சகித்தவர்கள்...

30 May 2012

ஆண்மை தவறின்... (18+)தனக்கு சிறுநீர் கழிக்கும் குழாயை மாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவரை பார்க்கிறான் ஜெயச்சந்திரன். எதுவும் பேசவில்லை அவரிடம்.. இப்போதில்லை. கடந்த மூன்று நாட்களாகவே அவரிடம் பேசுவதில்லை..


"என்ன டல்லா இருக்கீங்க? சாப்டீங்களா காலைல?"


"ஹ்ம்ம்..ஆச்சு"


"மனசுதான் முக்கியம் இப்போ.. சந்தோஷமா இருந்தாலே சீக்கிரம் improvement இருக்கும்...ஏற்கனவே சொன்ன மாதிரி அப்பப்ப கொஞ்சம் கூட இருக்கவங்கள புரட்டிவிட சொல்லுங்க... முதுகுல bedsore வர ஆரம்பிக்குது..."


அவர் சொல்லி முடித்து சென்றதும் அவன் வெறுமையில் புன்னகைக்கிறான்.. சந்தோஷமாய் இருப்பது.. எப்படி சாத்தியம்..? அகிலாவைத் திரும்பி பார்த்து கேட்கிறான், "உன்னால சந்தோஷமா இருக்க முடியுதா?" அவள் ஏதும் சொல்லாமல் அவன் தலையைக் கோதி விடுகிறாள்.. முகத்தை மறுபுறம் திருப்பிக்கொள்கிறான்.. அவளுக்கு கண்ணீர் கரையைக் கடக்கிறது...


திருமணம் முடிந்து முழுதாய் மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு ஆறு வாரங்கள் ஆகிவிட்டன.. கட்டிடப் பணி மேற்பார்வையாளன். இரண்டாவது மாடியின் சாரம் சறுக்கியதால் தண்டுவடத்தில் அடிப்பட்டு படுக்கையாகி போய்விட்டான்... இரு கால்களும் உணர்ச்சியற்று செயலிழந்து கிடக்கிறது.. வாட்டர் பெட்டில் படுத்திருக்கிறான்.. காலில் கொசு கடித்தால் அகிலா அடிப்பாள்.. இவன் பார்த்துக்கொண்டு மட்டுமிருப்பான்.. ஸ்க்ரீன் வைத்து உடம்பை நித்தமும் சுத்தம் செய்து விடுகிறாள்.. ஒவ்வொரு முறை அவனது வயிற்றை, தொடைகளை, உறுப்பை சுத்தம் செய்த பின் அவளறியாமல் உறுப்பைத் தொட்டு பார்க்கிறான்.. விறைப்பு இல்லை.. எண்ணம் இருக்கிறது.. அகிலாவைத் தொட வேண்டும்.. முதலிரவு அன்று அவள் சொன்னதைப் போல முத்தமிட வேண்டும்.. மனதால் புழுங்குகிறான்.. அவளுக்கு தெரியாமல் அழுதுவிடுவதும் உண்டு...


சந்தோஷமாக இருக்க சொல்லிவிட்டு போகிறார் டாக்டர்.. மனைவியை சந்தோஷமாக வைத்துகொள்ள முடியாத தன்னுடைய இயலாமை அவனை கொஞ்சம் கொஞ்சமாய் அரிக்கத் தொடங்கிவிட்டது.. முன்பெல்லாம் அகிலா இல்லாத நேரங்களில் டாக்டர் வரும்போது கேட்பதுண்டு.. "சார்.. நான் ஆயுசுக்கும் impotent தானா?" அறிவியலை சொல்லி குழப்பாமல் ஆறுதல் சொல்லும் அவருடைய பதிலில் அவனுக்கு நாட்டமில்லை.. வார கணக்கில் மருத்துவமனையில் இருப்பதால் பார்க்கவரும் உறவினரின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது.. அப்பாவியாய் அவளிடம் கேட்பான், "இன்னைக்கு ஏன் யாரும் பாக்க வரல?" ஏதோ ஒரு பொய்யை சொல்லி அவளும் அவனை தேற்றிவைப்பாள்..
பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணம்.. கலயாணத்திற்கு முன்பு அதிகம் பேசியதில்லை.. இங்கே அகிலாவைப் பற்றி நிச்சயம் சொல்லவேண்டும்.. சற்றே நல்ல உயரம், மாநிறம், நல்ல சுருட்டை முடி , சேலை கட்டி நின்றால் என்னைப் பார் என்று திமிரும் அழகு.. கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு பெற்றோரின் விருப்பப்படி மணவாசம் வந்துவிட்டாள்... ஜெயச்சந்திரன் தாயில்லா பிள்ளை என்பதாலோ என்னவோ திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில் அவனது உலகம் இவளை மட்டுமே சுற்ற தொடங்கிவிட்டது... பணியில் இருக்கும் போது கூட மணிக்கு ஒரு முறை தொலைப்பேசிடுவான்.. அதற்கு பொதுவாய் சொல்லப்படும் "புது பொண்டாட்டி" என்பதைத் தாண்டி ஒரு பற்றுகோடு இருக்கத்தான் செய்தது...


மாமியாரும் மாமனாரும் வந்திருக்கிறார்கள்.. பார்த்த நொடியே உடைந்து அழ தொடங்கிவிட்டான்.. இதற்காகவே சமீப நாட்களாய் அவர்கள் வருவதை குறைத்துகொண்டுவிட்டார்கள்... அவர்கள் அகிலாவை அழைத்து தனிமையில் என்ன சொன்னாலும் குற்ற உணர்ச்சியிலோ, இயலாமையிலோ, சமயங்களில் பயத்திலோ வரும் அந்த மன குமுறலுடன் போராடும் வேதனையில் சில கணம் மரித்து பிழைப்பான்... இன்றும் அது நடக்கிறது.. அவனுக்கு கத்திவிட வேண்டும் போல இருக்கிறது, "அப்படி என்ன என்கிட்ட மறைக்கிறீங்க?" என்றோ, "இவன்கூட எப்புடி இனிமே குடும்பம் நடத்த போற?ன்னு கேக்குறீங்களா?" என்றோ, "அவளுக்கு வேற கல்யாணம் பண்ண போறீங்களா?" என்றோ ஏதோ ஒன்று கத்தவேண்டும் அவனுக்கு... முன்பெல்லாம் "அப்படியிருக்காது" என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொள்வான்.. இப்போது குறிப்பாக இன்று அப்படி நினைத்து தன்னை தானே தேற்றிக்கொள்ள முடியவில்லை.. கழுத்தை உயர்த்தி அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை எக்கி எக்கி பார்க்கிறான்.. இடுப்பை உயர்த்த முடியவில்லை.. கண்களை மூடி தேங்கியிருந்த கண்ணீரை அப்புற படுத்திகொண்டு சாய்கிறான்..அவர்கள் சென்றுவிட்ட பின்னர் விட்டத்தை வெறித்தபடியே படுத்திருந்த அவனிடம் வந்து, "எதாவது சாப்டறீங்களா? பழம் நறுக்கி தரவா?" இவ்வாறாக என்னனவோ கேட்டுகொண்டிருக்கிறாள் அகிலா. பதில் ஏதும் இல்லை... மேலே கை வைக்கிறாள், "உனக்கு வேற மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டாங்களா? என் என்கிட்டே மறைக்குரே? சொல்லு..." என்று அவன் நிறுத்தும் முன் தரையில் உட்கார்ந்து தேம்ப ஆரம்பித்து விட்டாள்.. மணி கணக்கில் பரவி கிடந்த மௌனத்திற்கு பிறகு சோற்றையும் இரசத்தையும் பிணைந்துவந்து அவனிடம் நீட்டினாள்.. முகத்தை திருப்பி கொண்டவனின் அருகில் அமர்ந்து ஊட்டிவிட தொடங்கினாள்..


