சகித்தவர்கள்...

27 Aug 2012

கவியரங்க கசமுசா....

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

உசேன் போல்ட்டும், ஒபாமாவும் காலையில் இருந்து கொடுக்கும் தொடர் நச்சரிப்பின் பேரில் நேற்று பதிவர் மாநாட்டு கவியரங்கில் நான் வாசித்த கவிதை(?)யை, இதோ உங்களுக்கு காட்சியாக்குகிறேன்... வீடியோவை ஆன்செய்துவிட்டு, பின்னர் pause செய்யவும்...முழுவதும் buffer ஆனதும் play செய்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்... (ரொம்ப மினக்கெட்டு இருக்கேன்யா...இந்த youtube எழவுல இத ஏத்த...)
இந்த கவிதையில் வரும் கதாபாத்திரங்கள் சம்பவங்கள் கற்பனையல்ல....உண்மை 

கவி பாட வேண்டுமாம் 
நமக்கு கவிதையே தகிடதித்தோம்... இதில் பாட வேற வேண்டுமா?
இலக்கணமோ இலக்கியமோ எதிர்ப்பார்த்திருப்போர் 
தக்காளிகளையும் முட்டைகளையும் தயாராய் வைத்து கொள்ளுங்கள் 
காரணம்- நான் சத்தியமாய் அவனில்லை..
மிச்சமின்றி உங்கள் சகிப்பை சோதித்திட- மேடை 
அச்சம் மறைத்து துவங்குகிறேன்...
அவை பெரியோர்க்கும், ஆங்காங்கே தெரியும் சிறுசுகளுக்கும் வணக்கங்கள்...

அப்போது வயது மூன்றாம் எனக்கு...
எட்டரை மணியை அதிகாலையென கொண்டு 
பட்டனறுந்த சீருடையில் சிக்கி- அம்மா அப்பிவைக்கும் 
அரை இன்ச் பவுடர்,அரை கை எண்ணையோடு 
அரை நிஜார் சிறுவர்கள், எங்களை வைத்து நடத்தினார்கள் 
உண்மையான சிறை நிரப்பும் போராட்டம்- பள்ளிக்கூடமாம் அது.
ரிக்ஷா மணி கேட்ட பின்னான என் ஒத்துழையாமை இயக்கம்
சிறு எக்ளைர்ஸ் மிட்டாயில் தவிடு பொடியாகும் 
ஆச்சர்யம்! மிட்டாய் முடிந்தபின் அழுததில்லை நான்...
வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்- காரணம் வேறில்லை 
பக்கத்து சீட்டு பிரியாதான்... - இட பிரெச்சனையில்
சக்கலத்தன் ஸ்லேட்டை முழங்கால்சகிதம் 
சுக்குநூறாக்க....மறுநொடி விழுந்த முதுகு பூசையில் 
படுசிக்கலாகி போனது அந்த காதல் கதை...

அப்போது வயது பதிமூன்றாம் எனக்கு...
அதுவரை தொட்டுபேசியிருந்த தோழிகள் பூப்பெய்திவிட்டார்களாம் 
சட்டென தூரம் தேவைப்பட்டுவிட்டது...
முன்னிரண்டு பற்கள் தெரிய சிரிப்பதற்கும் 
முப்பத்திஇரண்டும் தெரிவதற்கும் வித்தியாசம் புரிய தொடங்கியது 
துப்பட்டாவின் வினையறிந்த நாளிலேயே அது துரோகியாகிபோனது 
அப்பட்டமாய் ஏதும் நடக்கவில்லை எனினும்- ஆங்காங்கே மனதினுள் 
தப்பட்டம் அடிக்கத்தான் செய்தது பட்டாம்பூச்சிகள்...
கன்னியவள் கண்டுதொலைத்தால்
கன்னத்தில் பரு முளைக்குமாம் 
சந்திரிக்கா சோப்பை நிறுத்திபார்த்தும்,
சண்டாள பருவிற்கு வழியேயில்லை...


நீ இல்லாம எப்படி செல்லம்...?


