சகித்தவர்கள்...

20 Mar 2012

அந்த கிராமத்து செம்மண் சாலையில்...

இடைவெளி 
பல வருடம் கழித்து 
சொந்த கிராமத்திற்கு 
சென்றிருந்த பொழுதொன்றில்..

சிற்றுந்தில் இருந்து 
இறங்கியதும் 
அந்த பழைய செம்மண் சாலை 
தார் கம்பளம் விரித்து வரவேற்றது..
நடக்கலாகினேன்.. 

போர்செட்டு தண்ணீர் 
வாய்க்கால் வரப்பென இருந்த 
விளைநிலங்கள் பல 
மாடி வீடுகளைத் 
தாங்கி நின்றன..

சிறுவயதில் தாத்தா
தோளில் ஏறிச்சென்று 
தேநீர் அருந்தும் 
'மணி'கடை இப்போது 
மளிகை கடையாகிவிட்டது..

தேன்மிட்டாய் 
ஹார்லிக்ஸ் மிட்டாய் 
இலந்தவடை விற்கும் 
பாப்பாத்தி கிழவியை 
ஹை-ஸ்கூல் வாசலில் 
காணவில்லை...இறந்திருக்கலாம்...


அரைக்கால் சட்டையுடன் 
பார்த்த நண்பர்கள் 
அடர்மீசை, கரை வேஷ்டி 
துபாய் சென்ட் என 
வேறொரு வாசத்தில் இருந்தனர்..

கொடிமரத்து தெருமுனையில் 
மரத்தடியில் முடி திருத்தும்
'பக்கிரி'அண்ணன் 
பக்கிரி சலூன் 
ஆரம்பித்துள்ளார்..

வீரனார் கோவிலுக்கு 
வடக்கே இருக்கும் 
நாவல்மரத்தைக் காட்டி 
பெருசுகள் சொல்லியிருந்த 
முனிக்கதைகள் இப்போது 
சிரிப்பை வரவைத்தது..

குளித்தபின் 
துவட்டிய துண்டால் 
மீன் பிடித்து விளையாடிய 
குளத்தில் இன்று 
மீனல்ல..நீர்க்கூட இல்லை..

        தேடாமலே
        மாற்றங்கள் கண்டுப்பிடித்து
        கொண்டிருந்த மனதிற்கு..

வயதிற்கு வந்திருந்த 
அடையாளம் தவிர்த்து 
எவ்வளவு தேடியும் 
எந்த மாற்றமும் 
காணமுடியவில்லை..

வீட்டை நெருங்கியதும், 
எனைக்கண்டு 
"அத்தான்" என்று 
ஓடிவந்து கட்டிக்கொண்ட 
வெள்ளந்தி அத்தைமகளிடம் மட்டும்..


(புகைப்படம்- பிரபா ஒயின்ஷாப் 19032012 உபயம் )


15 Mar 2012

அடையாளம் தொலைத்து...அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

        [மீண்டும் பதிவுகளிட தொடங்கும் போது, எழுதாமல் இருந்த இடைவெளியில் நண்பர்கள் எச்சரித்து இருந்தது நினைவில் இருந்து உறுத்தியது..இடைவெளி விட்டால் பின்தொடர்பவர்கள் குறையலாம் என்று சொல்லியிருந்தார்கள்.. ஆனால் திரும்பியதும் எழுதிய முதல் பதிவிற்கு (நீயும் நானும்..கொஞ்சம் மழையும்) கிடைத்த அன்பில் நெகிழ்கிறேன்..நன்றி நண்பர்களே..]


       சமீபத்தில் நான் கடந்துவந்த இரு சம்பவங்கள் (அதிசயமாய்) கொஞ்சம் யோசிக்கத்தான் வைத்துவிட்டது..

சம்பவம் #1 :

        வங்கியொன்றிற்கு "net banking" குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள சென்றிருந்தேன்... வாசலின் அருகே இருந்த ஊழியரிடம் யாரை அணுக வேண்டும் என்று விசாரித்த போது மேலாளர் அறையை நோக்கி விரலை மட்டும் நீட்டினார்..வார்த்தை ஏதும் இல்லை..மேலாளர் சினிமாவிலோ விளம்பரங்களிலோ வருபவரை போல இல்லாமல் சட்டையை 'tuck in' செய்யாமல் மிக சாதாரணமாய் இருந்தார்...பார்க்க மட்டும்.. பென்சிலை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு தாளில் 'டிக்' செய்து கொண்டிருந்தவர் தலையை நிமிராமல் 'என்ன?' என்பது போல புருவம் உயர்த்தினார்.. 'சார், net banking..." என்று நான் இழுப்பதற்குள்..பென்சில் அறையின் கண்ணாடிவழியே வேறொரு counterஐ காட்டியது.. ஒரு "thank u" சொல்வதற்குள் மீண்டும் டிக் செய்ய ஆரம்பித்திருந்தார்.. 


