்பத்திதான் உனக்கு தெரியும்ல... 

but, i expected you to change... atleast for me.. நீயும் ட்ரை பண்றேன்னு தானே சொன்ன... ஒரு வருஷம் ஆச்சு... போக போக இன்னும் மோசமாதான் போயிட்டு இருக்கு.. போதும்டா... என்னால முடியல... பேசி பேசி.. உன்கிட்ட கெஞ்சி கெஞ்சி... போதும்... நீ, உன்னோட profession, office, goal... என்ன விட்ரு..

இதெல்லாம் ஒரு விஷயமா நிவி...

அதான்டா... அதான் இங்க பிரெச்சன... நா உன்கிட்ட என்ன எதிர்ப்பாக்குறேங்கறதே உனக்கு தெரியல...இல்ல, இதெல்லாம் உனக்கு ஒரு விஷயமாவே படல... அதான் உண்ம..  இதுவரைக்கும் மூணு  check up போயிருக்கேன்... ஒரு தடவையாவது கூட வந்திருக்கியா...? வீட்ல பேசறதுக்கும் ஒருத்தர் இல்ல... உங்க அம்மாஅப்பாவயாவது ஊர்ல இருந்து இங்க வர சொல்லலாம்... அவங்களுக்கு சென்னை புடிக்காதுன்னு சொல்லிடுவ.. நா வேலைக்கு போறதும் உனக்கு பிடிக்காது... 

இப்போ என்ன வேலைக்கு போணுமா?

பாத்தியா...? இப்பவும் நீ எப்டி இத புரிஞ்சுக்கிற... போதும் சத்யா... please leave me...


காட்சி-3
இடம்: fortes மலர் மருத்துவமனை
தேதி: 31/ 07/ 2011

என்னம்மா.. மாப்ள ஃபோன் எடுக்குறாரா இல்லையா?

ரெண்டு தடவ ஃபுல் ரிங் போயிடுச்சுப்பா...attend பண்ணல.. திரும்பவும் ட்ரை பண்ணிட்டு.....    ஹலோ...எங்க இருக்கே?

office ல தான் நிவி... என்னடா இந்த நேரத்துல call ... ?

hospital வந்திருக்கேன்... 

என்னாச்சுடா ? யாருகூட போன? 

அப்பா வந்திருக்காரு... எல்லாம் நல்ல விஷயம்தான்... guess பண்ணு...

ஹே...u mean that? re..a...l..llll...y?

ஹ்ம்ம்...சந்தோஷமா? உண்மைலே?

என்னடா இப்டி கேக்ற..? love so much.... இப்பவே உன்ன பாக்கணும்... 

வா...நானும் பாக்கணும்...

ஒரு மீட்டிங் இருக்குடா... முடிச்சிட்டு சீக்ரம் வர்றேன்... 

ஹோ.. ஓகே... ஒகே... சீக்ரம் வர ட்ரை பண்ணு... 


காட்சி -2
இடம்: பொள்ளாச்சியில் சத்யா வீடு.. 
தேதி: 05/ 09/ 2010

ஹ்ம்ம்.. உனக்கு வெட்கப்படலாம் தெரியுமா நிவி...?

ஹேய்...

பின்ன... first night ங்கறதுக்காக எக்கச்சக்க பிரகாசம் தெரியுது மொகத்துல... கிட்ட வா...

எதுக்கு? ஹ்ம்ம்...

my lips are longing to kiss u... come closer nivi...

என்னமோ, இன்னைக்குதான் புதுசா மொத தடவ குடுக்குற மாதிரி... போடா..

அப்போ வேணாம்ல...? சரி தூக்கம் வருது....குட் நைட்...

ஏய்... you... idiot....


காட்சி-1
இடம்: 32B பேருந்து.. நடத்துனருக்கு முந்தைய சீட்...
தேதி: 02/ 02/ 2010

பேருந்தில் இருக்கும் சில விடலைகளின் கண்கள் நிவியை மேய்ந்து கொண்டிருக்க, அவளுக்கு பக்கத்தில் எந்த விரசமும் இல்லாமல் சத்யா...

