சகித்தவர்கள்...

23 May 2012

கவனத்திற்குரிய இரங்கற்செய்தி


அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

கடந்த ஞாயிற்று கிழமை ஒரு ஆறு மணியளவில் மருத்துவமனையில் ஒரு இளம்பெண் தீக்காயத்துடன் அனுமதிக்கபட்டாள்.. கிட்டத்தட்ட சவமாகத்தான்... வயது பதினான்காம்.. பிழைக்க வாய்ப்பில்லை என்ற ஒப்புக்கொள்ளமுடியாத உண்மையை சொன்னதும் அருகிலிருந்த ஒரு நடுவாந்திர வயதுக்காரர் நெஞ்சில் அடித்து கொண்டு கதறி சோர்ந்து விழுந்தார்.. விசாரித்ததில் அறிந்த உண்மைதான் அடுத்த சில மணி நேரங்களுக்கு ஒரு சில நினைவு பிம்பங்களை கிளறிவிட்டு கொண்டிருந்தது.. அந்த மனிதர் ஏசியதால்தான் அவரது மகளான அந்த இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்து கொண்டிருக்கிறாள்..மருத்துவமனையில் சேர்ந்த ஒரு மணிநேரத்திற்குள் அவள் மூச்சு நின்று போனது...

எல்லாமே ஒரு மூன்று மணி நேரத்திற்குள் நடந்து முடிந்திருந்தது... சம்பவத்திலிருந்து கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தால்.. இறந்து போனது, ஸ்ட்ரெச்சருக்கு லஞ்சம் தந்தது, மருத்துவமனை அனுமதிக்கு போலீஸ் கேஸ் போட்டது, வழியெங்கும் உயிர் போகும் வலியில் கதறிக்கொண்டு வந்தது, வீட்டில் வாழை இலையில் சுருட்டப்பட்டது, ஊரே அலறியடித்து அந்த அறைக்குள் ஓடியது, தனக்கு தானே தீயிட்டு கொளுத்திகொண்டது, அப்பா அடித்ததோ திட்டியதோ நிகழ்ந்தது..... அதற்கு முன்னால்? எங்கேயோ ஒரு மதிய வேலை உறக்கத்திலோ, மரத்தடியில் பாண்டி / பல்லாங்குலி விளையாடியோ, கோடையின் வற்றிய குளத்தில் குளித்து மகிழ்ந்தோ, தம்பியுடன் சண்டையிட்டு கொண்டோ...இப்படியாக என்ன செய்து கொண்டிருந்திருப்பாள்? இதில் ஏதோ ஒன்றிலோ இல்லை சமநிலை சம்பவம் ஒன்றிலோ இருந்த மனநிலை அப்பா அதட்டிய பின்னான அந்த முடிவெடுக்கும் நிலைக்கு எப்படி தாவ முடிந்தது?


சிறுவயது முதலே நான் கடந்து வந்த தற்கொலைகள் எல்லாம் கண்முன்னே வந்து போயின.. நான் பிறக்கும் முன்னே என் பெரிய மாமா, தாத்தாவுடன் ஏற்பட்ட மனகசப்பில் பால்டாயில் குடித்து வாழ்வை முடித்துகொண்டாராம்.. இன்றளவும் அந்த காணாத மாமாவைப் பற்றி அம்மா சொல்லும் கதைகள் மட்டுமே நினைவினில் தாங்கிக்கொண்டு நிற்கிறது.. எனக்கு சரியாக மூன்று வயது இருக்கும் போது, அப்பாவின் கடுஞ்சொல் பொறுக்காமல் அம்மா தூக்கு போட்டுகொண்டார்.. உறவினர் வீட்டில் இருந்த அப்பா சேதி தெரிந்ததும் அங்கு மணற்பரப்பில் விளையாடி கொண்டிருந்த என்னை தூக்கி கொண்டு முற்களையும், மாட்டு தொழுவங்களையும் தாண்டி எங்கள் வீட்டிற்கு ஓடியது இன்னமும் நினைவிருக்கிறது.. நாங்கள் செல்வதற்குள் அண்டைவீட்டார் அம்மாவை இறக்கி தரையில் கிடத்தி சுற்றி உட்கார்ந்து மாரடித்து அழுது கொண்டிருந்தனர்.. யாரோ ஒருவர் என்னை இழுத்து அம்மாவின் முகத்தருகே அமரவைத்தார்.. தூக்கு, தற்கொலை, மரணம் எதுவுமே புரியாத மனநிலையில் இருந்த எனக்கு, திடீரென அசைந்த அம்மாவின் கட்டைவிரலை எல்லோரும் காட்டி ஏதோ சொன்னார்கள்... அப்பாவும் சின்ன மாமாவும் அடுத்த நொடி அம்மாவை கார் வைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற காட்சி இப்போது நினைத்தாலும் இருதயம் படபடக்க தொடங்கிவிடும்..


ஆனாலும் இன்றுவரை அம்மா அதைப் பற்றி பேசியது இல்லை.. எனக்கு சம்பவம் நினைவிருக்காது என்பது அவரது எண்ணம்.. அன்றைய தினம் அம்மாவை தூக்கி கொண்டு ஓடிய சின்ன மாமா திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பில் செல்ஃபாஸ் மாத்திரையை தின்று நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது செத்துபோனார்... செய்தி வந்ததும் தொலைபேசியுடன் அப்படியே கீழே விழுந்து அம்மா கதறியது இன்றும் கண் முன் நிற்கிறது...மேலே படிக்க வைக்கவில்லை என்று பூச்சிமருந்து குடித்து, மருத்துவமனை செல்லும் வழிநெடுக்க "என்ன எப்படியாவது காப்பாத்திருங்க" என்று அடிதொன்டையில் அழுது, போய்சேரும் முன்னரே செத்துப்போன பக்கத்துவீட்டு பிரேமா அக்கா, தன் அம்மாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தூக்கமாத்திரைகளை ஒரு பிடி விழுங்கிவிட்டு இடுகாட்டிற்கு தானே நடந்து சென்று படுத்துக்கொண்டு மாண்ட ஆனந்த் அண்ணன் என்று பள்ளி வயதில் நான் கடந்துவது தற்கொலை படலங்கள் ஒவ்வொன்றும் இன்னமும் மனதறுக்கிறது...

