சகித்தவர்கள்...

7 Jun 2012

எழவு விழுந்திருச்சு...


"மாமா... பன்னெண்டாவது நாளா இல்ல பதினாறாவது நாளான்னு பெரியப்பா கேக்க சொல்றாரு..."


"பதினாறே வெச்சுக்கலாமே... இப்ப எதுக்கு கெடந்து அந்த ஆளு தாவுராறுன்னு கேளு..."


பெரியப்பாவிடம் சொல்லிவிட்டு, தலையை அள்ளி கட்டாமல் அறையின் ஓரத்தில் படுத்திருக்கும் அம்மாவை சற்று நின்று நிதானித்து பார்த்துவிட்டு திண்ணையில் வந்து அமர்கிறான்... உள்ளங்கையை மட்டும் வெறித்து பார்த்துகொண்டிருக்கிறான்... அப்பா முதன் முதலில் நடை பழக்கும்போது பிடித்து நடக்க வைத்த அதே கை.. இன்று அதே கையால் அவருக்கு கொல்லி போட்டுவிட்டு வந்து அமர்ந்திருக்கிறான் ஷக்தி.. நேற்றைய முன்தினம் முன்னிரவில் பெசன்ட் நகர் கடற்கரை ஓரம் வண்டியின் பில்லியனில் கீர்த்தியுடன் பயணித்தவரையிலான அவனது வாழ்வில் அப்பா இருந்தார்.. அங்கிருந்து இந்த தருணம் எதெல்லாமோ அவனை நகற்றி கொண்டு வந்திருக்கிறது...


"எலேய் மாப்ள...இங்கிட்டு வா..."


"என்ன மாமா"


"அம்மா சாப்புடாம கெடக்குடா.. ஒரு நாளா சோறு தண்ணி சேராம கெடந்தா எப்புடி தாங்கும்..? சக்கர வேற இருக்கு அதுக்கு... நீ போயி சொல்லு... உன்ன பாத்தாதான் அதுக்கு கொஞ்சம் தெம்பு வரும்"


ஆனால் அம்மாவை பார்க்க எந்த ஒரு தெம்பும் இல்லை இவனிடம்.. ஐஸ்வர்யாவிடம் சொல்லலாம் என்றால் அவள் அம்மாவை விட மோசமாய் கிடக்கிறாள்.. பதினோராம் வகுப்பு படிக்கிறாள்..நேற்றைய முன்தினம் வீட்டிற்கு திரும்பிய பள்ளி சீருடையில்,பின்னல் அவிழ்ந்த இரட்டை ஜடையில் ஒரு ஓரத்தில் தேம்பிக்கொண்டிருக்கிறாள்.. கையில் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஃபிரேம் செய்யப்பட்ட அப்பாவின் புகைப்படம்.. மாறி மாறி இருவரையும் பார்ப்பதைத் தாண்டி எதுவும் செய்யமுடியவில்லை அவனால்... ஐ.டி இளைஞனின் அடையாளமாய் அவன் அணிந்திருக்கும் காதோர கடுக்கனும், கோரையாக்கப்பட்ட கேசமும், கழுத்தில் கிடக்கும் அந்த கருப்பு நிற பூச்சியும் மன்னார்குடியில் அவன் அமர்ந்திருக்கும் வீட்டு திண்ணையோடு துளியும் பொருந்தவில்லை...


"யய்யா, சத்தி... இங்க வாய்யா..."


"என்ன அப்பத்தா"


ஏற்கனவே ஒரு நாள் ஒப்பாரி முடித்திருந்த அந்த பாட்டி அவன் கன்னங்களை இருக்க பற்றி,


"ஐசு சாப்டுச்சாய்யா..?"


"இல்ல அப்பத்தா... நீ சாப்டியா?"


"என் வயித்துல பொறந்தவனே போயி சேந்துட்டான்... நான் இந்த உசுர புடிச்சு நிறுத்தி என்னத்த காண போறேன்..."


ஷக்திக்கு அழுகை கண்ணில் முட்டியது...


"நீ போயி நாலு காபி தண்ணி வாங்கிட்டு வந்து அதுகளுக்கு கொடுய்யா" என்று தன் கசங்கிய சேலையில் முடிந்து வைத்திருக்கும் பத்து ரூபாய் இரண்டை எடுத்து கொடுத்தது பாட்டி..