இன்னும் எத்தன நாள் சத்யா இதெல்லாம்..?

எதெல்லாம்..?

போதும்... friends ன்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம்... வேற ஏதும் நமக்குள்ள இல்லையா?

பட் நிவி...

என்னடா பட்...? எனக்கு உன்கூட வாழனும்... உனக்கு அப்டி தோணலையா?

simply, i just dont want to get into a relationship at present.. நா அதுக்கு ஒத்துவரமாட்டேன்...yes... எனக்கு relationshipsஅ value பண்ண தெரியாது... சின்ன வயசுல இருந்தே career, success இதுக்கு பின்னாலேயே ஓடி பழக்க பட்டுட்டேன்... இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கே என்ன புடிக்காம போயிடும்...

ஏதும் பேசாதடா.. நீ என் lifeல இருக்கணும்...அவ்ளோதான்... என்ன உனக்கு புடிச்சுருக்கா இல்லையா?

கலங்கிய விழிகளுடன் இருக்கும் அவளை தோளோடு சாய்த்து கொள்கிறான்...


அதே காட்சி- 8 (இன்னொரு ஃபிரேமில்)
இடம்: அசோகசெட்டியார் வீடு..
தேதி: 03/ 09/ 2012

ஐந்து மாத குழந்தைக்கு பாலூட்டிகொண்டிருக்கும்போது,மொபைல் அழைக்கிறது...  "DONT ATTEND" என பதிவு செய்யப்பட்டுள்ள சத்யாவின் எண்ணிலிருந்துதான் அழைப்பு... கண் இமைக்கவே இல்லை... முழு அழைப்பொலியும் முடிந்துவிட்டது... மொபைல் திரையை மட்டும் வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்.. அழுகை அடைக்கிறது...

முற்றும்

1 Sep 2012

முகமூடி- சூப்பர் ஜீரோ


தலைப்பு முழுக்க ஆங்கிலத்தில்தான் போட்டார்கள்...படம் முடிந்தபின்னர் வரும் பட்டியலாவது தமிழில் வருமென எதிர்பார்த்தேன்..ம்ஹும்ம்.. கும்மிருட்டு, தரையோடு உருண்டோடும் லோ ஆங்கிள் ஷாட்ஸ், சடார் சடார் எடிட்டிங், மென்மையாய் தொடங்கி பின்னர் தொடர்ச்சியாய் செவித்திரையை பதம் பார்க்கும் பின்னணி இசை, ஒரு டாஸ்மாக் ஆட்டம்...மழையில் மஞ்சள் புடவைமட்டும் காயவில்லை போலும்... உலகப்படம் அது இது என்று இனிமேல் பேட்டிகளில் பேசுவதை மிஷ்கின் நிறுத்திகொள்வது நலம்...ஏற்கனவே சரக்கு தீர்ந்துபோய்தான் கொரிய டிவிடியை நந்தலாலா ஆக்கினார்.. குறைந்தது எதாவது ஒரு சூப்பர் ஹீரோ படத்தை அப்படியே உல்டா செய்திருக்கலாம்...மூன்று மணிநேரத்திற்கும், என்பது ரூபாய்க்கும் சமீப நாட்களில் நான் இவ்வளவு வருந்தியதில்லை.. 
சூர்யா தன்னுடைய வெற்றிக்கு காரணம் சரியான கதை தேர்வுதான் என்று அடிக்கடி செய்யும் சுயபிதற்றல் இந்த படத்தை அவர் தவிர்த்திருப்பதில் இருந்தே நிரூபணம் ஆகிறது...ஜீவாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. கற்றது தமிழில் வாழ்ந்தவருக்கு இதெல்லாம் சாபக்கேடு...அவரது கேரியரில் கச்சேரி, ரௌத்திரம்,வந்தான் வென்றான் படங்கள் என்ன மாற்றம் கொண்டு வந்தனவோ அதை அப்படியே கொண்டுவரும் வன்மை உண்டு முகமூடிக்கும்...பதிமூன்று கிலோ எடை உள்ள அங்கிகளை மாட்டிவிட்டு அவரை தேமே என்று ஓடவிட்டிருப்பது, மணிக்கூண்டு, கட்டிமுடிக்க படாத வீட்டின் காங்க்ரிட் பில்லர், இன்னபிற உயரமான கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது முதுகில் ஜமுக்காளம் படபடவென காற்றில் அசைய நிற்க விட்டிருப்பது...எல்லாம் பார்க்க பரிதமாய் இருக்கிறது... பின்னால் பொன்வசந்தம் வருகிறது என்று நம்பியிருக்கிறார் போல.. நானும்...

