சகித்தவர்கள்...

28 Jan 2012

இரவானவள்...

(18 + என்று இதற்கு சான்றிதழ் வழங்க தோன்றவில்லை..)  

அந்த பெட்டிக்கடையில் இருக்கும் நாளிதழ்களின் விளம்பர தலைப்புகளை பார்த்தால் எனக்கு வேடிக்கையாய்தான் இருக்கிறது...இப்படி ஒரு செய்தி.. "விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்.."..சிரித்துகொள்கிறேன்.. ஒருவேளை நானும் எனக்கான விலையை ஏற்றினால் என்னுடைய வாடிக்கையாளர்கள் நடுவீதியில் வந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும்..? நுகர்வோர் சங்கத்தில் எதிர்பார்த்த திருப்தி கிடைக்காத ஆண்கள் முறையிட்டால்? சிரிப்பை நிறுத்த முடியவில்லை...


எனக்கு பெயர் யார் வைத்தார்கள் என்று நினைவில்லை..பெரும்பாலானோர் 'ரேணுகா' என்று அழைப்பதால் அதுதான் என் பெயராக இருக்க முடியும்...வாடிக்கையாளர்களின் இலக்கியத்துவத்தை பொறுத்து 'வேசி', 'தாசி', 'பரத்தை' ...இப்படியும் சில முகவரிகள் எனக்கு உண்டு.. காக்கி சீருடைக்காரருக்கு காலையில் 'பாலியல் தொழிலாளி'.. இரவில், 'ரேணு'.. குட்டி சுவரில் உட்கார்ந்து உலக அறிவியல் விவாதிக்கும் மேதைகளுக்கு, 'ஐட்டம்'.. தெரு கடைசியில் மளிகை கடை வைத்திருப்பவரின் மனைவிக்கும் மற்றும் சில கற்புக்கரச கண்ணகிகளுக்கும், "தேவடியாள்" என்றழைப்பதில்தான் விருப்பம்... வயது இருபத்தியேழு முதல் முப்பத்துஒன்றுக்குள் ஏதோ ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.. தொழில்?...ஹ்ம்ம்..இன்னுமா தெரியவில்லை..

உலகின் எந்த ஒரு அயோக்கியதனமும் எனக்கு ஆச்சர்யம் தருவதில்லை..பழகிபோய்விட்டது என்று சொல்லிகொள்ளலாம்...என்னைபொருத்தவரை யோக்கியத்தனம் என்பது பால்வேறுபாடுகளை கடந்தது... "இவளெல்லாம் வாழ்கை தத்துவம் பேசுறா..எல்லாம் கலியுகம்.." என்று தோன்றுகிறதா? ஹ்ம்ம்..இருக்கும்...உங்களுக்கெல்லாம் "தேவடியாள்" என்பது திட்டுவதற்கு ஒரு கெட்டவார்த்தை..அவ்வளவே.."கொலைகாரா", "திருடா" என்றெல்லாம் திட்டினால் யாருக்கும் கோபமும் வருவதில்லை..

ஹ்ம்ம்..வெயில் வேறு இன்று அநியாயத்திற்கு, அதிகமாய் சுடுகிறது.. விலைவாசியின் சூட்டால் பலரால் அது கொஞ்சம் கவனிக்கப்படவில்லை போலும்.. காய்கறி வாங்கும்போது கடைக்காரர் கொஞ்சம் கையை தடவித்தான் பார்கிறார்.. பாவம்.. அவர் வயதிற்கு முடிந்தது அவ்வளவுதான்.. விலையிலும் கொஞ்சம் தள்ளுபடி கொடுக்கிறார்.. நியாயஸ்த்தன்.. "பொம்ம வாங்கிட்டு போ தாயி.. கொழந்தைக்கு", அந்த கிழவி ஏன் அப்படி சொன்னாள்? அவளுக்கு என்னைப்பற்றி தெரியாது போல.. நல்லவேளை, தாழ்வு மனப்பான்மையோடு இன்னொரு குழந்தை உலகில் உருவாக நான் காரணமாகவில்லை.. ஆனால் போனமுறை கருக்கலைக்க சென்ற போது அந்த டாக்டர் கொஞ்சம் மோசமாகத்தான் ஏசிவிட்டாள்..அடுத்தமுறை அவளிடம் செல்லபோவதில்லை..

எதிரில் வருவது சந்திரசேகர் மாதிரி தெரிகிறது.. அவரேதான்.. கொஞ்சம் அடிக்கடி வருபவர்தான்.. கல்லூரி பேராசிரியர் என்று சொன்னார்.. நம்பியிருக்கிறேன்.. தமிழ் பேராசியராய் இருக்கலாம்.. படுக்கையில் அவ்வபோது கவிதை பொழிவதும் உண்டு.. அதில் ஒன்றிரண்டு மட்டும் நினைவில் இருக்கிறது..

இராமர்கள் உன்னைப் 
புறக்கணிப்பதால்தானோ 
உன் இடுப்பெனும் 
வில் இன்னும் 
உடைபடவில்லை?
***********************
உன் இரவிக்கைக்கு 
வாஸ்து பார்த்த 
கிறுக்கு சோதிடன் யார்?
சன்னலை 
பின்புறம் வைத்து..

கூடவே அவரது மனைவியும் வருகிறாள் என்று நினைக்கிறேன்..மஞ்சள் நிற புடவையில் அழகாய்தான் இருக்கிறாள்..என்னைப் பார்த்ததும் நிச்சயம் மனுஷனுக்கு கை கால் உதற ஆரம்பிக்க போகிறது.. அட..ஆரம்பித்துவிட்டது.. காட்டிக்கொள்ளாமலும் கடந்து செல்ல முடியவில்லை.."ஹலோ.. ரே..ரேணுகா.. எங்க இந்த பக்கம்?".. கொஞ்சம் அவளிடம் திரும்பி, "என் கூட வொர்க் பண்றவங்க"... அடப்பாவி.. சிலேடையில் உண்மையை சொல்கிறான்.. அவளும் கொஞ்சம் மரியாதையாய் வணக்கம் வைத்தாள்..மனதுக்குள் சிரித்துகொண்டு தலையை ஆட்டி விடைபெற்று கொண்டோம்.. 

இன்னும் சில ஆண்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. மனோகருக்கு நிச்சயம் காலைபிடித்து விடவேண்டும்..வீட்டில் மனைவி அதுவும் செய்வது இல்லை போல.. பிரேம்குமார் கல்லூரி மாணவன்.. வரக்கூடாது என்று காட்டமாகவும் சொல்லிவிட்டேன்.. கேட்டால் 'டென்ஷன்', 'ஸ்ட்ரெஸ்' என்று எதாவது சொல்லிவிடுவான்.. சார்லஸ் ஒரு சேடிஸ்ட்.. பூட்ஸ் காலால் தொடவே அவனுக்கு பிடிக்கும்.. பணக்காரன்.. வாராத நாளிலும் கேட்டால் பணம் கிடைக்கும்.. விஜயசந்திரன் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள போவதாக ஒவ்வொரு முறையும் சத்தியம் செய்யும் ஒரு அரைகிறுக்கன்..  எங்கள் பகுதி சப்-இன்ஸ்பெக்டர் இனியன்.. பெயரில் மட்டும்.. அவனுக்காக நானும் புகை பிடிக்க வேண்டும்..மது அருந்தி நடனம் ஆட வேண்டும்.. சினிமாக்களில் கடைசி க்ளப்-டான்சுகளை இரசிக்கும் வில்லன் போல சோபாவில் உட்கார்ந்து திமிராய் இரசிப்பான்.. சில நேரங்களில் காசும் தரமாட்டான்.. என் மாரின் சிகரெட் வடுக்களுக்கு காரணகர்த்தா..

செல்போன் சிணுங்குகிறது...போக்குவரத்து சப்தத்தில் ஒன்றும் கேட்கபோவதில்லை... யார் அழைப்பது? இரவீந்திரன்.. கட் செய்துவிட்டேன்.. வீடு நெருங்கிவிட்டது.. சென்றதும் பேசிக்கொள்ளலாம்.. மளிகை கடையை தாண்டுகிறேன்.. வழக்கம் போல அவள் நாயைப் பார்ப்பது போல பார்க்கிறாள்.. வேறு தெருவில் இருந்திருந்தால் அவள் புருஷனைப் பற்றி கூட எனக்கு தெரிந்திருக்கும்...வீடு வந்துவிட்டது... டிவி ஓடிக்கொண்டே இருக்கிறது..காலையில் வெளியே செல்லும்போது மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்ததால் கவனிக்கவில்லை... இரவீந்திரனுக்கு ஃபோன் செய்யவேண்டும்.. 

"ஹலோ.. ஃபோன் பண்ணியிருந்தீங்க..?"

"ஆமா.. இல்ல.. சும்மாதான்.."

"சொல்லுங்க.. இன்னைக்கு வறீங்களா?"

"ஹ்ம்ம்.. மதியம்தான்... வேற ஏதும்..?"

"இல்ல.. வாங்க.. வேற யாரும் சொல்லல..."

இரவீந்திரன் கொஞ்சம் வித்தியாசமானவர்.. அதிகம் பேசமாட்டார்.. நடுவாந்திர வயது.. பெரும்பாலும் பகலில்தான் வருவார்.. குறிப்பாக சிகரட் பிடிக்கமாட்டார்.. 'அவள் விகடன்'  வாங்கிவந்து கொடுத்து படிக்க சொல்லுவார்.. சமைத்துவைக்க வேண்டும் எப்போதும்.. சைவப்பிரியர்.. கொஞ்சம் பேசலாம் என தோன்றும் மனிதர்களில் ஒருவர்..இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவார்.. சமையலைத் தொடங்க வேண்டும்..

காலிங் பெல் ஒலி.. அவர்தான்..

"வாங்க.. சமையகட்டுல இருந்தேன்.. அதான் தெறக்க நேரமாச்சு.. "

"பரவால்ல..யாரும் பாக்கல.."

"ரெண்டு நிமிஷம் ஒட்காருங்க...சாப்பாட்ட எறக்கி வெச்சிட்டு வந்துடறேன்.."