கல்லூரி நாட்கள்... உண்மையிலேயே வாழ்க்கையின் விளிம்பு பருவம் அதுதான்..எத்தகைய அநாசய முடிவையும் யோசிக்காமல் எடுத்துவிடும் பருவம்.. விடுமுறை நாட்களில் சொற்ப நபர்களே இருந்த விடுதியில், விடுமுறை முடிந்து வந்த நண்பர் ஒருவர் கதவை திறக்க ஐந்தாறு நாட்களுக்கு முன்பே தூக்கில் தொங்கி காண சகிக்காத நிலையில் உடலிழுத்து தொங்கிக் கொண்டிருந்தான் ஹரிவரசன்.. போலீஸ் வந்தது.. ஏதேதோ தடையம் பார்த்தது.. ஒரு லெட்டரை அந்த அறைக்குள் கண்டுபிடித்து சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டது.. சக மாணவியின் பெயர் இருந்ததாய் வதந்தி.. கதை சுற்றி விட நம் ஆட்களுக்கா தெரியாது? அதே போல வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியை குறி வைத்தே ஓடும் என் நெருங்கிய நண்பன் சரவணகுமார் ஏதோ ஒரு மன அழுத்தத்தில் நோயாளிக்கு கொடுக்கும் மயக்க மருந்தினை அதிக அளவில் தனக்கே செலுத்தி அறையை சாத்திக்கொண்டு உள்ளேயே மரணித்து போனான்.. இந்த மரணத்திற்கும் பின்னாலும் கட்டுகதைகள் பல உலவிக்கொண்டுதான் இருந்தன..


கணவன் மனைவி கருத்துவேறுபாடு என்று இதுவரை நூற்றிற்கும் மேலான சவப்பெட்டிகள் என் கண் முன்னே நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொன்றிற்குள்ளும் சில சித்திரைவதைகளோ ஒரு கொலையோ மறைக்கப்பட்டு தற்கொலை சாயம் பூசப்பட்டிருக்கும்.. ஆனால் இந்த ஒரு பதினான்கு வயது சிறுமிக்கு கொளுத்திக்கொண்டு சாகும் அளவிற்கு அப்படி எப்படி நிகழ்ந்தது அந்த மன இறுக்கம்.. எப்படி பீறிட்டது அந்த கோபம், அந்த ரோஷம், அந்த இயலாமை, அந்த குருட்டு தைரியம்... அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்கும்..? இங்கு சொல்ல பட்டிருக்கும் ஒவ்வோர் மரணமும் தன்னை மாய்த்துக் கொள்ள மட்டும்தானா? இல்லை தன்னுடைய பிரிவின், இழப்பின் வழியை யாரோ உணர வேண்டும் என்பதற்கா?


பெற்றோரின் கண்டிப்பு, திருமண உறவு விரிசல், கிழித்தெறிய பட்ட காதல் கடிதங்கள், உப்பு சப்பற்ற தேர்வு முடிவுகள், என தற்கொலைக்கான காரணங்கள் எல்லாம் நமக்கு குப்பையாக தெரியும் வேளை எப்படி அங்கே ஓர் உயிர் மாய்வது சாத்தியமாகிறது?? காரணங்களோ, இல்லை தற்கொலை சரியா தவறா என்றெல்லாமோ பற்றி இங்கு பேசுவதற்கில்லை.. தற்கொலைக்கு முன்னான மனநிலை..? எப்படியொரு விந்தையான குழப்பம் அது.. சம்பவத்திற்கான முயற்சி செய்தவர்கள் உயிருக்கு போராடும் நிலையில் "என்னை எப்படி எப்படியாவது காப்பாத்திருங்க" என்று ஓலமிடுவது எப்படி சாத்தியபடுகிறது.. "புள்ளக்குட்டியெல்லாம் பத்தி கவல படாம ஒரு வேகத்துல பண்ணிட்டேன் என்ன காப்பாத்திருங்க.." என்ற வரியில் உள்ள அந்த "வேகம்" என்பதைத்தான் புரிந்துக்கொள்ள முடியவில்லை...Suicide as Escape from the Self  என்ற ஓர் ஆராய்ச்சி கட்டுரையில் சில பதில்கள் கிடைக்கின்றன... இது ஆறு படிகளாக அந்த மனநிலை மாற்றத்தை சொல்கிறது..

  1. எதிர்ப்பார்ப்பு நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு அதில் சறுக்குவது 
  2. தாழ்வு மனப்பான்மை விளைவாய் தன் மீதே ஓர் நம்பிக்கையின்மை ஓர் குற்ற உணர்வு ஏற்படுகிறது..
  3. தன்னை பற்றிய அதீத சிந்தனை.. அதுவே தன்னைப் பற்றிய ஓர் கவலையாக மாறுகிறது...
  4. ஒரு மன வலிக்கான அவசர தீர்வை தேடும் நிலை உருவாகிறது..
  5. இந்நிலையில் இறந்த மற்றும் எதிர்காலங்கள் மனக்கண்ணில் தெரிய மறுக்கபடுகிறது.. நிகழ்காலம் வெறுமையாய் அதேநேரம் மிகநீளமாய் தெரியும்..
  6. ஆறாம் படி தற்கொலை எண்ணத்திற்கும் தற்கொலைக்குமான விளிம்பு நிலை.. தடையுணர்ச்சி அறுந்து போகிறது..பயம் விலகி கொள்கிறது.. தன்னை மட்டுமே ஒரு புள்ளியில் நிறுத்தி யோசிக்கும் வேளையில் அறிதல் நிலை வெடித்து ஓர் தற்கொலை நடக்கிறது..ஒவ்வோர் படியிலும் எவ்வளவு மன வலியைக் கடக்கிறார்கள்.. எவ்வளவு மன சிதறல்.. சிலர் சாமியாடுகிறார்களே அதே போல இது ஒரு மயக்க நிலை.. தற்கொலை குறிப்புகள் பெரும்பாலும் பிதற்றலாய் இருப்பதற்கும் இதுவே காரணம்.. போலியாய் பயமுறுத்த, மிரட்ட நினைக்கும் தற்கொலை நாடகங்களில் இந்த மனநிலை இருக்காது.. இது ஒரு தீர்க்கமான குழப்ப நிலை.. மூன்றே வழிகள் தான் கண்ணில் தெரியும்... ஏதோ ஒரு மருந்து இல்லை ஓர் நிறைநித்திரை அல்லது மரணம்...வாழ்வில் எப்போதும் சிறந்ததை தேடும் மனித மனதிற்கு மரணம் அவ்வேளையில் மிகச்சிறந்த வழியாய் தெரியப்பெருவது ஆச்சர்யம் அற்ற அவலம்..


