சகித்தவர்கள்...

1 Oct 2012

விபத்து பகுதி... கவனமாக....


ப்ரல் மாதம் இரண்டாம் வாரம் ஒரு மாலை பொழுதில் அம்மாவிடம் இருந்துதான் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு..அழுகைக்கும் மூச்சு தேம்பலுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாய்தான் வந்து விழுந்தது வார்த்தைகள்...

 "பாலுவுக்கு ஆக்சிடன்ட் ஆயிருச்சுப்பா... ரொம்ப சீரியசா இருக்கான்ப்பா... கும்பகோணத்துலதான் சேத்திருக்கோம்... தஞ்சாவூர் கூட்டிட்டு வந்துரலாமாப்பா?"

நான் பதினோராம் வகுப்பு படித்திருந்த காலத்தில் எங்கள் பக்கத்து பிளாட்டில் வீடு கட்டி குடிபெயர்ந்த குடும்பத்தில், அன்றைய பாலுவிற்கு வயது இரண்டு.. மழலையாய் பேச தொடங்கிய நாட்களில் என் அப்பா அந்த பேச்சைக் கேட்கவே காம்பவுண்டு சுவற்றோடு சாய்ந்து நின்று கொண்டிருப்பார்... படு சுட்டி... பின்னாட்களில் கொஞ்சம் தெளிவாய் பேச தொடங்கிய பின்னர் யாரும் அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது... வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடைய சினிமா குழந்தை போலத்தான் எனக்கு தெரிவான்.. என்னைக் காட்டி அவனின் அம்மா, "அண்ணன போல படிச்சு டாக்டர் ஆகணும்" என்று சொல்லிமுடிக்கும் முன் சொன்னான், "எப்ப படிச்சு எப்ப சம்பாதிக்கறது? டோனி ய பாரு.. எப்படி சம்பாதிக்கிறான்...?" சொல்லும் போது இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்... கிரிக்கெட் வெறியன்.. கில்க்ரிஸ்ட் அபிமானி... பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய வேகத்தில் ஒரு விக்கெட்கீப்பிங் கையுறை ஜோடியை எடுத்துக்கொண்டு பறந்திடுவான்..."இந்த நிலைமைல transport வேணாம்மா... அங்க எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க.. நான் சொல்றேன்... கொஞ்சம் பதட்ட படாம இருங்க"

"பொழச்சுடுவானாப்பா?"

தப்பிதவறிக்கூட பொய்யாய் யாருக்கும் ஆறுதல் சொல்லி வழக்கம் கிடையாது.. அம்மாவின் குரலைத் தாண்டி அங்கு நடந்திருக்கும் சம்பவத்தின் ஆழத்தை வேறேதும் விவரிக்க தேவையில்லை...மறுபடி மறுபடி அம்மாவிடம் இருந்து அதே கேள்வி... நாற்பது மைல்களுக்கு அப்பாலிருந்து ஏதோ ஒரு வார்த்தையளவிலான ஆறுதலாவது அவர்களுக்கு தேவைப் படுகிறது.. 

"எங்க அடி பட்டிருக்கும்மா?"

பதிலேயில்லை... ஏதேதோ கூச்சல்... போன் கட்டானது... சிறிய காயம் மட்டும்தானா? எதற்காக மயிலாடுதுறையில் இருந்து refer செய்யவேண்டும்...? பெரிய அடியா? வயிற்றிலா? கை கால்களிலா? நெஞ்சிலா? தலையிலா? மீண்டும் அழைப்பு அரை மணி கழித்து...

"தலைல அடிப்பட்டிருக்காம்ப்பா... ஸ்கேன்ல ஏதோ மூளைல ரத்தம் உறைஞ்சு இருக்குன்னு சொல்றாங்கப்பா..."

"consultant பேரு என்னம்மா?"

"பொழச்சுடுவானாப்பா?" 

கும்பகோணத்திற்கு சென்றேன்... ICU வார்டு.. எந்த கோலத்தில் அந்த குழந்தையை பார்க்ககூடாதோ அந்த கோலத்தில்தான் இருந்தான்.. மூக்கு,வாய்களில்  குழாய்கள்... கழுத்தில் செர்விகல் காலர்... சுற்றியிலும் ரீங்காரமிடும் கருவிகள்... அவன் தூங்கிக்கூட நான் பார்த்திருந்ததில்லை...செரிபெல்லத்தில் இரத்தம் உறைந்திருப்பதை ஸ்கேன் சொல்லியது... வெறுமனே அந்த ஸ்கேனை மட்டும் காட்டி யாரேனும் நிலைமையை கேட்டால் "கஷ்டம்" என்பது என் பதிலாய் இருந்திருக்கும்...வார்டை விட்டு வெளியே வர அழுத்தம் எனக்கு போதவில்லை.. ஒரு வழியாய் அம்மாவிடம் மட்டும் அந்த "கஷ்டம்" என்பதை சொல்லிவிட்டு, மற்ற எல்லோரிடமும் ஏதோ சொல்லி ஒப்பேற்றினேன்...