"காசிருக்கு பாட்டி... நா வாங்கிட்டு வர்றேன்..."


அடுப்பங்கரைக்கு சென்றவனுக்கு டீ வாங்கிவரும் குவளை எங்கிருக்கிறது என்றோ இல்லை எதுவென்பதோ தெரியவில்லை..


டீ கடையில்,
"தர்மலிங்கம் மவனா தம்பி..."


"ஆமாண்ணே.."


"மெட்ராஸ்ல இருக்கியளா? என்ன வேல பாக்குறீய?"


"இன்ஜினியரா இருக்கே அண்ணே...ஹ்ம்ம்.. மெட்ராஸ்தான்..." வார்த்தைகளில் துளியும் சுரத்து இல்லை...


"எப்புடியாவது குடும்பத்த காவந்து பண்ணிப்புடுய்யா... பள்ளிகோடம் முடிச்சுதுன்னா தங்கச்சிக்கு சட்டுன்னு கலயாணத்த பண்ணிபுடு... "


ஏதோ ஓர் பேரிடி இறங்கியது அவனுக்குள்..
"ஐஸ்வர்யா அவ்வளவு பெரியவளா? அதுக்குள்ள கல்யாணமா? கல்யாணம் எவ்வளவு பெரிய விஷயம்...நாதான் நின்னு நடத்தனுமா? ஆமா... மாப்பிள பாத்து, மண்டபம் பேசி, ஊரெல்லாம் சொல்லி... எல்லாமே நாதானே செய்யனும்... இதுவரைக்கும் சல்லி காசு சேத்து வெக்கலையே.. அப்பா எதுவும் வெச்சிருப்பாரா? இருந்தாலும் அது என்ன வெவரம்ன்னு அம்மாவுக்கு தெரியுமா? "


பாக்கெட்டில் மொபைல் கீச்சியது...


கீர்த்திதான்,
"don't lose heart da..
we r wit u...
we all ll come thr this weekend..
tc of mom and aish
love u lots.."


எந்த ஒரு ஆறுதலையும் தர இயலவில்லை அந்த குறுஞ்செய்திக்கு.. மாறாக செல்ஃபோனை switch off செய்யவைத்தது.. அப்பாவை இடுக்காட்டில் எரித்துவிட்டு திரும்பும்போது இருந்ததைவிட இப்போது இன்னும் பலவீனப்பட்டு போய்விட்டது அவனது நடை.. சரியாக கட்டதெரியாத வேஷ்டிவேறு தடுக்கிவிடுகிறது...


"அம்மாவுக்கு அவ்வளவு வெவரம் பத்தாது.. இவுங்க ரெண்டு பேரையும் எப்புடி இங்க விட்டுட்டு மெட்ராசுக்கு போறது...?"
சன்னாங்குளத்தைத் தாண்டும் போது மயக்கமே வந்துவிட்டது...பாலத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்...ஏதேதோ தன்னம்பிக்கை மொழிகளை தனக்குள் பேசி கொள்கிறான்... மனம் ஒரு நிறுத்ததிலும் சேரவில்லை..


"அம்மா இனி பொட்டு வெச்சுக்க மாட்டா.. அவ தெருவுல நடந்து வந்தா எதிர்ல வரவனெல்லாம் போகுற காரியம் வெளங்காதுன்னு திட்டுவான்... வாரந்தவறாம வெள்ளி கெழம இதுக்குதான் கோயிலுக்கு போனாளா? தனியா ஐஸ்வர்யாவ வெச்சுகிட்டு எப்புடி இந்த வீட்ல இருப்பா? கூட்டிட்டு போயிரலாமா? எல்லாத்தையும் வித்துட்டு...ஹ்ம்ம்... மெட்ராசோட போயிறலாம்... எல்லாத்தையும் வித்துட்டுன்னா? இங்க என்னென்ன இருக்கு.. அம்மாவுக்கு தெரியுமா? இல்ல.. மாமாவுக்கு தெரியும்..."


டீயின் சூடு இப்போது கொஞ்சம் கையில் தெரிகிறது அவனுக்கு.. எழுந்து நடக்க தொடங்கிவிட்டான்..