கந்தசாமியிலாவது ஸ்ரேயா, அப்படியே அல்லேக்ரா, மியாவ் மியாவ் உபயங்களில் கொஞ்சம் இளைப்பாற முடிந்தது.. இதில் ஒரு பாடாவதி ஹீரோயின்...காயத்ரி ரகுராம் சற்று மெலிந்தால் எப்படி இருப்பாரோ அப்படி...பெயர் ஏதோ பூஜா ஹெக்டேவாம்.. இந்த கதாபாத்திரத்திற்கு, இந்த நடிப்பிற்கு, இந்த வளைவுநெளிவுகளுக்குகூடவா தமிழ்நாட்டில் ஆள் இல்லை.. அஞ்சாதேவில் இரசித்த விஷயங்களில் விஜயலட்சுமியும் ஒருவர்..இந்த படத்தில் இவருக்கு அமைக்க பட்டிருந்த அறிமுக காட்சி உலகத்தரம்... ஒரு பாடலுக்கு தொப்புள் காட்ட வேண்டிய தலையாய கடமையை செவ்வனே செய்துவிட்டு காணாமல்போய், சூப்பர் ஹீரோ படங்களில் ஹீரோவின் முகத்தை தடவி பார்க்கும் கடைசி காட்சியில் பின்னர் மீண்டும் ஆஜராகிறார்...

யாவரும் நலம்,கந்தசாமி படங்களுக்கு பிறகு மீண்டும் சுத்தியலுக்கு வேலை.. தூக்கி கொண்டு திரிவது நரேன்...பொதுவாக ஹீரோவை வில்லனாக்கினால் அந்த கேரெக்டர் செதுக்க பட்டிருக்கும். இங்கே மிஷ்கினின் உளி படுமொக்கையாக இருந்திருக்கிறது...இந்த பாத்திர படைப்பைப் பற்றி மிஷ்கின் கொடுத்திருந்த பேட்டியை வைத்து வேட்டையாடு விளையாடு அமுதன் அளவிற்கு எதிர்பார்த்தால்,முன்சீட்டில் மோதிக்கொண்டு சாகலாம் என்ற வகையில் இருக்கிறது..அதிலும் கிளைமாக்ஸ் உச்சம்... குங்ஃபூ ஆக்ஷனில் அவர் கையை நீட்டிகொண்டு சண்டைக்கு தயாராவதைப் பார்த்தால் ஒருவேளை சோற்றிற்கு யாசிப்பது போல இருக்கிறது...

நாசர், கிரிஷ்கர்னாட் போன்றவர்கள் எப்படி இந்த அமெச்சூரான கதாபாத்திரங்களுக்கு ஒப்புகொண்டார்கள் என்பதுதான் ஆச்சர்யம்...மாஸ்டராக வரும் செல்வா கொஞ்சம் ஆறுதல்...கூன் விழுந்த முதுகுடன் வரும் ஒரு கேரக்டர்,அஞ்சாதேவில் வரும் கையில்லாதவரை மிமிக் செய்ய முயன்று வெறுப்பேற்றுகிறார்.. சூப்பர் ஹீரோ படம் என்றால் 'அவர் எப்போ வருவார்' என்று கேட்க இரண்டு அதிக பிரசங்கி குழந்தைகள் வேண்டுமல்லவா? இருக்கிறார்கள்.. அப்புறம் தமிழ்நாட்டு போலீஸ் பெருமையை மலையாள நெடியில் சொல்லும் கமிஷ்னர், முதல் காட்சியிலேயே இவன்தான் எட்டப்பன் என்று புரியுமளவில் ஒரு போலீஸ் கேரக்டர், தன் பிள்ளைதான் படத்தின் ஹீரோ என்று தெரியாமல் எந்நேரமும் திட்டும் ஒரு அப்பா...என இதுவரை உலகபடங்களில் வராத கதாபாத்திரங்களை உட்கார்ந்து யோசித்திருக்கிறார்..
இன்னும் ஓரிரு நாட்களில் திரையங்கிற்கு வரும் குழந்தைகளுக்கு முகமூடி இலவசம் என்ற பாவச்செயல் நடந்தாலும் ஆச்சர்யமில்லை...