நிதானமாக அவன் "நா கேட்டதுக்கு நீ பதில் சொல்லலையே" என்றதும் அதிர்ந்து போனாள்..


"உங்களுக்கு ஏன் இப்பிடியெல்லாம் தோணுது.. செலவுக்கு பணம்தான் கொடுக்க வந்தாங்க..."


"அப்போ இனிமே நான் ஒதவாக்கர... பைசா புண்ணியம் இல்லாதவன்..."


"என்ன ஆச்சு உங்களுக்கு? இன்னும் கொஞ்ச நாள்ல சரியாயிரும்... ஏன் இப்புடி உங்கள நீங்களே கொழப்பிக்கிறீங்க? "


"சரி சொல்லு.. காலத்துக்கும் இப்புடியே நா மொடமா கெடந்தா?..." என்றவனின் வாயை அவசரமாய் பொத்திவிட்டு அழத் தொடங்கிவிட்டாள்.. அவன் மீண்டும் விட்டத்தை வெறிக்க தொடங்கியிருந்தான்...


நான்கைந்து ஆரஞ்சு பழம், அவற்றை ஜூஸ் ஆக்கப்போகும் ஒரு பிளாஸ்டிக் திருகி, பாதி காலியாகி இருந்த ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில், கட்டிலின் மேல் விளிம்பில் ஒரு நீல அட்டையில் புதிய ஏற்பாடு புத்தகம், கீழே ஒரு bed pan... முதல் கொஞ்ச நாட்கள் டாக்டர் ஊசி போடும்போது "முருகா" எனும் அவனது அலறல் இப்போது "ஏசப்பா"வாக மாறியுள்ளது...நீண்ட நாளேய மருத்துவமனை இருப்பின் அடையாளங்கள் எல்லாம் அப்படியே இருந்தது அவனை சுற்றியும்... அவனிடமும்... யோசனைகள், பயங்கள், சந்தேகங்கள்....முக்கியமாய் எல்லாம் சேர்ந்த குழப்பங்கள்..."காலத்துக்கும் எனக்கு கால் வராம போயிருமா? அப்பா வேற முடியாம கெடக்குறாரு.. யாரு, எத வெச்சு மீதி வாழ்க்கைய ஓட்றது.? நடக்கவோ சைக்கிள் ஓட்டவோ, நீச்சல் அடிக்கவோ, அகிலாவை படுக்கையில் உடன் அணைக்கவோ...கால் இல்லாமல் எப்படி...? "


"அகிலாவ எப்புடி சந்தோஷமா வெச்சுக்கிறது? ஆண்ம மீண்டு வந்துருமா? வராமலே போயிருச்சுன்னா? புதுசா கல்யாணம் ஆணவ... ஒன்ற மாசங்கூட தாம்பத்தியம் அனுபவிக்கல... எப்புடி மனச தாங்குறா?


என்று இதுநாள் வரையிலான அவள் மீது இருந்த ஆபத்து இல்லாத அக்கறை வேறு திசையில் இன்றுதான் திரும்ப தொடங்கியுள்ளது... 
இப்படியாக...


" இவளுக்கு என்னோட ஒடம்பு தேறாதுன்னு தோணுதோ? கொஞ்ச நாள்ல போய் சேந்துருவான்னு காத்துக்கிட்டு இருக்காளோ? அதுக்கப்பறம் வேற கல்யாணம்..வேற புருஷன்னு மனச தேத்திக்கிட்டளோ? இல்ல இப்பவே வேற எவன்கூடவாவது....?" என்ற நிலையில் அழுக்காய் அவளை அவன் அலசிக் கொண்டிருக்கும் வேளை, "என்னங்க, நைட்டுக்கு என்ன சாப்டுறீங்க...? அகிலா குரல்...


"சாப்பாடு வாங்க எங்க போவ?"


"கீழ.. ஹாஸ்பிடல் கேண்ட்டீன்க்கு தான்.. என்ன இன்னிக்கு புதுசா கேக்குறீங்க?"


"யாருகூட போற..?"


"தனியாதான்.. நா என்ன கொழந்தையா? என்னாச்சு உங்களுக்கு?"
என்று சொல்லிவிட்டு புடைவையை சரி செய்துகொண்டு அவள் கிளம்பும்போது, எதிர் கட்டிலில் இருந்த மோகனின் தம்பி, "அக்கா சாப்பாடு வாங்க போறீங்களா?, இருங்க நானும் வரேன்.." கிளம்பிவிட்டான்... 


அவன் சொன்ன "அக்கா" என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அசைபோடுகிறான் ஜெயா.. காலை அசைக்க முயற்சிக்கிறான்.. அவளுடன் கீழே செல்ல வேண்டும், இருவரும் என்ன செய்கிறார்கள் என பார்க்க வேண்டும், அவனை நாலு முறையாவது நெஞ்சில் காலால் மிதிக்க வேண்டும்.. எதுவும் முடியாத இந்நிலையில் ஓவென அழவேண்டும்.. அதுவும் முடியவில்லை.. எதிர் கட்டில் மோகன் கேட்கிறார்,


"வீட்டுக்காரம்மா தவிர யாரும் வர்றது இல்ல...பரவால்ல அவங்களே நல்லா கவனிசுக்கிறாங்க உங்கள...எனக்கு தெனைக்கும் ஒரு பட்டாளமே வந்தாலும் உங்களுக்கு கெடைக்கிற care சான்ஸே இல்ல.. கொடுத்துவெச்சவர் நீங்க..."


வழக்கமாய் வெளிவரும் அந்த போலி வெறும்புன்னகைகூட இப்போது இல்லை ஜெயாவிடம்.. சொல்லிவிட்டு ஜூ.வி வாசிக்க தொடங்கிவிட்ட மோகனை வெறித்துகொண்டிருந்தான்...இரவு பதினொரு மணியிருக்கும்.. கடைசி கட்டிலில் இருக்கும் தாத்தாவின் ஆஸ்துமா இழுப்பு மூச்சைத் தவிர வார்டு முழுதும் பேரமைதி... இவனைத் தவிர எல்லோரும் கிட்டத்தட்ட உறங்கிவிட்டார்கள்.. தலை வெடிப்பது போல உள்ளது.. எழுந்து உட்காரவாவது வேண்டும்.. தன் கட்டிலின் பக்கவாட்டில் தரையில் மனைவி படுத்திருக்கிறாளா இல்லையா? புரண்டு படுத்துக்கூட பார்க்க முடியவில்லை..வேண்டுமென்றே அருகிலிருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலைத் தட்டி விடுகிறான்.. நொறுங்கிய சத்தத்தில் அகிலா திடுக்கிட்டு எழுந்து,


"என்னங்க ஆச்சு? என்ன வேணும்... என்கிட்டே கேக்காலாம்ல?" 


என்று சொல்லிக்கொண்டு கொஞ்சம் நிதானித்து கலைந்திருந்த சேலையை மாராப்பு, முந்தானை, கொசுவம் முறையே சரி செய்கிறாள்.. பதிலேதும் சொல்லாமல் கொஞ்சம் கழுத்தை எக்கி சுற்றியிலும் பார்கிறான்.. எல்லோரும் விழித்து "என்னாச்சு?" என்ற ரீதியில் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. அவளை ஒரு முறை மீண்டும் பார்த்துவிட்டு தலையணை சாய்ந்து கண்களை மூடிக்கொள்கிறான்.. மனக்கண் பேய்முழி முழிக்கிறது... "ஒரு பொது வார்டில்..இவ்வளவு ஆடை விலகியா படுத்திருக்கா? இடுப்பும் மாரும் எதிர் கட்டில்லேந்து பாத்தாலே தெரியுமே...? மோகனோட தம்பி அந்த கட்டிலுக்கு கீழ தூங்கிட்டானா...இல்ல இவள பாத்துட்டு இருக்கானா? இல்ல இவதான் வேணும்னே...." கண் விழித்து கொள்கிறான்..


