சகித்தவர்கள்...

29 Apr 2013

யதேச்சையான எழுத்துகள் # 6
சுயம் 

சுஜாதா சார் இன்ஸ்பிரேஷனில் 'அனுஷ்யா ' என்று பெயர்பூண்டுள்ளமையை தலைவரின் ரசிகர்கள் மன்னித்தருளவேண்டும்.. ஆறுமாத இடைவெளிக்குப்பின் எழுத ஒருவனுக்கு இன்னெதென்று வகைப்படுத்த முடியாத என்னென்னவோ களங்கள் இருக்கக்கூடும்.. அவை பெரும்பாலும் குப்பை வகையறாவை சார்ந்திருப்பது மட்டும் தவிர்க்கமுடியாதது.. காலை முகநூலை புரட்டிகொண்டிருந்த வேளை என் பள்ளியின் பழைய புகைப்படத்தை காண நேரிட்டது.. அந்த ஒரு புகைப்படத்தை கொண்டே பத்து பதிவுகள் எழுதிவிட முடியும்.. அத்தனை அடர்த்தியான எண்ண அலைகள்..எல்.கே.ஜி. பாமா மிஸ், வகுப்பறை கலவரத்தில் நான்கு வயதில் நண்பனின் ஸ்லேட்டை உடைத்தது, பிரேயர் வேளையில் ரகசியமாய் கண்ணைத் திறந்து பார்ப்பது, ஒளித்து வைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், பெட்டிகடையில் சாக்லேட் திருடியது, மதிய வேளையில் பலவீட்டு சாப்பாடு, கேங் வார், சில்லறை புண்சிரிப்புகள்,சில நேரங்களில் சிதறிய மனங்கள்...என நான் என்னெவெல்லாமோ என்னை அத்தனையாகவும் ஆக்கியது அதே பள்ளிதான்.. பத்துவருடங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியாகி ஏதேதோ அழுத்தங்களுடன் இன்று உழன்றுகொண்டிருக்கிறேன்.. திருமணம் முடிந்து மனைவியுடன் ஒரு நாள் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.. செய்யவேண்டும்..நேரடி அனுபங்களை பின்னொரு பதிவில் பகிர்கிறேன்..

கொஞ்சம் கவிதை 

முதிர்கண்ணன்

அக்காள்கள் நால்வருக்கும் 
முடித்தாகிவிட்டது.
தங்கையொருவள் 
ஓடிப்போகும் வயதில் 
தயாராய் இருக்கின்றாள்.
காதோரம் நரை மறைக்க 
பென்சில் போதுமாக 
தோன்றவில்லை.
முன்னாளில் முன்வந்து 
காதல் சொன்னவள் 
முகநூலில் அறிவித்த 
மூன்றாம் குழந்தைக்கான 
இவன் பெயர் 
எந்தவொரு  சலனமும் 
ஏற்படுத்திவிடவில்லை.
வங்கி கணக்கும் 
வரதட்சணை பிம்பமும் 
வயதைக் காட்டிலும் 
அதிகம் மிரட்டின.
மீண்டு வழியும் 
பேருணர்ச்சிபொழுதொன்றில்
பரங்கிமலை திரையரங்கம்
அல்லது  
வார இதழின் நடுப்பக்கம்.
ஒரு ரூபாய் 
விலையுயர்வால் 
நாளைக்கு ஒரு சிகரெட் 
குறைக்கப்பட்டுள்ளது.
சமவயது நண்பனின் 
குழந்தைக்கான 
பள்ளிக்கட்டண புலம்பல் 
கொஞ்சம் புண்படுத்த 
தவறவில்லை.
நீண்டு தொடரும் 
இன்னல்களின் நடுவே 
இளைப்பாற ஆங்காங்கே 
கிடைத்திருக்கலாம் 
கொஞ்சம் மரணம்..