"அவசரமில்ல.. நிதானமா வா.."

டிவி பார்த்துகொண்டிருக்கிறார்.. டிஸ்கவரி சேனல்.. சமையல் முடிந்துவிட்டது.. முதலில் நானா? சமையலா? என்ன முடிவில் இருக்கிறார் என்று தெரியவில்லை..

"சாப்பாடு போடவா?"

"ஆறட்டும்..அப்றமா பாத்துக்கலாம்"

புரிந்துவிட்டது...பெட்ரூமிற்கு சென்று படுக்கையை சரி செய்கிறேன்.. காட்டன் புடவையை மாற்றிகொள்ளலாம்.. பட்டு புடவை அவருக்கு பிடிக்கும்.. அல்லது அவருடைய சட்டையை போட்டுக்கொள்ள வேண்டும்.. மாற்றி கொண்டிருக்கும் போதே உள்ளே வந்து விட்டார்... தாழிட்டுவிட்டு கண்ணாடியில் வந்து தலைவாரிகொள்கிறார்.. பகலில் விளக்கை அணைக்கிறார்.. சம்ப்ரதாயம் போல.. செல்போனில் இசைஞானி பாடல்களை ஒலிக்கசெய்கிறார்.. இரசனைக்காரர்.. அணுஅணுவாய் ஐந்து பாடல்கள் முடிந்துவிட்டது..

மீண்டும் காட்டன் சேலைக்கு வந்துவிட்டேன்..இரண்டு தட்டில் சாப்பாட்டை போட்டு கட்டிலில் இருந்தவருக்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டு நானும் சாப்பிட தொடங்கினேன்.. கொஞ்சம் வேகமாகத்தான் சாப்பிடுகிறார்.. பேசுவதாய் எண்ணம் இல்லை போலும்.. நானே தொடங்குகிறேன்..

"அட, மெதுவா சாப்புடுங்க.. காலேல்ல சாப்டலையா?"

"இல்ல.. நல்லா செஞ்சுருக்க..."

"ஹ்ம்ம்.. அவசரவசரமா செஞ்சது.. "

"ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி சாப்ட்டு.."

"உங்ககிட்ட ரொம்ப நாளா கேக்கணும்ன்னு நெனைக்கிற ஒன்னு.. உங்களுக்கு கொழந்தைங்க இருக்கா?"

"ஹ்ம்ம்.. ரெண்டு பசங்க.. ஏன்?"

"இல்ல..சும்மாதான்.. நீங்க இங்க வர்றது மட்டும் ஏதோ வித்தியாசமா தோணுது எனக்கு.."

என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் சாப்பிட தொடர்கிறார்..

"மத்தவனெல்லாம்.. என்ன ஒரு மெஷின் மாதிரிதான் நடத்துவானுங்க.. நீங்க கொஞ்சம் வித்தியாசம்தான் "

" எனக்கும் இங்க வந்துட்டு போனா கொஞ்சம் அமைதி கெடைக்குது.. ஏன்னு புரியல.. சில நேரங்கள்ல இனிமே போகக்கூடாதுன்னு நெனைப்பேன்.. "

"ஏன்? உங்க மனைவிக்கு துரோகம் பண்றதா தோணுதா?"

"ஹ்ம்ம்...அப்டியும் சொல்லலாம்.. இதெல்லாம் சுமதிக்கு தெரிஞ்சா.. யோசிச்சுக்கூட பாக்க முடியல..."

"கஷ்டந்தான்..."

"வெளியுலகம் ரொம்ப தெரியாம வளந்தவ.. இந்த ஊருக்கு ட்ரான்ஸ்வர் ஆகி வந்து ரெண்டு வருஷம் இங்க சுமதிய அழச்சுட்டே வரல..அப்பத்தான் உன்கிட்ட வர ஆரம்பிச்சேன்..."

"வேல பாக்குறாங்களா?"

"இல்ல இல்ல..திரும்பவும் சொந்த ஊருக்கே ட்ரான்ஸ்வர் வாங்கிக்கலாம்ன்னு அழைச்சுட்டு வரல.. ஆனா கெடைக்கல..அப்றம்தான் கூட்டிட்டு வந்தேன்..அவ்வளவு சீக்கிரம் யாரோடையும் பழகிட மாட்டா.. இன்னமும் இந்த ஊர்ல என்னையும் கொழந்தையும் தவிர யாரையும் தெரியாது.."

"......அப்டினா நீங்க செய்றது துரோகம்தான்.." 

"கிண்டல் பண்றியா?" என்று செல்லமாய் அடித்தார்...

சாப்பிட்டு முடித்ததும் இரண்டு தட்டுக்களையும் எடுத்து சென்று அடுப்பறையில் வைத்துவிட்டு திரும்பினேன்...

"அந்த பர்ஸ எடு.."

"அட.. பணமா? கெளம்பறப்ப வாங்கிக்கிறேன்...என்ன அவசரம்?"

"அதுக்கில்ல..எடு சொல்றேன்.."

மாத கடைசி என்றாலும் கொஞ்சம் கனமான பர்ஸ்தான்.. நிச்சயம் உள்ளே சில கிரெடிட்/டெபிட் கார்டுகள் இருக்கவேண்டும்...

"இந்தாங்க..."

"இங்க வா...இதுதான் சுமதி..."

கையில் வாங்கி பார்த்தேன்..புகைப்படத்தில் இருக்கும் கருஊதா புடவையில் காலையில் மஞ்சள் புடவையில் பார்த்ததைவிட கொஞ்சம் அழகாய்தான் இருந்தாள்... சிரித்துகொள்கிறேன்.. உலகின் எந்த ஒரு அயோக்கியதனமும் எனக்கு ஆச்சர்யம் தருவதில்லை..

முற்றும்..


..........................................................
இதற்கு முந்தைய குறுங்கதை...
..........................................................

21 Jan 2012

ஒரு காதலின் டைரி..
அண்ணா நகரிலுள்ள ஓர் ஆடம்பர காஃபி ஷாப்..முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் அவர்கள் இருவரையும் யாராலும் காதலர்களாக எண்ணிவிட முடியாது..சிலருக்கு அலுவலக நண்பர்களாக தெரியலாம்.. மற்றபடி, அவர்கள் அன்று கணவன் மனைவியாய் இருந்திருக்க வேண்டியவர்கள்..அவ்வளவே..

இருவரின் கோப்பையிலும் காஃபி பாதியாய் குறைந்திருந்தது..நிமிடங்கள் பலவற்றை மௌனம் விழுங்கிக்கொள்ள,அவன் எச்சிலை விழுங்கிக்கொண்டு பேச தொடங்கினான்..

"அப்றம்.." (எதுவும் பேச முடியாத நேரங்களில் மழுப்ப கிடைக்கும் ஒரு வார்த்தை..)

வந்தது முதல் அவன் கண்களை அப்போதுதான் நேரிடியாக பார்த்தாள்..நிதானிக்க முடிந்தது அவளால்... அதனால் பதிலேதும் இல்லை..இதே இடத்தில் ஆறு வருடங்களுக்கு முன்பு அவள்தான் நிறைய பேசியிருந்தாள்..

நினைவிருக்கிறது..கடையின் அமைப்பு அப்போது கொஞ்சம் சாதாரணமானதாய் இருக்கும்..இப்போது இவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் இடத்தில் அப்போது cash counter இருந்தது.. சர்வர்களில் பெண்களும் இப்போது உள்ளனர்.. ஏ.சி. இப்போதையவிட முன்பு நல்லாவே வேலை செய்தது...

ஆனால் இன்றுபோல் இல்லை.. அன்று அவள்தான் பேச்சைத் தொடங்கி இருந்தாள்..

"அப்றம்.."

"அப்றம்.. அப்றமென்ன? அதான் சொல்லவேண்டியது எல்லாத்தையும் நேத்து நைட்டே ஃபோன்ல சொல்லிட்டேனே.. வேறென்ன சொல்லணும் இப்போ?"

"ஹ்ம்ம்..நைஸ்..எப்போ அர்விந்த் உனக்கு இப்டி தோன ஆரம்பிச்சுது?"

"எப்டி..?"

"மை காட்(பல்லைக் கடித்துக்கொண்டு மனசுக்குள்..)....ஹ்ம்ம்..எதனால வேண்டாம்ன்னு நெனக்கிற? நா ஏற்கனவே கல்யாணம் ஆனவ.. அதானே..be frank.."

"............"

"பேசு அர்விந்த்..இங்க பாரு..ஏற்கனவே வாழ்க்கைல இந்த வயசுல எந்த ஒரு பொன்னும் படக்கூடாத வேதனை எல்லாத்தையும்..அனுபவிச்சுட்டேன்..என்னால தாங்கிக்க முடியும்..எதுனாலும் பட்டுன்னு வெளிப்படையா சொல்லிரு.."

"இது....... சரி வராது மீரா" 

"பட் ஒய்?"

"எத சொல்ல சொல்ற மீரா? ஒன்ற வருஷத்துக்கு முன்னாடி ஒனக்கு கல்யாணம் ஆனப்பவே எல்லாமே எனக்கு முடிஞ்சுப்போச்சுன்னு நெனச்சேன்...அதுக்கப்பறம் வாழ்க்கைல என்னனமோ நடந்துடுச்சு..ஒரு வழியா எல்லாத்தையும் மறந்துட்டு ஓரளவுக்கு எந்திரிச்சு நிக்கும்போதுதான்...நீ திரும்பவும் வந்த..."

"சோ...? நீ அனுபவிச்ச அந்த கஷ்டமெல்லாம் நா அனுபவிக்கலன்னு சொல்றியா..?"

"ஐயோ மீரா...ப்ளீஸ் மெதுவா பேசு..எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க..."

"கே....(கைக்குட்டை தேவைப்பட்டது..) பட் இந்த...ரெண்டு மாசம்? அவன் வேணாம்ன்னு நா வந்ததும் நீ என்ன ஏத்துக்கிட்டேல்ல?"

"ஹ்ம்ம்...அப்ப என் கண்ணுல நீ மட்டும்தான் தெரிஞ்ச...பட் இப்போ...."