"அகிலா.. அகிலா...எந்திரியேன்... கொஞ்சம் பொரட்டி போடு..." எழுந்து குனிந்து அவனைப் புரட்ட முற்படுகிறாள்... "என்னோட தோள புடிங்க..."என்று சொல்லிக்கொண்டு அவனைத் திருப்பும் நேரம், "அக்கா, இருங்க நா வரேன்..."என்று மோகனின் தம்பி வந்துவிட ஜெயாவின் அச்சங்கள் தெளிவாகின.. இருவரும் இவனை கைக்கொண்டு புரட்ட அகிலாவின் விலகிய சேலையையும், அவனுடைய கண்களையும் மாறி மாறி பார்த்துகொண்டிருக்கிறான்.. காலிடுக்கில் இருந்த சிறுநீர் குழாயை ஒரு பக்கமாக அகிலா நகர்த்த முற்பட அவனது வேஷ்டி கொஞ்சம் விலகி உறுப்பு வெளியே தெரிந்தது.. அகிலா வேஷ்டியை சரி செய்துவிட்டு..."நீங்க போயி படுங்க தம்பி...ரொம்ப தேங்க்ஸ்" என்று யதார்த்தமாய் புன்னகைத்ததை ஜெயா கவனித்துக் கொண்டிருக்கிறான்.. 


பின்னிரவு இரண்டு மணி, "அந்த இளிப்புக்கு என்ன அர்த்தம்? என்ன மயித்துக்காக அவன பாத்து இவ இளிக்கணும்? இரண்டு பேரும் தூங்கிட்டாங்களா? இவ இங்க கீழதான் படுத்திருக்காளா? அவன் எங்க இருக்கான்? அவ பக்கத்துலையா? " திரும்பவும் இரத்த குழாய்கள் வெடிக்கும் அளவிற்கு அவனுக்கு அழுத்தம் அதிகமாகிறது... "எதுக்காக சிரிச்சான் அவன்..?என்னோட மானிய பாத்தா? ஒன்னுக்கு போகக்கூட வக்கேத்து போயி கொழாய் மாட்டி கெடக்கு...நா ஆம்பள இல்லன்னு கேலி செய்றானா? சந்தோஷமா வெச்சுக்க தெரியாத இவனுக்குல்லாம் எதுக்கு இப்புடி ஒரு பொண்டாட்டின்னு நெனச்சுதான் சிரிச்சானா? இல்ல ஏற்கனவே எல்லாத்தையும் அனுபவிச்சுக்கிட்டு இருக்கானா?"


அதிகாலை ஐந்தரை மணி.. இப்போது வரை அதே அர்த்தத்திலான கேள்விகள், ஆனால் இன்னும் வக்கிரமான வார்த்தைகளில் அவனுக்குள் ஒலித்து கொண்டே இருக்கின்றன.. முடிவு செய்து கொண்டான் அவள் விழித்ததும் இன்று கேட்டுவிடுவது என்று..ஓரத்தில் ஒட்டடைகளுக்கு நடுவே இருக்கும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.. எப்போதோ எப்படியோ தூங்கிவிட்டான்.. திடீரென விழித்து பார்க்கையில் அதே கடிகாரத்தில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும் எட்டிற்கும் ஒன்பதிற்கும் இடையில் நின்று கொண்டிருக்கிறது...


"அகிலா......அகிலா .................அகில்லா....."


"சார் அவுங்க தூங்கி எழுந்ததும் ஏதோ மயக்கமா இருக்குன்னு சொன்னாங்க,அதான் நர்ஸ் அம்மா கீழ டாக்டர பாக்க கூட்டிக்கிட்டு போயிரு.." என்று மோகன் முடிப்பதற்குள்,


"உங்க தம்பி எங்க?"


"அவனும் கூட போயிருக்கான் சார்?"


அதற்கு மேல் எந்த ஒரு கேள்வியும் இல்லை அவனிடம்..சாய்ந்து கொண்டான்.. விழிகள் நொடி முல்லை கவனமாய் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. "கீழேதான் இருக்காங்களா? இல்ல பக்கத்துல எதுவும் ரூம் போட்டுட்டாங்களா? இல்ல ஊற விட்டு ஓடி போயிட்டாங்களா? அவுசாரி மொவ, ஆம்பள சொகம் கேக்குது அவளுக்கு...அவ்வ்வளவு அரிப்பு.. வரட்டும் இன்னைக்கு..." என்று பத்து நிமிஷங்களில் அகிலாவுடன் வாழ்ந்த மூன்று மாதங்களை இந்த மூன்று நாள் குழப்பத்தில் குப்பையாக்கிக் கொண்டிருந்தான்..


"என்னங்க... என்னங்க...."


திரும்பினான்.. பொலிவாய் அகிலா, அருகில் அளவிற்கு அதிகமாய் பருத்த நர்ஸ், மற்றும் மோகனின் தம்பி..


"என்ன ஜெயச்சந்திரா... உன்ன காப்பாத்த ஒரு புள்ள வர போறான்ப்பா... உன் பொண்டாட்டி ரெண்டு மாசம் முழுகாம இருக்கா...ஆம்பள புள்ளையா பொறக்கணும்ன்னு வேண்டிக்க.." என்று அந்த நர்ஸ் ஒவ்வொரு வார்த்தையை தொடுக்க அருகில் முதலிரவில் பொழிந்த அதே வெட்கத்தோடு அகிலா...


எதையும் கவனிக்காமல் அகிலாவிடம் அவசரமாய் கேட்டான், "ரெண்டு மாசம்ன்னு எப்படி உறுதியா சொல்றாங்க? முன்ன பின்ன இருக்கலாம்ல..."


"ஹ்ம்ம்.. இருக்கலாம்...ஏன் கேக்குறீங்க?" வெள்ளந்தியாய் கேட்டால் அகிலா..


ஒன்றுமில்லை என்பது போல தலை சாய்த்துவிட்டு பழைய வெறும் புன்னகையை சிரமப்பட்டு முகத்தில் அஷ்டகோணலாய் கொண்டுவந்தான்.. " சரி.. தலை குளிச்சிட்டு வர்றேன்..."அகிலா அவன் கண்களில் இருந்து விலகி செல்ல குறுக்கிடுகிறான்."அந்த bed panஐ எடுத்து வையி... " அகிலா எடுத்து வைத்துவிட்டு, மறைவிற்காக அங்கிருந்த ஸ்க்ரீனையும் நகர்த்தி வந்து வைத்துவிட்டு குளிக்க நகர்ந்து செல்கிறாள்... 


சரியாக பதினைந்து நிமிடம் கழித்து அகிலா திரும்பி வந்து ஸ்க்ரீனை விளக்க இடது கையில் கெட்டியாக பழம் நறுக்கும் கத்தியும், வலது மணிக்கட்டில் ஆழமாய் ஒரு வெட்டும், நடுவே உயிர் நீங்க போதுமான இரத்தத்தில் ஜெயச்சந்திரன் விட்டத்தை வெறித்துக்கொண்டு படுத்திருந்தான்..முற்றும்23 May 2012

கவனத்திற்குரிய இரங்கற்செய்தி


அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

கடந்த ஞாயிற்று கிழமை ஒரு ஆறு மணியளவில் மருத்துவமனையில் ஒரு இளம்பெண் தீக்காயத்துடன் அனுமதிக்கபட்டாள்.. கிட்டத்தட்ட சவமாகத்தான்... வயது பதினான்காம்.. பிழைக்க வாய்ப்பில்லை என்ற ஒப்புக்கொள்ளமுடியாத உண்மையை சொன்னதும் அருகிலிருந்த ஒரு நடுவாந்திர வயதுக்காரர் நெஞ்சில் அடித்து கொண்டு கதறி சோர்ந்து விழுந்தார்.. விசாரித்ததில் அறிந்த உண்மைதான் அடுத்த சில மணி நேரங்களுக்கு ஒரு சில நினைவு பிம்பங்களை கிளறிவிட்டு கொண்டிருந்தது.. அந்த மனிதர் ஏசியதால்தான் அவரது மகளான அந்த இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்து கொண்டிருக்கிறாள்..மருத்துவமனையில் சேர்ந்த ஒரு மணிநேரத்திற்குள் அவள் மூச்சு நின்று போனது...