மணிரத்னம், கமல், பாலா - மதம் 

சமீபத்தில் 'பரதேசி' பார்த்தேன். விமர்சகர்கள் டாக்குமெண்டரிகளைக் கொண்டாடுவது ஒரு அறிவுஜீவி அந்தஸ்தாக உணருவதை கவனிக்கமுடியும். சிலர் கொத்தடிமைகளை பற்றிய காட்சி படிகளை இன்று நம்மிடம் விரவிக்கிடக்கும் சகிப்பின்மையோடு ஒப்பிட்டு சிலாகித்து இருந்தனர். பாறையில் முட்டி மூளையை பிளந்த, வன்புனர்ந்தவனின் ஆணுறுப்பை அறுத்த, தொண்டை சங்கை கடித்து கவ்விய, பார்வையற்றவளின் முகத்தை சிதைத்த, ஒரு முதியவரை அம்மணமாய் தூக்கிலிட்ட வக்கிரர் பாலா அப்படியென்ன கொத்தடிமைகளை புதிதாக துன்புறுத்திவிடபோகிறார் என்ற எண்ணமே ராஜ்கிரண் குரலில் கதை சுருக்கம் கேட்டுக்கொண்டு இருக்கும்போது பாலாவால் மரத்துப்போன என் மனதில் தோன்றியது. படம் இம்மியளவும் பிடிக்கவில்லை. விகடனும் 56 போட்டு தன் பங்கிற்கு அறிவு ஜீவியானது ஆச்சர்யம். குறிப்பாக படத்தின் திருஷ்டி பொட்டாக பலர் குறிப்பிட்டு இருந்தது அந்த நோயாளிகளை மதம் மாற்றும் காட்சிகள். அன்றாடம் கடந்துவரும் சம்பவம் என்பதாலோ என்னவோ என்னால் அந்த காட்சிகளோடு எளிதில் இசையமுடிந்தது. உடலாலும் மனதாலும் நொந்து போயி இருக்கும் ஒருவனை எக்ஸ்ப்ளாய்ட் செய்யும் மதபோதகர்கள் எல்லாம் surrogate தீவிரவாதிகள். ஆனால் பாலா போன்ற ரௌத்திரமான கலைஞன் ஒரு தனி திரைப்படமாக பதிவு செய்திருக்க வேண்டிய அவலத்தை ஏதோ சிம்ரனும் சூர்யாவும் அவரது முந்தைய படங்களின் நடுவே வந்துவிட்டு போவதைப்போல காட்சிபடுத்தியிருப்பது சோகம்.. 
ஜெயமோகனின் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அல்லது புரிந்துகொள்ள இலக்கிய ஞானம் அவசியம் தேவைப்படுமாறும் அமைக்கப்பட்டிருந்த layered ஸ்கிரிப்ட்டின் அருளால் மணி சார் தீட்டியிருந்த 'கடல்' கடலல்ல..கடற்கரை பிரசங்கம். இராமநாராயணன் அவர்களுக்கு பாளையத்து அம்மன் போல மணி சாருக்கு இதில் இயேசு. ஆனால் அவரைப்போல தலைப்பிலேயே ஆன்மிக சொறிதலை வெளிப்படுத்தாமல் இருந்தது மணி சாரின் அயோக்கியத்தனம்..இரண்டரை மணி நேர மத போதகத்தில் வளைந்து நெளிந்து ஒரு வழியாய் திரையரங்கை விட்டு வெளியேறும் வேளை, மணிரத்னத்தை விட்டுகொடுக்காத நண்பர்கள் மேக்கிங் அருமை என்று புலாங்ககிதம் அடைந்தார்கள். அவர்களை பதிலுக்கு நான் ஏறிட்ட வார்த்தைகளை இவ்விடம் சென்சார் செய்துவிடுகிறேன். இறையான்மை மட்டையைப் பற்றி அதிகம் விவாதிக்கும் மணி சாரின் இந்த பிரசங்கம் கமலின் 'விஸ்வ'(VHP)ரூபத்தில் அதிகம் அலசப்படாமல் போனது.. கமலுக்கு முஸ்லிம்களின் மூக்கை எப்போதும் வலிக்காமல் சுரண்டிப்பார்க்க வேண்டும்.அதற்காகவே கரம்சந்த் லாலாவை புதியதாய் உருவாக்குவார். "அந்த கூட்டத்துல எத்தன லால் கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் இருந்தான்னு எனக்கு தெரியல..ஆனா எந்த கிருஷ்ணனும் முன்னாடி வரவே இல்ல மிஸ்டர் மாறார்" என்று தி வெட்னஸ்டே படத்தில் இல்லாத ஒரு குட்டி கதையை உள்ளே செருகுவார். தர்காவில் தஞ்சம் புகுந்ததால்தான் சுனாமியில் இருந்து தப்பித்ததாய் காட்டுவார்.. தன்னுடைய நாத்திக கருத்து திணிப்பில் இருந்து விலகி மண்டியிட்டு தொழுகை செய்வார்.. 

ஆனால் அதே படத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று காமன்மேன்களின் மனதில் கொதிக்க கொதிக்க எரியும் நெருப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுவார். வயது முதிர்ந்த இஸ்லாமிய நாகேஷின் மூத்த மகனாக இவரும் கடைசி மகனாக ஒரு நாலு வயது குழந்தையையும் காட்டுவார்.. கலைத்தாயின் இந்த கடைசி புதல்வன் அமெரிக்கனுக்கு குண்டி கழுவ முல்லா ஓமரையே அமெரிக்க துதிப்பாட வைப்பார். சம்பந்தமே இல்லாமல் ஒரு ரா அதிகாரி MI - 6 ற்கு உயிரை கொடுத்து பணிசெய்து கிடப்பார்.. திடீரென secularism பற்றி பிதற்றுவார். சம்பந்தமே இல்லாமல் போராளிகள் "i support kamalhaasan" என்ற மகா வேள்வியை தொடங்குவார்கள்.. சர்ச்சை விளம்பரமும், இரு துளி கண்ணீர் நாடகமும் நிகழ்த்திவிட்டு படத்தை வெளியிட்டு மூன்று நாளில் கல்லாக்கட்டிவிட்டு அமைதியாவார்.. போராளிகள் மேலும் தொடர்வார்கள். இந்த படத்தை எதிர்ப்பவர்கள்தான் தீவிரவாதிகள் என்று முன்மொழிந்து அவர்களே வழிமொழிவார்கள்..எதிர்ப்பு தெரிவிக்க நினைக்கும் இஸ்லாமியர்களையும் அவர்களது கருத்துக்களையும் கமல்ஹாசனின் கிலேசெரின் காலி செய்துவிடும்.. இஸ்லாமிய நண்பர்கள் இன்னும் அன்னியப்படுவார்கள்.. 