அப்போது வயது பதினெட்டாம் எனக்கு..
பூங்கா நகர் மின்சார இரயிலில் என்னோடு சேர்ந்து 
ஃபுட்போர்டு அடித்தது என் காதல் கனவுகள்...
இந்த பெருநகரின் பாரிமுனையில் 
கல்லூரியின் பாடாவதி வகுப்பறையில்  
ஜீவனுற்றது என் சிவப்பு சுடிதார் படலம் 
கதாநாயகி மூன்றாவது பெஞ்சின் முக்கத்தில் இருக்க 
கதையும் வசனமும் பக்கதிலிருக்க 
கதாநாயகத்தனம்தான் வசமில்லை நமக்கு...
'வாழும் கலை பயிற்சி' ரவிசங்கருக்கு பதிலாக 
'காதல் கலை பயிற்சி' தபூசங்கரிடம் சிக்கிக்கொண்டேன்...
தேவதையின் ஓர பார்வை பட்டாலே 
என் டைரி கதறி அழத்தொடங்கும் கவிதை பீதியில்...
"கொங்கு ஏரியா பொண்ணு, 
சங்கு ஊதிருவானுங்க" என்று நண்பர்கள் 
நங்கென கொட்டியதில் 
கண்றாவியாய் முடிந்தது 
கையாலாகா கல்லூரி வாழ்க்கை...

சமயம் பார்த்து சிக்கியது பாவப்பட்ட பதிவுலகம்...
தலைவகுடு, சரிகைமை,, குங்குமம், தாவணி,காட்டன் சேலை,
சந்தனக்கீற்று,முன்நெற்றி கற்றை முடி, கொசுவம்,சீருடை,
ஜியோமெட்ரி பாக்ஸ்,கோவில்,மார்கழி கோலம்,மழைவாசம், பனித்துளி,
என்ற என் காதல் கருக்களுக்கு காஜலையும் சமந்தாவையும் 
வாடகை தாயாக்கி, பதிவேற்றி கணினிமுன் காத்திருந்தால் 
வந்துசேரும் பெண்ணுலகின் கிளாசிக் கமென்ட் ஒன்று,
"அருமை சகோ" என்று...

இப்போது இந்த நொடி இருபத்தியாறு எனக்கு,
தாடி என் முகத்திற்கு ஆகாது 
பீடி என் உடம்பிற்கு ஆகாது
தேடி சலுத்தாயிர்று...
TUBELIGHT உம் பல்பும் பல இருந்தும் வீட்டில் 
விளக்குதான் ஏற்றவேண்டுமாம் அம்மாவிற்கு 
சரி...சிறியவனுக்கு வக்கில்லை என்று ஒருவழியாய் 
பெரியோர்களால் நிச்சயிக்கபட்டது திருமணமும்
எங்கேயோ தேடி என் ஒட்டு மொத்த தேடலையும் ஒன்றாய் நிறுத்தி...

மருத்துவச்சி இல்லை,
உயரம் சராசரிக்கு குறைவுதான்,
ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லை
அச்சசல் கிராமத்து வார்ப்பு...
சுருக்கமாய் எனக்கான தனி கவிதை...
அணுஅணுவாய் எனை ஆட்கொள்ள 
பிறந்தவளுக்கு பெயர் அனுஷ்யாவாம்...
அக்டோபர் கடைசி ஞாயிறு 
பட்டுக்கோட்டையில்தான்  திருமணம்- 
என் இல்லாளை கரம் பிடிக்கும் பொன்னாளில்
பல பொல்லாத காரணம் சொல்லி 
நீங்கள் இல்லாத குறை வேண்டாம்...
உங்களுக்கான காத்திருப்பில்... சி.மயிலன்

நன்றி: இதை பொறுமையுடன் படம்பிடித்து கொடுத்த நண்பர் அபி அவர்களுக்கு 


அபியும் நானும்...கூடவே கோவியும்...