எல்லாமே ஒரு மூன்று மணி நேரத்திற்குள் நடந்து முடிந்திருந்தது... சம்பவத்திலிருந்து கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தால்.. இறந்து போனது, ஸ்ட்ரெச்சருக்கு லஞ்சம் தந்தது, மருத்துவமனை அனுமதிக்கு போலீஸ் கேஸ் போட்டது, வழியெங்கும் உயிர் போகும் வலியில் கதறிக்கொண்டு வந்தது, வீட்டில் வாழை இலையில் சுருட்டப்பட்டது, ஊரே அலறியடித்து அந்த அறைக்குள் ஓடியது, தனக்கு தானே தீயிட்டு கொளுத்திகொண்டது, அப்பா அடித்ததோ திட்டியதோ நிகழ்ந்தது..... அதற்கு முன்னால்? எங்கேயோ ஒரு மதிய வேலை உறக்கத்திலோ, மரத்தடியில் பாண்டி / பல்லாங்குலி விளையாடியோ, கோடையின் வற்றிய குளத்தில் குளித்து மகிழ்ந்தோ, தம்பியுடன் சண்டையிட்டு கொண்டோ...இப்படியாக என்ன செய்து கொண்டிருந்திருப்பாள்? இதில் ஏதோ ஒன்றிலோ இல்லை சமநிலை சம்பவம் ஒன்றிலோ இருந்த மனநிலை அப்பா அதட்டிய பின்னான அந்த முடிவெடுக்கும் நிலைக்கு எப்படி தாவ முடிந்தது?


சிறுவயது முதலே நான் கடந்து வந்த தற்கொலைகள் எல்லாம் கண்முன்னே வந்து போயின.. நான் பிறக்கும் முன்னே என் பெரிய மாமா, தாத்தாவுடன் ஏற்பட்ட மனகசப்பில் பால்டாயில் குடித்து வாழ்வை முடித்துகொண்டாராம்.. இன்றளவும் அந்த காணாத மாமாவைப் பற்றி அம்மா சொல்லும் கதைகள் மட்டுமே நினைவினில் தாங்கிக்கொண்டு நிற்கிறது.. எனக்கு சரியாக மூன்று வயது இருக்கும் போது, அப்பாவின் கடுஞ்சொல் பொறுக்காமல் அம்மா தூக்கு போட்டுகொண்டார்.. உறவினர் வீட்டில் இருந்த அப்பா சேதி தெரிந்ததும் அங்கு மணற்பரப்பில் விளையாடி கொண்டிருந்த என்னை தூக்கி கொண்டு முற்களையும், மாட்டு தொழுவங்களையும் தாண்டி எங்கள் வீட்டிற்கு ஓடியது இன்னமும் நினைவிருக்கிறது.. நாங்கள் செல்வதற்குள் அண்டைவீட்டார் அம்மாவை இறக்கி தரையில் கிடத்தி சுற்றி உட்கார்ந்து மாரடித்து அழுது கொண்டிருந்தனர்.. யாரோ ஒருவர் என்னை இழுத்து அம்மாவின் முகத்தருகே அமரவைத்தார்.. தூக்கு, தற்கொலை, மரணம் எதுவுமே புரியாத மனநிலையில் இருந்த எனக்கு, திடீரென அசைந்த அம்மாவின் கட்டைவிரலை எல்லோரும் காட்டி ஏதோ சொன்னார்கள்... அப்பாவும் சின்ன மாமாவும் அடுத்த நொடி அம்மாவை கார் வைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற காட்சி இப்போது நினைத்தாலும் இருதயம் படபடக்க தொடங்கிவிடும்..


ஆனாலும் இன்றுவரை அம்மா அதைப் பற்றி பேசியது இல்லை.. எனக்கு சம்பவம் நினைவிருக்காது என்பது அவரது எண்ணம்.. அன்றைய தினம் அம்மாவை தூக்கி கொண்டு ஓடிய சின்ன மாமா திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பில் செல்ஃபாஸ் மாத்திரையை தின்று நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது செத்துபோனார்... செய்தி வந்ததும் தொலைபேசியுடன் அப்படியே கீழே விழுந்து அம்மா கதறியது இன்றும் கண் முன் நிற்கிறது...மேலே படிக்க வைக்கவில்லை என்று பூச்சிமருந்து குடித்து, மருத்துவமனை செல்லும் வழிநெடுக்க "என்ன எப்படியாவது காப்பாத்திருங்க" என்று அடிதொன்டையில் அழுது, போய்சேரும் முன்னரே செத்துப்போன பக்கத்துவீட்டு பிரேமா அக்கா, தன் அம்மாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தூக்கமாத்திரைகளை ஒரு பிடி விழுங்கிவிட்டு இடுகாட்டிற்கு தானே நடந்து சென்று படுத்துக்கொண்டு மாண்ட ஆனந்த் அண்ணன் என்று பள்ளி வயதில் நான் கடந்துவது தற்கொலை படலங்கள் ஒவ்வொன்றும் இன்னமும் மனதறுக்கிறது...

கல்லூரி நாட்கள்... உண்மையிலேயே வாழ்க்கையின் விளிம்பு பருவம் அதுதான்..எத்தகைய அநாசய முடிவையும் யோசிக்காமல் எடுத்துவிடும் பருவம்.. விடுமுறை நாட்களில் சொற்ப நபர்களே இருந்த விடுதியில், விடுமுறை முடிந்து வந்த நண்பர் ஒருவர் கதவை திறக்க ஐந்தாறு நாட்களுக்கு முன்பே தூக்கில் தொங்கி காண சகிக்காத நிலையில் உடலிழுத்து தொங்கிக் கொண்டிருந்தான் ஹரிவரசன்.. போலீஸ் வந்தது.. ஏதேதோ தடையம் பார்த்தது.. ஒரு லெட்டரை அந்த அறைக்குள் கண்டுபிடித்து சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டது.. சக மாணவியின் பெயர் இருந்ததாய் வதந்தி.. கதை சுற்றி விட நம் ஆட்களுக்கா தெரியாது? அதே போல வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியை குறி வைத்தே ஓடும் என் நெருங்கிய நண்பன் சரவணகுமார் ஏதோ ஒரு மன அழுத்தத்தில் நோயாளிக்கு கொடுக்கும் மயக்க மருந்தினை அதிக அளவில் தனக்கே செலுத்தி அறையை சாத்திக்கொண்டு உள்ளேயே மரணித்து போனான்.. இந்த மரணத்திற்கும் பின்னாலும் கட்டுகதைகள் பல உலவிக்கொண்டுதான் இருந்தன..


