சகித்தவர்கள்...

26 Dec 2013

மகளைப் பெற்ற அப்பா


நடக்கத்தான் போகிறதென தெரியும். இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்க வேண்டியதில்லை. பின்னிரவு பொழுது. பக்கத்து வீட்டிலும் யாரையும் எழுப்பி உதவி கேட்கும் அளவிற்கு பெரிதாய் பழக்கமில்லை. மருந்தகங்கள் எதுவும் இவ்வேளையில் திறந்திருக்குமா? அப்படியே இருந்தாலும் கீர்த்தியை இந்த நிலையில், இப்படியே, வீட்டில் தனியே விட்டுப் போகமுடியுமா? யாரையும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாமா? நான்ஸி நியாபகம்தான் முதலில் வருகிறது. அவளும் கொச்சினில்தான் இருக்கிறாள் என்பது மட்டும் காரணமல்ல. பதிமூன்றாண்டு கால தோழி. ஆனால் இந்நேரத்தில் அழைக்கலாமா? ஜான் தவறாக நினைத்துக்கொண்டால்? இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது? ஜான் மொபைலுக்கே அழைத்துவிடலாம்..88436***..... அழைப்பு சென்று.. நீண்டு.. முடியும் தருவாயில் loudspeaker...

"the person you are calling, is currently unavailable to atte...." பீப்

விரக்தி.. இயலாமை ஆட்கொள்ளும் பொழுதுகளின் உச்சம்.. மடமடவென ஒரு கிளாஸ் தண்ணீரை விழுங்கிவிட்டு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைகிறான்.

"கீர்த்திமா, ரொம்ப வலிக்குதாடா?" மிக மெதுவான குரலில்..

" விட்டுவிட்டு வலிக்குதுப்பா"

"கொஞ்சம் பொறுத்துக்கோடா, டேப்லட் எதுவும் கைல இல்ல.. "

"யூரின் போற எடத்துல ப்ளட் வந்துட்டே இருக்குப்பா"

என்ன சொல்வது? எப்படி புரியவைப்பது? ஒன்பது வயது குழந்தை அவள். சமவயது தோழிகளிடம் இதுப்பற்றி பேசியிருக்கக்கூட வாய்ப்புகள் குறைவு. அதுவும் கொச்சினுக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. தோழிகளும் நிறையப்பேர் இருப்பதாய் தெரியவில்லை. மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமா? எதாவது ஒரு பெண் மருத்துவர்? இவ்வேளையில் இருப்பார்களா? இவையெல்லாம்விட முக்கியமான கேள்வி.. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய சம்பவம்தானா இது? குழப்பங்கள் வலுக்கிறது.. வலிக்கிறது.

"ஹாஸ்பிட்டல் போலாமாடா ? "

"வேணாம்ப்பா.. வலி இப்ப இல்ல... நீயும் வந்து படுத்துக்கோ.."

இரத்தம் வந்துகொண்டே இருந்தால் எப்படி தூங்குவாள்? எங்காவது ஓடிப்போய் ஒரு நாப்கின் மட்டும் வாங்கிவந்துவிடலாமா? தனியே விட்டும் செல்ல முடியாதே. பெண் பூப்பெய்தியதிற்கு வருத்தப்படும் தந்தை நானாகத்தான் இருக்கமுடியும். கடவுளே.. குழந்தை கொஞ்சம் தூங்கவாவது வேண்டும் இப்போதைக்கு.. புதிதாய் வாங்கி பிரிக்காமலிருக்கும் பனியன்.. ஆம்.. அளவாய் வெட்டி, கிழித்து, மடித்து நாப்க்கின் செய்துவிடலாம். 

"குட்டிமா, கொஞ்சம் பொறுடா... அப்பா அந்த ரூமுக்கு போயிட்டு வந்துடறேன்"

"ஹ்ம்ம்.. லைட் ஆஃப் பண்ணாதப்பா... அப்டியே இருக்கட்டும்.. பயமா இருக்கு..."