சுய நினைவு சுத்தமாய் இல்லை...ஒரு வாரம் கழித்து tracheostomy செய்யப்பட்டது... அந்த 'எல்' வடிவ குழாய் அவன் தொண்டைக்குள் சென்ற வேளை அன்றைய மழலை முதல் சமீபத்திய குறும்பு பேச்சுவரை எல்லாம் வலித்தது... மூக்கின் குழாய் வழியே நீராகாரம், மூச்சு மட்டும் சுயமாய் முடிந்தது...

முழுதாய் நான்கு மாதம்... கண் விழித்து பார்த்த நிலையில்,தொண்டையில் stome மூடப்பட்ட நிலையில்,கை கால் வராத நிலையில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்... எல்லோரையும் பார்க்க முடிந்தது.. கண்ணீர் சிந்த முடிந்தது... மெலிதாய் புன்னகைக்க முடிந்தது...எங்கள் வீதியே முடமாகி கிடந்தது... எல்லோரின் குரல்வளையும் நெரிக்கபட்டிருந்தது.. எதிர்பாரா நிலையில்,திடீரென ஒரு பின்னிரவில் பேச்சு வந்துவிட்டது.. பழைய வேகம் இல்லை... எல்லோரையும் தெளிவாய் அடையாளம் புரிந்து பேச முடிந்தது... அப்பா பார்க்க சென்றிருக்கிறார்...,"uncle,...அண்ணன் டாக்டர்தானே... அவுங்கள்ட்ட கேளுங்க... நா புரோட்டா சாப்பிடலாமான்னு.. அபிராமி ஹோட்டல்ல வாங்கிட்டு வாங்க..." இந்த சம்பவத்தை அப்பா மொபைலில் என்னிடம் சொல்லும்போது அவரின் குரலில் இருந்த சந்தோஷத்தை சமீப வருடங்களில் நான் கண்டதில்லை...

நேற்றைக்குமுந்தைய தினம் பார்க்க சென்றிருந்தேன்.. இடது கையைத் தவிர மற்றது எல்லாம் மீண்டும் செயலுக்கு வந்துவிட்டது.. சிறுநீர், மலம் கழிப்பதற்கான sphincter control உம் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வந்துவிட்டது...  நண்பர்களை வீட்டிற்கு வர சொல்லி அவர்களை வீடியோ கேம் விளையாடசொல்லி உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.. விஜயதசமி அன்று மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதாய் உத்தேசித்து உள்ளார்கள்... நரம்பு தளர்ந்து முழுமையாய் குணமடையாத காரணத்தினால் கை நடுக்கம் ஏற்பட்டுள்ளது.. நான்கு மற்றும் இரண்டு கோடு நோட்டுகளில் எழுத்துபயிற்சி எடுக்கிறான்...அருகில் இருந்த தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துகொடுத்து வாசித்துக்காட்ட சொன்னேன்...'ழ'கரத்தை தெளிவாய் உச்சரிக்கின்றான்.. ஆங்கங்கே எழுத்துக்கூட்ட வேண்டியிருக்கிறது... தவறாக வாசித்தால் "ச்சீ" என்று சொல்லிகொள்கிறான்... பத்து வருடத்திற்கு முன்பு இருந்தது போல, அப்பா மீண்டும் காம்பவுண்டில் சாய்ந்து நின்று அவனது இந்த மறுமழலையை இரசிக்க தொடங்கியுள்ளார், கொஞ்சம் வலி மறந்து...


16 comments:

ரேவா said...

பிறர் வலியை நன்கு உணர்ந்தவன் தான் உணர்வுப்பூர்வமாண இந்த எழுத்தை நேசிக்கமுடியும் என்பதை உங்கள் வரி(லி)யில் உணர்கிறேன் மயிலன்... என்னையும் மீறி உணர்ச்சி வசப்படவைத்து விட்டது அப்பாவின் அன்பும், அம்மாக்களின் உலகமும், ஒரு மருத்துவர் பல நேரங்களில் மறத்துத்தான் போகவேண்டியிருக்கின்றது..
உண்மைகளை கடந்து வருவதென்பது ரொம்ப பெரிய வலி...பதிவை படிக்கையில் ஆரம்பித்து விஸ்வரூபமெடுத்த வலி படித்துமுடித்து சுபத்தில் ஆனந்தகண்ணீரை கொடுத்தது என்றே சொல்லாம்... அந்த சுட்டி இன்னும் கூடிய விரைவில் முற்றிலும் குணமடைவான்..அன்புக்கட்டில் இருப்பவர் நிச்சயம் நலமடைவர்.....

என்ன சொல்லுறதுன்னு தெரியலை
ஆனா வாழ்த்துகள் மயிலன்....எல்லாவற்றிற்க்கும்.........

ராஜி said...

மருத்துவனா இருப்பதில் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு நல்லதோ?! அவ்வளவு கொடுமையானது நோய் வந்தவனின் உறவினன் மருத்துவனா இருப்பது.

வீடு சுரேஸ்குமார் said...

மருத்துவ உலகிற்கு மேல் ஒருவன் இருக்கின்றான் என்று சொல்றீங்க...போல....
நம்மால் பிராத்தனை மட்டுமே செய்ய இயலும்..!