இதுபோன்ற படங்களில் லாஜிக் எதிர்பார்க்க கூடாது என்பது விதியாம்... காட்சிக்கு காட்சி இருக்கும் லாஜிக் பொத்தல்களை எல்லாம் விட்டுவிடுவோம்... சூப்பர் ஹீரோவாக இருந்து அவர் என்ன சாதித்தார்? எதற்காக ஒரு சாகசமும் செய்யாத,அப்படியே செய்திருந்தாலும் அதை யாருமே பார்த்திடாத சூப்பர் ஹீரோவை எல்லோரும் கிளைமாக்சில் எதிர்பார்கிறார்கள்? என்று வேலாயுதம் படத்தில்கூட விடையிருந்த இந்த இரண்டு கேள்விகளை கூட நாங்கள் கேட்க கூடாது என்றால், "தமிழ் நாட்டில் எவனுக்கும் நல்ல படங்களை இரசிக்க தெரியல, கொண்டாட தெரியல... " என்று இரசிகனைக் குறை கூறும் மிஷ்கின், படத்தில் ஹீரோயின் காரி துப்பும் ஒரு காட்சியில் தன் முகத்தை ஸ்க்ரீனோடு ஒட்டி வைத்து கொள்வாராக...
நன்றியுடன்...சி.மயிலன்

27 Aug 2012

கவியரங்க கசமுசா....

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

உசேன் போல்ட்டும், ஒபாமாவும் காலையில் இருந்து கொடுக்கும் தொடர் நச்சரிப்பின் பேரில் நேற்று பதிவர் மாநாட்டு கவியரங்கில் நான் வாசித்த கவிதை(?)யை, இதோ உங்களுக்கு காட்சியாக்குகிறேன்... வீடியோவை ஆன்செய்துவிட்டு, பின்னர் pause செய்யவும்...முழுவதும் buffer ஆனதும் play செய்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்... (ரொம்ப மினக்கெட்டு இருக்கேன்யா...இந்த youtube எழவுல இத ஏத்த...)
இந்த கவிதையில் வரும் கதாபாத்திரங்கள் சம்பவங்கள் கற்பனையல்ல....உண்மை 

கவி பாட வேண்டுமாம் 
நமக்கு கவிதையே தகிடதித்தோம்... இதில் பாட வேற வேண்டுமா?
இலக்கணமோ இலக்கியமோ எதிர்ப்பார்த்திருப்போர் 
தக்காளிகளையும் முட்டைகளையும் தயாராய் வைத்து கொள்ளுங்கள் 
காரணம்- நான் சத்தியமாய் அவனில்லை..
மிச்சமின்றி உங்கள் சகிப்பை சோதித்திட- மேடை 
அச்சம் மறைத்து துவங்குகிறேன்...
அவை பெரியோர்க்கும், ஆங்காங்கே தெரியும் சிறுசுகளுக்கும் வணக்கங்கள்...

அப்போது வயது மூன்றாம் எனக்கு...
எட்டரை மணியை அதிகாலையென கொண்டு 
பட்டனறுந்த சீருடையில் சிக்கி- அம்மா அப்பிவைக்கும் 
அரை இன்ச் பவுடர்,அரை கை எண்ணையோடு 
அரை நிஜார் சிறுவர்கள், எங்களை வைத்து நடத்தினார்கள் 
உண்மையான சிறை நிரப்பும் போராட்டம்- பள்ளிக்கூடமாம் அது.
ரிக்ஷா மணி கேட்ட பின்னான என் ஒத்துழையாமை இயக்கம்
சிறு எக்ளைர்ஸ் மிட்டாயில் தவிடு பொடியாகும் 
ஆச்சர்யம்! மிட்டாய் முடிந்தபின் அழுததில்லை நான்...
வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்- காரணம் வேறில்லை 
பக்கத்து சீட்டு பிரியாதான்... - இட பிரெச்சனையில்
சக்கலத்தன் ஸ்லேட்டை முழங்கால்சகிதம் 
சுக்குநூறாக்க....மறுநொடி விழுந்த முதுகு பூசையில் 
படுசிக்கலாகி போனது அந்த காதல் கதை...