வினாடியில் கண்கள் குளமாகிவிட்டன. மீண்டும் சென்று அவள் தலைமுடியை கோதிவிட்டு நெற்றியில் முத்தமிடுகிறான். சிரிக்கிறாள். இது போதும்.. இன்னும் கொஞ்ச நேரமாவது தெளிவாய் இயங்க..  இது போதும்.. நினைத்தது போலவே தற்காலிக ஒப்பேத்தலுக்கு நாப்க்கின் தயாராகிவிட்டது. கொஞ்சமாய் தயங்கி கீர்த்தி இருக்கும் அறையில் நுழைகையில் அவள் தூங்கியிருந்தாள்.. மீண்டும் நெற்றியில் ஒரு முத்தம் மட்டும். ஆனால் நிச்சயமாக தூக்கம் வரப்போவதில்லை. என்ன செய்யலாம்? எப்படி எடுத்துக்கூறுவது? இணையத்திலும் துழாவிப்பார்த்தாகிவிட்டது. கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ சங்கேத மொழிகள் பெரும்பாலும் புரியவில்லை.. அல்லது புரிந்துகொள்ளும் மனநிலை இப்போதில்லை.
விடிந்ததும், நான்ஸிக்கு ஃபோன் செய்து வர சொல்லிவிடவேண்டும்.. இன்று ஒரு நாள் மட்டும் அவளை கீர்த்தியுடன் தங்கியிருக்க சொல்லிக்கேட்கலாம். விஷயத்தை சொன்னால் போதும். அவளே தங்கிவிடுவாள். நன்றாக நினைவிருக்கிறது. தங்கை பூப்பெய்திய நாளில் அம்மா, பெரியம்மா எல்லாம் எப்படி பார்த்துக்கொண்டார்கள் என்பது இருபது வருடங்கள் கடந்தும் நினைவிலிருக்கிறது. குழந்தைக்கு அம்மா இருக்கணும். கீர்த்தியின் அம்மா? சடசடவென நினைவில் காட்சிகள் வந்து விழுகின்றன.. கீர்த்தி வயிற்றிலிருக்கும் போதிலிருந்தே இருந்த கருத்து வேறுபாடுகள், கீர்த்தி பிறந்தது, சரியாக குழந்தை பிறந்த நான்காவது மாதம் ஒரு முற்பகலில் அலுவலகத்தில் இருந்து இவன் வீடு திரும்ப, அவள் அஷோக்குடன் படுத்திருந்தது... ச்சீய்.. பொம்பளையா அவ? அப்படியே கசந்தது.. dirty bitch.. அம்மாவுந்தேவயில்ல.. ஒரு மண்ணுந்தேவயில்ல... என் பொண்ணு.. எதாயிருந்தாலும் நா பாத்துக்கிறேன்... எப்படியோ தூக்கம் வந்துவிட்டது.. 

3.3௦

5.௦௦ 

5.36 

"அப்பா... அப்பா... ஃபோன் அடிக்குது பாரு..."

........


"அப்பா.. ஜான் அங்கிள் ஃபோன் பண்றாரு... ப்பா... எந்திரிப்பா... ஹ்ம்ம்... இந்தா... ஜான் அங்கிள்...."

"ஹஹலோ.. ஜ.ஜான்"

.........

"ஒன்னுமில்ல.. சும்மாதான்... கீர்த்தி ஏஜ்-அட்டன்ட் பண்ணியிருக்கா... "

......

"yeah... thanks John... அதான்...."

......

"இல்ல.. எனக்கு ஒன்னுமே புரியல... நான்ஸிட்ட கேக்கலாமுன்னு ஃபோன் பண்ணேன்.."

.......

"ஹோ, எப்போ? நல்லாயிருக்கான்ல ?"

.......

"வீட்டுக்கு அழச்சிட்டு வந்தாச்சா?"

.......

"எந்த நம்பர்...? பழைய தமிழ்நாடு நம்பர்க்கு பண்ணட்டா?"

.......

"ஓகே ஜான்.... நா பேசறேன்"

.......

"ஹ்ம்ம்.. ஓகே கே ஜான்... நா உங்களுக்கு அப்பறம் பேசறேன்..."

.......

"ஹ்ம்ம்... பை...""நான்ஸி ஆன்ட்டி நாகர்கோவில் போயிருக்காங்களாம்"

"இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவ் போட்ருட்டுமாப்பா?"

"ஹ்ம்ம்..  monday போய்க்கலாம்"

"செரிப்பா"

.......
6.1௦ 

"அப்பா, யூரின் போகலாமா? ஒன்னு ஆகாதுல்ல?"

" எந்திரிச்சு வாடா, அப்பாவும் கூட வறேன்..."

..........

"அப்பா, பேண்டீ'ல நெறைய ப்ளட்டா இருக்கு, வேற எடுத்துட்டு வாயேன்..."

"கொஞ்சம் பொறுடா.. எந்திரிக்காத... நா எடுத்துட்டு வறேன்.. டிஷ்யு ல கைய தொடச்சுக்கோ.."

.........

"இந்தாடா..."

"ஹ்ம்ம்..."

.....

"ஏம்பா, பனியன வெட்டி உள்ள வெச்சிருக்க? "

"சொல்றேன்...இப்ப போட்டுக்கோ..."

புரிந்துவிட்டது.. அவளுக்கு அதைப்பற்றி அவ்வளவாக புரிதலில்லை என்பது புரிந்துவிட்டது. வீட்டில் பெண் யாரும் இருந்திருந்தால் இதெல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்கும்.. நான்கு மாத குழந்தையிலிருந்து அப்பா வளர்ப்பு. கார்டூன் தவிர டிவியில் எதுவும் பார்ப்பதில்லை.. ஆச்சர்யமில்லை. அப்படித்தானிருப்பாள். நான்ஸியிடம் பேச சொல்லலாம்.