அதோடு தற்கொலைக்கு நீண்ட நாள் மன அழுத்தம் பெரும்பாலும் காரணமில்லை.. ஒரு சம்பவம்..ஒரு சின்ன பொறி.. அதுதான் பிரதான மையக் கரு.. அறிவியல் இதுபோல என்னென்ன சொன்னாலும் ஒரு சிறுமிக்கும் இதுபோல படிகளான மன பிழறல் எப்படி சாத்தியம் என்று இன்னமும் அந்த புள்ளியிலேயே வட்டமடிக்கிறது மனது.. "தெரியாம பண்ணிட்டேன்ப்பா... உடம்பெல்லாம் எரியுதுப்பா..." என்ற அவளின் அந்த கடைசி ஓலம் இப்போதும் நினைவில் இருக்கிறது.. "தெரியாம"- அதுதான் இங்கே குழப்பமே.. அங்கேயே நிற்கிறேன் இன்னமும்..

என்றும் நன்றியுடன் சி.மயிலன்46 comments:

satha said...

hmmm..Strong family history..:)..

வீடு சுரேஸ்குமார் said...

உங்க அம்மா பிழைச்சுட்டாங்க........! என்னுடைய அம்மா பிழைக்கல....... இருந்தா நானும் உங்க மாதிரி டாக்டர் ஆகியிருப்பேன்....... தற்கொலை செய்பவர்கள் சிந்திக்க............

Gowripriya said...

well written mayilan... my heart skipped a beat when i read about your amma.. and saravana :( :(
feeling heavy hearted... autopsy, being a part of pathology curriculum, i too have a lot to write about...maybe after exams... came to de stress myself, going back with a heavy heart...
by the way, your writing skills are getting sharper... (sorry, not able to type in tamil)

Anonymous said...

நிறைய இறப்புகளை பார்த்திருப்பீர்கள்னு நினைச்சேன்...இவ்வளவு தற்கொலை...நல்ல வேளையாக அம்மா தப்பித்ததில் சந்தோசம் மயிலரே..

Anonymous said...

தற்கொலைக்கு நீண்ட நாள் மன அழுத்தம் பெரும்பாலும் காரணமில்லை.. ஒரு சம்பவம்..ஒரு சின்ன பொறி.. அதுதான் பிரதான மையக் கரு//

Premeditated ஆ நடக்கும் குற்றங்கள் வெகு சிலவே..தற்கொலையும் விதிவிலக்கில்லை தானே...

தலைப்பு கவிதைத்துவமாய் இருந்தாலும்...கடைசி வரி வரை உங்களுக்குள் உள்ள கவியை அடக்கியதால் நல்ல கட்டுரை கிடைத்தது...

தொடர்ந்து இது போலவும் எழுதுங்கள் காதல் வைத்தியரே...

இரா.எட்வின் said...

ரொம்ப வலிக்குது மயிலன்.

நல்ல மருத்துவர்.

துறை சார்ந்த பதிவுகளைத் தாண்டி வெகு தூரம் நீழ்கிறது உங்கள் பார்வை.

கீர்த்திக்கு 12 முடியப் போகிறது. கிஷோருக்கு 17 முடிந்து 18.

செத்துப் போன குழந்தைக்கு 14. என்னவோ தெரியவில்லை அப்பனாய் பதறுகிறது மனசு.

நிறைய தற் கொலைகளை கடந்து வந்திருக்கிறீர்கள்.

சரியாய் பதிந்திருக்கிறீர்கள். நல்ல மருத்துவர் என்பதை விடவும் மிக நல்ல எழுத்தாளர் ஆக வாய்ப்புகள் உள்ளன.

இன்னும் சொல்லப் போனால் மரணத்திற்குப் பிறகு மருத்துவத்தை விடவும் அதிக காலத்திற்கு எழுத்தே உங்களை உயிர்த்திருக்க வைக்கும்.

அதற்கு கொஞ்சம்தான்.

அத்தகையதொரு எழுத்துக்கு மிக அருகில் இருக்கிறீர்கள் .

பேச வேண்டும்.

மகேந்திரன் said...

தற்கொலை சம்பந்தமாக மனவியல் அடிப்படையிலான

இந்தக் கட்டுரை ஒரு மருத்துவரின் பார்வையை மட்டுமல்லாது

அருமையான ஒரு எழுத்தாளனின் பார்வையையும் பதிவு செய்கிறது...

விக்கியுலகம் said...

தற்கொலை என்பது அவர்தம் உயிரை மட்டும் கொல்வதில்லை...

மனதினை உறுதி செய் என்றார்கள்...அந்த மனது ஒரு சிறிய தீப்பொறியால் தான் திசை மாறிவிடுகிறது...!

Anonymous said...

"இதெல்லாம் டாக்டர்களுக்கு பார்த்துப் பார்த்து பழகிப் போயிருக்கும்" என்ற பேச்சுக்களுக்கு அர்த்தம் தருகிறது.ஒவ்வொரு மருத்துவரும் இத்தனை மனப் போராட்டங்களை தங்களுக்குள் சுமந்து கொண்டு தான் வைத்தியம் பார்க்கின்றனர் என்ற உண்மையை உணர்த்துகிறது இந்தப் பதிவு.

அரசன் சே said...

வணக்கம் அண்ணாச்சி

நிரூபன் said...

வணக்கம் நண்பா..
கடந்து வந்த அனுபவங்களினூடாக,
தாங்கள் சந்தித்த வெவ்வேறு மனிதர்களூடாக தற்கொலைக்குரிய காரணம் பற்றியும், தற்கொலையினை நாடுவோரின் மன நிலை பற்றியும் அருமையான விளக்கப் பதிவு கொடுத்திருக்கிறீங்க.
நன்றி.