"இப்போ உன் கண்ணுக்கு நீ மட்டும்தான் தெரியற..? am i correct?"

"ப்ளீஸ் மீரா.. please try to understand.. இங்க பாரு.. நீ ஒன்னும் என்கிட்டேந்து break-up ஆகி போயி அவன கல்யாணம் பண்ணிக்கல... ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு misunderstanding ஆரம்பிச்சுது.. பேசியிருந்தா சரி ஆகிருக்கும்..ஆனா அப்போ எனக்கு என்னோட family problem.. பேசுற நெலமைல நா இல்ல...பேசியிருக்கனும்"

"ஹ்ம்ம்.."

"ஒரு மாசம் கழிச்சு வந்த உன்னோட இன்விடேஷன்தான் உன்ன எனக்கு ஞாபக படுத்துச்சு.. இருக்குற கவலைல பத்தோட பதினொன்னாதான் அப்ப அது தெரிஞ்சுது... ஆனா மத்த ப்ரெச்சன
எல்லாம் சரியானதும்தான் நா உன்ன மிஸ் பண்ண ஆரம்பிச்சேன்.. ரொம்ப நொந்துட்டேன்.. பட் நீ திரும்பி வந்ததும் ஏதோ எழந்தது திரும்பி கெடச்ச சந்தோஷம்.."

"i know all these Arvind...பட் இப்ப என்ன ஆச்சு உனக்கு..?"

"இப்பதான் மீரா நம்மள சொசைட்டியோட சேத்து பாக்க ஆரம்பிச்சுருக்கேன்.. தப்பா தெரியுது... யாருமே இத அக்செப்ட் பண்ணமாட்டாங்க மீரா.."

"மத்தவங்கள விடு அர்விந்த்..நீ என்ன நெனைக்குற..? நா கல்யாணம் ஆனவன்னு உனக்கு இன்னைக்குதான் தெரியுமா? நா திரும்பி வந்ததுமே என்ன அவாய்ட் பண்ணிருக்கலாமே...இந்த ரெண்டு மாசம்..? ஏன் அர்விந்த்? "

"........."

"இல்ல நம்மள விட்டுட்டு போயி இன்னொருத்தன கட்டிக்கிட்டவதானேன்னு பழி வாங்க நெனச்சியா?"

"அய்யோ.. ப்ளீஸ் மீரா.."

"ஹே..நா அவன்க்கூட வாழ்ந்தது ஒரு பொய்யான வாழ்க்க அர்விந்த்..lots and lots of worries.. அவனப்பத்தி பேசக்கூட எனக்கு புடிக்கல.. உன்க்கூட அவன ஒவ்வொரு ஸ்டெப்லையும் கம்பேர் பண்ணி பாக்காம இருக்க முடியல..அதனாலையோ என்னமோ அவன சுத்தமாவே எனக்கு புடிக்கல.."

"......."

" என்னோட வாழ்க்கைல அந்த ஒரு வருஷம் மூணு மாசமும் ஒரு accident.. வீட்ல தங்கச்சிக்கு கல்யாண வயசு..நீயும் என்னைவிட்டு போயிட்ட... திரும்பி வருவேங்குற நம்பிக்க சுத்தமா இல்ல.. சோ, எனக்கு அப்போ வேற வழி இல்ல...என்னோட familyக்காக நா அதுக்கு ஒத்துகிட்டேன்..i had no other go.."

"தெரியும் மீரா"

"அப்றம் வேறென்ன அர்விந்த்..? ஏன் திடீர்னு...வேற எதாவது யோசிக்கிறியா? அவன்க்கூட...நான்....ஹ்ம்ம்? "

"ஹே..shut up idiot..."

"ப்ளீஸ் அர்விந்த்...புரிஞ்சுக்கோ...i know,u love me lots..பட்..ஏதோ..ஏதோ ஒன்னு உன்ன தடுக்குது....என்னன்னு சொல்லு அர்விந்த்..."

(கொஞ்சம் வேகத்துடன்..) "இதுல இதுக்கு மேல சொல்றதுக்கு என்ன இருக்கு மீரா? இந்த உலகத்துல இருக்குற கடைசி ரெண்டு பேர் நாம மட்டும்ன்னா தான் இது சாத்தியம்.. எந்த ஒரு மூணாவது மனுஷனும் இத ஏத்துக்கமாட்டான்... moreover என்னோட family ,என் தங்கச்சின்னு யோசிச்சா எனக்கு தலையே சுத்துது.. இது நிச்சயமா சரி வராது..."

"என்ன பத்தி யோசிக்கவே இல்லையா அர்விந்த்? you are rude.. இவ்ளோ selfish -ஆ பேசுற..?"

"YES....HAVE IT LIKE THAT...I AM SELFISH..." (மேஜையைத் தட்டி சொல்லிவிட்டு எழுந்து நடந்து சென்றான்...)

அவன் விலகி,சீற்றமாய் வெளியே சென்ற பாதையைமட்டும் வெறித்து அன்று அமர்ந்திருந்தாள்..இன்று இருவரும் அந்த பாதையை மௌனமாய் பார்த்துகொண்டிருந்தனர்..இரண்டு காஃபியும் காலியாகி இருந்தது... அவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்...

"அப்றம்.."

அவள் கொஞ்சம் ஆசுவாசபடுத்திகொண்டு பேசுவதற்கு தயாராகி இருந்தாள்...

"then.....how is life Arvind?"

"ஹ்ம்ம்..good..ஆறு வருஷம் எப்டி எப்டியோ போயிருச்சு..உன்ன திரும்பவும் மீட் பண்ணுவேன்னு நெனைக்கவே இல்ல..."

"ஹ்ம்ம்..ஏதோ..திடீர்ன்னு உன் மெயில் அட்ரஸ் கெடச்சது.. just like that.. mail பண்ணேன்..and we are back here now.." (மிகவும் மெலிதாய்தான் புன்னகைத்தாள்..)

"அப்றம்..." 

"சொல்லு அர்விந்த்...எதாவது சொல்லு...என்ன பண்ணே..? என்ன பண்றே? something like that.."

"ஹ்ம்ம்..என்ன பண்ணேன்..? என்னனமோ பண்ணேன்.. lifeல எந்திரிக்கவே முடியாத அளவுக்கு அடி மேல அடி.. அப்பாவோட health ,அவருக்கு ஸ்ட்ரோக் வந்தது உனக்கு தெரியாதுல்ல..,"

"ஹோ.. இப்ப எப்டி இருக்காரு..?"

"ஹ்ம்ம்..நடக்குராறு...அப்றம் பிருந்தா கல்யாண கடன், என்னோட பிசினஸ் லாஸ்.. எல்லாம் stabilse பண்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு...எல்லாத்தையும் தாண்டி உயிரோட இருக்கறதே பெருமையா இருக்கு.. பட் இப்போ பரவால்ல..ஹ்ம்ம்....ஆமா நீ?"

"நான்..? ஹ்ம்ம்..சிம்பிள்....HCL.. project leader...monotonous...but anyways,nice job...போயிட்டு இருக்கு..."
"ஹோ.. thats nice..."

"அம்மா எப்டி இருக்காங்க.. பிருந்தா இப்ப எங்க இருக்கா?......"
கேட்டுகொண்டே credit card ஐ பில் கொடுத்த சர்வரிடம் கொடுத்து அனுப்பினாள்...

"எல்லாரும் நல்லா இருக்காங்க..பிருந்தா இங்க சென்னைலதான் இருக்கா..அவ husband இங்கதான் real estates business..அவருக்கும் இப்பதான் கொஞ்சம் நல்லா போய்ட்டு இருக்கு"

"அப்றம் உன்னோட family..i mean your wife, கொழந்தைங்க...?"

அவனால் அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை..கொஞ்சம் நிதானித்து பேச தொடங்கினான்...

"ஹ்ம்ம்..எப்ப life ல எல்லாமே முடிஞ்சுடுச்சு நெனச்சேனோ அப்பதான் ஹரிணி வந்தா... எல்லாத்துலையும் தோத்துபோயி விரக்தில இருக்குற ஒருத்தன ஏத்துகிட்டு வாழ்றதுக்கு ஒரு தனி அழுத்தம் வேணும்...அவகிட்ட அது நெறையாவே உண்டு..இன்னைக்கு நான் நானா இருக்கேன்னா அதுக்கு முழு காரணமும் அவதான்..."

".......கொழந்தைங்க?"

"நாலு வருஷமாச்சு.. இன்னும் இல்ல....."

"ஹே..i am sorry.."

"...its ok.. எல்லாமே பழகிடுச்சு...பட் அதையும் அவ எப்டி தாங்கிக்கிட்டு இருக்கான்னுதான் தெரியல...வேற யாராலையும் இதெல்லாம் தாங்கிருக்க முடியுமான்னும் தெரியல....simply an angel"

சிறிது மௌனத்திற்கு பிறகு...  "........thats good"

"அப்றம் உன்னோட family..?"

credit card வந்துசேர்ந்தது...தலையை குனிந்து அதை handbagக்குள் வைத்துவிட்டு நிமிர்ந்து அவன் கண்ணோடு கண் நேரே சில நாழிகை பார்த்து...பொறுமையாய் அதே நேரம் தீர்க்கமாய் பதிலளித்தாள்...

"வேற யாராலையும் உன்ன என் அளவுக்கு நேசிக்க முடியுமான்னு தெரில அர்விந்த்...this is all i can say...and yes, i am still in love with u arvind"


மறுபடியும் மௌனம் நேரத்தை விழுங்க தொடங்கியது...  
அதே பாதையில் அவன் இப்போது கொஞ்சம் மெதுவாய் தளர்ந்துபோய் வெளியேறினான்.. அவள் ஏனோ அந்த பாதையை இம்முறை பார்க்கவில்லை...

முற்றும்..