"கீர்த்தி, இப்டி ஒக்காரு..."

"என்னப்பா?"

"நீ பெரியவளாயிட்ட.."

"தெரியுது... ஆனா, ஏன் ப்ளட்லாம் வருது?"

"அப்டிதான் இருக்கும்.. வலி இருக்கும்..."

"எத்தன நாளிருக்கும்..?"

"ஹ்ம்ம்... ஒரு.. ஒரு வாரம்.. பத்து நாள்... சரியா தெரியல..."

"அப்புறம்..?"

"அடுத்த மாசம் திரும்பவும் வரும்...?"

"எல்லா மாசமும் வருமா? ஹ்ம்ம்ம்... என்னப்பா?"

"எல்லாருக்கும் இப்டிதான்டா..."

"அப்புறம் எப்பதான் நிக்கும்...?"

"நான்ஸி ஆண்ட்டிட்ட பேசறியா?"

"இல்ல.. நீயே சொல்லு..."

"அப்பாக்கு நெறையா தெரியாதுமா... ஆண்ட்டிக்கு ஃபோன் பண்ணி தறேன்... பேசு... செரியா?"

"போப்பா..."

மடியில் சாய்ந்துகொண்டுவிட்டாள்.. மணி ஏழாகப்போகிறது.. நான்ஸி விழித்திருப்பாள்.. இந்த நேரத்திலா அவள் தம்பிக்கு ஆக்ஸிடன்ட் ஆகவேண்டும். குடிக்க ஆரம்பித்திருக்கிறான் என்று சென்ற முறை பேசிக்கொண்டிருக்கும்போது நான்ஸி வருத்தப்பட்டது நினைவிருக்கிறது. ஃபோன் செய்யலாமா?

"நான்ஸி..."

......

"ஹ்ம்ம்.. மார்னிங்..."

......

"ஜான் சொன்னாரு.. அதான் இந்த நம்பருக்கு பண்ணேன்"

......
.................
.......................
.........

"குடிச்சிருந்தானா?"

........

"அப்றம் .... கீர்த்தி ஏஜ்-அட்டென்ட் பண்ணியிருக்கா..."

......

"ஹ்ம்ம்.. அதுக்குதான் ஜானுக்கே ஃபோன் பண்ணேன்..."

.....

" ஒன்னுமே புரியலடா... பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு.. அவளும் கொழந்தல்ல..  வெதுக்குவெதுக்குன்னு முழிக்கிறா... பாவமா இருக்கு.. நைட்லேந்து ஏதோ போட்டு ஒலப்பிட்டு  இருக்கேன்.."

........

"ஹ்ம்ம்.. அதுக்குதான்... பேச சொல்லலாம்ன்னுதான் ஃபோன் பண்ணேன்..."

..........

"இரு கொடுக்கறேன்..."


"கீர்த்தி... கீர்த்திமா... இந்தா.. நான்ஸி ஆண்ட்டி பேசறாங்க..."


"ஆண்ட்டி..."

.......

"ஃபைன் ஆண்ட்டி..."

.......

"ஆமா.. நைட்டுதான்... ரெண்டு மணியிருக்கும்...டாய்லெட் வர்ற மாதிரி இருந்துது... நைட்டே கொஞ்சம் வலி இருந்துச்சு..."

........

"ஹ்ம்ம்.. அப்பா சொன்னாங்க..."

........

"அது எதுக்கு?"

.......

"செரி.. செரி.. அப்பா பனியன் கட் பண்ணி கொடுத்தாரு.."

........

"எல்லா மாசமும் வலிக்குமா?"

.......

"செரி... டேப்லட் போட்டு வராம பண்ணிரலாமா? "

.............
......................
................................
...........
.............

"ஹ்ம்ம்.. "

.............

"பயமா இருக்கு ஆண்ட்டி..."

.........

"ஃப்ரெண்ட்ஸ்கெல்லாம் தெரிஞ்சா கிண்டல் பண்ணுவாங்க.."

..........

"செரி.. அப்பாவ வாங்கிட்டு வர சொல்றேன்..."

.........

"அப்பாட்ட கொடுக்றேன்..."

"நான்ஸி..."

...............

"ஓகே... நா சொல்றேன்..."

.........

"ஹ்ம்ம்... கொச்சின் வந்ததும் சொல்லு..."

.....

"ஹ்ம்ம்.. பை டா"

................

கீர்த்தி இன்னும் குழப்பம் அதிகமானவளாய் தெரிகிறாள்... கண்கள் கலங்கியிருக்கின்றன... தலைமுடி அலங்கோலமாய் இருப்பதும் தெளிவுநிலையை சிதைப்பதாய் தெரிகிறது... 

"கீர்த்திமா... என்னடா?"

"ஆண்ட்டி என்னனமோ சொல்றாங்கப்பா.. பயமா இருக்கு..."

"ஒன்னும் பயமில்லமா... எல்லாருக்கும் இப்டிதான்டா இருக்கும்..."