"அம்மாவ கொஞ்சம் தேத்திட்டா எல்லாம் சரி ஆயிரும்.. நாம எவ்வளவு திடமா இருக்கோமோ அவ்வளவு நல்லது...மாமா இருக்கார்... கொஞ்சம் உதவி செய்வார் நிச்சயம்.. என்ன... அவரோட பொண்ண கட்டிக்க சொல்லுவாரு...அதுதான் கஷ்டம்... கீர்த்திக்கு துரோகம் செய்ய முடியாது...பாவம்.. பாத்துக்கலாம்.. பேசுனா மாமா புரிஞ்சுப்பார்... . மொதல்ல அப்பா இருந்த இந்த ஊர விட்டு கெளம்பனும்...அப்போதான் அம்மா கொஞ்சம் தேறுவாங்க.. மெட்ராஸ்ல பசங்க இருக்காங்க பாத்துப்பானுங்க. கீர்த்திய பாக்கணும்..."


மொபைலை மீண்டும் switch on செய்துகொண்டான்...


"சொத்து பிரிக்க்லன்னு அப்பா சொல்லியிருக்கார்.. பெரியப்பா கொஞ்சம் பணத்தாச புடிச்சவரு தான் .. இருந்தாலும் இப்ப இருக்குற நெலமைல பெருசா எதுவும் ஏமாத்திட மாட்டாருன்னு நெனைக்கிறேன்.. அப்புடியே இருந்தாலும் அவருக்கு போக இருக்கறத கொடுக்கட்டும்.. பாத்துக்கலாம்.. நான் சம்பாதிக்கிறேன்.. நான் பாத்துப்பேன் என்னோட குடும்பத்த... கீர்த்தியும் புரிஞ்சுப்பா... "


எங்கிருந்தோ வந்த இந்த நம்பிக்கை எண்ணங்கள் அவனை வீட்டை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தது...


"ஒரு ரெண்டு மூணு வருஷம் life அப்புடியே fast forward ஆனா எப்புடி இருக்கும்...? அம்மா மிக சகஜ நிலைக்கு திரும்பி இருப்பாங்க... ஐஷு காலேஜ் ஜாயின் பண்ணியிருப்பா...கீர்த்தி வீட்ல அம்மாவை வெச்சு பேசியிருப்போம்.. கல்யாணம் கூட நடந்திருக்கும்...நா, அம்மா, ஐஷு, கீர்த்தி நாலு பேரு...ஒரு சின்ன சொந்த வீடு... கொஞ்ச நாள்ல அப்புடியே ஐஷுவுக்கும் மாப்பிள பாக்க ஆரம்பிக்கலாம்... இப்பயிலேந்தே காசு சேத்து வெக்கணும்... திரும்பவும் இந்த ஊருக்கே வர வேணாம்.. இருபத்தி நாலு வயசு ஆயிருச்சு... முப்பத்தி ரெண்டாயிரம் சம்பாதிக்கிறேன்... அப்பா இருந்து செய்யறத விட ஐஷு கலயாணத்த அமக்களமா பண்ணிறனும்...நா பாத்துக்குறேன்..."


இப்படியாக அவனது மன ஓரங்களிலெல்லாம் தன்னம்பிக்கை துளிர்விட்டுக் கொண்டிருந்த நேரம், இன்று அதிகாலை அப்பாவைப் பாடையில் கிடத்தி தூக்கி சென்றபோது அங்கே உலர்ந்த பூக்கள் கீழே சாலையின் ஓரத்தில் சில்லறையாய் கருகி கிடப்பதைப் பார்க்க நேரிடுகிறான்.. யார் வீடென்றே தெரியாத ஒரு காம்பவுண்டு சுவற்றில் சரிந்து விழுந்து என்ன நினைத்தானோ தெரியவில்லை,ஓவென அழ தொடங்குகிறான்....


எங்கிருந்தோ ஓடி வந்த இராமானுஜம் அண்ணன் அவனை கையிலேந்தி தூக்கி அவன் சட்டையை தட்டிவிட்டு, வேஷ்டியை சரிசெய்து....புலம்பி தவிக்கிறார்...


" ஐயா.. ஐயா.. சத்தி.. எந்திரிய்யா... ஆம்பள புள்ள தலையில கைவெச்சு அழக்கூடாதுப்பா... வா.. வீடு வரைக்கும் நானும் கூட வர்றேன்... வாய்யா..."