எஸ்தர் சபி said...

உண்மையில் நெஞ்சம் கணக்கிறது. அண்ணா. எதிர் பாராது எடுக்கும் அவசர முடிவுகளால் ஏற்படுவது துன்பமே. இது வைத்தியரான உங்களுக்கு மிக தெரிந்ததே..

இபடபடி நிறை அனுபவங்களை என் கண்முன்னே கண்டுள்ளேன் மயிலன் அண்ணா..

எஸ்தர் சபி said...

மிக சிந்திக்க வைக்கும் இடுக்கை அருமை அண்ணா..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

திடிரென தொன்றுண் எண்ணம தான் இதுக்கு காரணம் .. தற்கொலை தடுப்புக்காக விருது வாங்கியவர் கடைசியில் தற்கொலை செய்துகொண்டார் ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

ரேவா said...

மயிலன் எட்வின் ஜயா சொன்னதையே நானும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....

இறப்புக்கு பின்னால் அவர்களின் இருப்பை வட்டமடிக்கும் உங்கள் மனதை அனைவரும் கொண்டிருந்தால் எத்தனை சுகம்.......

யோசிக்காமல் இவர்கள் செய்யும் காரீயம் எத்தனை தூரத்திற்கு சுற்றியுள்ளவரை காயப்படுத்தும்......

பொதுவாக மருத்துவர் மனம் கோரசம்பவங்கள் பல பார்த்து மரத்துபோயிருக்குமென்பதை அறிந்திருக்கின்றேன் ஆனாலும் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும் நினைவுத்தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை புரியவைத்தீர்கள்...

அந்த மன நிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி குறிப்புகள் அத்தனையும் இந்த இறப்புகளுக்கு பொருந்திப்போகிறது.......

ஏனோ அந்த இறுதி வரிகளை படிக்கையில் உள்ளூர சோகம் தொற்றிக்கொள்கிறது... 14வயது சிறுமிக்கு எங்கிருந்து இத்தனை பெரிய தைரியம் வந்தது......

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு...என் முகப்புத்தகத்தின் நிலைபக்கத்தில் பதிகிறேன்................

மயிலன் said...

//satha said...
hmmm..Strong family history..:)//

உன்ன மாதிரி நண்பர்கள் இருக்கும் போது எந்த history geographyயும் தேவ இல்ல... :))

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//உங்க அம்மா பிழைச்சுட்டாங்க........! என்னுடைய அம்மா பிழைக்கல....... இருந்தா நானும் உங்க மாதிரி டாக்டர் ஆகியிருப்பேன்....... தற்கொலை செய்பவர்கள் சிந்திக்க....//

சுருக்கென்கிறது நண்பரே.. துயர நினைவுகளை கிளறி இருப்பேனாயின் மன்னியுங்கள்..

மயிலன் said...

Gowripriya said...
//well written mayilan...//

thank u so much ka..

// my heart skipped a beat when i read about your amma.. and saravana :( :(
feeling heavy hearted... //

much heavier to pen down those verses..

//autopsy, being a part of pathology curriculum, i too have a lot to write about...maybe after exams...//

yeah.. u cud say it in a better way.. with better words.. awaiting..

//by the way, your writing skills are getting sharper... //

it s more about how closer to our heart the substance is..

// (sorry, not able to type in tamil)//

never mind ka.. thanks for the visit..

மயிலன் said...

ரெவெரி said...

//நிறைய இறப்புகளை பார்த்திருப்பீர்கள்னு நினைச்சேன்...இவ்வளவு தற்கொலை...//

பட்டியல் இன்னும் பெரிது.. கட்டுரையின் நீளம் கருதி ஒரு பத்தியை அகற்றி விட்டேன்..

//Premeditated ஆ நடக்கும் குற்றங்கள் வெகு சிலவே..தற்கொலையும் விதிவிலக்கில்லை தானே...//

நிச்சயம்.. நிறைய நேரங்களில் தற்கொலை குறிப்புகள் கூட இருப்பதில்லை.. அந்த ஒரு

//தலைப்பு கவிதைத்துவமாய் இருந்தாலும்...கடைசி வரி வரை உங்களுக்குள் உள்ள கவியை அடக்கியதால் நல்ல கட்டுரை கிடைத்தது...//

புதுகவிதை எழுதுவது சுலபம்.. குறிப்பாக காதல் கவிதைகள்.. கட்டுரை எழுதுவதில் கடினம் அதிகமாய் உணர்கிறேன்..

//தொடர்ந்து இது போலவும் எழுதுங்கள் காதல் வைத்தியரே...//

முயற்சிக்கிறேன் நண்பரே...

மயிலன் said...

இரா.எட்வின் said...
//ரொம்ப வலிக்குது மயிலன்.

கீர்த்திக்கு 12 முடியப் போகிறது. கிஷோருக்கு 17 முடிந்து 18.

செத்துப் போன குழந்தைக்கு 14. என்னவோ தெரியவில்லை அப்பனாய் பதறுகிறது மனசு.//

ஹ்ம்ம்.. குழந்தை வளர்ப்பு பற்றி வரும் பெரும்பான்மையானோரின் எழுத்துக்கள் இந்த பகுதியை அதிகம் கையில் எடுப்பதில்லை..//நிறைய தற் கொலைகளை கடந்து வந்திருக்கிறீர்கள்.

சரியாய் பதிந்திருக்கிறீர்கள்.//

அந்த பத்திகளை எழுதும் போது எந்த வித வார்த்தை பிரயோக சிரத்தையும் இல்லை.. ஆழ்மனதின் வடுக்கள்..//நல்ல மருத்துவர் என்பதை விடவும் மிக நல்ல எழுத்தாளர் ஆக வாய்ப்புகள் உள்ளன.

இன்னும் சொல்லப் போனால் மரணத்திற்குப் பிறகு மருத்துவத்தை விடவும் அதிக காலத்திற்கு எழுத்தே உங்களை உயிர்த்திருக்க வைக்கும்.

அதற்கு கொஞ்சம்தான்.

அத்தகையதொரு எழுத்துக்கு மிக அருகில் இருக்கிறீர்கள் .