அப்போது வயது பதிமூன்றாம் எனக்கு...
அதுவரை தொட்டுபேசியிருந்த தோழிகள் பூப்பெய்திவிட்டார்களாம் 
சட்டென தூரம் தேவைப்பட்டுவிட்டது...
முன்னிரண்டு பற்கள் தெரிய சிரிப்பதற்கும் 
முப்பத்திஇரண்டும் தெரிவதற்கும் வித்தியாசம் புரிய தொடங்கியது 
துப்பட்டாவின் வினையறிந்த நாளிலேயே அது துரோகியாகிபோனது 
அப்பட்டமாய் ஏதும் நடக்கவில்லை எனினும்- ஆங்காங்கே மனதினுள் 
தப்பட்டம் அடிக்கத்தான் செய்தது பட்டாம்பூச்சிகள்...
கன்னியவள் கண்டுதொலைத்தால்
கன்னத்தில் பரு முளைக்குமாம் 
சந்திரிக்கா சோப்பை நிறுத்திபார்த்தும்,
சண்டாள பருவிற்கு வழியேயில்லை...


நீ இல்லாம எப்படி செல்லம்...?


அப்போது வயது பதினெட்டாம் எனக்கு..
பூங்கா நகர் மின்சார இரயிலில் என்னோடு சேர்ந்து 
ஃபுட்போர்டு அடித்தது என் காதல் கனவுகள்...
இந்த பெருநகரின் பாரிமுனையில் 
கல்லூரியின் பாடாவதி வகுப்பறையில்  
ஜீவனுற்றது என் சிவப்பு சுடிதார் படலம் 
கதாநாயகி மூன்றாவது பெஞ்சின் முக்கத்தில் இருக்க 
கதையும் வசனமும் பக்கதிலிருக்க 
கதாநாயகத்தனம்தான் வசமில்லை நமக்கு...
'வாழும் கலை பயிற்சி' ரவிசங்கருக்கு பதிலாக 
'காதல் கலை பயிற்சி' தபூசங்கரிடம் சிக்கிக்கொண்டேன்...
தேவதையின் ஓர பார்வை பட்டாலே 
என் டைரி கதறி அழத்தொடங்கும் கவிதை பீதியில்...
"கொங்கு ஏரியா பொண்ணு, 
சங்கு ஊதிருவானுங்க" என்று நண்பர்கள் 
நங்கென கொட்டியதில் 
கண்றாவியாய் முடிந்தது 
கையாலாகா கல்லூரி வாழ்க்கை...

சமயம் பார்த்து சிக்கியது பாவப்பட்ட பதிவுலகம்...
தலைவகுடு, சரிகைமை,, குங்குமம், தாவணி,காட்டன் சேலை,
சந்தனக்கீற்று,முன்நெற்றி கற்றை முடி, கொசுவம்,சீருடை,
ஜியோமெட்ரி பாக்ஸ்,கோவில்,மார்கழி கோலம்,மழைவாசம், பனித்துளி,
என்ற என் காதல் கருக்களுக்கு காஜலையும் சமந்தாவையும் 
வாடகை தாயாக்கி, பதிவேற்றி கணினிமுன் காத்திருந்தால் 
வந்துசேரும் பெண்ணுலகின் கிளாசிக் கமென்ட் ஒன்று,
"அருமை சகோ" என்று...