கணவன் மனைவி கருத்துவேறுபாடு என்று இதுவரை நூற்றிற்கும் மேலான சவப்பெட்டிகள் என் கண் முன்னே நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொன்றிற்குள்ளும் சில சித்திரைவதைகளோ ஒரு கொலையோ மறைக்கப்பட்டு தற்கொலை சாயம் பூசப்பட்டிருக்கும்.. ஆனால் இந்த ஒரு பதினான்கு வயது சிறுமிக்கு கொளுத்திக்கொண்டு சாகும் அளவிற்கு அப்படி எப்படி நிகழ்ந்தது அந்த மன இறுக்கம்.. எப்படி பீறிட்டது அந்த கோபம், அந்த ரோஷம், அந்த இயலாமை, அந்த குருட்டு தைரியம்... அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்கும்..? இங்கு சொல்ல பட்டிருக்கும் ஒவ்வோர் மரணமும் தன்னை மாய்த்துக் கொள்ள மட்டும்தானா? இல்லை தன்னுடைய பிரிவின், இழப்பின் வழியை யாரோ உணர வேண்டும் என்பதற்கா?


பெற்றோரின் கண்டிப்பு, திருமண உறவு விரிசல், கிழித்தெறிய பட்ட காதல் கடிதங்கள், உப்பு சப்பற்ற தேர்வு முடிவுகள், என தற்கொலைக்கான காரணங்கள் எல்லாம் நமக்கு குப்பையாக தெரியும் வேளை எப்படி அங்கே ஓர் உயிர் மாய்வது சாத்தியமாகிறது?? காரணங்களோ, இல்லை தற்கொலை சரியா தவறா என்றெல்லாமோ பற்றி இங்கு பேசுவதற்கில்லை.. தற்கொலைக்கு முன்னான மனநிலை..? எப்படியொரு விந்தையான குழப்பம் அது.. சம்பவத்திற்கான முயற்சி செய்தவர்கள் உயிருக்கு போராடும் நிலையில் "என்னை எப்படி எப்படியாவது காப்பாத்திருங்க" என்று ஓலமிடுவது எப்படி சாத்தியபடுகிறது.. "புள்ளக்குட்டியெல்லாம் பத்தி கவல படாம ஒரு வேகத்துல பண்ணிட்டேன் என்ன காப்பாத்திருங்க.." என்ற வரியில் உள்ள அந்த "வேகம்" என்பதைத்தான் புரிந்துக்கொள்ள முடியவில்லை...Suicide as Escape from the Self  என்ற ஓர் ஆராய்ச்சி கட்டுரையில் சில பதில்கள் கிடைக்கின்றன... இது ஆறு படிகளாக அந்த மனநிலை மாற்றத்தை சொல்கிறது..

  1. எதிர்ப்பார்ப்பு நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு அதில் சறுக்குவது 
  2. தாழ்வு மனப்பான்மை விளைவாய் தன் மீதே ஓர் நம்பிக்கையின்மை ஓர் குற்ற உணர்வு ஏற்படுகிறது..
  3. தன்னை பற்றிய அதீத சிந்தனை.. அதுவே தன்னைப் பற்றிய ஓர் கவலையாக மாறுகிறது...
  4. ஒரு மன வலிக்கான அவசர தீர்வை தேடும் நிலை உருவாகிறது..
  5. இந்நிலையில் இறந்த மற்றும் எதிர்காலங்கள் மனக்கண்ணில் தெரிய மறுக்கபடுகிறது.. நிகழ்காலம் வெறுமையாய் அதேநேரம் மிகநீளமாய் தெரியும்..
  6. ஆறாம் படி தற்கொலை எண்ணத்திற்கும் தற்கொலைக்குமான விளிம்பு நிலை.. தடையுணர்ச்சி அறுந்து போகிறது..பயம் விலகி கொள்கிறது.. தன்னை மட்டுமே ஒரு புள்ளியில் நிறுத்தி யோசிக்கும் வேளையில் அறிதல் நிலை வெடித்து ஓர் தற்கொலை நடக்கிறது..ஒவ்வோர் படியிலும் எவ்வளவு மன வலியைக் கடக்கிறார்கள்.. எவ்வளவு மன சிதறல்.. சிலர் சாமியாடுகிறார்களே அதே போல இது ஒரு மயக்க நிலை.. தற்கொலை குறிப்புகள் பெரும்பாலும் பிதற்றலாய் இருப்பதற்கும் இதுவே காரணம்.. போலியாய் பயமுறுத்த, மிரட்ட நினைக்கும் தற்கொலை நாடகங்களில் இந்த மனநிலை இருக்காது.. இது ஒரு தீர்க்கமான குழப்ப நிலை.. மூன்றே வழிகள் தான் கண்ணில் தெரியும்... ஏதோ ஒரு மருந்து இல்லை ஓர் நிறைநித்திரை அல்லது மரணம்...வாழ்வில் எப்போதும் சிறந்ததை தேடும் மனித மனதிற்கு மரணம் அவ்வேளையில் மிகச்சிறந்த வழியாய் தெரியப்பெருவது ஆச்சர்யம் அற்ற அவலம்..


அதோடு தற்கொலைக்கு நீண்ட நாள் மன அழுத்தம் பெரும்பாலும் காரணமில்லை.. ஒரு சம்பவம்..ஒரு சின்ன பொறி.. அதுதான் பிரதான மையக் கரு.. அறிவியல் இதுபோல என்னென்ன சொன்னாலும் ஒரு சிறுமிக்கும் இதுபோல படிகளான மன பிழறல் எப்படி சாத்தியம் என்று இன்னமும் அந்த புள்ளியிலேயே வட்டமடிக்கிறது மனது.. "தெரியாம பண்ணிட்டேன்ப்பா... உடம்பெல்லாம் எரியுதுப்பா..." என்ற அவளின் அந்த கடைசி ஓலம் இப்போதும் நினைவில் இருக்கிறது.. "தெரியாம"- அதுதான் இங்கே குழப்பமே.. அங்கேயே நிற்கிறேன் இன்னமும்..

என்றும் நன்றியுடன் சி.மயிலன்16 May 2012

தேவதை பிம்பங்கள் #2நாய்குட்டியையோ...
சிறு முயலையோ...
எதிர்வீட்டு மூன்று மாத
குழந்தையையோ...
சன்னமாக
தலை சாய்த்து
கண் சுருக்கி,
பல் கடித்து
இதழ்குவித்து
நீ கொஞ்சிடும்
சத்தத்தில்
முற்றிலுமாய்
முடிந்துவிடுகிறது
இந்த என் பிறவிக்கான
செம்மொழி தேடல்..உன் கைப்பேசிக்கு
எப்படி மனசு வருகிறது?

உன் குரலை
உன் சிரிப்பை
உன் சிணுங்கலை
உன் கொஞ்சலை
உன் முத்தங்களை
சிறு பருக்கைக்கூட
பதுக்கி வைக்காமல்
இப்படி என்னிடம்
மொத்தமாக
பறக்க விடுகிறது...ஆள்காட்டி விரல் மடித்து
தாடையில் வைத்து
உதடசைய ஏதோ
முனுமுனுத்து,
தீபாரதனையைத்
தொட்டு கும்பிடும்
முன்னான அந்த
உன் பத்து நொடி
பரிதவிப்பிலேயே
நிறைந்து போகிறது
எனக்கான தரிசனம்..

6 May 2012

வழக்கு எண் :18/9... தயவு செஞ்சு பாருங்க...அன்பிற்குரிய விருப்பதாரர்களே,
அவ்வபோது முகநூலில் சின்ன சின்னதாய் விமர்சனம் எழுதி இருபது முப்பது 'like' வாங்குவதையும், ஒரு மிக சாதாரண சினிமா இரசிகன் என்பதையும் தாண்டி விமர்சன பதிவு எழுத எந்த அருகதையும் இல்லாதவன்தான் நான்.. "சினிமால்லாம் தியேட்டரோட முடியனும்டா.. வீட்ல வந்தெல்லாம் ஏன் அத பத்தி பேசிக்கிட்டு இருக்கே?" என்ற அப்பாவின் கருத்தில் எப்போதும் எனக்கு உடன்பாடு இல்லை.. சரியோ தவறோ திரைப்படங்கள் சமுதாயத்திலும் தனிமனித வாழ்விலும் மாற்றங்கள் உண்டுசெய்யும் வன்மை உடையவை.. அப்படியொரு அழுத்தம் ஏற்படுத்தும் திரைப்படங்கள் ஆனால் வெகு சிலவே...