பேச வேண்டும்.//முன்னொரு இடுகையில் இப்படி சொல்லியிருந்தீர்கள் //லாவகமான நடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. எதைப் பற்றியும் எழுதவும் வருகிறது. இதில் ஒன்றும் இல்லை. ஆனால் வாசிக்கிற மாதிரி எழுத வருகிறது உங்களுக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஒன்றும் சும்மா எழுதவில்லை. எழுத்து என் தெய்வம் என்று நீங்கள் மிக விரைவில் வெளி வருவீர்கள். காத்திருப்பேன் தோழா.//

அதிலிருந்து ஒரு படி முன்னேறியுள்ளேன் என்பது போல உள்ளது இப்போதைய பின்னூட்டம்.. முயல்கிறேன் ஐயா.. மிக்க நன்றி

மயிலன் said...

//மகேந்திரன் said...
தற்கொலை சம்பந்தமாக மனவியல் அடிப்படையிலான

இந்தக் கட்டுரை ஒரு மருத்துவரின் பார்வையை மட்டுமல்லாது

அருமையான ஒரு எழுத்தாளனின் பார்வையையும் பதிவு செய்கிறது...//

நன்றி நண்பரே...

மயிலன் said...

விக்கியுலகம் said...
//தற்கொலை என்பது அவர்தம் உயிரை மட்டும் கொல்வதில்லை...
மனதினை உறுதி செய் என்றார்கள்...அந்த மனது ஒரு சிறிய தீப்பொறியால் தான் திசை மாறிவிடுகிறது...!/

எவ்வளவு உறுதி செய்தாலும் அந்த சிறு பொறி அதனை எளிதில் சாம்பலாக்கும்..

மேற்சொன்ன அதே கட்டுரைதான் சொல்கிறது இதுபோல மன உறுதி கட்டுப்பாடுகள் அதிகம் செய்பவர்கள்தான் தன்னை பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள்.. அவர்களே தற்கொலைக்கு மிக அருகில் இருப்பவர்கள்..

மயிலன் said...

vanangaan said...
//"இதெல்லாம் டாக்டர்களுக்கு பார்த்துப் பார்த்து பழகிப் போயிருக்கும்" என்ற பேச்சுக்களுக்கு அர்த்தம் தருகிறது. ஒவ்வொரு மருத்துவரும் இத்தனை மனப் போராட்டங்களை தங்களுக்குள் சுமந்து கொண்டு தான் வைத்தியம் பார்க்கின்றனர் என்ற உண்மையை உணர்த்துகிறது இந்தப் பதிவு.//

அப்படியும் சொல்லிவிட முடியாது...பழகி போனதும், மரத்து போனதும் கிட்டத்தட்ட உண்மைதான்... மறுப்பதற்கில்லை.. ஆனால் சில சம்பவங்கள் மனதை பிசைந்துவிட்டு போய்விடும்... அதன் அழுத்தமும் வீரியமும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட சற்று அதிகமாய் போய்விடுகிறது...

மயிலன் said...

//நிரூபன் said...
வணக்கம் நண்பா..
கடந்து வந்த அனுபவங்களினூடாக,
தாங்கள் சந்தித்த வெவ்வேறு மனிதர்களூடாக தற்கொலைக்குரிய காரணம் பற்றியும், தற்கொலையினை நாடுவோரின் மன நிலை பற்றியும் அருமையான விளக்கப் பதிவு கொடுத்திருக்கிறீங்க.
நன்றி.//

வாசிப்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நிரூ...

மயிலன் said...

எஸ்தர் சபி said...
//உண்மையில் நெஞ்சம் கணக்கிறது. அண்ணா. எதிர் பாராது எடுக்கும் அவசர முடிவுகளால் ஏற்படுவது துன்பமே. இது வைத்தியரான உங்களுக்கு மிக தெரிந்ததே..

இபடபடி நிறை அனுபவங்களை என் கண்முன்னே கண்டுள்ளேன்//நன்றி சகோதரி... உன்னுடைய போர்கால இடுகையும் அதே கணம் உடையதுதான்.. காரணம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை நேரடி அனுபவம் மட்டும் மட்டும்தான்.. வலிகளை விளக்கும்போது அதில் ஒரு சதவிகிதம் வெளிப்பட்டால் கூட அழுத்தம் அதிகமாகவே தெரியும்...

மயிலன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//திடிரென தொன்றுண் எண்ணம தான் இதுக்கு காரணம் .. தற்கொலை தடுப்புக்காக விருது வாங்கியவர் கடைசியில் தற்கொலை செய்துகொண்டார்//


ஆம்.. அவர் பெயர் சுதாகன்.. வயது 61.. கேரளத்தை சார்ந்தவர்..
கருத்துரைக்கு நன்றி சார்...

மயிலன் said...

ரேவா said...
//மயிலன் எட்வின் ஜயா சொன்னதையே நானும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....//

மிக்க நன்றி ரேவா..

//பொதுவாக மருத்துவர் மனம் கோரசம்பவங்கள் பல பார்த்து மரத்துபோயிருக்குமென்பதை அறிந்திருக்கின்றேன் ஆனாலும் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும் நினைவுத்தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை புரியவைத்தீர்கள்...இறப்புக்கு பின்னால் அவர்களின் இருப்பை வட்டமடிக்கும் உங்கள் மனதை அனைவரும் கொண்டிருந்தால் எத்தனை சுகம்.......//

இது எப்போதும் நடப்பதில்லை.. நாளுக்கு ஒரு மரணத்தையாவது பார்க்கிறேன்.. வார்டிற்கு மிக அருகில் எனது விடுதியறை என்பதனால் ஒப்பாரி சத்தம் கேட்ட வண்ணமே இருக்கும்... சில மரணங்கள்தான் இப்படி புரட்டி போட்டுவிடும்... முன்பு கொஞ்சம் புனைவு கலந்து எழுதியிருந்த மரண அறிவிப்பு எனும் சிறுகதையும் அந்த விதத்தில் ஒன்று..