*************************************************
இத படிச்சிங்களா இல்லையா?

19 Jan 2012

வள்ளுவர் Vs ஜொள்ளுவர்

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

             பொதுவா பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் உள்ள ப்ரெச்சன இருக்கே இது இன்னிக்கு நேத்து வந்ததா தெரியல..கே டிவில பழைய படமெல்லாம் பாக்கும் போது எனக்கு தோணுறது எல்லாம் ஒண்ணுதான்..கிராபிக்ஸ் அது இதுன்னு எத்தன கழுத வந்தாலும் காதலும் காதல் சார்ந்த பகுதிகளும் மட்டும் மாறவே மாறாது..அடிப்படை மனித உணர்வு என்று பெரிய மனுஷங்க சொல்றாங்க..ஆனா தமிழ் பேசற பல கோடி மக்களுக்கு பொதுவான பெரிய மனுஷருன்னா அது நம்ம தலைவர் வள்ளுவர்தானுங்க..


              தலைவருக்கு சின்ன வயசுலேந்தே எங்க எரியா இரசிகர் மன்ற தலைவரா இருந்தும் இதுவரைக்கும் அவரு நம்ம இளவயசு பசங்களுக்கு சொன்ன கருத்துக்கள நம்ம பதிவுல சொல்லாம இருக்கிறது தப்புதேன்..மனுஷன் ஒன்னேமுக்கால் அடில சொல்லியிருக்கிற ஒவ்வொரு கருத்தும் நெத்தியடி..ஆனா அவர் என்னதான் சொல்லியிருந்தாலும் இன்னைக்கு பசங்களுக்கு அது புரியற மாதிரி எடுத்து சொல்ல (பாப்பையாவா? அண்ணே பசங்க பாவம்ண்ணே..) புதுசா வந்திருக்கிறவர்தான் இந்த ஜொள்ளுவர்..சரி இன்னைக்கு பாடத்துக்கு போவோமா? எல்லாரும் லைன்ல வந்து பெஞ்சுல ஒக்காருங்க...
திரு.ஜொள்ளுவர் ஐயா..


பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை 
தன்நோய்க்குத் தானே மருந்து.

அப்டின்னா என்னன்னா தம்பீ.., உனக்கு சளி,ஜுரம்ன்னு வெச்சுக்க..என்ன செய்வ? டாக்டர பாக்காம நேரா மெடிக்கல் ஷாப்க்கு போயி ஒரு மாத்திரைய வாங்கி லபக்குவேல்ல..? அதே மாதிரி ஒனக்கு காதல் ஜுரம் வந்தாலும் பண்ணிடாத..கொஞ்சம் மெடிக்கல் ஷாப்லேந்து வெளில வந்து பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்க்கு போயி உனக்கு புடிச்ச பொண்ண பாரு...சரியாயிரும்...எலேய்..நம்புலே..


யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.

இந்த புள்ளைங்க இருக்கே செம்ம டஃப்ப கொடுக்குங்க..நீ பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு வெறிக்க வெறிக்க அந்த புள்ளைய பாத்தேன்னா,அது பாட்டுக்கு அதோட ஓடாத வாட்ச்ச பாக்கும்,எதித்தாப்ல மூடி இருக்கிற சலூன பாக்கும்,பூ விக்குற ஆயாவ பாக்கும்,தரைய பாக்கும்...ஆனா கடைசி வரைக்கும் உன்ன பாக்கவே பாக்காது..உடனே ஃபீல் ஆயிடாத..டக்குன்னு சுதாரிச்சுக்கிட்டு வேற எங்காவது பாரேன்..அந்த புள்ள உன்னைய பாக்க ஆரம்பிக்கும்..எப்பூடி..?ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் 
கூடியார் பெற்ற பயன் 

அப்பறம்  தம்பீ..லவ் செட்டாகி நல்லா போயிட்ருக்குன்னு வெச்சுக்க..அதுல ஒரு சுவாரஸ்யமே இருக்காது..நீ என்ன பண்ணனும்ன்னா,அப்பப்ப சின்னசின்னதா சண்ட போடணும்..முடிச்சுட்டு அப்டியே கொஞ்ச நேரம் கோவமா சீன் போடணும்..அதுக்கப்றம்,"ஹே, என் மேலதான்ப்பா தப்பு..ரியல்லி வெரி சாரி டா.." அப்டின்னு அந்தர் பல்டி அடிச்சேன்னு வையி..அவ்வளவுதேன்..உன்னோட ரேஞ்சே வேற அதுக்கப்பறம்..யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் 
யாரினும் யாரினும் என்று.

அதே மாதிரி...பேசும்போது ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்..ஒவ்வொரு வார்த்தையும் 'பீ கேர்ஃபுல்லா'தான் ரிலீஸ் பண்ணனும்..ஒரு பேச்சுக்கு,ஐஸ் வெக்கறதா நெனச்கிட்டு,நீ பாட்டுக்கு "உன்னோட காதல விட உலகத்துல சிறந்த காதலே இல்ல.." அப்டின்னு பிட்ட போட முயற்சி பண்ணேன்னு வையி, அடுத்த செகன்டே கேப்பா,"உன்னோட காதல்ன்னா? அப்ப நீ எத்தன பேர காதலிச்சி இருக்கே"ன்னு.. சோ,அலார்ட்டா இருக்கணும் தம்பீ...


இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் 
கண்நிறை நீர்கொண் டனள்.

முக்கியமா நீ கமல் மாதிரி பேசணும்..புரியாம பேசறத சொல்லல..நீ பாட்டுக்கு "இந்த சென்மத்துல நாம பிரியவே மாட்டோம்"ன்னு சொன்னேன்னா,உடனே அந்த புள்ள "ஓ"ன்னு அழ ஆரம்பிச்சு ரொமாண்டிக் சீன் தேவையில்லாம செண்டிமெண்ட் சீனாயிடும்..அந்த புள்ளையே அன்னலட்சுமி மாதிரி நூறு சென்மம் வேணும்ன்னு சாமிகிட்ட கேட்டாலும்,நீ விருமாண்டி கணக்கா வெறப்பா,"போதுமா?"ன்னு கேக்கணும்...என்ன புரியுதா?உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் 
புல்லாள் புலத்தக் கனள்.


அப்பறம் தேவையில்லாம வெட்டி சீன போட்டு மாட்டிக்காத..அந்த புள்ளைய பாத்ததும்,"ஹே, இப்பதான் உன்னபத்தி நெனச்சேன்..அதுக்குள்ள வந்து நிக்குற.." அப்படின்னு பீலா உட்டேன்னு வையி,உடனே அது,"இப்பதானா? அப்ப அதுக்கு முன்னாடி யார நெனச்ச?" அப்டின்னு கேட்டு உனக்கே ரிவீட் அடிக்கும்..


நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் 
யாருள்ளி நோக்கினீர் என்று.


முக்கியமா நேர்ல மீட் பண்ணும் போது இந்த சைலன்சர் எஃபெக்ட் மட்டும் போடாத..மௌனகுரு மாதிரி பேசாமலே அவளையே இரசிச்சிக்கிட்டு உட்காந்தேன்னா,சிம்பிளா ஒரே ஒரு கேள்விதான் கேப்பா,"என்ன அப்படி பாக்குற,வேற எவ கூடயாவது மனசுக்குள்ள என்ன கம்பேர் பண்ணி பாக்குறியா?"..ஸ்ஸ்ஸ்ஸபா தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

சும்மா எந்நேரமும் துப்பட்டாவ வெச்சு முக்காடு போட்டு வண்டில அந்த புள்ளைய கூட்டிட்டு சுத்தறதவிட,தப்பே செயலேன்னாலும் அந்த புள்ளைய கோவபடுத்தி சும்மா சின்னதா ஒரு சண்டைய போட்டுட்டு,அது உட்கார்ற பெஞ்சுக்கு எதிர் பெஞ்சுல உட்காந்து கண்ணோட கண்ணு மொறச்சு மொறச்சு பாக்குற சுகம் இருக்கே..அடாடாடா..


உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

சேட்டுவீட்டு கல்யாணத்துல போயி நல்லா வயிறுமுட்ட சாப்டறத விட,சாப்ட்டு முடிச்சிட்டு வெளில வந்து ஒரு பன்னீர்சோடாவ குடிச்சிட்டு விடற ஏப்பம் எவ்வளோ சுகமோ,அதேமாதிரிதான் சும்மா எந்நேரமும் கட்டிப்புடி வைத்தியம் பண்றத விட அப்பப்போ அந்த புள்ளைகிட்ட ஒரண்டை இழுக்க சுகமும்...என்ன..புரியுதா?


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

அதே நேரம் தம்பீ... நீ ஈகோ புடிச்ச கழுதயா இருக்கவே கூடாது..ஏன் சொல்றேன்னா...தெரியாத்தனமா அந்த புள்ளையோட ஒரு பெரிய சண்ட போட்டுடறன்னு வையி..வெறப்பா மொறப்பா நீ சுத்திக்கிட்டே இருக்கறதவிட..டப்புன்னு போயி நீயாவே சரண்டர் ஆயிடு... அப்டி செய்யறதால நீதான் தோத்தாங்குலின்னு நெனச்சுக்காதே..நீ சாரி சொன்னதும் செல்லமா ஒரு சின்ன அற அறஞ்சு அப்புடியே ஒரு உம்ம்மா கொடுத்துரும்..அப்போ நீதானே ஜெய்ச்ச கணக்காச்சு? என்ன நாஞ்சொல்றது? 


சரி..இன்னைக்கு கிளாஸ் போதும்...எல்லாரும் பஸ் ஸ்டாப்புக்கு..ச்சீ..வீட்டுக்கு கெளம்புங்க.. போறதுக்கு முன்னாடி கிளாஸ் எப்டி இருந்துச்சுன்னு மறக்காம ஒரு வார்த்த எழுதி கொடுத்துட்டு போங்க..
பின்குறிப்பு 1: "திருக்குறளை அசிங்கப்படுத்திட்டான்" அப்படின்னு யாரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துடாதீங்க...ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே 1330 குறளையும் ஒப்பிச்ச வாண்டுதானுங்க நானும்..வள்ளுவரின் வரிகள் எந்த காலத்துடனும் பொருந்தும் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியே இது...