அவ்வாறான வெகு சில திரைப்படங்கள் ஒன்று மனித மனங்களைப் பேசும்...(தேவர் மகன், சுப்ரமனியபுரம், ஆடுகளம்..) இல்லையேல் இலகுவாகவோ, வன்மையாகவோ ஒரு கருத்தை சொல்லும் (வாகை சூட வா...) இதில் மூன்றாமானது இவ்விரண்டுடன் சற்று உரசி அழுத்தமாய் யதார்த்தத்தை பதிவு செய்யும்...(அங்காடி தெரு...) இதில் மூன்றாம் வகையறாவில் இன்னோர் இணைப்பு இந்த வழக்கு எண்: 18/9... இயக்குனர் பாலாஜி சக்திவேலின் முந்தய மூன்று படைப்புகளில் பேசப்பட்ட ஒரே படம் "காதல்" மட்டுமே...அதுவும் உண்மைக்கதை என்று அச்சேற்றப் படவில்லை என்றால் அவ்வளவான யதார்த்தம் இல்லாத படைப்பே... பேருந்து எரிப்பு என்ற முடிவை கையில் எடுத்து அதிலிருந்து பின்னோக்கி அவர் நெய்த கதையான "கல்லூரி", தமன்னாவிற்கு ஒரு சுற்று தமிழில் வர உதவியதைத் தாண்டி எதுவும் செய்துவிடவில்லை.. அதோடு பதுங்கிய அவர் இந்த வெள்ளி கிழமை சற்று வீறுகொண்டு பாய்ந்திருக்கிறார்...ஒரு அடித்தட்டு இளைஞன், அவனை நித்தமும் கடந்து செல்லும் அவனது காதல், அவள் வேலை செய்யும் வீட்டு பெரிய இடத்து பெண், அவளை இச்சைப் பொருளாய் மட்டும் நோக்கும் அதைவிட பெரிய இடத்து பையன்...இவர்கள் நால்வருக்கும் பொதுவாய் ஓர் சம்பவப்புள்ளி... படம் அந்த புள்ளியில் இருந்துதான் விரிகிறது.. ஐந்தாவது கதாபாத்திரமாய் அங்கிருந்து கதையை நகர்த்துபவர் ஓர் காவல் துறை அதிகாரி.. ஐவரும் அறிமுகம்...ஆனால் கிடைத்திருப்பது ஓர் ஒப்பற்ற உலக தமிழ் சினிமா...

மூவருக்கு தான் நடிப்பதற்கு வேலை.. முதலில் நாயகன் வேலு..இவரின் இடத்தில் அறிமுகம் அல்லாத ஒருவரை வைக்க வேண்டுமென்றால் தனுஷை வைத்திருப்பார்கள்... நிச்சயம் பொருந்தியிருக்கும்.. ஆனால் இந்த பாதிப்பு சத்தியமாய் இருந்திருக்காது...சில கதாபாத்திரங்களைப் பிராதான படுத்த அறிமுகங்களால் மட்டுமே முடியும் (கற்றது தமிழ்- ஆனந்தி போல) இரண்டாவது, போலீசாக வரும் துரைசாமி.. கிட்டத்தட்ட காதல் திரைபடத்தில் வரும் அந்த சித்தப்பா கதாபாத்திரம் போன்ற நயவஞ்சகம்.. மனிதர் நின்று ஆடியிருக்கிறார்...அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.. மூன்றாவது, பணக்கார பெண்ணாக வரும் ஆர்த்தி...உடன் வரும் தோழிகளை விட அழகில் பிரமாதம் என்றெல்லாம் இல்லை...படத்தில் கொஞ்சம் சாதாரணமான நடிப்பு இவருடையதுதான் என்றாலும் தங்களுடைய நூறாவது படத்தில் ஹன்சிகாவும்,தமனாவும் நடிப்பதைவிட சிறப்பாகவே நடித்துள்ளார்,,, நடிப்பு என்று பெரிதாய் வேலை இல்லையென்றாலும்,பார்த்ததும் மனதில் பதிந்துவிடும் பேரழகி இல்லையென்றாலும், படத்தில் சொற்ப காட்சிகளே வந்து போனாலும் நம் மனதில் நாற்காலி போட்டு உட்காருபவர் படத்தின் நாயகி ஜோதி... அதுதான் இயக்குனரின் வெற்றி...
பாடல்கள் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியவில்லை என்று சொல்லும் மூத்த இயக்குனர்கள் பலருக்கு இந்த படம் ஒரு பாடம்.. (தயாரிப்பாளருக்காக சமரசமாய் மைனா பாணியில் ஓர் கனவு பாடல்) மற்றபடி பின்னணி இசை மட்டுமே படத்திற்கு..அதில் யுவன் ஷங்கரின் பக்குவம் தெரிகிறது புதுமுகம் பிரசன்னாவிடம்.. ட்ரைலரில் ஓடும் இசையற்ற அந்த இரு பாடல்வரிகள் படம் முடிந்து வரும் போது அனைவரின் மனதில் ஓடி கொண்டிருக்கும்.. விஜய் மில்டன் இம்முறை HandyCam உடன்.. நிறைய இடங்களில் tripod standஐ வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்கள்.. புது அழகான ஒளி அனுபவம்...இவ்வளவு விசாலாமான கதையை இரண்டேகால் மணி நேரத்திற்குள் அடக்கியது எடிட்டரின் சாமர்த்தியம்.. யாருப்பா அது?

திரைக்கதை "ராம்" படத்தின் அதே பாணி.. ஓர் சம்பவம்.. சாட்சிகளின் பார்வையில் கிளைக்கதைகள்.. அதில் ஓர் முடிவு.. அங்கிருந்து நிதர்சனங்களைப் பேச வேறு திசையில் திரும்பும் கதைக்களம்..கதையில் ஒன்றுமே புதிது இல்லை. தியேட்டரில் உங்களுக்கு பின் சீட்டிலோ, முன் சீட்டிலோ,பக்கத்து சீட்டிலோ இருப்பவர் அடுத்த காட்சியை ஊகித்து அடிக்கடி சத்தமிடலாம்...உங்கள் சீட்டில் இருப்பவர்கூட அதை செய்யலாம்.. ஆனால் ஊகிக்க முடிவதாலோ திரும்ப திரும்ப சொல்லப்படுவதாலோ யதார்த்தம் மரத்துபோகிவிடாது.. சட்டம் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்ற கருவில், விவசாய வறட்சி, கந்துவட்டி கடன், குழந்தை தொழிலாளி, அழியும் கூத்துக்கலை, பாலியல் தொழிலாளி மீதான பார்வை, தனியார் பள்ளிகளின் அத்துமீறல், ஆண் பெண் விடலைப் பருவத்து சபலங்கள், குழந்தை வளர்ப்பு என்று பலவான கருத்துக்கள் எதையும் வலிந்து திணிக்காமல் கதையோடு பொருத்தியிருப்பது திரைக்கதையின் பலம்...தவிர ரோசி அக்கா, சின்னசாமி கதாபாத்திரங்கள், பவர்ஸ்டாரை கலாய்க்கும் காமெடி போன்ற சபாஷ் இடங்கள் ஏராளம்..இவற்றை படம் நெடுக்க சுமந்திருப்பது ஓர் அழகான காதல்..