//யோசிக்காமல் இவர்கள் செய்யும் காரீயம் எத்தனை தூரத்திற்கு சுற்றியுள்ளவரை காயப்படுத்தும்......
அந்த மன நிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி குறிப்புகள் அத்தனையும் இந்த இறப்புகளுக்கு பொருந்திப்போகிறது.......//

அதை பற்றி அதிகம் எழுதவில்லை.. அந்த மனவலியை அப்படியே அதே கருத்தாழத்தில் மொழி பெயர்த்தலும் கடினமே.. இன்னொரு பதிவு இதைப் பற்றி எழுதினால் முயற்சிக்கிறேன்


//அனைவரும் படிக்க வேண்டிய பதிவு...என் முகப்புத்தகத்தின் நிலைபக்கத்தில் பதிகிறேன்.......//

நன்றி தோழி...

அரசன் சே said...

சிறிய கசப்போ, விரக்தியோ தான் இப்படி ஒரு முடிவெடுத்து தங்களின் உயிரை மாய்த்துகொள்வதுடன்
சார்ந்தவர்களையும் நிம்மதியின்றி தவிக்க விடுகிறார்கள் ...

அரசன் சே said...

நேற்று சென்னையில் ஒரு பெண் இப்படிதான் அண்ணாச்சி ..
பனிரெண்டாம் வகுப்பில் 1148 மதிப்பெண் வாங்கி தேர்ச்சி அடைந்துருக்காங்க ..
அதை கொண்டாட பெற்றோர்கள் வீட்டில் உறவினர்களை அழைத்து பிரியாணி விருந்து வைத்திருக்காங்க ..
பிறகு பெற்றோர் எங்கோ வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் அந்த பெண்ணின் facebook தோழன் வந்து வாழ்த்து தெரிவித்து விட்டு பேசி கொண்டு இருந்தார்களாம் சற்று நேரத்தின் அந்த பெண்ணின் தாய் வீட்டிற்கு வந்து விட்டார் போலும் ..மகளை கண்டித்து திட்டி இருக்காங்க .. உடனே அந்த பெண் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி பண்ணி தலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதியாம்... என்னத்த சொல்ல ஒன்னும் சொல்ல முடியல .. அந்த நட்பு கிடைத்தது மூன்று நாட்களுக்கு முன்னர்தானாம் ...

அரசன் சே said...

சின்ன சிறு பிஞ்சுகள் சிறு தோல்வியையும் , ஏமாற்றத்தையும் தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இப்படி தவறு செய்கிறார்கள் .. பெற்றோர்கள் கொஞ்சம் கவனமுடன் விளக்கி வாழ்வியலை கற்று தரலாம் .. அவர்களுக்கு எங்கே நேரம் இருக்க போகின்றது இந்த பொருளாதார தேடலில் ...

அரசன் சே said...

இன்றைய சமூகத்துக்கு அவசர தேவையான அக்கறை பதிவு நண்பரே ...
உங்களின் இந்த பணி என்றும் தொடர என் வாழ்த்துகளை கூறி கொள்கிறேன் ..

ஹ ர ணி said...

அன்பு மயிலன்...

மனசொடிந்து போயிருக்கிறேன். உங்களுடைய அம்மா இன்னும் நீண்ட நாட்கள் இருக்கவேண்டும்.

ஓர் அற்புத மருத்துவனை...மனிதநேயமிக்க மருத்துவனை... சமுக அகக்றையும் பொறுப்புமிக்க மனிதனாக இயஙகுகிற ஒரு படைப்பாளனை இந்த ஊரும் உலகமும் கொண்டாடும நாள் வெகு தொலைவில்லை மயிலன். அப்போது அந்த ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக் கேட்டதாய் என உஙக்ள் அம்மா உங்களைக கொண்டாடும் பெரிய உயரத்திற்கு செல்லப்போகிறீர்கள். என்னுடைய வாழ்த்துக்கள்.

இத்தனை துயரங்களா எனும்போது மனசு கணக்கிறது மயிலன். என்னுடைய வாழ்வில் இதுபோன்ற தொடர் துயரங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

வாழவேண்டிய 30 வயதில் என்னுடைய மூத்த சகோதரி மூன்று பெண்குழந்தைகள் ஒரு ஆண்மகனுடன் விதவையானாள்.
என்னுடைய இரண்டாவது மூத்த சகோதரி தன்னுடைய இரு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்மகனை விட்டு இறந்துபோனாள்.

என்னுடைய தாய் மாமன் தொண்டையில் கேன்சர் வந்து துடிதுடித்து இறந்துபோனார். வாழ்க்கை முழுக்க துன்பங்களையே சந்தித்து வாழ்ந்தவர்.

இதற்குமேல் சொல்லமுடியாத எழுத்தில் எழுதமுடியாத துயரங்கள் உள்ளன. அவை பாலிடால் குடித்ததும்...தீயிட்டுக்கொண்டதும்..குழந்தைகளாய் கருகிப்போனதும்..சாலை விபத்தில் உடல் சிதைந்துபோனதும்...

நான் வாழ்வில் ஒரு நிலைக்கு வருவதற்குள் பல துன்பஙக்ளைச் சந்தித்தவன், இருப்பினும் எப்போதும் துன்பஙக்ளையும் தோல்விகளையும் கண்டு துவணடுவிடாமல் நம்பிக்கை ஒன்றை மட்டும் கொண்டு வாழ்வில் முன்னேறியவன்.

உங்களின் துயரங்களைப் பார்க்கையில் அதனை மீறி ஒரு நல்ல மருத்துவனை இந்த சமுகத்திற்கு தந்துவிட்ட இறைவனை வணங்குகிறேன். உங்களுக்காக என்னுடைய படைப்புலகின் ஒருபகுதியை காணிக்கையாக்குகிறேன் மனசார.

ஒரு நல்ல படைப்பாளன் சமுகத்தின் உயிர்காக்கும் மருத்துவனாகவும் இருப்பது இந்த சமுகம பெற்ற வரம்.

விச்சு said...

ஒரு நொடியில் எடுக்கும் முடிவு வாழ்க்கையை தொலைத்துவிடுகிறது.

திவ்யா @ தேன்மொழி said...