பின்குறிப்பு 1:

இரண்டு முக்கியமான சந்தோஷங்கள் வீடியோவில் பார்த்திருப்பீர்கள்... ஒன்று பட்டுக்கோட்டை பிரபாகர் தாமாய் முன்வந்து கை குலுக்கியது... மற்றொன்று சுரேகாவின் வாழ்த்து... நெகிழ்ச்சியில் உண்மையில் உறைந்துதான் விட்டேன்... ஆனால் இவ்விரண்டையும் புறந்தள்ளி இந்த தருணம் வரை என்னால் சிலாகிக்க முடிவது, சற்றே முன்நெற்றி வழுக்கையோடு, எஞ்சியிருக்கும் மயிர்கள் நரைத்து, தளர்ந்த குரலில் ஒரு தள்ளாத வயதுக்கார பதிவர், நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு வந்து, "ரொம்ப யதார்த்தமா, வாசிச்சே தம்பி... நல்லா இருந்தது" என்ற கமென்ட்... ஐ.டி கார்ட் அணிந்திராத அவரிடம் "நீங்கள்?" என்று கேட்க ஏனோ தோணவில்லை...

பின்குறிப்பு 2:

நேரலையில் பார்த்த நண்பர்கள் பாதியே புரிந்ததாகவும், வரிகளை பிரசுரிக்குமாறும் சொல்லியிருந்தனர்... ஒளிபரப்பில் பிழையில்லை... சுரேகா சொன்னது போல கொஞ்சம் வேகமாய் வாசித்ததுதான் காரணம்... மேலும் கவியரங்கம் என்றால் பன்னிரண்டு வரிகளை மூன்று மூன்று முறை வாசித்து முப்பத்தி ஆறு வரிகளாய் மாற்றிடுவர்... நமக்கு வரிகள் அதிகம் என்பதாலும், அனுமதிக்கப்பட்ட நேரம் குறைவு என்பதாலும், கொஞ்சம் புரிதலில் கஷ்டம் ஏற்பட்டுவிட்டது... மன்னிக்கவும்...

பின்குறிப்பு 3:

நேரலை பார்த்த நண்பன் ஒருவன் குறுஞ்செய்தி அனுப்பினான்..."மச்சி, வாசிப்பு பார்த்திபன் ஸ்டைலில் இருந்தது என்று..." சுத்தமாய் மாடுலேஷனே இல்லாத அவரது பாணி எனக்கு அறவே பிடிக்காது என்பதால் அந்த கமென்ட் தலையில் உரக்க கொட்டியது...


நன்றியுடன்...சி.மயிலன்
26 Aug 2012

பதிவர் சந்திப்பு- எனக்கொரு உண்ம தெரிஞ்சாவனுஞ் சாமி...
அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

சென்னையில் உலக தமிழ் வலைப்பதிவர் மாநாடு... கொஞ்ச நாட்களாகவே கிளம்பியிருந்த எண்ணம், ஆசை அல்லது ஏக்கம்.. இத்தனை நாட்களாய் நேரில் காணாமல் வெறுமனே வலை வழியே ஒருமையில் அழைத்து பேசும் அளவிற்கு நண்பர்களாகி போனவர்களை சந்தித்த, நினைவில் நீங்கா நாள்...இப்படியொரு பதிவு வேண்டாம் என்றுதான் நினைத்தேன்... ஓராண்டு பதிவுலகில் இருந்தமைக்கு ஓர் ஆத்மதிருப்தி... அதை கட்டாயம் பகிர வேண்டும் 


முக்கிய நிகழ்வுகள்-

முந்தைய நாள் மாலை ராமானுசம் ஐயா,சென்னை பித்தன் ஐயா, இருவரும் பல யூத்துகளுக்கு மத்தியில் விழா ஏற்பாடுகளில் அக்கறை காட்டிய விதம் மிரட்சி... (மதுமதியும், மோகன்குமாரும் யூத்தா?... என்னமோ போடா நாராயணா...) 

அப்போது  "மெட்ராஸ் பவன்" சிவக்குமார் அங்கு கொண்டுவந்த காராசேவ் பாக்கெட் ( யோவ்...இதுவும் முக்கிய நிகழ்வுதான்யா...)