பிணமாய் நடக்க தொடங்குகிறான்...சட்டை பைக்குள் மொபைல் சத்தம் தொடர்ந்து கேட்கிறது.. அடுக்கடுக்காய் குறுஞ்செய்திகள்...


கீர்த்திதான்
"hey da..
wat hap..
y switched off?
attend my cal"


ஏனோ மீண்டும் switch off செய்துவிட்டு இராமானுஜம் அண்ணனின் தோளில் சாய்ந்து வீட்டினை நோக்கி நடக்கிறான்...
முற்றும்33 comments:

வீடு சுரேஸ்குமார் said...

விழுந்திருச்சு........!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உன் கவிதைகள் போலவே கதைகளும் அருமையாக உள்ளது

கோவி said...

பாசத்தை முன்னிறுத்தி அழகான கதை.. சோகம் என்றாலும் அருமை..

Philosophy Prabhakaran said...

உங்ககிட்ட அருமையான writing style இருக்கு... ஆனா அதிகமா எழுத மாட்டேங்குறீங்களே...

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//விழுந்திருச்சு........//

ஹ்ம்ம்...விழுந்திருச்சி...

மயிலன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//உன் கவிதைகள் போலவே கதைகளும் அருமையாக உள்ளது//

நன்றி சார்..
எல்லாம் நம்ம பள்ளிக்கூடத்துல படிச்சதுதான்..:)

மயிலன் said...

கோவி said...
//பாசத்தை முன்னிறுத்தி அழகான கதை.. சோகம் என்றாலும் அருமை..//

நன்றி கோவி...
காதல் கவிஞர் உங்களுக்கு, இது ரொம்பவும் சோகமாய் இருந்திருக்கும்...

மயிலன் said...

Philosophy Prabhakaran said...
//உங்ககிட்ட அருமையான writing style இருக்கு... ஆனா அதிகமா எழுத மாட்டேங்குறீங்களே...//

இதுக்கே..."ஏன் மாமா மொக்க போடுற?"ன்னு பசங்க சல்ல பண்றானுங்க..
எழுதுவோம்.. எங்க போயிட போறோம்...?

எஸ்தர் சபி said...

சோகம் முட்டி மோதியது அண்ணா....

பேச்சு நடையை நீல நிறத்தில் காட்டியுள்ளீர்கள் நல்ல உத்தி....

Naveen Kumar said...

உணர்வு பூர்வமான பதிப்பு......
படித்து முடிக்கையில் விழியின் ஓரம் லேசாய் நீர்த்துளி தேங்கியது.....
அருமை உமது எழுத்து பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்......

ரெவெரி said...

கலர் கலரா கதை...

என்ன சோகமாயிட்டு...கவிதைக்கு வெயிட்டிங் (It keeps me young...-:))...மயிலரே

cheena (சீனா) said...

அன்பின் மயிலன்

கதை நடை நன்று. இறுதியில் அலை பேசியினை அணைத்தது தங்கையினைக் கரை சேர்க்க எடுத்த முடிவெனத் தெரிகிறது. கீர்த்தியினிடம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் நன்று. பாட்டி ஐசு சாப்பிட்டதா எனக் கேட்பதும் - பணம் கொடுப்பதும் - அருமை. நல்வாழ்த்துகள் மயிலன் - நட்புடன் சீனா

வெளங்காதவன்™ said...

சொல்லவியலா சோகம் சொல்லில்!

:-(

மயிலன் said...

எஸ்தர் சபி said...
//சோகம் முட்டி மோதியது அண்ணா....
பேச்சு நடையை நீல நிறத்தில் காட்டியுள்ளீர்கள் நல்ல உத்தி....//

முன்பே நிரூபன் கேட்டுகொண்டதுதான் அது.. :)

மயிலன் said...

Naveen Kumar said...
//உணர்வு பூர்வமான பதிப்பு......
படித்து முடிக்கையில் விழியின் ஓரம் லேசாய் நீர்த்துளி தேங்கியது.....
அருமை உமது எழுத்து பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.....//

மிக்க நன்றி நண்பரே..
தொடர்ந்து வாருங்கள்...

மயிலன் said...