எல்லோருக்கும் உண்மையிலேயே இப்படிதானா? அம்மா என்றொருத்தி இருப்பாளே? நல்ல அம்மா என்றொருத்தி... பாட்டி..அத்தை... யாரோ ஒருவர்.. கீர்த்திக்கு மட்டும் ஏன் இப்படியொரு சாபம்? எத்தனை அப்பன்கள் இப்படியொரு நிலையைக் கடந்திருப்பார்கள்...

"ப்பா..."

"என்னடா?"

"யூனிஃபார்ம்ல ப்ளட் தெரிஞ்சா, எல்லாருக்கும் புரிஞ்சுடுமாப்பா...?"

"அப்டியெல்லாம் தெரியாதுடா.."

"போ... நா ஸ்கூலுக்கே போகல..."

"செரி.. வேணாம்.. எப்ப தோணுதோ அப்ப போகலாம்..."

"ஒன்னு வேணாம்... நா பையனாவே பொறந்திருக்கலாம்.."

" சரி... அப்பா மெடிக்கல் ஷாப் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்..."

"நானும் வறேன்..."

"இல்ல வேணாம்... டிவி போட்டு பாத்துட்டு இரு..."

"டைரிமில்க்.."

"செரி.."

......

"ஒரு சானிட்டரி நாப்கின்..."

"என்ன பிராண்ட் சார்?"

"எதாவது ஒன்னு... ஹா.. விஸ்பர்..."

"ஹ்ம்ம்..."

"சின்ன சைஸ் எதுவும் இருக்கா?"

"இதான் சார் ரெகுலர்..."

"இல்ல, கொஞ்சம் சின்ன பொண்ணு..."

"சின்ன கொழந்தன்னா, பேம்பர்ஸ் தான்..."


நினைவிருக்கிறது.. பேம்பர்ஸ் வாங்கி ஏழு வருடம்தான் ஆகிறது.. அதற்குள் பெரிய மனுஷியா? ஒவ்வொரு மாதமும், அவள் கேட்குமாறான நிலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.. எப்பவும் வீட்டில் ஒரு பேக் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 

"ஏம்பா.. இவ்ளோ நேரம்?"

"15 மினிட்ஸ்தானடா ஆகுது"

"இத ஏன் இப்டி போட்டு நியூஸ் பேப்பர்ல மடிச்சு வெச்சிருக்காங்க?"

"எப்டி யூஸ் பண்ணனும்ன்னு தெரியுமா?"

"ஹ்ம்ம்.. ஆண்ட்டி ஃபோன்ல சொன்னாங்க..."

"செரி..."

"இதுக்குதான் பனியன கட் பண்ணி கொடுத்தியா?"

"ஹ்ம்ம்"

.........

"வெந்நீர் போடறேன்... குளிக்கிறியா?"

"இன்னைக்கு thursday.. நீதான் குளிப்பாட்டிவிடனும்... மறந்துட்டியா?"

"இல்ல.. இன்னைக்கு நீ குளி...அப்பாக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு... தூங்கறேன்..."

"பொய் சொல்ற..."

"இல்லடா... இனிமே நீயே குளிக்கணும்.."

"ஒன்னு வேணாம்..."

"கீர்த்தி.. சொன்னா கேக்கமாட்டியா?"

"போ.. குளிக்கிறேன்..."

......

"நீ படுத்துக்கோ..."

இதையெல்லாம் கடக்க இன்னும் எத்தனை நாள் ஆகும். தன்னை பெரிய மனுஷியாகவே எப்போ உணரப்போகிறாள். எத்தனை தூரம் அவளுக்கு ஒவ்வொன்றையும் புரியவைக்கமுடியும்? அவளுக்கே தானாய் புரிய வேண்டும். எத்தனை ஆழம் ஒரு அப்பனால் பேச முடியும்? ஒரு மூன்று வருடங்களுக்கான ஃபாஸ்ட் ஃபார்வட் பட்டன் இருந்தால் நல்லாயிருக்கும். கீர்த்தி பக்குவப்பட்டவளாய்... எல்லாம் புரிந்தவளாய்... பகல் கனவு தூக்கத்தில் முடிகிறது...

"அப்பா... ப்பா..."

"ஹ்ம்ம்.. குளிச்சிட்டியா"

"ம்ம்ம்.. டைரிமில்க்கும் சாப்ட்டு முடிச்சிட்டேன்..."

"ப்ரேக்ஃபஸ்ட்?"

"நீ ஆஃபிஸ் போலையா?"

"இல்ல.."

"அப்போ... லேட்டா சாப்டுறேன்.. கொஞ்ச நேரம் திரும்பவும் தூங்கப்போறேன்.."

"சரி...இங்க வந்து படுத்துக்கோ..."

"ஹ்ம்ம்..."

"கால அப்பா மேல போட்டுக்கோ..."

"ஹ்ம்ம்..."

"ச்சமத்து"

......

"ஏன்டா கால எடுத்துட்ட?"