        அவர் காட்டிய பகுதியில் ஒரு பெண் பணக்கட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தாள்.. அவள் நெற்றியின் சிறு சந்தனக்கீற்றை பார்த்ததும் கொஞ்சம் இலகுவான மனது, தலைவகுட்டில் இருந்த குங்குமத்தைப் பார்த்ததும் இறுகிப்போனது..இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த பணத்தையும் எண்ணுவதைப் போல முகத்தை சலிப்பாய் வைத்துக் கொண்டாள்..சில நிமிடங்கள் கடந்து,"உங்களுக்கு...?"என்றாள்.. மறுபடியும் அவளிடமும் நான் இழுக்க..'இங்க யாரு வர சொன்னாங்க..? மேனேஜர்ட்டையே clarify பண்ணிருக்கலாமே..அங்கேயே போய் கேளுங்க.." என்று அவள் சொல்லிமுடிக்கும் முன்பே எனக்கு எரிச்சல் வந்திருந்தது..


      மீண்டும் அந்த கண்ணாடி அறைக்குள் சென்று அந்த கண்ணாடிக்காரரி(னி)டம், "சார், but அவங்க இங்க கேக்க சொல்றாங்க..." என்றதும், "அவங்க section பக்கத்துல net banking பத்தின brochure இருக்கும்..போய் எடுத்து பாத்துக்கோங்க.." என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தார்..கொஞ்சம் நிதானித்துவிட்டு வெளியே வந்து அவ்வாறு எந்த brochure-உம் அங்கு இல்லாத வெறுப்புடன் மீண்டும் கொஞ்சம் வேகமாய்தான் உள்ளே நுழைந்தேன்..கதவின் 'க்ரீச்'சில் அவர் நிமிர்ந்ததும் "அங்க அப்படி ஏதும் இல்ல.."என்றேன்.."அந்த section ல உள்ளவங்ககிட்டயே கேளுங்க..."என்று அவர் பிதற்றுவதற்குள், "சார்..அங்க கேட்டும்... இல்லேன்னா?" என்று 'அன்பே சிவம்' கமல் போல நிதானமாக கோபப்பட்டேன்..கொஞ்சம் தீர்க்கமாய் "என்னவா இருக்கீங்க..?" என்றார்.. "டாக்டர்.. ஏன்?"


      அதன் பிறகு அவர்(ன்) உதிர்த்த வார்த்தைகள்தான் இப்போது கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.. "கிளினிக் லாம் வந்தா பேஷண்ட்ட எப்படி அலைய வைக்குறீங்க...அப்படி நெனச்சுக்கோங்க..."


சம்பவம் #2 :


       சென்னையில் இருந்த காலங்களில் எப்போதும் வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதும், சாலை போக்குவரத்து விதிகளுக்கு உரிய அனைத்து தாள்களின் நகலையும் வாகனத்திலேயே வைத்திருப்பதும் வழக்கம்..காரணம் அங்கே பரிசோதனை அடிக்கடி (சமையங்களில் சிக்னலுக்கு சிக்னல்) நடத்தப்படும்.. தஞ்சையைப் பொறுத்தவரை பெரும்பாலும் போக்குவரத்து காவல் அதிகாரியையே பார்த்ததில்லை..தலைக்கவசம் அணியும் பழக்கத்தை விடுத்து வருடங்கள்  இரண்டு ஆகிவிட்டது..வாகன காப்பீடு புதுப்பிக்கப்படவில்லை.. சட்டங்களைக் கொண்டு பயமுறுத்தவில்லை என்றால் அலட்சிய/மெத்தன குற்றங்கள் செய்யும் தொண்ணூறு சதவிகித மனிதர்களில் நானும் ஒருவனே..