பின்குறிப்பு 2: அப்பறம் நல்லா இருக்குன்னு சொன்னீங்கன்னா நம்ம ஜொள்ளுவர அப்பப்ப கூப்பிட்டு பசங்களுக்கு அறிவுர வழங்கலாமுங்க..என்ன சொல்றீங்க..?


என்றும் நன்றியுடன்...சி.மயிலன்

15 Jan 2012

யதேச்சையான எழுத்துகள் #5


அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

        வணக்கம்..அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.."இவன் ஒருத்தன்..பொங்கலும் அதுவுமா,இன்னும் சேவகூட கூவல..அதுக்குள்ள பதிவு போட வந்துட்டான்னு" என்று 'நண்பன்'கள் யாரும் திட்டவேண்டாம்..மூன்றாவது ஞாயிற்று கிழமை..நாங்க கடம தவற மாட்டோம்....ச்சொல்லிப்புட்டேன்...சரி வாங்க..சீக்கிரமா படிச்சுட்டு கெளம்பலாம்...

நமக்கு இரசிகைகள் இருக்க வேண்டியதுதான்...அதுக்குன்னு இப்புடியா? ஹிஹி..:)

# இளநிலை கல்லூரி நாட்களில் மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு இரயிலேறும் போதெல்லாம் அப்பா என் எதிர் படுக்கையில் இருப்பவரிடம்,"காலேல பையன எழுப்பிவிட்ருங்க.." என்று விண்ணப்பித்துவிடுவார்..(ஒரு முறை நான் மயிலாடுதுறையில் இறங்காமல் தூங்கிக்கொண்டே சென்று திருத்துறைப்பூண்டியில் இறங்கியதால் ஏற்பட்ட விளைவு அது)..அவ்வாறு அவர் கேட்பதை என் தன்மானம் (இருக்க கூடாதுதான்) அனுமதிப்பதில்லை.."எப்புடியா இருந்தாலும் ட்ரைன் சென்னையைத் தாண்டி போக போறதில்லப்பா..நா பாத்துக்குறேன்..நீங்க எறங்குங்க.." என்பது என் வாடிக்கையான பதில்..இதை ஒரு முறை கண்ட பெரியவர் ஒருவர்,அப்பாவை "நா பாத்துக்குறேன் சார்" என்று தேற்றி அனுப்பினார்..இரயில் புறப்பட்டதும் ஒரு ஜூ.வி யை எடுத்து கையில் வைத்த அந்த பெரியவர் வை.கோ வில் தொடங்கி, நந்திதா தாஸை தீண்டி, கங்குலியை கடித்து, ஜார்ஜ் புஷ்ஷையும் கடந்து என்னை கண் அயரசெய்தார்..வழக்கமாய் கனவில் வரும் அந்த மூன்றாவது பெஞ்ச் தோழி அன்றும் வந்தது நினைவில் இருக்கிறது..காலை தாம்பரம் இரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட எட்டு  மணியளவில் இரயில் நிலைய தொழிலாளி ஒருவர்,"இந்தாப்பா தம்பி, ட்ரைன் வந்து ரெண்டு மணி நேரமாவுவுது..எறங்கு எறங்கு.." என்று என்னை எழுப்பிவிட்டார்...கைப்பேசி சார்ஜ் இல்லாமல் உயிரற்று கிடந்தது..அழைக்க நிச்சயம் அப்பா பலமுறை முயற்சித்திருப்பார்..தொலைபேசி நிலையத்தை நோக்கி நடந்தபோது எனக்கு உரைத்ததெல்லாம்,"பெரியவர் ஏதோ பாடம் சொல்லி தந்துவிட்டார் " என்பதே..

# கூட்டம் இல்லாத சென்னை புறநகர் பேருந்து பயணங்கள் எல்லாமே கொஞ்சம் சுவாரஸ்யமானவைதான்..குறிப்பாக 15 B பயணங்கள்..கோயம்பேடு முதல் என் விடுதி இருக்கும் பாரிமுனை வரை அது ஓர் அலாதியான அனுபவம்.. பயணமொன்றில்,நிறுத்தம் கடந்த நூறு அடிக்கு அப்பால்,எம்ப்ராய்டரி போட்டும் ஆங்காங்கே கிழித்துவிடபட்டும் இருந்த பெல் பாட்டம் ஜீன்ஸ் அணிந்த ஒரு ஃபுட்-போர்ட் ரோமியோ திடீர் உதயமானார்..நான்கைந்து இருக்கைகள் இருந்தும் அவற்றை ஏளனம் செய்து, நடுத்துனரின் வசைகளை பெருமையுடன் ஏற்று, ஒரு கொரியன் இரக கைப்பேசியில் சென்னையின் போக்குவரத்து சப்தத்தையும் தாண்டி தளபதி பாடல்களை (மணிரத்தினம் தளபதி அல்ல) அலறவிட்டுக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தார்...ஒவ்வோர் நிறுத்ததிலும் இறங்கி ஏறினாரே தவிர இருக்கையில் வந்து அமரவில்லை..அருகில் இருந்த மைலாப்பூர்காரர்,"இவாளெல்லாம் இருந்து நாட்டுக்கு என்னத்த சாதிச்சிட போறாள் ..?" என்றதுபோல பேருந்தில் உள்ளவர் அனைவரும்  வெளிப்படையாய் ஏசும் அளவிற்கு அந்த ஹீரோவின் நடத்தை இருந்தாலும் நடைமேடையை ஒட்டிய கடைசிக்கு முதல் இருக்கையில், கொஞ்சம் மாநிறத்தில்,காதினிருகே திட்டுதிட்டாய் பவுடரும்,தலையினில் கனகாம்பர பூச்சரமும், கையில் ஒரு லாங்-சைஸ் நோட்டும் கொண்டிருந்த ஒரு வெள்ளந்தி பெண் மட்டும் அவனது கோமாளிதனங்களுக்கு தன் கீழ் உதட்டை மடக்கி கடித்து சிரித்துகொண்டிருந்தாள்...(# ரோமியோக்கள் பிறப்பதில்லை,உருவாக்கபடுகிறார்கள்..)

இரசித்த புகைப்படம்:

சேட்ட...


இரசித்த கவிதை:

தோழர் ஆர்.சி.மதிராஜ் கவிதைகளுள் ஒன்று...

கவனிக்கத் தவறிய அப்பா
---------------------------------------------------------
தாத்தா சொத்தென்று எதுவும் இல்லை
அப்பாவின் எழுபது வருட உழைப்புதான்
உருவாகி இருக்கிறது
வீடுகளாகவும் விளை நிலங்களாகவும்.

ஆறு பிள்ளைகளுக்கும்
ஆனது திருமணம்
ஏதும் பிரச்னையே இல்லை.

ஒரு சுபயோக சுபதினத்தில்
பைசா பாக்கி இல்லாமல்
பிரித்துக்கொண்டாயிற்று
சொத்துக்களையும்.

கடைசியாகத்தான் பேசிக்கொண்டோம்
அப்பா, அம்மா எங்கே இருப்பாங்க
யார் எவ்வளவு தரணும் என்று.

அப்பாவின் கண்கள்
கலங்கியதா என்றெல்லாம்
நான்
பார்க்கவில்லை!


இரசித்த ஒரு இடுகை:

            புத்தக கண்காட்சிக்கு செல்ல இயலவில்லை என்றாலும் சென்றிருந்த நண்பர்கள், சுஜாதா, கல்கி, ஜெயகாந்தன், வைரமுத்து, இறையன்பு, கோபிநாத், சில மருத்துவ இதழ்கள், காதல் கவிதை தொகுப்புகள் என பல்சுவைகளால் திணறடித்துவிட்டார்கள்.. எப்போதுமே சுஜாதா நமக்கு ஸ்பெஷல்தான்..தலைவரின் சிறுகதை தொகுப்புகள் நிறைய வாங்கிவந்ததில் நமக்கு தனி குஷி,,.வாசித்து சிலாகிக்கவே நேரமில்லாத இவ்வேளையில் நண்பர் chilled beers தான் வாசித்த கணையாழியின் கடைசிப்பக்கங்கள் என்ற புத்தகத்தில் அவர் இரசித்தவற்றை தொகுத்து ஓர் இடுகையை வரிக்கு வரி சுஜாதா சொட்ட சமர்ப்பித்துள்ளார்..சுஜாதா வெறியர்கள் கட்டாயம் சொடுக்க வேண்டிய இணைப்பு...அஞ்சலி அல்லது பவர்கட்  


பிரமித்த ஒரு பகிர்வு:

facebook தளத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த இந்த புகைப்படம்..

அடுத்த மார்கழி மாசத்துல நம்ம வீட்டு வாசல்லயும் முயற்சி பண்ணி பாத்துடவேண்டியதுதான்...


ஒன்னே ஒன்னு சொல்லனும்:

நண்பர் KS.சுரேஷ்குமார் கைவண்ணத்திற்கு நன்றிகள்..என்னுடைய வலைத்தளத்தில் மேலே இருக்கும் 'மயிலிறகு' தலைப்பின் புதிய தோற்றம் வடிவமைத்தமைக்கு..என்றும் நன்றியுடன்...சி.மயிலன்

---------------------------------------------------------------------------------------
வாசித்தீர்களா?
5 Jan 2012

எழுதக்கூடாத பதிவு...

அன்பிற்குரிய விருப்பதாரர்களே...

    வணக்கம்...தொடக்கத்தில் இருந்து மயிலிறகை தொடரும் நண்பர்களுக்கு தெரியும்..வாக்குவாதங்களை தவிர்ப்பதற்காகவே நான் விமர்சன கட்டுரைகளை தவிர்ப்பவன் என்று.. அப்படியிருக்கும் பட்சத்தில் இந்த பதிவினை நான் எழுதக்கூடாதுதான்...ஆனாலும் சூழ்நிலை பணிப்பதாலும்,இன்றைய தினம் பல வலைப்பூக்களிலும், facebook தளத்திலும் ஒரு மருத்துவர் கொல்லப்பட்டதை அணுகியிருக்கும் முறையில் நொந்தும் இந்த பதிவினை எழுதுகிறேன்...முதலில் களம்தான் என்ன?