"வேணாம்ப்பா... ஒரு மாதிரி  uneasyயா இருக்கு"முற்றும் 


18 Dec 2013

கவியரங்க கசமுசா #2


இந்தப் பதிவினைப் பிரசுரிக்கும் முன்னர், நிறைய முன்குறிப்புகள் சொல்லியாக வேண்டும்.. முதலில் இதனை இத்தனை நாளும் பதிவேற்றாமல் இருந்தமைக்கு காரணம்.. முக்கிய காரணம் என்னவெனில் துளிக்கூட திருப்தியில்லாமல் போனதுதான்... மினக்கெடல் மருந்துக்கும் இல்லை... சனியன்று மதியம் சந்திப்பில் கலப்பது ஊர்ஜிதமாகியது... மாலை பேருந்து... இரண்டிற்கும் இடையில் நடந்த ஒரு வார்த்தை குவியல்தான் இது... கத்தரிப்பு, பின்சேர்க்கை எதுவுமே நடக்கவில்லை... வழக்கம்போல, வாசித்ததும் பெரும்பாலானோருக்கு விளங்கவில்லை... அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்... “அப்றம், என்ன தலைமுடிக்கு இத இன்னைக்கு பதிவேத்துற?” என்ற உங்களின் அறசீற்றம் நியாயமானது... “நல்லாயிருக்கோ இல்லையோ, அன்னைக்கு புரியல... பதிவு போடுங்க.. படிச்சுட்டாவது திட்றோம்” என்ற வாசகவட்டத்தின் வெளிக்குத்தே இதற்கு காரணம்...

புரியாமல் இருக்கும் அளவிற்கு இது தொன்தமிழோ, இலக்கிய ஆர்ப்பரிப்போ, குறியீட்டின் உச்சமோ அல்ல.. புரிந்துகொள்வதற்கு அடிப்படை தகுதி நீங்கள் “பசங்க” திரைப்படம் பார்த்திருக்க வேண்டும்.. படத்தில் முரட்டுவில்லனாக வரும் சிறுவனின் ஆகச்சிறந்த எடுபிடிதான் இங்கே பாடுப்பொருள்.. “பக்கடா”.. படத்திலொரு காட்சி வரும்.. ஹீரோ சிறுவனை பழிதீர்க்க, பக்கடாவின் யோசனை, கருப்புசாமிக்கு காசுவெட்டிப் போடுவது... இப்படியான என் உடன்வந்த பக்கடாக்கள் பற்றிய தொகுப்புதான் இது.. சம்பந்தப்பட்ட பக்கடாகளுக்கு இது பழைய நினைவுகளை சற்று சொரிந்துவிட்டால் தன்யா பாலகிரிஷ்ணன்... ச்சீ.. தன்யனாவேன்..

கவிவடிவத்தை நீங்கள் புரிந்துகொள்ள “அழகிய தமிழ்மகன்” என்ற அமரகாவியத்தைப் பார்த்திருக்கவேண்டும்.. படத்தில் நிஜமாகவே அழகான ஒரு சிறுமி, அழகிய தமிழ்மகன் என்று நம்மைக் கட்டாயப்படுத்தி நம்ப சொன்ன ஹீரோவிடம், பள்ளி போட்டிக்காக ஒரு கவிதை கேட்பாள்.. அதற்கு “நீயும் நானும் ஒன்னு, இது காந்தி பொறந்த மண்ணு...” என்ற ஒரு கவிதையை அழகர் உதிர்ப்பார்.. கிட்டத்தட்ட அதே இலக்கண அடிப்படையில்தான் இந்த கவிதையும் இயற்றப்பட்டுள்ளது... மனச தேத்திக்கோங்க... ஸ்டார்ட் மீசிக்...வாசித்த நாள்: 01/09/2013 (ஞாயிறு)

கவியரங்கம் என்றொரு மேடை போட்டு
கருத்தாழம் மிக்க சான்றோரை முன்வைத்து
பாடடா தம்பி கவிதையொன்று என கைபிடித்து ஏற்றிவிட்டீர்..
இது நடந்து ஆண்டொன்றும் ஆயிற்று...
கல்யாண ஓலை வாசித்துவிட்டு
கமுக்கமாய் கழன்றவனைக்
கப்சிப்பென்று விட்டுருக்கலாம்..
கரகோஷம் எழுப்பி கடுகுவேறு தாளித்தீர்கள்-  இன்றிந்த
கண்றாவியையும் அனுபவியுங்கள்...
“வர வேண்டும் வேண்டும்” என நின்ற ஆரூர் மூனா அண்ணனிடம்
“வேலை இருக்குது அண்ணே.. வேணாம்” என்று ஒதுங்கியிருந்தேன்..
நகைப்புடன் வெளியான திருவிழா பதிவுகளுக்கிடையே  
புகைப்பட ஆசைக்காட்டி திகைப்படைய செய்திட்ட
கவியாழி அடிகளாரின் கட்டளைக்கு அடிபணிந்து
நுரைதள்ள ஓடிவந்திருக்கிறன்
அரைநாளில் முடித்திட்ட கவிதை என்ற ஒன்றோடு..
குறைபல இருப்பினும் அடியவனை மன்னிக்கோனும்...