இப்போது இந்த நொடி இருபத்தியாறு எனக்கு,
தாடி என் முகத்திற்கு ஆகாது 
பீடி என் உடம்பிற்கு ஆகாது
தேடி சலுத்தாயிர்று...
TUBELIGHT உம் பல்பும் பல இருந்தும் வீட்டில் 
விளக்குதான் ஏற்றவேண்டுமாம் அம்மாவிற்கு 
சரி...சிறியவனுக்கு வக்கில்லை என்று ஒருவழியாய் 
பெரியோர்களால் நிச்சயிக்கபட்டது திருமணமும்
எங்கேயோ தேடி என் ஒட்டு மொத்த தேடலையும் ஒன்றாய் நிறுத்தி...

மருத்துவச்சி இல்லை,
உயரம் சராசரிக்கு குறைவுதான்,
ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லை
அச்சசல் கிராமத்து வார்ப்பு...
சுருக்கமாய் எனக்கான தனி கவிதை...
அணுஅணுவாய் எனை ஆட்கொள்ள 
பிறந்தவளுக்கு பெயர் அனுஷ்யாவாம்...
அக்டோபர் கடைசி ஞாயிறு 
பட்டுக்கோட்டையில்தான்  திருமணம்- 
என் இல்லாளை கரம் பிடிக்கும் பொன்னாளில்
பல பொல்லாத காரணம் சொல்லி 
நீங்கள் இல்லாத குறை வேண்டாம்...
உங்களுக்கான காத்திருப்பில்... சி.மயிலன்

நன்றி: இதை பொறுமையுடன் படம்பிடித்து கொடுத்த நண்பர் அபி அவர்களுக்கு 


அபியும் நானும்...கூடவே கோவியும்...

பின்குறிப்பு 1:

இரண்டு முக்கியமான சந்தோஷங்கள் வீடியோவில் பார்த்திருப்பீர்கள்... ஒன்று பட்டுக்கோட்டை பிரபாகர் தாமாய் முன்வந்து கை குலுக்கியது... மற்றொன்று சுரேகாவின் வாழ்த்து... நெகிழ்ச்சியில் உண்மையில் உறைந்துதான் விட்டேன்... ஆனால் இவ்விரண்டையும் புறந்தள்ளி இந்த தருணம் வரை என்னால் சிலாகிக்க முடிவது, சற்றே முன்நெற்றி வழுக்கையோடு, எஞ்சியிருக்கும் மயிர்கள் நரைத்து, தளர்ந்த குரலில் ஒரு தள்ளாத வயதுக்கார பதிவர், நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு வந்து, "ரொம்ப யதார்த்தமா, வாசிச்சே தம்பி... நல்லா இருந்தது" என்ற கமென்ட்... ஐ.டி கார்ட் அணிந்திராத அவரிடம் "நீங்கள்?" என்று கேட்க ஏனோ தோணவில்லை...

பின்குறிப்பு 2:

நேரலையில் பார்த்த நண்பர்கள் பாதியே புரிந்ததாகவும், வரிகளை பிரசுரிக்குமாறும் சொல்லியிருந்தனர்... ஒளிபரப்பில் பிழையில்லை... சுரேகா சொன்னது போல கொஞ்சம் வேகமாய் வாசித்ததுதான் காரணம்... மேலும் கவியரங்கம் என்றால் பன்னிரண்டு வரிகளை மூன்று மூன்று முறை வாசித்து முப்பத்தி ஆறு வரிகளாய் மாற்றிடுவர்... நமக்கு வரிகள் அதிகம் என்பதாலும், அனுமதிக்கப்பட்ட நேரம் குறைவு என்பதாலும், கொஞ்சம் புரிதலில் கஷ்டம் ஏற்பட்டுவிட்டது... மன்னிக்கவும்...

பின்குறிப்பு 3:

நேரலை பார்த்த நண்பன் ஒருவன் குறுஞ்செய்தி அனுப்பினான்..."மச்சி, வாசிப்பு பார்த்திபன் ஸ்டைலில் இருந்தது என்று..." சுத்தமாய் மாடுலேஷனே இல்லாத அவரது பாணி எனக்கு அறவே பிடிக்காது என்பதால் அந்த கமென்ட் தலையில் உரக்க கொட்டியது...