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார் ஆறுமாத கர்ப்பிணி பெண்ணொருவர்..ஆறாவது மாதத்தில் வயிற்று வலி அதிமாகி மருத்துவரை அணுகும்போது அவரின் குழந்தை கருவிலேயே இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது..அதனால் அதனை உடனடியாக வெளியேற்றுவதன் அவசியத்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது...சிதைவுற்ற நிலையில் இருந்த குழந்தை அகற்ற முற்படும் வேலை நோயாளியின் நிலை மேலும் மோசமாகி உள்ளது..எனவே  இன்னும் அதிக வசதிகள் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நோயாளி அனுப்ப பட்டுள்ளார்...அங்கு சென்றும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்..

இதனை தொடர்ந்து சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழித்து அந்த நோயாளியின் கணவன் மருத்துவமனைக்கு தன் நண்பர்களுடன் அரிவாள்,கத்தி,நீள்வாள் சகிதம் சென்று அந்த பெண் மருத்துவரை கொடூரமாக வெட்டி கொன்றுள்ளான்..

மருத்துவர் சேதுலக்ஷ்மி 


இறந்த நோயாளி தன் கணவனுடன் 


கொலை நடந்த மருத்துவமனை அரை..கொலைசெய்யப்பட்ட மருத்துவர்..

இதில் புரிந்துகொள்ளவேண்டியவை:

1 கருவில் சிதைந்திருக்கும் குழந்தையை கட்டாயம் அகற்றி ஆகவேண்டும் 

2 அவ்வாறு செய்யாவிடின் உடம்பிற்குள்ளே விஷத்தை வைத்திருப்பதற்கு சமமாகும் 

3 அறுவை சிகிச்சையின் முடிவும் எத்தனை நாள் அக்குழந்தை கருவில் சிதைந்த நிலையில் இருந்தது என்பதை பொறுத்து மாறுபடும்..

4 இந்த அறுவை சிகிச்சை கருகலைப்பு சிகிச்சை அல்ல..நோயாளின் உயிர் காக்கும் பொருட்டு செய்யப்பட்ட சிகிச்சை..(அதாவது அவர் ஏற்கனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்)

விளைவு:

ஒட்டுமொத்த மருத்துவ துறையும் இந்த மிருக தனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது .. பணிநிறுத்தம் (அரசு மற்றும் தனியார் இரண்டிலும் ஒரே நாளில்) என்ற விபரீத முடிவு கூட எடுக்கப்படும் நிலையிருந்தது.. விளைவை முன்பே கணித்து காவல்துறை வழக்கத்தைவிட வேகமாய் அந்த கணவன் உற்பட ஆறுபேரை கைது செய்துள்ளது..இருந்த போதிலும் அரசை செவி சாய்க்க வைக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு மருத்துவமனைகளிலும் இன்று தனியார் மருத்துவமனைகளிலும் வேலை நிறுத்தம் மேற்கொள்கிறார்கள் மருத்துவர்கள்..அவசர சிகிச்சை தவிர்த்து மற்ற பணிகளுக்குத்தான் வேலை நிறுத்தம் என்றாலும் இது சமுதாய பார்வையில் சரியான போக்கு அல்ல என்பதும்,தனி ஒரு குறிக்கோளுக்காக அப்பாவிகளை துன்புறுத்துவது தீவிரவாத செயல் என்பதும் என் கருத்து..

எதற்காக நான் இந்த பதிவை எழுதுகிறேன்..?

இதில் அறிவியல் என்னவென்று உணராது உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்த அந்த பாமரனை கூட மன்னித்துவிடலாம் என்று தோன்றுகிறது சில படித்து மெத்த அறிவாளிகள் இன்று இந்த கொலையை செய்தித்தாளிலும் வலைகளிலும் விவாதிக்கும் முறையைக் காணும் போது..

 அவைகளுள் சில:

1) facebook  தளத்தில் ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார்:

"இன்றைய நிலையில் கார் இல்லாத மருத்துவரை பார்க்கமுடியுதா?அவ்வளவும் நோயாளிகளின் பணம்.."

அதற்கு பதில் இவ்வாறு ஒரு மருத்துவ நண்பர் எழதுகிறார்,

"உழைப்பிற்கு ஊதியம் வேண்டாமா?"

அதற்கு மேற்சொன்ன அந்த பதறு இவ்வாறு கேட்கிறது,

"உழைக்கிறார்களா?மம்பட்டி எடுத்தா?"


2 ) இன்னொருவர் இவ்வாறு கேட்கிறார்?

டாக்டர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதிலிருந்து இறங்கி கழிசடைகள் என்று நிரூபித்துக்கொண்டதால், வந்த வினை இது.

சிகிச்சை பலனின்றி இறந்துபோன கொலைகாரரின் மனைவி, சம்பந்தப்பட்ட டாக்டரிடமே தொடர்ந்து மருத்துவமும், ஆலோசனையும் பெற்று வந்திருக்கிறார்.

ஆனால், ஆறே மாதத்தில் குழந்தையும் இறந்து, பின்னர் தாயும் இறந்திருக்கிறார்.

இதற்கு யார் பொறுப்பு?


3) அதே விவாதத்தில்..இன்னொரு மாற்று சிந்தனையாளர்..

சரத் பவாரை அறைந்தால், கொண்டாடுகிறோம்.. உயிரை பறித்த மருத்துவரை கொன்றால்  குற்றமா.. ?

4 )இன்னொரு புலன் விசாரணை புத்திசாலி சொல்லியிருப்பது:

ஒரு தாயும் சேயும் ’சிகிச்சை பலனின்றி’ என்கிற பெயரில் வியாபாரம் ஒன்றிற்கு நடுவில் கொல்லபட்டிருக்கிறார்கள்” - 

5 )இன்னொரு இலக்கியவாதி கண்ணதாசனை மேற்கோள் காட்டுகிறார்...

குற்றம் புரிந்தவனும் நீதி கேட்கிறான் குற்றதினால் பாதிக்கபட்டவனும் நீதி கேட்கிறான் நீதி யாருக்கு என்பதை பணம் முடிவு செய்கிறது ....

6 ) இன்னொருவர்..

கொன்றிருக்க வேண்டாம்..ரெண்டு தட்டு தட்டி விட்ருக்கலாம்..


7 ) நண்பர் ஒருவரின் வலைப்பூவில் இந்த சம்பவத்திற்கான கருத்துரையில் ஒருவர் இவ்வாறு ஞானம் பேசுகிறார்...

நாம் உடல் நலம் குன்றி மருத்துவர்களிடம் செல்லும்பொழுதெல்லாம், அவர்கள்
தேவையான சிகிச்சை தருவதற்கு உதவும் பரிசோதனைகளைத் தான் மேற்கொள்வார்கள் என்று
நினைக்கிறோம். 

பிரபல மருத்துவர் பி. எம்.ஹெக்டே எழுதிய புத்தகம் ஒன்றில் அவர் குறிப்பிடுகையில், ஏறத்தாழ் 
90 சதவிகித பரிசோதனைகள் தேவையற்றவை என்றே சொல்கிறார்.*******************************************************************

இதுபோல எண்ணற்ற வாசகங்களை காலை முதல் கடந்து வந்துள்ளேன்..எனவேதான் இந்த விவாத பதிவினை எழுதுகிறேன்...

அதற்கு முன் கொல்லப்பட்ட அந்த மருத்துவரைப் பற்றி அவரை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் எழுதியிருந்த வரிகள்:
  • தூத்துக்குடி ஒரு மிக சிறந்த கனிவான மருத்துவரை இழந்துவிட்டது..
  • இன்றளவும் நோயாளிகளிடம் நாற்பது ரூபாய் கட்டணத்தைத் தாண்டி பெற்றதில்லை..
  • மருத்துவரின் கணவர் நேற்று இரவு தற்கொலை முயற்சி.. 


பொதுவாக மருத்துவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்..:
  • மருத்துவ படிப்பிற்கு கோடி கோடியாய் செலவு செய்ததால் மக்களை சுரண்டி சரி கட்டுகிறார்கள்...
  • தேவை இல்லாமல் இரத்த பரிசோதனைகளும், ஸ்கேன்களும் செய்து காசு பார்க்கிறார்கள்..
  • அலட்சியமான சிகிச்சைகளால் நோயாளியை சாகடிக்கிறார்கள்...


இதில் அறிய வேண்டியது என்ன?

மருத்துவம் சினிமாக்களிலும் பிற ஊடகங்களிலும் காட்டப்படுவது போல பெரும் பொருட்செலவில் கற்கும் கல்வியல்ல...என் MBBS படிப்பிற்கு நான்காண்டுகட்கும் சேர்த்து நான் செலவிட்ட ஒட்டுமொத்த தொகை இருபத்தி ஐயாயிரத்திற்கு குறைவே..(4500 + 9200 +4200 +4800 முறையே) தனியார் கல்லூரிகளில் பயிலும் இருபது விழுக்காட்டிற்கும் கம்மியானவர்களே கோடிகளில் பயில்கிறார்கள்..