காலை பத்து மணிக்கு ஆரம்பிப்பதாய் சொன்ன மாநாடு சரியாக பத்து மணிக்கு துவங்கப்பட்டது... ( அட...)

நேரடி ஒளிபரப்பு துல்லியமாய் வழங்கப்பட்டுள்ளது ( நம்ம வீட்டம்மா, அப்பப்போ லைவ் கமெண்டிங்...டிங்..டிங்...)

ஒரு போட்டோ க்ளிக் செய்யும் பொழுதிற்கும் குறைவான நேரத்தில் தன் அறிமுகத்தை முடித்துக்கொண்டார் பிலாசபி... (யோவ்..உனக்குத்தான் மணிரத்னத்த பிடிக்காதே..)

சேட்டைக்காரன் முகமூடி துறந்தார்...அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி... வயது ஐம்பத்து எட்டாம்... ( ஸ்ரேயா கவனத்திற்கு.. )

ஆரூர்- ஆஷிக் கட்டிபிடி வைத்தியம்... (தைரியம் இருந்தா எங்க நக்ஸ கட்டிபுடியா பாக்கலாம்...)

எனக்கு சாகித்ய அகாடமி சார்பில் 'வாழும் சுஜாதா' என்ற பட்டம் கொடுத்த "உண்மையை" மேடையில் உலகத்திற்கு சொல்லிவிட்டேன்.. ( ஆரம்பிச்சுட்டான்டா.. )

மதியம் உண்மையிலேயே மிக நல்ல சாப்பாடு போட்டார்கள்... ஆமா.. ஊறுகா வெச்சாங்களா? (டேய் அதெல்லாம் தொட்டு சாப்டனும்... கொழச்சு அடிக்கக்கூடாது )

அந்த ஏரியாவில் பார்ப்பவர்கள் எல்லாம் பதிவர்களாக இருக்க,அதே நினைப்பில் அருகில் இருந்த டாஸ்மாக்கில் இருந்து வெளியே வந்தவரிடம், "நீங்க எந்த ப்ளாக் வெச்சிருக்கீங்க"ன்னு அஞ்சாசிங்கம் கேட்க, "அஞ்சு ரூபா இருந்தா கொடேன்" என்று அவர் கப்படித்தார்... ( ஏய்... யாருகிட்ட? ) 

சாப்பாட்டிற்கு பின்பு தூங்கவிடாத சுரேகாவின் தொகுத்துவழங்கும் உத்தி... ( 'கை தட்டினால் ஏற்படும் நன்மைகள்'ன்னு சார் ஒரு தனி புக்கே போடலாம்...)

மூத்த பதிவர்களுக்கான பாராட்டுவிழா... அந்த நேரம் கூட்டத்தில் சலசலப்பு இல்லாமல் வீற்றிருந்த அமைதி அவர்களுக்கான மரியாதை... (இன்னொரு 34 வருஷம் கழிச்சு எனக்கும் தருவாங்க... )

"தென்றலின் கனவு" புத்தக வெளியீடு.. ( தென்றல் அக்கா ரொம்ப நல்லவங்க... இலவசமா எல்லாருக்கும் ஒரு காப்பி...)

கவியரங்கத்தில் ஒரு கலவரம்.. வேற யாரு? நான்தான்.. (அடிவாங்காம ஊரு வந்து சேந்தது எம்புட்டு பெரிய கஷ்டம்)

பட்டுகோட்டை பிராபகர்- சிறப்பு விருந்தினர் உரை.. அந்த காலத்தில் இருந்த "கையெழுத்து" பத்திரிகை பற்றிய பேச்சு... சுஜாதாவும் ப்ளாக் என்பதை அதோடுதான் ஒப்பிட்டு இருப்பார்.. (பெரிய மனுசய்ங்க பெரிய மனுசய்ங்கதான்)

வருத்தம்-

எதிர்பார்த்திருந்து வராமல் போன "வீடு" சுரேஸ்குமார், "இரவு வானம்" சுரேஷ், "ராஜப்பாட்டை" ராஜா, "தேன்சிட்டு" தேன்மொழி 

நேரமின்மை காரணமாய் விழா முடியும் முன்னரே கிளம்ப வேண்டியதானது..