நன்றியுடன்...சி.மயிலன்
26 Aug 2012

பதிவர் சந்திப்பு- எனக்கொரு உண்ம தெரிஞ்சாவனுஞ் சாமி...
அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

சென்னையில் உலக தமிழ் வலைப்பதிவர் மாநாடு... கொஞ்ச நாட்களாகவே கிளம்பியிருந்த எண்ணம், ஆசை அல்லது ஏக்கம்.. இத்தனை நாட்களாய் நேரில் காணாமல் வெறுமனே வலை வழியே ஒருமையில் அழைத்து பேசும் அளவிற்கு நண்பர்களாகி போனவர்களை சந்தித்த, நினைவில் நீங்கா நாள்...இப்படியொரு பதிவு வேண்டாம் என்றுதான் நினைத்தேன்... ஓராண்டு பதிவுலகில் இருந்தமைக்கு ஓர் ஆத்மதிருப்தி... அதை கட்டாயம் பகிர வேண்டும் 


முக்கிய நிகழ்வுகள்-

முந்தைய நாள் மாலை ராமானுசம் ஐயா,சென்னை பித்தன் ஐயா, இருவரும் பல யூத்துகளுக்கு மத்தியில் விழா ஏற்பாடுகளில் அக்கறை காட்டிய விதம் மிரட்சி... (மதுமதியும், மோகன்குமாரும் யூத்தா?... என்னமோ போடா நாராயணா...) 

அப்போது  "மெட்ராஸ் பவன்" சிவக்குமார் அங்கு கொண்டுவந்த காராசேவ் பாக்கெட் ( யோவ்...இதுவும் முக்கிய நிகழ்வுதான்யா...)

காலை பத்து மணிக்கு ஆரம்பிப்பதாய் சொன்ன மாநாடு சரியாக பத்து மணிக்கு துவங்கப்பட்டது... ( அட...)

நேரடி ஒளிபரப்பு துல்லியமாய் வழங்கப்பட்டுள்ளது ( நம்ம வீட்டம்மா, அப்பப்போ லைவ் கமெண்டிங்...டிங்..டிங்...)

ஒரு போட்டோ க்ளிக் செய்யும் பொழுதிற்கும் குறைவான நேரத்தில் தன் அறிமுகத்தை முடித்துக்கொண்டார் பிலாசபி... (யோவ்..உனக்குத்தான் மணிரத்னத்த பிடிக்காதே..)

சேட்டைக்காரன் முகமூடி துறந்தார்...அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி... வயது ஐம்பத்து எட்டாம்... ( ஸ்ரேயா கவனத்திற்கு.. )

ஆரூர்- ஆஷிக் கட்டிபிடி வைத்தியம்... (தைரியம் இருந்தா எங்க நக்ஸ கட்டிபுடியா பாக்கலாம்...)

எனக்கு சாகித்ய அகாடமி சார்பில் 'வாழும் சுஜாதா' என்ற பட்டம் கொடுத்த "உண்மையை" மேடையில் உலகத்திற்கு சொல்லிவிட்டேன்.. ( ஆரம்பிச்சுட்டான்டா.. )

மதியம் உண்மையிலேயே மிக நல்ல சாப்பாடு போட்டார்கள்... ஆமா.. ஊறுகா வெச்சாங்களா? (டேய் அதெல்லாம் தொட்டு சாப்டனும்... கொழச்சு அடிக்கக்கூடாது )

அந்த ஏரியாவில் பார்ப்பவர்கள் எல்லாம் பதிவர்களாக இருக்க,அதே நினைப்பில் அருகில் இருந்த டாஸ்மாக்கில் இருந்து வெளியே வந்தவரிடம், "நீங்க எந்த ப்ளாக் வெச்சிருக்கீங்க"ன்னு அஞ்சாசிங்கம் கேட்க, "அஞ்சு ரூபா இருந்தா கொடேன்" என்று அவர் கப்படித்தார்... ( ஏய்... யாருகிட்ட? ) 

சாப்பாட்டிற்கு பின்பு தூங்கவிடாத சுரேகாவின் தொகுத்துவழங்கும் உத்தி... ( 'கை தட்டினால் ஏற்படும் நன்மைகள்'ன்னு சார் ஒரு தனி புக்கே போடலாம்...)