ரெவெரி said...
//கலர் கலரா கதை...
என்ன சோகமாயிட்டு...//

ஏன்னு தெரியல.. யோசிக்கறது எல்லாமே சோக கிளைமாக்ஸ்தான் வருது... இரவானவள் மாதிரி இன்னொரு கதை எழுதணும்.. :)

//கவிதைக்கு வெயிட்டிங் (It keeps me young...-:))...மயிலரே//

அநேகமாய் நான் எழுதும் கவிதைகளை(?!) இரசிக்கும் ஒரே ஒருவர் நீங்கள்தான்..

மயிலன் said...

//அன்பின் மயிலன்

கதை நடை நன்று. இறுதியில் அலை பேசியினை அணைத்தது தங்கையினைக் கரை சேர்க்க எடுத்த முடிவெனத் தெரிகிறது. கீர்த்தியினிடம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் நன்று. பாட்டி ஐசு சாப்பிட்டதா எனக் கேட்பதும் - பணம் கொடுப்பதும் - அருமை. நல்வாழ்த்துகள் மயிலன் - நட்புடன் சீனா//


மிக்க நன்றி ஐயா...

மயிலன் said...

வெளங்காதவன்™ said...
//சொல்லவியலா சோகம் சொல்லில்!//

சொல்லவந்ததை சரிபட சொல்ல தவறிய சொற்கள்... :(

திவ்யா @ தேன்மொழி said...

எழவு விழுந்திருச்சு..
கனவு முடிஞ்சிருச்சு..
மனசு கனத்திடுச்சு..
உறவு வலுத்திடுச்சு..
‘சக்தி’ (புதுசா) பொறந்துடுச்சு..!:)

ஏனோ எனக்கு கதையின் முடிவு சோகமாகப் படவில்லை..!all is well:)

ஹ ர ணி said...

மயிலன்...

இப்படித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் விதிக்கப்பட்டுவிட்டது என்கிற உணர்வுடன். அப்பாவைப் பற்றி எது எழுதினாலும் மனம் கணத்துவிடும் எனக்கு. நான் ஏராளமான வடிவங்களில் என்னுடைய அப்பாவைத் தரிசித்து என்னுடைய கதைகளில் உலவ விட்டிருக்கிறேன். இப்போது முழுமையாக ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். முடிந்துவிடும் நிலையில் அப்பாவின் முடியாத நினைவைத் தேக்கியபடி.

எழுதுங்கள் தொடர்ந்து. ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான சிறுகதைத் தொகுப்பிற்கான வித்து இது. எழுத்துலகில் ஒருஇடம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஜீ... said...

மிக அருமையாக ஓரிரு வார்த்தைகளின் பிரயோகத்திலேயே முழுமையாக சொல்லவந்ததை நச்சுன்னு சொல்றீங்க..அந்த சோகம் அப்படியே உணர முடிகிறது.

விக்னேஷ் ஜானகிராம் said...

கடந்த மூன்று மாதங்களாக என்னை சிதறி நிகழ்ந்தவைகளை அப்படியே மறு ஓட்டம். செய்தார் போல் இருந்தது...
எல்லாருடைய உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரும் இப்படித்தான் இருப்பார்களோ!!!!!!!

விக்னேஷ் ஜானகிராம் said...

படிக்கும் போதே என் கண்களில்நீர் மல்கியது....அருமையான பதிவு,,,

ஜேகே said...

நல்ல கதை மயிலன் ..

கொஞ்சம் கீர்த்தி விஷயத்தில அதிகம் எழுதியிருந்தால் .. அவன் சுவிட்ச் ஆப் பண்ணும்போது இன்னமும் அழுத்தம் கூடியிருக்குமோ?

கதையின் வெற்றி என்று கருதுவது கீர்த்தியை தப்பாக்க காட்டாது விடுவதே. அது அவனின் மனநிலையை இன்னமும் குழப்பமாக்கிறது. நல்லவனா கெட்டவனா என்ற விஷயத்துக்கே நீங்கள் போகவில்லை.. உணர்ச்சிகள் நல்லது கெட்டது அறிவதில்லை என்று நினைக்கிறேன் ..

கலக்குங்க தலைவரே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம ஸ்டோரி பாஸ். நல்ல நேரேசன்........ கதைக்களம் அப்படியே கண்ணு முன்னால வந்துடுச்சு......... !