இன்னும் இதுவரை சந்திக்காத, உரையாடாத எட்வின் ஐயா, ஹரணி ஐயா, நண்பர் ஜேகே... (பதிவர் சந்திப்புகளில் அது சாத்தியப்படாது )

வழக்கமாய் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தாலே போட்டோ போட்டு கமென்ட் போடுவார்கள்... கிளிஷேவாக இருந்தாலும் இருந்து தொலைக்கட்டும்... என் பங்கிற்கு நான் 

அடையார் அஜித்தும், ராமானுஜம் ஐயாவும்

சேட்டைக்காரனுடன்.... வேற வேற வேற....வேட்டைக்காரன்... 

பி.பி கள்... ஜாக்கி, கண்ணாடி போடாமல் சிபி, கேபிள்

அரசன், ஆரூர் மூனா, பிரபா, செல்வின்

"நீங்க என்ன ப்ளாக் வெச்சிருக்கீங்க" சம்பவிதிற்கு பின் அஞ்சாசிங்கம்

"வீட்டுக்காரம்மாவுக்கு ஒரு பார்சல் கட்டுய்யா"... 
ராஜுடன் பட்டிக்காட்டான் 

"யோவ்.. ஏன்யா இங்க வந்து...?" 
பட்டிகாட்டானிடம் மன்றாடும் மெட்ராஸ்பவன்


நாளைய இயக்குனர்ஸ்... 
அனந்து,கேபிள்

"யோவ்.. தமிழ்த்தாய் வாழ்த்த பாதியில மறந்துட்டேங்கறதுக்காக 
இப்புடி வெறும் இலைய போடறது எல்லாம் அநியாயம்யா.." - மதுமதி 

"சித்தப்பா... போட்டோ போட்டோ..." 
வீடு திரும்பல் with தமிழ்வாசி 

தென்றலின் கனவு நனவாகிறது...பட்டுக்கோட்டை to சேட்டை 
கூடவே கணக்காயன் ஐயாவும், 'தென்றல்' சசிகலாவும்

"எனக்கொரு உண்ம தெரிஞ்சாவனுஞ் சாமி..." 
ஆண்கள் கழிவறையில் எப்படி வந்தது இந்த கோபுரம் பூசுமஞ்சள் தூள்...


நான்கு சுவற்றிற்குள் நடந்த ஒரு அசம்பாவிதம் நாளை உலகம் முழுதும்... காத்திருங்கள்...நன்றியுடன்... சி.மயிலன்


11 Aug 2012

மாதவிடாய்


உனக்கு வேற தலைப்பே கெடைக்கலையா?

ஏன்? என்னாச்சு? இதுக்கு என்ன? பொருத்தமா இல்லன்னு நெனைக்கிறியா?

பொருத்தம், பொருத்தமில்ல... அதில்ல விஷயம்.. இது அபத்தமா இருக்கு... கட்டாயம் இதத்தான் வெக்கப்போறியா?

சார் வேற எதாவது suggest பண்ண போறீங்களா? k... come on sweetheart.. shoot..

stop teasing நர்மி.. try to be sensible....

என்ன பிரசாத்... எனக்கு புரியல... இதுல உனக்கு என்ன அப்படி ஒரு கஷ்டம்.. 

நல்லா யோசிச்சுதான் இந்த டைட்டில் வெச்சுருக்கியா? 

அடேய் சின்ன பையா....இந்த நாவல் எழுத எவ்வளோ யோசிச்சேனோ அதே அளவு இந்த தலைப்புக்கும் யோசிச்சிருக்கேன்.. 

எல்லாத்தையும் அலட்சியமா செய்யுற நர்மி நீ..  God.. இதுனால என்னென்ன ப்ரெச்சன வரும்ன்னு யோசிக்கவே மாட்டியா?