"தள்ளுவண்டி பிரியாணி கடையில வேல பாக்குற பயலுக்கு எதுக்கு லவ்வு...?" என்று அலட்சியமாய் ஒரு வன்முறை சொல்லைத் தொடுத்தார் என் பக்கத்து சீட்டில் இருந்தவர்.. "அடுத்த வேல சோத்துக்கே வழியில்ல.. அவளுக்காக ஜெயிலுக்கு போறானாம்" இது இன்னொருவர் வண்டி எடுக்கும் இடத்தில்... எத்தனை மேதாவித்தனமும் முதலாளித்துவமும் நிறைந்துவிட்டது நம் மனதில் எல்லாம்.. இந்த சாக்கடை சட்டத்தை சட்டை பையில் வைத்திருக்கும் காசுப்பணம் தனி மனித குணமான காதலையும் உரிமை கொண்டாடுகிறதா? சுஜாதா தன்னுடைய "கை" சிறுகதையில் ஒரு ஏழை தம்பதியரை விளக்கும்போது இவ்வாறு சொல்லியிருப்பார்...

"உடல், இளமை, படுக்கை குறும்புகள் இவற்றையெல்லாம் எந்த ஏழ்மையும் ஒன்றும் செய்துவிட முடியாது"

ஆனால் முதலாளி முதலைகளை பொருத்தமட்டில் காதலுக்கு ஏழ்மை தீண்டத்தகாத ஓர் தீட்டு...படம் நெடுக்க தன் தோளில் சுமந்த யதார்த்தத்தை இப்பேர்ப்பட்ட இரசிகப்பதறுகள் திரையரங்குகளில் கைத்தட்ட வேண்டுமென்பதற்காகவே இறுதி காட்சியில் தொப்பென்று கீழே போட்டுவிட்டு தயாரிப்பாளருக்கு வணக்கம் வைக்கிறார் இயக்குனர்..

  • வேலு தீர்ப்பு வந்து சிறைக்கு செல்வது,
  • துரைசாமி வீடு கிரகபிரவேசம் நடப்பது,
  • ஜோதி முக்காடு போட்டுக்கொண்டு தன் வீட்டிலேயே பாத்திரம் கழுவுவது

என்று திரையை மூன்று ஃபிரேம்களாக பிரித்து ஓடவிட்டு, இருள செய்து, எழுத்து-இயக்கம்: பாலாஜி சக்திவேல் என்று டைட்டில் கார்டு போட்டிருந்தால் என்னையும் சேர்த்து ஒரு இருபது பேர் மட்டுமே கைதட்டியிருப்போம்...அதை தவிர்ப்பதற்காக படம் நெடுக்க இல்லாத சினிமாத்தனத்தை கிளிமாக்சில் வலிந்து திணித்துவிட்டார் இயக்குனர்...அவருக்கே பிடிக்காத கிளைமாக்ஸ் வைத்திருப்பார் போலும்.. அதனாலோ என்னவோ "a film by..." என்று டைட்டில் கார்டு போடவில்லை....

பசங்க & காதலுக்கே ஐம்பது போட்டாங்க..
இது நிச்சயம் அதவிட பெட்டெர்...

வருஷத்துக்கு ஒரு படம்தான் பார்ப்பேன் என்று சொல்லுபவர்களுக்கு, 2012-க்கான படம் வெளியாகியுள்ளது.. தயவு செய்து தியேட்டருக்கு சென்று பாருங்கள்.. மிக முக்கியமாய் பெண் குழந்தை வளர்ப்போர்...

நன்றியுடன்...சி.மயிலன் 

1 May 2012

அன்புள்ள சுகந்திக்கு...

1163 

மார்ச் 31
அன்புள்ள சுகந்திக்கு...

கடித சம்பிரதாயதிற்கான முதல் வரி.. நான் நலம்.. நலமறிய ஆவல் :) நீ எதிர்பாராத இந்த நொடியில் பேருந்தின் மந்தைகளுக்கு நடுவில் எதற்காக நான் இந்த கடிதத்தை தர வேண்டும்...? இத்தனை வருடங்கள் கல்லூரியில் ஒன்றாய் படித்த போதும் மனம்விட்டு பழகிய போதும் சொல்லிடாத ஒன்றை ஏன் கல்லூரியின் கடைசி நாளாம் இன்று இப்படி கிறுக்கி நீட்டவேண்டும்..? இதெல்லாம் உனக்கு தோன்றும் கேள்விகளாய் இருக்கலாம்.. எதற்காக நான் இந்த படிப்பை தேர்வு செய்தேன்? எதற்காக நீயும் இதே கல்லூரியில் சேர்ந்து தொலைத்தாய்? எதற்காக பதிவேட்டில் எனக்கு முந்தைய பெயராய் உன் பெயர் வந்தது? மிக முக்கியமாக எதற்காக கல்லூரியின் முதற்நாளன்று சிவப்புசுடிதார் அணிந்து வந்தாய்? என் கேள்வி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது..

நானும் என்னையே கேட்டுகொள்கிறேன்.. எதற்காக இத்தனை நாள் அல்லாமல் இன்று..? இந்த கடிதம்? இதற்கு முன் என் காதலை உன்னிடம் சொல்ல நான் முயற்சித்ததே இல்லையா? ஏன் இல்லை....

சிவப்பு சுடிதார் அணிந்து வந்துமூன்றாவது பெஞ்சில் நீ அமர்ந்த அன்றே, என் வாழ்கையின் கதாநாயகி நீதான் என்று முடிவு செய்த அன்றே, சொல்லியிருக்க வேண்டும்.. அன்றைய என்னிடம் எந்த ஒரு கதானாயகத்தனமும் இல்லாததாலோ இல்லை ஏதோ ஒரு கையாலாகாத தனத்தாலோ அன்று அந்த சுபகாரியம் அரங்கேற வில்லை...

நண்பர்கள் அறிவுரை என்ற பெயரில் அடுத்த இரண்டு மாதங்கள் எனக்கு சொற்பொழிவாற்றினார்கள்.. அவர்கள் அன்று என் மீது காட்டிய அக்கரையிலும், உன்னை நடுநிறுத்தி பெண்ணினத்தையே தூற்றிய வேகத்திலும், கூட்டமாய் இரவு குடித்த போதையிலும்..அவர்களுக்கு அப்போது உன் மீது இருந்த ஒரு கண்மட்டும் எனக்கு தெரியாமல் போனது..

அந்த இரண்டு மாதத்திற்குள் உன்னிடம் டான் பிரவுன், ஸ்பீல்பெர்க், ஷெல்டன் வகையறா பற்றி பேசி நான்கு சென்னை தயிர்சாதங்கள் நண்பர்களாகி இருந்தனர்.. உனக்கு அவற்றை பிடிக்கும் என்று எனக்கான வேலியை உடைக்க தாய்மொழி கடந்தேன்..அவ்வாறே இன்னும் ஆறு மாதங்கள் கடந்து போகையில் எனக்கு ஆங்கிலம் சரளமானதும் நீ சுஜாதாவையும் ஜெயகாந்தனையும் வாசிக்க தொடங்கியிருந்தாய்.. இப்படியாக சுஜாதா என்னையும் உன்னையும் பேசவைத்தார்.. ஒதுங்கியும் கொண்டார்...