       ஒரு நாள் இரவு பதினொரு மணியளவில்,சாலையில் விரைந்து கொண்டு இருக்கும்போது இரண்டு அதிகாரிகள் மடக்கி வழிமறித்தார்கள்..ஒருவர் வண்டி சாவியை திருகி எடுத்துக்கொண்டு ஓரங்கட்ட சொன்னார்.. நான் அதனை செய்வதற்குள் மற்றவர், "பாக்காம, வண்டி நம்பர் சொல்லுங்க" என்றார்.. சொன்னேன்.. திருட்டு பைக்கா என்று கண்டுபிடிக்கிறார்களாம்.. இரண்டு வருடங்கள் நான் கேட்டிராத வார்த்தைகளை நினைவுப்படுத்தினார்கள்.. "லைசன்ஸ்...ஆர்.சி.புக்....இன்சூரன்ஸ்...." என்று அவர்கள் ஒவ்வொன்றாக சொல்ல,லைசன்ஸ் மட்டும் பர்சில் இருப்பது நினைவு வந்து எடுத்துக்கொடுத்தேன்..அதில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் திருட்டு லைசன்ஸ் என்று அவர்களுக்கு தோன்றினால் கூட ஆச்சர்யமில்லை.. 


         "ஹ்ம்ம்..மத்ததெல்லாம்..?" என்றதும், "சாரி சார்..கொண்டுவரல.." என்ற உடனடி பொய்யை சொல்லிவைத்தேன்.. (பழைய நகல்கள்  எங்கே இருக்கிறது என்றே அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்துதான் கண்டுப்பிடித்தேன்..) 


         "எந்த ஊரு registration இது..?" (இதுவரை இல்லாத ஒரு மாற்றம் அவர்கள் பேச்சில் தெரிந்தது...)


         "மயிலாடுதுறை சார்.." (கொஞ்சம் பவ்யமாக..)


         "இங்க எங்க தங்கியிருக்கீங்க..என்ன வேல பாக்குறீங்க?"


         "இங்கதான் GH ல..டாக்டரா இருக்கேன்.."


        "சார்..முன்னாடியே சொல்லக்கூடாதா..? கெளம்புங்க சார்.." அவர் சொல்லும் போதே அடுத்தவர் சாவியை கையில் தந்துவிட்டார்..


        "ரொம்ப தேங்க்ஸ் சார்.."


        "பரவால்ல சார்.. இதுக்கூட செய்யமாட்டோமா..? கெளம்புங்க சார்.." முகம் நிறைய சிரிப்புடன் சொன்னார்.. 


         சம்பவங்கள் இரண்டையும் அசைபோட விழைகையில்...இரண்டிலும் ஒரு துறையின் மீதுள்ள வெறுப்போ அல்லது நன்மதிப்போ தான் என மீது திணிக்கப்பட்டதே தவிர வேறொன்றும் நடந்துவிடவில்லை..அவர்களுக்கும் எனக்கும் இடையில் இதற்கு முன் தனிப்பட்ட முறையில் கசப்போ நல்லுணர்வோ ஏற்பட்டதில்லை.. முதலாமானவர் யாரை பழி தீர்க்கிறார்..?இரண்டாமானவர் யாருக்கு சலாம் போடுகிறார்..? இரண்டிற்குமே நான் உரிமையானவன் இல்லையே.. சாவியை திருப்பியளித்து என்னை அவர் வழியனுப்பிய போது அருகில் பிடிப்பட்டு இருந்த மற்ற மூன்று வாகன உரிமையாளர்கள் பார்வையாலேயே என்னைக் கொஞ்சம் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்த தவறவில்லை...


         ஒரு தொழிலைக் கொண்டு ஒருவருக்கு ஒரு முத்திரை குத்துவதே சாதீயத்தின் அடிப்படை.. அதை நாம் இவ்வளவு வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறோமா? இது பகுத்தறிவு சிந்தனை என்பதெல்லாம் இல்லை.. பள்ளியில் படிக்கும் வரை நமக்கென்றே இருந்த அடையாளங்களை ஒரு தொழில் சார்ந்த கல்வியைத் தேர்ந்தெடுக்கும் போதே கொஞ்சமாய்  தொலைத்துவிடுகிறோம்.. கல்வி முடித்து அதற்கு சம்பதமாகவோ இல்லாமலோ ஒரு தொழிலைத் தொடங்கி இந்த சமுதாய சந்தைக்குள் நுழையும்போது ஒட்டு மொத்த தனி மனித அடையாளத்தையும் இழக்கிறோம்.. இந்த நிலை பொது சமுதாயத்தில் மட்டுமில்லை..என்னுடன் பள்ளியில் எட்டு வருடங்கள் ஒன்றாக படித்த நண்பன் ஒருவன்,நீண்ட நாட்களுக்கு பிறகு facebook உதவியுடன் கண்டுபிடித்து உரையாட முற்படும்போது,அவனிடம் இருந்து வந்த முதல் வரி..