எப்போதும் தலைப்பில்தான் தலைவலி எனக்கு...
தப்பு இலக்கணம் பாடினாலே தக்காளியால் அடிக்கும் கூட்டமிது..
கல்யாணம் முடித்தவன் காதலை வாசித்தால்
கல்லாலடித்தே கொண்டுபோடுவர்..
வாடிக்கிடந்த கற்பனை செடிகளில்
தேடிப்பிடித்த இந்த தலைப்புடன் உங்களின்
நாடிபிடிக்க முயற்சிக்கிறேன்...
தலைப்பை கேளுங்கள்...
“பகுத்தறிவும் பக்கடாக்களும்”
“வறட்சி வரலாம் உன் கற்பனையில் ஆனால்
புரட்சி மிஸ்ஸானால் பெரும்பாவம் தம்பி
மிரட்சி உண்டாக்கும் ஒரு tagline போடு” என்றார் நக்கீரர் அண்ணன்...
மீண்டும் கேளுங்கள் நம் தலைப்பை...
“பகுத்தறிவும் பக்கடாக்களும்”
                      TIME TO READ
குண்டு மிரட்டல் ஏதும் வந்தால்
இரண்டு நொடியில் tagஐ தூக்கிட்டு
தண்டை வளைத்து சரெண்டர் ஆகிறலாம்..
மண்டை உடைத்துக்கொள்ளும் கவலை வேண்டாம்...
அவைப்பெரியோருக்கு வணக்கங்கள்...

எப்பேர்ப்பட்ட பகுத்தறிவாளன் நான்?

பத்தொன்பது வயது வரை
கெத்தான கணேசருக்கு
பித்தான பக்தன் நான்...
கருப்பொன்று சிவப்பொன்றாய் கையிலிரண்டு கயிறு இருக்கும்..
கனமான கணேசன் டாலரொன்று நெஞ்சத்தை தொட்டிருக்கும்...
கமகமக்கும் ஜவ்வாது திருநீறும் நெற்றியிலே இட்டுருக்கும்..
பெண்ணாக நயங்கொண்டு விளக்கேற்றி
பொன்னாக புனித பூசை செய்து
விண்ணால வைத்தேன் வேண்டுதல் பல...
பல வரம் வேண்டிநின்ற எனக்கு
நிலவரம் கொஞ்சம் மோசமாக
கலவரமாகி போனது கணேசனுடன்...
அடிவைத்த படியனைத்தும் சறுக்கிவிட
நொடி கூட பொறுக்கவில்லை...
கொடி பிடித்து கிளம்பிவிட்டேன்...
நானும் நாத்திகனென்று....
ஆம்... அப்படியான சந்தர்ப்பவாத நாத்திகன் நான்...

பக்கடா எண் 1

ஐந்தாம் வகுப்பு மாணவன் எனக்கு ஐந்தாயிரம் பிரச்சனைகள் அந்நாளில்...
பிடிக்காத இட்லியை பூண்டு நாறும் பொடிகொண்டு
கடிக்காமல் கண்மூடி கரைத்துள்ளே தள்ளவேண்டும்
முடிக்காத ஹோம்வொர்க்கை சமாளிக்க மாஸ்டர் ப்ளான் தீட்டவேண்டும்
பிடிக்காத மாஸ்டர் வந்தால் பின்னாடி பிரம்படியும் வாங்கவேண்டும்- அது
வலிக்காது போல நடித்து பிரியாவிடம் இளிக்கவேண்டும்
கிளாஸ் லீடர் பொறுப்பேற்று அவளிடம்
மாஸ் காட்டி மவுசேற்றி மடக்க வேண்டும்...
வீடு திரும்பும் வேளைதனில்
சாரதிக்கு தெரியாமல் ஷகிலா போஸ்டர் பார்க்கவேண்டும்..
ரிபோர்ட் கார்டு வந்துவிட்டால் அப்பாவிடம் தப்பிக்க
சப்போர்ட்டுக்கு ஆள் வேண்டும்...

“மாங்கு மாங்கன படித்தாலும்
ரேங்கு ரெண்டிலே ஒட்டிக்கிட்டு
தேங்கி நிக்குதேடா பாலாஜி” என்று
வாங்கி தந்தேன் பன்னீர் சோடாவும் பூமர் சவ்வும்..
பில்லி சூனிய கில்லி அவன்...!