முடிவு செய்தேன் முதலாம் ஆண்டு தேர்வு முடிந்ததும் உன்னிடம் சொல்லிவிடுவது என்று.. தேர்வறை உள்ளே செல்லும்முன் நீ தலையில் கொட்டிக்கொண்டு மாரில் கைவைத்து எதையோ மனப்பாடம் செய்வதை நான் இரசித்துகொண்டிருக்கும் போது நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை -உனக்கு தேர்வு கடினமாய் இருக்கும் என்றோ, உனக்கு முந்தைய இருக்கையில் இருந்த சுந்தர் உனக்கு உதவி செய்வான் என்றோ,தேர்வு முடிந்ததும் நீ அவனோடு மட்டும் சிரித்து பேசிக்கொண்டு வெளியே வருவாய் என்றோ... அன்றைய மாலை தேர்வறைக்கு பக்கத்தில் இருந்த குப்பைதொட்டியில் கசங்கிக்கிடந்த வினாதாள்களுக்கு நடுவே நொறுங்கி கிடந்தது என் காதலும்..ஆறேழு மாதங்களுக்கு பிறகு சுந்தர் உன்னிடம் காதலுரைத்து செருப்படி வாங்கிய அன்றுதான் மீண்டும் ஓடி வந்து ஒட்டிக்கொண்டது உன் மீதான என் காதல்..

சுந்தரை தொடர்ந்து வாசன், ஸ்ரீதர், நவீன், பயோகெமிஸ்ட்ரி பேராசியர் மற்றும் சில பேருந்து விஷமிகள் வரை நீளும் உன்னால் நிரகாரிக்கபட்டோர் பட்டியல் ஓர் அச்சம் கலந்த ஆறுதலை மட்டும் தர தவறியதில்லை.... சரியாக நினைவில்லை நீ யாரிடம் சொன்னாய் என்று.. உனக்கு குடிப்பவர்களை பிடிக்காதாமே.. தெரிந்த நாள் முதல் தண்ணீர் குடிக்கவும் தயங்கி இருக்கிறேன்...உனக்கானவனாய் என்னை மாற்றிக்கொண்டு ஒவ்வோர் முறையும் உன்னிடத்தில் காதல் சொல்ல வரும் போதும் உன் முட்டை கண்ணில் மோதி என் நம்பிக்கையோ, தைரியமோ, இல்லை காதல் சொல்ல தேவையான ஏதோ ஒன்றோ உடைந்து சுக்குநூறாகிவிடுகிறது..சுற்றுலா சென்றபோதும், நண்பர்படையுடன் கடற்கரை சென்ற போதும், ஒரு நாள் மின்தூக்கியில் இருவரும் தனியாய் செல்லும் போதும்..எப்போதும் வந்துவிடவில்லை அந்த வஸ்து..

அர்த்தமே இல்லாமல் நான் உன்னிடம் பேச முயற்சித்தவைகளும், அவ்வபோது யதேச்சையாய் நீ வகுப்பில் திரும்பும் போது உனையே நான் பார்த்துகொண்டிருப்பதை கவனித்துவிடுவதும், சிற்றுண்டியில் நீ விரும்பி உண்ணும் ஏதோ ஒரு கருமத்தையே நானும் வாங்கி உண்ணுவதும், வகுப்பறையில் நான் நுழையும் போது நண்பர்கள் உன் பெயரை கூச்சலிடுவதும் ஆங்காங்கே என்னைப் பற்றிய ஏதோ ஒன்றை உனக்குள் விதைத்திருக்கலாம்...இவன் என்னவன் என்றோ, யோசிக்கலாம் என்றோ, பைத்தியம் என்றோ ஏதோ ஒன்று... அது எதுவாயினும் நான் சொல்ல வேண்டும்.. உன்னை நேருக்கு நேர் பார்த்து முடிந்தால் உதட்டில் ஒரு முத்தமிட்டு உரக்க சொல்ல வேண்டும் நான் உனை விரும்புவதை..முடிவு செய்து கொண்டேன்..

இறுதியாண்டு கலை நிகழ்ச்சி முடிந்த இரவு உன்னிடம் சொல்ல நான் முன்வந்த நேரம் கைப்பேசி அழைப்பொன்றும் முன்வந்தது.. என் அண்ணனிற்கு மாரடைப்பென்று.. என்னைவிட மூன்று வயதே பெரியவன்.. ஊருக்கு வழியனுப்ப வந்த நண்பன் சொன்னான், "அவ உனக்கு இராசியில்ல மச்சான்..விட்ரு.." சரியாக அந்த நொடி உன் நினைவுகள் அங்கேயே அறுந்து விழுந்தது...இரண்டு வாரங்களில் அண்ணன் குணமடைந்து வீடு திரும்பும் போது மருத்துவர், "எந்த சாமியோட கிருபைன்னு தெரியல..." என்று சொல்லி வாக்கியங்களை அடுக்கிகொண்டிருந்தார்..ஆனால் அவர் சாமியென்று சொன்னதுமே உன் நினைவு வந்து என் காதடைத்தது.. கல்லூரிக்கு திரும்பும் வழியில் ஒரு வாரத்திற்கு முன்பு நீ அனுப்பியிருந்த "how is he?" என்ற குறுஞ்செய்தியில் என் உலகம் மொத்தமாய் சுழல தொடங்கியது..

தேர்வுகளை விட காதலுக்கு பெரிய இடைக்கால தடை ஏதுமில்லை.. எனக்கு தைரியம் வருவதற்குள் தேர்வு வந்துவிட்டது...நேற்றுடன் முடிந்தது நம் இறுதி ஆண்டு தேர்வுமட்டுமில்லை.. கல்லூரியில் என் காதலை சொல்வதற்கான கடைசி வாய்ப்பும்தான்.. இன்று காலை விழிக்கும் வரை தெரியாது இன்று farewell day ஏற்பாடு செய்யபட்டிருப்பது..ஒளியின் வேகமோ நியுட்ரினோவின் வேகமோ அனைத்தையும் கடந்தேன்..அதே மூன்றாவது பெஞ்சில் அதே சிவப்பு சுடிதாரில் நீ.. இதைவிட எனக்கு எப்படி ஒரு பொழுது கிடைக்கும்..? கேக் வெட்டி, முஸ்தபா பாடி, கொஞ்சம் கண்ணீர் விட்டு, நண்பர்கள் கையசைத்து கொண்டிருக்கும் வேளையில் நீ என்னைப் பார்த்து கொண்டிருப்பதை நான் கவனித்துவிட்டேன்.. நீயும் சிரித்துவிட்டாய்..

அந்த நொடி போதும் எனக்கு.. போதுமா? போதாது.. காதலை சொல்ல வேண்டும்.. நீ வெட்கப்பட வேண்டும்... முத்தமிட வேண்டும்..உன்னோடு கைக்கோர்க்க வேண்டும்.. இப்படியாக என் எண்ணங்கள் விரியதொடங்கும் முன்பே நீ புறப்பட ஆயத்தமாயிருந்தாய்.. எனக்கு என்னை தயார் செய்து கொள்ள எந்த ஒரு அவகாசமும் இல்லை.. இராட்சசிகளுக்கு நடுவே ஒரு தேவதை நடந்து செல்கிறாள்.. நான் பின் தொடர்வதை திரும்பி திரும்பி பார்த்து சிரித்து இந்த கடிதத்தை நான் கொடுக்க போகும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாய் நடக்கிறாய்.. எனக்கு தெரியாமல் வெட்கபடுகிறாய்...விடுவதாய் இல்லை நானும்...பின்தொடர்கிறேன்..ஒரு கட்டத்தில் உன் தோழியர் ஏனோ பதறி நின்றுவிட என்னை திரும்பிப்பார்த்த படியே சென்ற நீ மட்டும் ஒரு... ஒரு ... ஒரு பேருந்தோ லாரியோ விரைந்து வந்த வேறு ஏதோ ஒன்றோ மோதி அங்கேயே உயிரிழ....................
:
:
:
:
:
:
:
:
(கடிதம் கிழித்தெறியப்படுகிறது)


1164
மார்ச் 31
அன்புள்ள சுகந்திக்கு,

கடித சம்பிரதாயதிற்கான முதல் வரி.. நான் நலம்.. நலமறிய ஆவல் :).................


முற்றும்