          "hi mayilan,
           hru?
           shall i call u with 'da'? "


      அவ்வளவு நெருங்கி பழகிய நண்பன் என்னுடைய பழைய அடையாளங்களை ஒரே கேள்வியில் கிழித்துவிட்டு எதற்கோ ஒரு புது போர்வையை போர்த்த விழைகிறான்.. 
       இன்று நாம் அனைவரும் உண்மையான நாமாகவே உணரப்படுவதில்லை.. எங்கோ ஏதோ வாழ்வியலுக்கான ஒரு தேடலில் நாம் கடந்து வந்த வழிகளில் நமக்கான அடையாளங்களை தொலைத்துவிட்டு, நாம் மேற்கொள்ளும் கல்வியோ, செய்யும் தொழிலோ தரும் ஒரு போர்வையுடன் அடுத்தவர்கள் கண்ணில் மந்தை மந்தைகளாக தெரிகிறோம்.. எப்பேர்ப்பட்ட போர்வை நம்மை வகை படுத்தினாலும், நகையுணர்வு, முன்கோபம், ஆணவம், பொறாமையுணர்வு, அன்புள்ளம்...போன்ற பல கலவையான நமக்கே உரித்தான அடையாளங்களைத் தொலைத்து நிற்பதில் இன்றைய சூழலில் நாம் அனைவரும் நிர்வானமானவர்களே...


நன்றியுடன்..சி.மயிலன்

7 Mar 2012

நீயும் நானும் கொஞ்சம் மழையும்..சைக்கிள் ரிக்ஷா 
தார்ப்பாய் ஒழுகும் போது
"ஏ..இந்த பக்கம் சாரல் அடிக்குதுடா..
நா அந்த பக்கம் ஒக்காந்துக்கவா?" 
என்று கெ(கொ)ஞ்சி 
சன்னமாக நனைத்துவிடுவாய்..

பள்ளிவளாகத்தில் ஓரமாய் 
மழைநீர் தேங்கியிருக்க 
என் நான்கு-கோடு நோட்டு முழுதும் 
உனக்கான கப்பல்களாக மாறிக்கொண்டிருக்க,
"உன்ன மிஸ் அடிக்கபோறாங்க" 
என்று சொல்லிக்கொண்டே கப்பல்விடுவாய்...

அடைமழை பொழியும் 
நாளொன்றில் அதிகாலை 
அலாரம்போல தொலைப்பேசிடுவாய்,
"நா ஸ்கூலுக்கு போகல..
நீ..?" நான் பதில் சொல்வதற்குள்,
"நீயும் போகாத டா.."

கோடை விடுமுறை பிரிவில் 
சொந்த ஊருக்கு செல்லும் நீ 
"எங்க ஊர்ல மழ பெய்துடா..அங்க?..."
என்றெனை காத்திருப்பில் 
ஏங்கவைப்பாய்,.. 
(மழைக்காக அல்ல..)

பருவம் எய்திய பின்னான 
மழை பருவங்களில் 
உன் துப்பட்டாவின் தலை துவட்டலுக்கென்றே
மழை நின்றால் வழியில் 
மரத்தடியில் காத்திருந்து,
தொடர்ந்ததும் பயணத்தை தொடர்ந்திருக்கிறேன்.. 

வாகனத்தில் என் பின்னமர்ந்து 
பறவை போல் காற்றில் கை விரித்து 
ஊசி ஊசியாய் தூறல் விழும் பொழுதொன்றில் 
"வேகமா ஒட்டு...இன்னும் " என 
நீ உசுப்பியதன் விளைவாய் 
கீழே விழுந்து காயங்கண்டு சிரித்திருக்கிறோம்..  

இப்போதெல்லாம் மழையின் அறிகுறியிலேயே
ஏனோ நான் தலைமறைவானாலும்
என் முனங்கால் தழும்பை 
பார்க்க தூண்டி ஒரு கணம்- மெலிதாய் 
புன்னகைக்கதான் செய்துவிடுகிறது
உன்னுடன் நனைந்த அந்த 
மழைகளின் வாசம்....


----------------------------------------------------------------------------------

காரணம் சொல்லாமல் சென்ற நான் காரணமின்றி திரும்பியிருக்கிறேன்..இடைப்பட்ட நாட்களில் மின்னஞ்சலிலும்,வலைப்பூவிலும்,தொலைப்பேசியிலும் நண்பர்களின் தொடர் அன்பில் உண்மையில் நெகிழ்ந்துதான் போய்விட்டேன்...அனைவருக்கும் நன்றி.. முன்பு போல தொடர்ந்து தொல்லை செய்யாமல், மாதம் ஓரிரு பதிவுகள் மட்டும் எழுத முயல்கிறேன்..

நன்றியுடன்...சி.மயிலன்
---------------------------------------------------------------------------------