"நிர்ணய கட்டணம் வசூலிக்கிறார்கள்" என்று கேட்பவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான், 
"ஒரு ஆட்டோ ஓட்டும் தோழரோ, முடி திருத்தும் தோழரோ விலை நிர்ணயித்தால் ஒப்புக்கொள்ளும் நீங்கள் இதை மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள்? தன்னுடைய சிகிச்சைக்கு ஒரு மருத்துவர் விலை நிர்ணயிக்க கூடாதா?"பத்து நிமிஷம்தான் பாக்குறான்..அதுக்குபோய் நூறு ரூபாயா?" என்று வக்கனைகாட்டுபவர்களிடம் நான் கேட்பது,"முகத்தில் மாவு தடவி கண்களில் வெள்ளரிக்காய் வைத்துவிட்டு நீங்கள் அழகாகிவிட்டதாய் நம்பவைப்பவருக்கு  யோசிக்காமல் ஆயிரம் ரூபாய் எப்படி உங்களால் கொடுக்க முடிகிறது?"
"தேவை இல்லாமல் ஸ்கேனும் இரத்த பரிசோதனைகளும் செய்கிறார்கள்..."-கூட்டத்திடம்,.தேவை இல்லாமல் எந்த ஒரு இரத்த பரிசோதனையும் செய்ய படுவதில்லை..தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் அதே பரிசோதனைகள்தான் (சமயங்களில் அதிகமாகவே) அரசு மருத்துவமனைகளிலும் செய்கிறோம்..ஆனால் அப்போதெல்லாம் யாரும் முகம் சுளிப்பதில்லையே ஏன்?உங்களுக்கு பரிசோதனை எவ்வளவு வேண்டுமானாலும் செய்துகொள்ள சம்மதம்..ஆனால் உங்கள் உடல் நலனிற்காக செலவு செய்ய மட்டும் மனது வலிக்கிறது...
முதல் நாள் சினிமாவிற்கு ஐநூறு ரூபாய், மது,புகை என்று எதற்கெல்லாமோ வாரி இறைக்கும் உங்களின் பணத்தை உங்களுக்குகாக செலவிட அழுகிறீர்கள்..அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளியாக வந்து இருக்கையில் அமரும் முன்னரே,"வயித்துவலியா இருக்கு..ஒரு ஸ்கேன் பண்ணா நல்லார்க்கும்..",என்று தாமாகவே முன்வரும் நீங்கள் அதையே ஒரு தனியார் மருத்துவர் பணித்தால் கோபம் பொத்துக்கொள்கிறது..உங்களின் எண்ணம் "ஆடம்பர செலவு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்,அனால் மருத்துவம் மட்டும் இலவசமாய்தான் பார்க்கவேண்டும்" என்பதே..

கார்பரேட் மருத்துவமனைகளை குற்றம் சொல்லும் மக்களை பார்த்து எனது நண்பர் சுந்தரபாண்டியன் அவர்கள் facebook தளத்தில் கேட்பது,
/// "ஏஜண்ட்களும்,அப்பல்லோக்களும் நாங்களும் அறிவோம்.10 க்கு 10 அறையில் காய்ச்சலுக்கு மாத்திரை தரும் மருத்துவர்களை நீங்கள் தான் புறக்கணிக்கின்றீர்கள்.5 தள கட்டிடம்,ஏ.சி அரைகள்,மொசைக் தரைகள் போன்ற பிரமாண்டங்களுக்கு நீங்கள் தான் மயங்குகின்றீர்கள்.அரசு மருத்துவமனையில் பணி செய்யும் அதே மருத்துவர்கள் தான் அங்கும் பணி செய்கிறார்கள்.உங்களை அரசு மருத்துவமனைக்கு செல்லச் சொன்னால் போவீர்களா? சத்தியமாய் வரமாட்டிர்கள்.ஊசி போடாத,குளுக்கோஸ் ஏற்றாத மருத்துவரை நீங்கள் மருத்துவராகவே பார்ப்பதில்லையே.. கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு கும்பல் கும்பலாக செல்வது நீங்கள் தான் மருத்துவர்கள் அல்ல" ///

நோயாளி இறந்தாலே அது மருத்துவரின் அலட்சியம் என்று எப்படி சொல்ல முடிகிறது..அந்தந்த நோயின் தன்மையும் அந்த நோயாளின் அப்போதைய நிலையும் மட்டுமே மரணங்களை நிர்ணயிப்பது..இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தும் சில நேரங்களில் உறவினர்களே 'காரியத்தை முடித்துகொடுங்கள்' என்று கேட்டும் கடைசிவரை போராடி பார்க்கும் மருத்துவர்களே அதிகம்.."என் புருசன் செத்துட்டான் ன்னு அந்த டாக்டர் சாதாரணமா சொல்லிட்டு போறானே..வெளங்குவானா?",குடிபோதையில் பைக் மரத்தில் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே இறந்திருந்த ஒரு தியாகியின் மனைவி என்னைப் பார்த்து சொன்ன வரிகள் இவை...அவளுடன் சேர்ந்து நானும் ஒப்பாரி வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பாள் போலும்..மருத்துவமனைகளில் நடக்கும் மரணங்களில் மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்படும் மரணம் ஆயிரத்திற்கு ஒன்று இருக்கத்தான் செய்கிறது..ஆனால் நடக்கும் ஒவ்வோர் மரணத்திற்கும் மருத்துவர்களை வார்த்தைகளால் வசைபாடி செல்லும் சமுதாயமே இது..இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசம் ஏதுமில்லை..அவர்களைப் பொறுத்தவரை மருத்துவர்கள்  
  • பரிசோதனைகள் செய்யவேண்டும் ஆனால் காசு வாங்க கூடாது..
  • அவர்கள் எதிர்பார்துவரும் சிகிச்சையையே செய்ய வேண்டும் 
  • நோயாளி எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் செத்துவிட கூடாது 
  • அப்படி தவறி மரணம் நிகழ்ந்தால் மருத்துவரை தகாத வார்த்தைகளால் திட்டலாம்,ரெண்டு தட்டு தட்டலாம்,கொஞ்சம் கடுப்பானால் கொலைகூட செய்யலாம்..


இதில் முக்கிய குற்றவாளி யார்? 

ஒரே ஒருவர் மட்டுமே என் கண்ணில் தெரிகிறார்..
பொறுப்புடன் செயல் படவேண்டிய ஆனால் செயல் படாத ஊடகங்கள்...

"பெண்களை ஆபாச வீடியோ எடுக்கும் டாக்டர் பிரகாஷ், கிட்னி திருடும் டாக்டர், அம்பத்தூரில் இருபது போலி டாக்டர்கள் கைது, நர்சுடன் ஜல்சா நிலையில் டாக்டர், பள்ளியில் பயிலும் மகனை அறுவை சிகிச்சை செய்ய சொன்ன டாக்டர்,வேலூரில் அரசு பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர் நாள்வரை பொதுமக்கள் வலைத்துப்பிடிதார்கள்" என்பது போன்ற விளம்பரம் தேடும் செய்திகளை முதற்பக்க கொட்டை எழுத்துக்களிலும், "இலவச கண் சிகிச்சை முகாம், தமிழக மருத்துவர் சாதனை, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் பலருக்கு மறுவாழ்வு" போன்ற செய்திகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்களே தேடினால் கூட கிடைக்காத அளவிற்கு ஐந்தாம் பக்க கடைசியில், சினேகாவின் தொப்புள் காட்டும் படத்திற்கு பக்கவாட்டில் புதைக்க பட்டிருக்கும்...வாரம் தவறாமல் டாக்டர் ஜோக்குகள் வெளியிடுவதில் விகடனும் விதி விலக்கல்ல...

மருத்துவ துரையின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பிற்கு அனுபவத்தினாலான நேரடி காரணம் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவானதே..மற்றவை ஊடகங்களால் ஊதி ஊதி உண்டாக்க பட்டவையே...

பத்திரிக்கைகளைவிட இன்னும் பொறுப்புடன் இருக்க வேண்டிய சினிமா இயக்குனர்கள் இன்னும் கீழ் தரம்..குறிப்பாக இரண்டு வெற்றி படங்களின் காட்சிகள்...
1 ) முதலாவதாக இலஞ்சம் வாங்கும் ஒரு மருத்துவரை தோலுரிக்க நினைத்த நேர்மைசாலி யோக்கியர் ஷங்கர் அவர்கள்..இந்தியன் திரைபடத்தில் பணம் தரவில்லை என்பதற்காக ஒரு தீக்காயம் கொண்ட இளம்பெண்ணை நிர்வாணமான நிலையில் மழையில் தள்ளிவிட்டு அதனால் அவள் உயிரிழப்பது போல ஒரு காட்சி..
இத்தனை வக்கிரமாக ஷங்கரால் யோசித்திருக்க முடியுமே எந்த ஒரு மருத்துவராலும் நினைத்துக்கூட பார்த்திட முடியாத காட்சி அது..அதே கருத்தை அவர் வேறு விதமாக சொல்லியிருக்கலாம்..இதை பார்க்கும் மக்களுக்கு மருத்துவ துறை ஒட்டு மொத்தத்தின் மீதும் வரும் வெறுப்பிற்கு யார் காரணம்?

2) இரண்டாவதாக நமக்கு தமிழன் என்ற திமிரை வரவைத்து கலைஞர் பேரனுக்கு கல்லா கட்டிய ஏ.ஆர்.முருகதாஸ் தனது முந்தைய படைப்பான 'இரமணா'வில் அமைத்திருந்த ஒரு மருத்துவமனை காட்சி..இறந்த உடலை வைத்து மருத்துவர்கள் நாடகமாடி காசு பார்ப்பதுபோல சிந்தித்து இருந்தார்...இந்த காட்சியின் பாதிப்பு இன்றளவும் நோயாளிகளிடம் நான் பார்கிறேன்..ஒரு மாதத்திற்கு முன்பு கோமா நிலையில் உள்ள நோயாளியின் உறவினரிடம்,அவர் இறக்கும் தருவாயில் இருக்கிறார் என்பதை விவரிக்க முற்படும் போது,"சார்,அவன் செத்துபோயி நாலு மணி நேரமாகுது..சும்மா பேசிட்டு இருக்காம பாடிய கொடுங்க சார்..இதெல்லாம் நாங்க இரமணா படத்துலையே பாத்துட்டோம்" என்றான் குடிபோதையில்...இதற்கு சிந்தனையாளர் முருகதாஸ் தரும் விளக்கம்,"உலகில் ஏதோ மூலையில் இத்தகைய சம்பவங்கள் உண்மையில் நடக்கத்தான் செய்கிறது.."என்பது.. என்னுடைய சந்தேகம் "உண்மையில் நடக்கும் சம்பவம் எதுவாயினும் அது ஏற்படுத்தும் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் அதை காட்சிப்படுத்தி விடலாமா?அவர் வீட்டு பெண் அவருடைய நண்பருடன் படுத்திருந்தால் அது உண்மை என்று தெரிந்தால் 'கணவர்களே உஷார்' என்று கருத்து சொல்லி அந்த வீடியோவையும் வெளியிடுவாரா?"