ஹே... ஹே... calm down...  என்னடா என்னனமோ சொல்ற?  See, இது என்னோட ரெண்டாவது நாவல்...எல்லாருக்குமே first shot நல்லாதான் இருக்கும்.. ஆனா நம்மள சுத்தி இருக்குறவங்க நம்மளோட ரெண்டாவது creationக்காகதான், அதுல நாம சொதப்பனும்ன்னுதான் வெயிட் பண்ணுவாங்க... எனக்கு அந்த பொறுப்பு இருக்காதா? you know right? கிட்டத்தட்ட எட்டு மாசமா நா அக்கறையா எழுதுன நாவல் இது ... ஒரு ப்ரெச்சனையும் வராது... stop worrying..

நா என்ன பேசிட்டு இருக்கேன்... நீ என்ன பேசுற?

இப்போ என்னதான் சொல்லவர்ற... pls, try to be frank...

k.. let me be frank... நீ நாளைக்கு எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறவ... i ve just meant that..

so what? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் பிரசாத்? writing is my passion... உனக்கு அது தெரிஞ்சுதானே என்ன லவ் பண்ணே...

என்னமோ எழுதிட்டு போ... பட் இந்த டைட்டில் வேணாம்...

இங்க பாரு பிரசாத்.. அப்படி என்ன உறுத்தல கண்டுபுடிச்சுட்டேன்னு இப்டி பேசுற...நாவல் விக்கணும்ங்கறதுக்காக சம்பந்தமே இல்லாம அந்தரங்க விஷயத்த தலைப்பா வைக்குற இந்த டைம்ல, நா வெச்சுருக்கறது என்ன பொருத்தவரைக்கும் ஒரு honest title...பட் நர்மி... புரிஞ்சுக்கோ... "என்னடா உன் ஆளு மேட்டர் பத்திலாம் எழுத ஆரம்பிச்சுட்டா போல..."ன்னு சுந்தர் கேக்குறான்... கேக்கவே அசிங்கமா இருக்கு... 

எது பிரசாத் அசிங்கமா இருக்கு உனக்கு ..? அவன friendன்னு சொல்லிக்கத்தான் நீ அசிங்கப்படனும்... its such an idiocy to speak like this...

சரி.. அவன விடு.. இப்போதான் எங்க வீட்ல நம்மள பத்தி பேச ஆரம்பிச்சிருக்கேன்... இந்த நேரத்துல போயி...

அதுனால... 

நீ இப்டி எழுதுனா அவுங்க என்ன நெனைப்பாங்க?

ஏன்? உங்க வீட்ல உங்க அம்மா அண்ணிக்கெல்லாம் இதெல்லாம் கிடையாதா...?

புரிஞ்சுக்க மாட்டியா நர்மி...எங்க வீட்ல... what to say.. தெல்லாம்...தெல்லாம்...ஒரு...தீட்டு.. எங்க அண்ணிலாம் பீரியட்ஸ் டைம்ல வீட்ல ஒரு ஓரமாதான் படுத்திருப்பா...ஒரு ஒலக்கைய வெச்சுக்கிட்டு... அவங்களுக்கு இதெல்லாம் அருவருப்பான சம்பவம்.. வீட்டுக்கு வரப்போற மருமக இப்படிலாம் எழுதுனா they ll feel really bad... please...சொன்னா கேளு...

என்ன பிரசாத் இது... சுத்த foolish ஆ இருக்கு...

உங்க  வீட்ல இருக்கறவங்க, உன்னோட friends யாருமே இதுக்கு ஒன்னும் சொல்லலையா?

சொன்னாங்க.. நல்லாருக்குன்னு சொன்னாங்க...

உன்ன மாதிரிதானே இருப்பாங்க உன்னோட ஃப்ரென்ட்ஸும்... எல்லாம் அதிகபிரசங்கிங்க....

உன்னோட logic சுத்தமா எனக்கு புரியல... சொல்லப்போனா... புடிக்கல... நீ ஃபுல் நாவல் படிச்சேல்ல... நீ இப்டி பேசுறது ஆத்திரமா வருது... சிவநேசன் சார் எப்படி பாராட்னாருன்னு பாத்ததானே...

அவன் பேசுவான்... அவன் வீட்டு பொம்பள இப்டி தலைப்பு வெச்சா பாராட்டுவானா? 