இரங்கற்செய்தி கண்டு (சற்று தாமதமாகத்தான்) வந்து சேர்ந்தேன்..! நம்மில் பலரும், இவ்வித அசம்பாவிதங்களுக்கு இன்றளவிலும் வெறும் மெளனப் பார்வையாளர்களே..!
//நான் பிறக்கும்முன்னே இறந்து போன பெரிய மாமா..;
(என் கதையில் 2 முறைமாமன்கள்..)
தூக்கு போட்டுக்கொண்ட அம்மா;
கடைசி நேரத்தில் ‘எப்படியாவது காப்பாத்திடுங்க, இனிமே சத்தியமா இதுமாதிரி பண்ணமாட்டேன்..’ //
போன்ற மனதிற்கு நெருக்கமானவர்களின் உயிர்ப்பிச்சைகள் என்று, தானாகத் தேடி வரும் ‘நிம்மதியான இறுதி உறக்கத்திற்கு’, கூர்க்கொம்புகளும் கோரப்பற்களும் பொறுத்த, முழுவீச்சுடன் பங்களித்தவர்கள், என்னுடைய(இதுவரையிலான)வாழ்விலும் ஏராளம்..! :(:(

//தற்கொலைக்கு முன்னான மனநிலை..?//
செத்துடணும்..
செத்துடணும்..
செத்துடணும்.. என்று ஜ(ச)பிக்கின்ற, சீரான இரத்த ஓட்டமில்லாத மூளையின் ஒரு பகுதி..! கிட்ட தட்ட காக்காய் வலிப்பிற்கு சமமான ஒரு நிகழ்பாடு..! எங்கே, எப்போ, எதற்கு, எப்படி என்றெல்லாம் வரையறுக்க இயலாத அகோரம்..!

“நான் இல்லாமல் போனால் தான் உங்களுக்கெல்லாம் தெரியும் என் அருமை” என்ற (தாழ்வுமனப்பான்மை தரும்) பகட்டான அதிமேதாவித்தனம், பழிதீர்க்கும் குரோதம்..
பரிதாபம் என்னவென்றால், நிரந்தரமாக இல்லாமல் போகப்போகிறது என்று தெரியும்போது தான் இவர்களுக்கு தெரிகிறது தத்தம் உயிரின் அருமை..! ஜபத்தின் மந்திரம் மாறிவிடுகிறது..
எல்லாம் போச்சு..
எல்லாம் போச்சு..
எல்லாம் போச்சு..
விளைவு- உயிர்ப்பிச்சைக் கதறல்கள். கண்ணில் படுபவர்கள் அனைவரும் உயிர்களை இருப்பில் வைத்துக்கொண்டிருப்பவரை தோன்றுவர் போலும்..!

//’தெரியாம..’ அதுதான் இங்கே குழப்பமே//
வா.. நாம செத்து செத்து விளையாடுவோமென்று அழைத்த மனதின் கூற்றை நம்பிச் சென்றிருப்பாள் போலும்.. விளையாட்டு வினையாகிப்போனதே..!


இம்மாதிரி சகிக்க இயலாத சம்பவங்களுக்கான விதைகள் (சில):

-சிறு வயதிலேயே(அழையா விருந்தாளியாய்)ஆழ் மனதிகுள் பதிந்து போகும் தவறான எடுத்துக்காட்டுகள். பெரும்பாலும் குடும்பச் சண்டைகளே..

-பொத்திப் பொத்தி, ம்.. என்பதற்குள், இதோ டா.. என்று வளர்க்கப்படும்(கெடுக்கப்படும்) செல்லங்கள்.. சகிப்புத்தன்மை என்ற வார்த்தையை அகராதியில்கூட கண்டிருக்க வாய்ப்பில்லை, இந்த புஜ்ஜிகள்..

-“strong family history “ என்றொரு நண்பர் கிண்டலடித்தார்.. “wrong family history” யில் வந்து மாட்டிக் கொண்டவர்கள் என்றுதான் சொல்லணும்.. குடும்பத்தில் ஓடும் வியாதிகளில் இதுவும் கைக்கோர்த்துக்கொண்டுவிட்டது.

-சிறு பொறி உயிரை எரிக்கும் தீயாய் மாறுவதற்கு முழு உடந்தையாய் இருக்கும் தனிமையுடனான தீய சகவாசம்..

-தற்கொலை செய்து கொள்வதற்கு காட்டும் வேகத்தை, அசட்டுத் துணிச்சலை, நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் அனைத்தையும் கொட்டித்தீர்ப்பதில் காட்டச்சொல்லத் தவறிய மூளை..

-இந்தச் சிந்தனையிலிருந்து விடுபட மருத்துவம்(மனோத் தத்துவம்) தன்னாலான உதவியை செய்வதற்கு காத்திருக்கிறது என்பதைப் பற்றிய அறியாமை..! “நா சாகப்போறது நிச்சயம். உங்களால முடிஞ்சத செஞ்சுக்கோங்க டாக்டர்” என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள் பலர், “நா ஒரு காலத்துல உளறினத போல, இப்ப இவனும் உளறுறான்.. என்னன்னு கேளுங்க டாக்டர்” என்று தமக்குத் தெரிந்தவர்களை கூட்டிவர ஆரம்பித்தது, இன்னும் ஆரம்ப கட்டத்தை தாண்டாமல் இருப்பது..!

மனதிற்கு நெருக்கமான பதிவு..!!! நெருடியது!

மயிலன் said...

அரசன் சே said...
//சிறிய கசப்போ, விரக்தியோ தான் இப்படி ஒரு முடிவெடுத்து தங்களின் உயிரை மாய்த்துகொள்வதுடன்
சார்ந்தவர்களையும் நிம்மதியின்றி தவிக்க விடுகிறார்கள் ...
சின்ன சிறு பிஞ்சுகள் சிறு தோல்வியையும் , ஏமாற்றத்தையும் தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இப்படி தவறு செய்கிறார்கள் .. பெற்றோர்கள் கொஞ்சம் கவனமுடன் விளக்கி வாழ்வியலை கற்று தரலாம் .. அவர்களுக்கு எங்கே நேரம் இருக்க போகின்றது இந்த பொருளாதார தேடலில் ...//

சரியாக சொன்னீர்கள் நண்பா..
ஆனாலும் தற்கொலை சூழலே தெரியாமல் தீர்கமான மணல்நிலையில் இருப்பவர்களும் மாய்ந்து தான் போகிறார்கள்..