கேட்ட கதையோ புனைவோ இல்லை..... என் நெருங்கிய நண்பன் இஸ்லாமியன் என்ற காரணத்தால் கோவையில் தங்க இடம் கிடைக்காமல் சுற்றியதை விவரித்த அழுத்தம் இன்றும் அகலவில்லை.. பாபர் மசூதியை இடிப்பை மையப்படுத்தி ஹிந்து வெறியர்களை தோலுரிக்க இந்த so called boldmanற்கு திராணி இருக்கிறதா? திராணி இருந்தாலும் எண்ணம் இல்லை.. ஏனெனில் கமல் ஒரு சந்தர்ப்பவாத நாத்திகவாதி..மனதில் இன்னும் அவருடைய வெள்ளை நூல் இன்னும் இறுக்கமாக குறுக்கே தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது.. "மாயா, த்தேவனா இருக்கிறதா?இல்ல மனுஷனா இருக்கிறதா?ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ" எனும் வசனத்தை யோசிக்காமல் எழுதுபவரல்ல கமல். தானும் தன்னுடைய படைப்புகளும் அணுஅணுவாய் கவனிக்கப்படுவதை நன்கு உணர்ந்தவர் என்பதாலேயே சில விஷயங்களை நாசூக்காக சொல்லி பழக்கப்பட்டுவிட்டார்.. துளியும் சமுதாய சிந்தனையும் பொறுப்பும் இல்லாத ஒரு கோணங்கியான கமலை பார்த்துக்கொண்டு ஒரு மழுங்கிய ரசினாக "வாவ் வாவ்" என்றோ 'ஸ்லீக்கான ஸ்டோரி டெல்லிங்" என்றோ கொண்டாட முடியவில்லை...


-அனுஷ்யா 


8 comments:

s suresh said...

கவிதை கனக்க வைத்தது! பட அலசல் அருமை! நன்றி!

ஹ ர ணி said...

அன்புள்ள மயிலன்

வணக்கம். நலம். நலம் விழைகிறேன். தங்களின் திருமணவாழ்வின் இனிமைக்கு எனது வாழ்த்துக்கள். என் மேல் தாங்கள் கொண்டிருக்கும் கோபம் தணிந்ததா? தங்களின் திருமணத்திற்கு எப்படியும் போகவேண்டும் என்கிற நிலையில் உங்களுக்கு உறுதியளித்தும் எதிர்பாரா சூழல் அதனை இயலாததாக்கிவிட்டது.

இப்போதுதான் உங்கள் பதிவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்கிறேன். அனுஷ்கா என்ற பெயர் மாற்றம். வரவேற்கிறேன்.எழுதுங்கள். எழுத்தே முக்கியம். எழுத்து முக்கிய கவனத்தைப்பெறும்போது அனுஷ்கா இயல்பாகப் பதிவாகிவிடும்.

தங்களின் மருத்துவப்பணி எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

தொடர்ந்து வாசிப்பேன். வருவேன். சந்திப்போம் மயிலன்.

சீனு said...

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்

ரெ வெரி said...

அனுஷ்கா???

Welcome back....

நிலாமகள் said...

யதார்த்தமான, மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லிய விதம் நன்று.இனி வரும் காலம் நான்கைந்து தங்கைகள் இல்லாதபோதும் முதிர்கண்ணன் ஆகும் நிலை சகஜமாக்கும் வாழ்வின் போக்கு.

ஜீவன்சுப்பு said...

முதிர் கண்ணிகளைப்பற்றியே பேசிகொண்டும் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது முதிர்கன்னர்களை பற்றிய கவிதை அருமை .

யதேச்சயான எழுத்துக்கள் எல்லாமே புதிய பார்வையை , புதிய கோணத்தை காட்டுகின்றன .

வாழ்த்துக்கள் ...!

சமீரா said...

ஹாய் மயிலன்....
பெரிய இடைவெளியை உங்க இந்த பதிவு நிறைவு செஞ்ச மாதிரி தோணுது!!!
கவிதை மிக அருமை!!!

பாலா, மணிரத்னம், கமல் படங்கள் பற்றிய கருத்து சூப்பர்!!!
பதிவு - எண்ணம் மயிலன்? - எழுத்து அனுஷ்யா வா??

Anonymous said...

என் கருத்துக்களோடு நீங்கள் அதிகம் ஒத்துப்போகிறீர்கள்..வஞ்சப் புகழ்ச்சியாக நாடகம் ஆடாமல் மனதில் பட்டதை பட்டெனச் சொல்லும் உங்கள் தைரியம் என்னைக் கவர்கிறது..நன்றி.