“மொட்டை முனியன் குங்குமமும்
கட்டைவிரலின் அரை நகமும்
இரட்டை சொட்டு விரல் ரத்தமும்
சண்டாளன் கணக்கு புக்கில் இட்டுவிட்டு
ரெண்டாவது ரேங்கு கவலையை விட்டுவிட்டு” என்றான்
விரைவாக செய்துவிட்ட சூன்யத்துடன்
நிறைவாக ஏறிட்டேன் அரையாண்டு தேர்வதனை..!
முறையாக திருத்திட்ட விடைத்தாளை
பறையடித்து வாசித்தார் கணக்கு வாத்தியார்...

சென்ட்டம் சண்டாளனைப் போயி சேர்ந்தது..
பிரியாவைப் பார்த்தும் பல்லிளித்தது- தேமே என்றிருந்த
திவ்யாவுக்கும்கூட ஷுரா கிடைத்தது...
ரெண்டு எனக்கு நாலானது...
இதயம் நொறுங்கி தூளானது!
விடுப்பு பத்து நாள் எடுத்து - என்
கடுப்பிலிருந்து எஸ்சானான் பண்டார பக்கடா..!

பக்கடா எண் 2

மீசை சற்றே முட்டி அரும்ப.. மனதில்
மேசை போட்டு ஆடலாகின ஆசை பல..!
எல்லாம் அவள் ஆசைகள்...!

அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் தொடங்கிவிடும்
அதிமுக்கிய டியுஷன் அது...
குதிகாலில் வெந்நீர்விட்டு அரக்கபரக்க பறந்துசென்று
சதிகாரி சைக்கில்தனை பின்தொடரும் கடமை எனக்கு..
உந்தி சென்றால் சிரிப்பாள்! - சற்று
முந்தி சென்றால் முறைப்பாள் – பின்னாளில்
என் சந்தி சிரிக்கப்போகும் அடையாளம் மட்டும் மறைப்பாள் !

வந்துவிட்டான் பக்கடா இங்கும்...!
அறைங்கான் கயிற்றைக் காட்டிலும்
அரையடி நீண்ட கயிறொன்று காட்டி
கரைதுளியின்றி செய்திட்டான் சத்தியமும்...
“வெயில் வரும் முன்னே அவள் சைக்கிளில் இதை கட்டிவிடு
குயில் வரும் உன்னோடு.. ! அமௌன்ட் எனக்கு வெட்டிவிடு” என்றான்...
மதிகெட்டுப்போன நானும்
மதில் சுவரெல்லாம் தாண்டி சென்று
கதிகலங்க முடித்துவந்தேன் காரியத்தை !
விதிவலை புரியாது நின்ற எனை
ரதியவளும் கடந்து சென்று
சதிகலந்த புன்னகையை சிந்திவிட்டாள்..!
வரமொன்று தேடி வருமென எண்ணி
சிரமுயர்த்தி பெருமிதம் கொண்டிருந்த வேளை
கரம் நீட்ட சொன்னவள் ,
சரியாக அதே நிறத்தில்,
அதே நீளத்தில்,
கயிறொன்று கட்டி சொன்னாள்
“ஹாப்பி ரக்ஷாபந்தன்..”
தேரை இழுத்து என் நெஞ்சில் ஏற்றி
ஊரை காலிசெய்து ஓடிப்போனான் - என் காதல்
வேரை அறுத்த பக்கடா பயல்!

பக்கடா எண் 3

முகம் காணாத முகநூல் காதல் பற்றி
அகம் மகிழ்ந்து போயிருந்த அரைவேர்க்காடு பொழுது அது...
நகம்சதையாய் பழகி இருந்த நண்பன்தான் பக்கடா இங்கே...
அரைபோதையில் இருந்த அவன்
தரை தடவி எடுத்திட்டான் பாட்டில் இரண்டு...
அசந்துபோக செய்யும் அந்த காதல் பற்றி
கசந்துபோக செய்யும்படி மொக்கை போட்டு
வசந்தமாளிகை சிவாஜிபோல வசனம் பேசி..
அவர் மகனைப் போன்றொரு மாடுலேஷனில் கர்ஜித்தான்
“ஒன்றெரிந்து மற்றொன்றால் அடித்து உடை
அதன் பின்னே,
‘உன் பிகர் உன் உரிமை’ ”
என் காட்டில் என்ன மழையோ
பாட்டில் உடைந்து தூளானது..
இது நடந்து கொஞ்சம் நாளானது

“சாட்டில் வந்த  பெண்ணவளை
காட்டு காட்டு” என நச்சரித்தான்
லேப்ட்டாப் திறந்து காட்டியவேளை
என் லப்டப் நிற்கும் வார்த்தை சொன்னான்...
“அது என்னோட fake id மச்சான்”
மூன்றாவது பாட்டில் கிடைத்திருந்தால்
மயக்கம் என்ன தனுஷாக மாறியிருப்பேன்...
“பீல் ஆகாதே மச்சி...
நாளானா சரியாய்டும்” என்று சொல்லி கிங்ஸ் ஒன்றும் நீட்டினான்...
கூலாக பதில் சொன்னேன்...
“நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது”