மூத்த பதிவர்களுக்கான பாராட்டுவிழா... அந்த நேரம் கூட்டத்தில் சலசலப்பு இல்லாமல் வீற்றிருந்த அமைதி அவர்களுக்கான மரியாதை... (இன்னொரு 34 வருஷம் கழிச்சு எனக்கும் தருவாங்க... )

"தென்றலின் கனவு" புத்தக வெளியீடு.. ( தென்றல் அக்கா ரொம்ப நல்லவங்க... இலவசமா எல்லாருக்கும் ஒரு காப்பி...)

கவியரங்கத்தில் ஒரு கலவரம்.. வேற யாரு? நான்தான்.. (அடிவாங்காம ஊரு வந்து சேந்தது எம்புட்டு பெரிய கஷ்டம்)

பட்டுகோட்டை பிராபகர்- சிறப்பு விருந்தினர் உரை.. அந்த காலத்தில் இருந்த "கையெழுத்து" பத்திரிகை பற்றிய பேச்சு... சுஜாதாவும் ப்ளாக் என்பதை அதோடுதான் ஒப்பிட்டு இருப்பார்.. (பெரிய மனுசய்ங்க பெரிய மனுசய்ங்கதான்)

வருத்தம்-

எதிர்பார்த்திருந்து வராமல் போன "வீடு" சுரேஸ்குமார், "இரவு வானம்" சுரேஷ், "ராஜப்பாட்டை" ராஜா, "தேன்சிட்டு" தேன்மொழி 

நேரமின்மை காரணமாய் விழா முடியும் முன்னரே கிளம்ப வேண்டியதானது..

இன்னும் இதுவரை சந்திக்காத, உரையாடாத எட்வின் ஐயா, ஹரணி ஐயா, நண்பர் ஜேகே... (பதிவர் சந்திப்புகளில் அது சாத்தியப்படாது )

வழக்கமாய் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தாலே போட்டோ போட்டு கமென்ட் போடுவார்கள்... கிளிஷேவாக இருந்தாலும் இருந்து தொலைக்கட்டும்... என் பங்கிற்கு நான் 

அடையார் அஜித்தும், ராமானுஜம் ஐயாவும்

சேட்டைக்காரனுடன்.... வேற வேற வேற....வேட்டைக்காரன்... 

பி.பி கள்... ஜாக்கி, கண்ணாடி போடாமல் சிபி, கேபிள்

அரசன், ஆரூர் மூனா, பிரபா, செல்வின்

"நீங்க என்ன ப்ளாக் வெச்சிருக்கீங்க" சம்பவிதிற்கு பின் அஞ்சாசிங்கம்

"வீட்டுக்காரம்மாவுக்கு ஒரு பார்சல் கட்டுய்யா"... 
ராஜுடன் பட்டிக்காட்டான் 

"யோவ்.. ஏன்யா இங்க வந்து...?" 
பட்டிகாட்டானிடம் மன்றாடும் மெட்ராஸ்பவன்


நாளைய இயக்குனர்ஸ்... 
அனந்து,கேபிள்

"யோவ்.. தமிழ்த்தாய் வாழ்த்த பாதியில மறந்துட்டேங்கறதுக்காக 
இப்புடி வெறும் இலைய போடறது எல்லாம் அநியாயம்யா.." - மதுமதி 

"சித்தப்பா... போட்டோ போட்டோ..." 
வீடு திரும்பல் with தமிழ்வாசி 

தென்றலின் கனவு நனவாகிறது...பட்டுக்கோட்டை to சேட்டை 
கூடவே கணக்காயன் ஐயாவும், 'தென்றல்' சசிகலாவும்

"எனக்கொரு உண்ம தெரிஞ்சாவனுஞ் சாமி..." 
ஆண்கள் கழிவறையில் எப்படி வந்தது இந்த கோபுரம் பூசுமஞ்சள் தூள்...


நான்கு சுவற்றிற்குள் நடந்த ஒரு அசம்பாவிதம் நாளை உலகம் முழுதும்... காத்திருங்கள்...நன்றியுடன்... சி.மயிலன்