(யதார்த்தமாக கதை சொல்ல தெரியாததால் பேரரசு மற்றும் பிரபுதேவா போன்ற தொலைநோக்கு சிந்தனையாளர்களின் (முறையே) திருப்பதி மற்றும் போக்கிரி படங்களில் வரும் காட்சிகள் மக்களை முழுவதுமாய் சென்றடையவில்லை என்றாலும் அவைகளும் கண்டிக்க தக்கவையே)

மேலே குறிப்பிட பட்டுள்ள மருத்துவர் கொலையை ஆதரித்தும் 'இது ஒரு பாடம்' என்பது போலும் ஒரு விளம்பர புகழ் பெற்ற ஆங்கில நாளிதழிலில் எழுதியுள்ளான் ஒரு சமூக அக்கறை இல்லாத கபோதி..அவனுக்கும் அவனைப் போன்றோருக்கும் சொல்லும் கருத்தின் நேர்த்தியில் கவனமில்லை..அவனுக்கு தேவையெல்லாம் அதிக வாசகர்களை அந்த செய்தி தவறாயினும் அதைப் படிக்க வைக்க வேண்டும் என்பதே..என்னை பொறுத்த வரை உடலை நிர்வாணமாக்கி விளம்பரத்திற்கு காட்டும் அழகியை விட இவன் அசிங்கமானவனே...மேலும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ததும் பாய்ந்துகொண்டு தலையங்கம் எழுதும் தினமணி உயிர்காக்கும் பணியில் இருந்த மருத்துவர் கொல்லப்பட்டபோது யார் முதுகை சொரிந்து கொண்டிருந்தது..

இறுதியாக இங்கே நான் சொல்ல விரும்புவதெல்லாம் மூன்றுதான்:

1) மருத்துவர்கள் தவறுகட்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவே..(காரணம் அவர்களும் சராசரி மனிதர்களே..)

2) பத்து விழுக்காடே உள்ள புல்லுருவிகள்,அரசு பணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் அக்கறை காட்டும் அயோக்கியர்கள் மற்றும் போலிகளால் மீதி தொண்ணூறு விழுக்காடினரையும் தூற்றுவது அறியாமையே..

3) உங்கள் உடல் நலனிற்காக நீங்கள் செலவிட தயார் இல்லையெனில் நீங்கள் அரசு மருத்துவமனைகளை நிச்சயம் அணுக வேண்டும்..மிக தரமான மருத்துவ சேவை பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது..அப்படி நீங்கள் அணுகமுடியாத அவல நிலையில் அரசு மருத்துவமனைகள் தரம் குறைவாக உள்ளன என்றால் அதற்காக நீங்கள் வசைபாட வேண்டியது அரசையே தவிர மருத்துவரை அல்ல..


பின்குறிப்பு 1: 
இத்தனை நாட்களாக தங்களை வருட முயன்ற மயிலிறகு இம்முறை நெருடி இருக்கலாம்..உண்மையை உரைப்பதற்கு நான் வருத்தப்படுவதில்லை..

பின்குறிப்பு 2:
இந்த பதிவை எழுதிய என்னையும் மருத்துவனாய் மட்டும் பார்க்காமல் அருள்கூர்ந்து ஒரு மனிதனாய் பார்க்கவும்..அப்போதே இந்த கட்டுரையின் அர்த்தம் உங்களுக்கு புரியும்..

பின்குறிப்பு 3:
இந்த பதிவினை முழுவதுமாய் வாசித்தவர்கள் மட்டும் கருத்துரை இடவும்.. தங்களின் வருகையை மட்டும் பதிவு செய்யும் டெம்ப்ளேட் பின்னூட்டங்களை இந்த பதிவின் கீழ் தயவுசெய்து தவிர்க்கவும்...

நன்றியுடன்...சி.மயிலன்

1 Jan 2012

யதேச்சையான எழுத்துகள் #4

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

          வணக்கமும்,புத்தாண்டு வாழ்த்துக்களும்... தொண்ணூறு நண்பர்கள்,முக்கி திணறி ஐம்பது பதிவுகள்,இவைகளால் ஒரு இதமான மனநிறைவு-இவற்றுடன் புத்தாண்டில் காலடி வைக்கிறது மயிலிறகு..முதல் நாளே ஞாயிற்று கிழமையாய் போக கொண்டாட்டகளுக்கு நடுவே அகவவேண்டிய கட்டாயத்தில் முதற்பதிவை எழுதுகிறேன்...

பில்லாக்கு மட்டும் அந்த இடம் எழுதியா வெச்சுருக்கு..:))


# பயிற்சி மருத்துவனாய் பணியேற்ற முதல் நாள் முடநீக்கியல் துறையில் தொடர்ச்சியாக 48 மணி நேர பணி நிர்ணயிக்கப்பட்டது..காலையிலேயே இரயில் விபத்தில் மிக கோரமாக அடிப்பட்டு பல எலும்புகள் நொறுங்கிய நிலையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்..வயது 55 இருக்கும்..ஏற்கனவே சர்க்கரை மற்றும் சிறுநீரக கோளாறு வேறு உண்டாம் அவருக்கு..பேராசியர்கள் பணித்தபடி அவருக்கு வெவ்வேறு இரத்த பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளவேன்டியிருந்தது..மதிய உணவிற்கு நேரம் இல்லாததால் மாலை சில ரொட்டிகள் மட்டும் வயிற்றுக்கு ஈயப்பட்டது..ஆனாலும் முதல்நாள் ஆர்வமிகுதியில் பசி தெரியவில்லை..மணிக்கொரு முறையேனும் அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு பணித்தபடி இரத்த பரிசோதனை செய்யும்போதும் அவரின் மனைவி எந்த ஒரு உணர்ச்சியும் முகத்தில் காட்டாமலும் வார்த்தை ஏதும் பேசாமலும் உறைந்து இருந்தார்..சிகிச்சை பலனின்றி மாலை ஏழு மணியளவில் அந்த நோயாளி இறந்துவிட்டார்..அதை முன்பே கணிக்கும் பக்குவம் அப்போதைக்கு இல்லாததால் அங்கிருந்த மருத்துவர்களில் எனக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தது..அதுவரை பேசாமல் நின்றிருந்த அவர் மனைவி ஒப்பாரியை இப்படிதான் ஆரம்பித்தார்,"இரத்தத்த உறிஞ்சு உறிஞ்சே இந்த ஆள கொன்னுப்புட்டானே..." என்று அவர் என்னை நோக்கி தலையில் அடித்துக்கொள்ள,காலையில் இருந்து ஒளிந்திருந்த பசி வலியாய் வயிற்றில் தெரிந்தது...

# முதற்மாத சம்பளம் வாங்கிய நாளில் (அட stipendதாங்க..) வீட்டில் உள்ளவர்வர்களுக்கு துணிமணிகள் வாங்கலாம் என்று சென்னையில் உள்ள அந்த  ஆறடுக்கு ஆடம்பர ஆடைமாளிகைக்கு சென்றிருந்தேன்..அம்மாவிற்கு புடவை எடுத்துக்கொண்டிருக்கும் போது சுற்றியிலும் கண்களை மேயவிடும்போதுதான் சில 30-40 வயது பெண்கள் என்னையே "இவனுக்கு இங்க என்ன வேல?" என்ற தொனியில் பார்ப்பது புரிந்தது..புடவையைக் கடந்து அக்காவிற்கு சுடிதார் எடுக்கும் பிரிவிற்கு சென்றால் 18-25 வயது ஃபிகர்கள் மத்தியில் கூனிகுருகி ஒரு பணிப்பெண்ணை அணுகி "காட்டன் சுடிதார் எங்க இருக்கும்?" என்றதற்கு அவள் ஒரு மார்க்கமாய் சிரித்துக்கொண்டு ஒரு அழகான பணிப்பெண்ணை நோக்கி விரலை நீட்டினாள்..ஆச்சர்ய பரிசாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆலோசனை தோழி ஒருவளிடம் கேட்கவேண்டிய கட்டாயம் வேறு ..தொலைப்பேசியில் தோழி சொல்லும் சுடிதார் நுணுக்கங்களை விவரித்தால் அந்த அழகியும்,அருகில் இருந்த சில வாடிக்கையாள ஃபிகர்களும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்..ஒரு வழியாய் சுடிதாரை எடுத்துக்கொண்டு வெளியேறும்போதுதான் உள்ளுணர்வு "தனியாக சென்று ஒரு ஆண்மகன் சுடிதார் வாங்கினால் ,கடிதம் எழுதி வைக்காமல் செய்யும் தற்கொலை போல அதற்கு ஆயிரம் காரணங்கள் உணரப்படும்", என்று ஓர் ஓரமாய் உரைத்தது..


இரசித்த புகைப்படம்:

பள்ளிப்பருவ கோடை விடுமுறை நினைவுகள்..


இரசித்த கவிதை:

தோழர் கே.எஸ்.சுரேஷ் குமார் தன்னுடைய "வீடு" வலைப்பூவில் கசிந்துருகியிருந்த, முதல் காதல் என்ற உணர்ச்சிப்பெருக்கு...

[தோழர் philosophy பிரபாகரன் கவனத்திற்கு: பாஸு,அங்கேயும் காஜல் படம்தான்..ஹி ஹி..(எப்புடியோ கோத்துவிட்டாச்சு..) ]


இரசித்த இடுகை:

மீண்டும் ஐயா இரா.எட்வின் அவர்களின் இடுகைகளில் ஒன்றான .கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி .. சற்றே நீண்ட பதிவு எனினும் ஒவ்வோர் வரியும் ஆணித்தரம்..குறிப்பாக ஐயா அப்துல் கலாம் அவர்களை அவர் தோலுரிக்கும் வரிகளில் அத்தனை நேர்த்தி..கட்டாயம் இணைப்பை சொடுக்கி வாசியுங்கள்..

இரசித்த பகிர்வு:

facebook தளத்தில் தோழர் ஒருவர் பகிர்ந்திருந்த இந்த ஓர் எழிற்படம்..

'தல'மகள்..

கடந்த ஆண்டின் நன்மைகள் இவ்வாண்டிலும் தொடர வாழ்த்துக்கள்..

நன்றியுடன்... சி.மயிலன்