ச்சீ...stop it idiot... இப்டிதான் பேசுவியா?

ஹோ...உங்களுக்கு நா பேசுறதுதான் அசிங்கமா இருக்கு.. நீங்க பண்றதெல்லாம் பூஜை பண்றாப்லலே இருக்கு...

புரியுது பிரசாத்.. சுந்தர் சொல்றான், அம்மா சொல்வாங்க, அண்ணி சொல்லுவான்னு நீ பேத்துனது எல்லாம் உன்னோட views... அப்டிதானே...? 

நீ எப்டிவேணா எடுத்துக்கோ.. பட் நீ அந்த டைட்டில் வைக்க கூடாது...

மாத்த முடியாதுன்னா?

...........

சொல்லு பிரசாத்.. மாத்த முடியாதுன்னா?

நீ எதும் பேசாத.. மொதல்ல கெளம்பு இங்கிருந்து...

.........................fine.. thank u...thank u so much....

திரும்பியே பார்க்கவில்லை...அழுகையும் ஆத்திரமும் தொண்டையை அடைக்கிறது நர்மதாவிற்கு.. பிரசாத், சுந்தர், அம்மா, அண்ணி... இந்த மனிதர்கள் மீண்டும் மீண்டும் எண்ண அலைகளாய் வழி நெடுக்க அவளது உள்ளமைதியை குலைத்துக்கொண்டே பின் தொடர்ந்தனர்.... கீழுதட்டை மடக்கி கடித்து கொண்டு, மூச்சை இழுத்துப்பிடித்துகொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி வேகமாய் நடக்க தொடங்கினாள்... ஸ்டாப்பை நெருங்கியதும், ஏதோ யோசித்தவளாய், அருகிலிருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று, மூன்று நான்கு ஆண்களுக்கு மத்தியில் நின்று, கொஞ்சம் சத்தமாய்தான் கேட்டாள்...

"ஒரு WHISPER... "


முற்றும்


பின்குறிப்பு:  புத்தக அட்டை மாடல் கற்பனையே... )


5 Aug 2012

அந்த ஒரு டைரி பக்கத்தில்...
ஒரு மாலைவேளை
முதன்முறை வாகனத்தில்
உன் பின்னால் அமர்ந்து
பயணித்தபோது
ஒரு முத்தம் நம்மோடு
மூன்றாவதாய்
சேர்ந்து கொள்ள
உனக்கு பிடித்த மழையும்
நான்காவதாய்
வந்து சேர்ந்தது..அருகில் அமர்ந்து
என் செவியினுக்குள் 
சிரிக்கும் பொழுதுகளில் 
உன் கன்னம் வருடும் 
என் கையைத் 
தட்டிவிட்டு உடனே
பற்றி கோர்த்துகொள்ளும் 
இறுக்கத்தில் 
சில நொடி 
அப்போதே நான் 
இறந்திருக்கக்கூடும் 


கடற்கரை மணலில் 
நீ எங்கேயோ பார்த்து 
ஏதேதோ பேசி 
கவனமாய் 
என் நகத்தை கடிக்கும் 
வேளைகளில் 
அந்த வலியை
சிலாகித்து 
உன்னில் மட்டுமே 
உழன்று கொண்டிருப்பேன்...


பனி மூட்டம் மறைக்கும் 
மரங்கள் சூழ்ந்த 
விவரிக்க முடியா 
வெள்ளை நிற 
வீடொன்றின் பால்கனி 
இப்போதும் தாங்கி நிற்கும் 
உன்னுடனான 
ஒரு கோப்பை
தேநீருக்கான கனவுகளை..
இளையராஜாவின் 
பியானோவோடு..


என்றோ நம் பெயரை 
ஒன்றாய் சேர்த்து 
எழுதிவைத்து ரசித்து 
பின்னர்  
மறந்து போன 
டைரியொன்றில்
இன்று 
உன் பெயரை மட்டும் 
அழிக்கும் வன்மை பெரும் 
ஓர் கண்ணீர் துளி