Sasi Kala said...

நேற்றைய நிகழ்வில் இருந்து இன்னனும் வெளி வராத நிலையில் இன்று இப்படி ஒரு நிகழ்வை படிக்க கொஞ்சம் நிம்மதி கிடைக்கிறது தம்பி எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்வு தேடி சென்னை வந்து நேற்று சாலை விபத்தில் இறந்த எங்கள் குடும்ப நண்பரின் நினைவு மிகவும் வலி தந்தது.

மோகன் குமார் said...

விரைவில் பாலு முழுதாய் குணமடைவான் என நம்புகிறேன்.

வரலாற்று சுவடுகள் said...

நெஞ்சை உலுக்குகிறது!

பொதுவாகவே நான்...வாசிக்க.. கேட்க...பார்க்க விரும்பாத சம்பவங்களில் முதன்மையானது.. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்.. மரணத்தின் கோரப்பிடியில் குழந்தைகளின் உயிர் & எக்ஸ்ஸட்ரா...!

இவற்றையெல்லாம் வாசித்தாலோ..கேட்டாலோ.. பார்த்தாலோ..அன்றைய தினத்தை என்னால் இயல்பாய் கழிக்க இயலாது!

இச்சம்பவத்தின் பாதிப்பிலிருந்து விரைவில் அச்சிறுவன் மீண்டு வர என் பிரார்த்தனைகள்!

ஜே கே said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என்று கூட சொல்ல மனமில்லாத அளவுக்கு அழுத்தம் ... இதே மயிலன் எப்போதுமே இருக்கவேண்டும் .. இருப்பார் என்பது நிச்சயம் ..

cheena (சீனா) said...

அன்பின் மயிலன்

விரைவில் பாலு பூரண குணமடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள். மருத்துவரின் மிக நெருங்கிய சொந்தங்கள் / நட்புகள் மருத்துவ மனையில் இது மாதிரி நிலையில் இருக்கவே கூடாது. மருத்துவரின் நிலை பரிதாபமானது.

அம்மா / அப்பா நெருங்கிப் பழகிய பாலு இது மாதிரி நிலையில் இருக்கும் போது இவர்களின் நிலை என்ன ?

நல்வாழ்த்துகள் மயிலன் - நட்புடன் சீனா

s suresh said...

பாலு குணமடைய வாழ்த்துக்கள்!

வா.கோவிந்தராஜ், said...

கூடிய விரைவில் முற்றிலும் குணமடைவான் பாலு குணமடைய வாழ்த்துக்கள்!

திவ்யா @ தேன்மொழி said...

இம்மாதிரி அசம்பாவிதங்களை, இவனைப் போன்ற சிறு மழலைகள் எதிர்கொள்ளும் விதம் என்னை பலமுறை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பொறாமை கொண்ட சமயங்களும் உண்டு. தன்னுடைய காயங்களிலிருந்து முழுமையாய் குணமடையும் முன்னரே, தன்னால் (மனதளவில்)பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன்நம்பிக்கை வைத்தியம் கொடுத்துக் கொண்டிருக்கிறான், இந்த வாண்டு.. கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது, இந்த “அறுந்த” வாலிடம்..! :)

இரா.எட்வின் said...

பார்க்கனும் மயிலன்

ஸ்ரீராம். said...

பாலு பூரண குணமடைய எங்கள் பிரார்த்தனைகளும். விடாமுயற்சி உடைய அந்த சுட்டிப் பையன் விரைவில் பழைய நிலைக்குத் திரும்புவான் என்றே நம்பத் தோன்றுகிறது.

அ. வேல்முருகன் said...

அறுவை மருத்துவனுக்கு
அது மரத்துப் போகலாம்
அடிக்கடி பார்ப்பதனால்
ஆயினும் -

மனமென்று ஒன்றுள்ள
மனிதன்தானே மருத்துவன்

சமீரா said...

கொஞ்ச நாள் முன்னாடி என்னோட அப்பாக்கு உடம்பு சரியில்லாம ஒரு வாரம் ICU ல் இருந்தார்.. அப்போ அவருக்கு செயற்கை சுவாசம் தான் கொடுத்தாங்க .. முகம் தொண்டை எல்லாம் ஒரே TUBE தான்.. பாக்கவே ரொம்ப பயமா இருந்தது... இதுக்கே அவருக்கு வயது 56 ..
ஒரு சின்ன குழந்தை உடல் முழுதும் குழாய் சொருகி இருக்கறத கற்பனை பண்ணும் போதே ஒரு வித வலி மனசுல வருது.. குழந்தை ரொம்ப வழியில கஷ்ட பட்டு இருப்பான்.. அவனுக்கு சீக்கிரம் குணமாகனும், நல்ல பேசி சிரிக்கணும்...
சில நேரங்கள்ல ராஜி அக்க சொன்ன மாதிரி உடந்தை பட்டவங்களுக்கு ஒரு மருத்துவரா இருந்து பாக்கறது கூட சிரமம் தான்... அதிலும் மனசுமை இருக்கு....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...

நன்றி…