பக்கடா எண் 4

கல்யாணம் முடித்த மூன்றாம் மாதம்
நல்ல சேதி சொல்ல வேண்டுமாம்
வல்லவனான கணவன்மார்கள்.. !
நானோ வல்லவனுக்கு வல்லவன்.. !
“பொண்ணுக்கு என்ன பேரு” என்றான்
புதிதாய் முளைத்த பக்கடா ஒருவன்...
“ஆணோ பெண்ணோ யானறியேன்..
தானே வரட்டும் நேரமது- அதுவரை
மானே தேனே மட்டும் போட்டுக்கொள்வோம்” என நின்றேன்.
“பல மரங்கண்ட தச்சன் மரமொன்றும் வெட்டான்
பல ஃபிகர் கண்ட மச்சான் பெண்பிள்ளைக்கே அப்பன்...”
என்பது பக்கடாவின் நான்காம் விதி...
மகள்களைப் பெற்ற அப்பாக்கள் வரிசையில்
அடியேனும் ஒன்றாவ போவதேன்னி
பெயர் தேடும் படலத்தை தொடங்கிட்டேன்..
பழைய காதலியின் பெயரை வைக்கலாமெனில்
எத்தனை பெயர்கள் வைப்பது?
வருத்தி எடுத்த கடங்காரிகளை மட்டும்
நிறுத்திவைத்தேன் கணக்கிற்குள்...!
ஒருத்திக்கு ஓரெழுத்தாய் உருவியெடுத்தேன்

வெட்டைவிரிச்சோடி வெயில் பிளக்கும்
மொட்டை மாடி ஏறிவந்து
உள்ளாடை காயவைத்து எனை
தள்ளாட வைத்தவள் ஞாபகம் முதலில் நின்றது...
பெயரில் இருந்து “சி”யை உருவினேன்..
சிறு கீற்றாய் திருநீர் இட்டு  
உருமாறும் புன்னைகை ஒளித்து
இரண்டாவது பெஞ்சில் அமர்ந்திருந்தவள்
இரண்டாவதாய் நினைவில் வர
அவள் பெயரில் இருந்து “ரு” வந்தது..
என் பதிவுகளின் கதாநாயகி
சிவப்பு சுடிதார் இல்லாமலா.?.
அவள் பெயரில் இருந்து ‘தி’ மட்டும்..
‘சி’ ‘ரு’ ‘தி’ என்ற உயிர்மெய்களுக்கு இடையே
மெய்யொன்று வேண்டுமன்றோ?.
சமீபத்திய காதலி நஸ்ரியா
விட்டுபோனால் நல்லாவா இருக்கும்...?
‘ஸ்’  வந்தது...

ஆறுவாரம் இழைத்த பெயரை
ஆரவாரம் கூட்டிக்கொண்டு
காரசாரம் சேர்த்து சொன்னேன் மனைவியிடம்

“ ‘சிருஸ்தி’...  எப்டி?”

“பையனென்றால்!!!!!?” , புருவம் உயர்த்தினாள் ..
“பெண்தான்! பெண்ணேதான்!!..”
தங்கமீன்கள் டிரைலரில் அடித்து சத்தியம் செய்தேன்
படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் போனதுதான் மிச்சம்...
மாதம் எட்டு கடந்தபின்னும் – பால்
பேதம் பற்றி சிந்தனையில்லை அவளுக்கு...
வாதம் செய்ய விரும்பாதவள்
மீதமுள்ள மாதம்தனில் எத்தனை ஸ்கேன் மிச்சமென்றாள்...
“ஒன்று” என்றேன்
“என்று?” என்றாள்
அன்றே அறிய ஆயத்தமானோம்..
கருப்புவெள்ளை ஸ்கேன் திரையில்
நெருப்பு போன்றொரு ஆண்மகன் அசைய
பருப்பு வெந்து போனதெனக்கு...
பகுத்தறிவல்ல..
படித்த மருத்துவமும்
பக்கடாக்கள் முன்பு
துக்கடாதான்
அக்கடான்னு இருந்த வேளை- வந்து
சிக்கடா- என்று நின்றது பதிவர் திருவிழா அழைப்பொன்று

வெற்றிக்கோடு ஒருவர் போட
சேட்டை அதிலே ரோடு போட
இதழில் ஒருவர் கவிதையெழுத
“புக்கேதும் வெளியிடலையா?” –என்று
கொக்கிப்போட்டார்  அரசன் நேற்று..

பதில் சொல்லும் நேரமிது..
“பத்து மாதம் பதிப்பிலிருந்த- என்
முத்தான முதல் கவிதை- நாளை வருகிறான்
கெத்தாக இவ்வுலகிற்கு...
நான் சொத்தாக நினைப்பதெல்லாம்
சான்றோர் உங்களின் வற்றாத வாழ்த்தினைதான்”


எப்போதும் உங்களின் ஆசி வேண்டி..
அனுஷ்யா


சென்ற ஆண்டு சம்பவம்: கவியரங்க கசமுசா