மயிலன் said...

திவ்யா @ தேன்மொழி said...

//ஏனோ எனக்கு கதையின் முடிவு சோகமாகப் படவில்லை..!all is well:)//

சூப்பர்... ஆனால் சோகமாதான் முடிக்க ட்ரை பண்ணேன்...

மயிலன் said...

ஹ ர ணி said..

//இப்படித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் விதிக்கப்பட்டுவிட்டது என்கிற உணர்வுடன். அப்பாவைப் பற்றி எது எழுதினாலும் மனம் கணத்துவிடும் எனக்கு. //
கடினமான நினைவுகளை கிளரிவிட்டேனாயின் மன்னிக்கவும் ஐயா...

// நான் ஏராளமான வடிவங்களில் என்னுடைய அப்பாவைத் தரிசித்து என்னுடைய கதைகளில் உலவ விட்டிருக்கிறேன். இப்போது முழுமையாக ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். முடிந்துவிடும் நிலையில் அப்பாவின் முடியாத நினைவைத் தேக்கியபடி.//

ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...

மயிலன் said...

ஜீ... said...
//மிக அருமையாக ஓரிரு வார்த்தைகளின் பிரயோகத்திலேயே முழுமையாக சொல்லவந்ததை நச்சுன்னு சொல்றீங்க..அந்த சோகம் அப்படியே உணர முடிகிறது.//

ரொம்ப சந்தோஷமான மனநிலைகளில் எழுதும் போது சோக கதைகள் நல்லா வருது...:)

மயிலன் said...

விக்னேஷ் ஜானகிராம் said...
//கடந்த மூன்று மாதங்களாக என்னை சிதறி நிகழ்ந்தவைகளை அப்படியே மறு ஓட்டம். செய்தார் போல் இருந்தது...//

மன்னிக்கவும்..நினைவுகளை மீட்டமைக்கு...


//எல்லாருடைய உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரும் இப்படித்தான் இருப்பார்களோ!!!//

பெரும்பாலும்.. :)

மயிலன் said...

ஜேகே said...
//நல்ல கதை மயிலன் ..
கொஞ்சம் கீர்த்தி விஷயத்தில அதிகம் எழுதியிருந்தால் .. அவன் சுவிட்ச் ஆப் பண்ணும்போது இன்னமும் அழுத்தம் கூடியிருக்குமோ?//

ஹ்ம்ம்... அந்த character தான் கரு என்றாலும் அதனை அதிகம் கையாள வேண்டாம் என்று விட்டது.. அழுத்தம் குறைந்து போனது உண்மைதான்..

//கதையின் வெற்றி என்று கருதுவது கீர்த்தியை தப்பாக்க காட்டாது விடுவதே. அது அவனின் மனநிலையை இன்னமும் குழப்பமாக்கிறது. நல்லவனா கெட்டவனா என்ற விஷயத்துக்கே நீங்கள் போகவில்லை.. உணர்ச்சிகள் நல்லது கெட்டது அறிவதில்லை என்று நினைக்கிறேன் ..//

நிச்சயம் ஜேகே..அந்த ஒரு சூல்நிழைக்குள் சிக்கும் குழப்ப நிலை..புத்தி நிச்சயம் பேதலிக்கும்...

மயிலன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//செம ஸ்டோரி பாஸ். நல்ல நேரேசன்........ கதைக்களம் அப்படியே கண்ணு முன்னால வந்துடுச்சு......... !//

ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க அண்ணே... மிக்க நன்றி..

Anonymous said...

Hello Love Dr...Hope you are doing well...(!!!?)...I am out of the country on a business trip this week and it costs a fortune to get online...I learnt from FB that you would be in valaicharam this week...Congrats...I will miss it and will read when I am back...

Hope you have something special up in your sleeves this week...Keep rocking...

ananthu said...

இறந்து போன எனது தந்தையை நியாபகப்படுத்தியது இந்த கதை ... நினைவுகளை அசை போட வைப்பதே சிறந்த கதையின் சிறப்பு ... நேரமிருந்தால் படிக்கவும் சுமைகள் ... - சிறுகதை http://pesalamblogalam.blogspot.in/2012/06/blog-post.html