//இன்றைய சமூகத்துக்கு அவசர தேவையான அக்கறை பதிவு நண்பரே ...
உங்களின் இந்த பணி என்றும் தொடர என் வாழ்த்துகளை கூறி கொள்கிறேன் .. //

நன்றி.. தொடருவோம்...

மயிலன் said...

@ ஹரணி ஐயா...

உங்களின் கருத்துரையை மூன்று நான்கு முறை வாசித்துவிட்டேன்.. கணிப்பொறி திரையை பார்த்துக்கொண்டு அப்படியே உறைகிறேன்...
உங்களின் வார்த்தைகளுக்கு நான் தகுதியானவன் இல்லையாயினும் அவ்வாறு இருக்கவாவது முயல்கிறேன்..
தொடர் கடுந்துயரங்களை சொல்லியிருந்தீர்கள்.. மனம் கனத்துவிட்டது ஐயா.. இவ்வளவையும் கடந்து நிற்கும் உங்களுக்கு தலை வணங்குகிறேன்.. நானாயின் நொறுங்கி போயிருப்பேன்..
மீண்டும் சொல்கிறேன் ஐயா.. இன்னும் ஒரு நெகிழ்ச்சி, அதிர்வு, சோகம், நம்பிக்கை, ஆச்சர்யம் என பலவான உணர்சிகள் தந்த உங்கள் கருத்துரை என்னை ஆட்கொண்டுவிட்டது..
மிக்க நன்றி ஐயா...

மயிலன் said...

@திவ்யா

கருத்துரை என்ற பேரில் ஒரு தனி பதிவே எழுதிட்ட போ...

ஒவ்வோர் வரியும் அருமை..
ஆனால் //strong family history “ என்றொரு நண்பர் கிண்டலடித்தார்.. “wrong family history” யில் வந்து மாட்டிக் கொண்டவர்கள் என்றுதான் சொல்லணும்..//

இந்த இடம் மட்டும் தவறுதலாய் புரிந்து கொண்டு விட்டாய்... அவர் கலாய்த்து இருப்பது என்னை.. நானும் தற்கொலை விளிம்பில் இருக்கிறேன் என்று பொருள் பட சொல்லி இருக்கிறார்.. :)

தாமதமான வருகை ஆயினும், கருத்துரை எப்போதும் போல.. :)

நன்றி திவ்யா..

சத்ரியன் said...

ஒரு துர்சம்பவத்தைக் காண நேரிட்டால் அச்சம்பவம் தொடர்பிலான நினைவுகள், ஊதுவத்தி புகை அசைந்து அசைந்து காற்றில் மேலேருவது போல மனதில் வந்தபடியே இருக்கும். அதில் தலையாய இடத்தைப் பிடித்துக்கொள்வது ‘தற்கொலை’ மரணங்கள் தான்.

இதோ இப்பகிர்வை படிக்கத்தொடங்கியதுமே பதினெட்டு வயது என் கனவை என் கையால் தீமுட்டிய அந்த அதிகாலை கண்ணில் விரிகிறது.

மயிலன் said...

கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே..
நிறைய பேருக்கு கடின நினைவுகளை கிளறிவிட்டுவிட்டேன்.. மன்னிக்கவும்..
ஆனாலும் நீங்கள் சொன்னது மிகச்சரி..
ஏதோ ஒரு புள்ளியில் இருந்து காட்சிகளின் கோபப்புகள் கொத்து கொத்தாக விழுகின்றன...

Uzhavan Raja said...

மனவலியால் ஏற்படும் சிந்தனையின் அடுத்த நொடிதான் மரணம்...

மிகவும் வலிக்கிறது அண்ணே...

ஸ்ரீராம். said...

சிந்தையைத் தூண்டிய பதிவு. தற்கொலைகள் பலவிதம். யாரையோ பழிவாங்குவதாய் நினைத்துக் கொண்டு முட்டாள் காரியங்களில் ஈடுபடும் அல்ப மனித மனம். படித்தவர், படிக்காதவர் வேறுபாடில்லை.

சமீப காலங்களில் கவலை கொள்ளச் செய்வது பள்ளியில், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் அல்ப தொல்விகளுக்கானத் தற்கொலைகள். பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என்று சமூகமே விழிப்புடன் ஒரு இயக்கம் போல நடத்தி இதைத் தடுக்க வேண்டிய காலம் இது.

cheena (சீனா) said...

அன்பின் மயிலன்

தலைப்பு அருமை. தற்கொலைகள் பெரும்பாலும் தற்செயலாக - ஒரு நிமிட எண்ணத்தில் - சடாரெனத் தான் நடக்கின்றன. திட்டமிட்டு நடப்பது மிகவும் குறைவு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம், சிறியதாகவோ பெரியதாகவோ ....தற்கொலையினைத் துவங்கிய பின்னர் மனம் மாறி உயிர் வாழத் துடிக்கும் பலர் ...... - மருத்துவர் அனுபவத்தில் சந்தித்த பல நபர்களைப் பற்றி எழுதிய பதிவு அருமை. சிந்திக்கத் தூண்டும் பதிவு. - நல்வாழ்த்துகள்- நட்புடன் சீனா

நெற்கொழுதாசன் said...

வாழ்வில் எப்போதும் சிறந்ததை தேடும் மனித மனதிற்கு மரணம் அவ்வேளையில் மிகச்சிறந்த வழியாய் தெரியப்பெருவது ஆச்சர்யம் அற்ற அவலம்..

அருமையான பதிவு
சமூகத்தில் இந்த அவலத்தை ஒழிக்க உண்மையில் இதுபோன்ற பதிவுகள் உதவும்.
பொதுவாக தற்கொலைக்கான காரணங்கள் மிக மிக அற்பமானவையாகதான் இருக்கின்றன.
கணநேர முடிவின் விபரீதங்களை வாசிக்க உண்மையில் நடுங்குகிறது மனம்

NIZAMUDEEN said...

சுமார் 2, 3 நிமிடங்கள் தோன்றும் தற்கொலை எண்ணத்தை, 'தற்காலிக மனநோய்' எனக் கூறலாமா?

ravishnkr said...

Well written.... tears rolled down towards the end... I initially thought medical course is all about treating diseases. But the true fact is at the end of day our perception of life and priorities in life changes!