சகித்தவர்கள்...

31 Oct 2013

யார் பெண்ணே நீ?


தேதோ குழப்பமான நினைவுகளுடன்தான் அன்று அவன் பேருந்தில் ஏறினான்.. புதன் இரவு என்பதால் சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லுமந்த பேருந்திற்கு அவ்வளவு மவுசு இல்லையாக தோன்றியது.. நடத்துனர் ஃபுட்போர்டில் தொங்கியபடியே சிதம்பரத்தைத் கூவி கூவி விற்றுகொண்டிருந்தார்... கூவிக்கொண்டிருக்கும் ஸ்வரத்தைப் பார்த்தால் பேருந்து புறப்பட எப்படியும் அரை மணியாகும் போலிருந்தது.. பொழுது நகரவில்லை.. பேஸ்புக்கைத் திறந்தால் மோடிமோடியென என குரூப் முக்கத்திற்கு முக்கம் முக்கிக்கொண்டிருந்தது.. சச்சின் ஓய்வு, ஆரம்பம், விஜய் சேதுபதி என வெவ்வேறான மனநிலைகளை உண்டாக்கும் செய்திகளைக் கடந்துகொண்டிருந்தான்.. ஓரிரண்டு பெண்ணியவாதிகள் நண்பர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.. மனம் நோகும் பொழுதுகளில் அவர்களின் சீரியஸ் பதிவுகளைப் படித்து சிரிப்பதுண்டு.. தனியே இலக்கியவாதிகள் குரூப் வேறு ஒன்றுண்டு... கடைசியாக கவிஞர்கள்.. தமிழில் ஸ்டேட்டஸ் போடத்தெரிந்த ஒன்றே கவிதை எழுதுவதற்கான தகுதி என எண்ணிக்கொண்டிருக்கும் குரூப் இது.. இந்த கடைசி குரூப்பின் ஆயுட்கால உறுப்பினர் இவன்..

இவன் கதை என்று எதாவது எழுதி மாதம் ஐந்தாகிவிட்டது.. நிவாரண நிதி கேட்குமளவிற்கு கற்பனை வறட்சி.. நீண்ட நாட்களுக்கு பின் இரண்டு முறை பார்த்த “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் புரிந்த குறியீடுகளைக் கொஞ்சம் விவரித்து எழுதலாம் என்று நினைப்பதற்குள் விஜய் டிவிக்காரன் முந்திகொண்டான்.. மாதங்கழித்து கதை எழுதுவதில் சிக்கலென்னவெனில், சுரத்து சற்று கம்மியாக இருக்கும் பட்சத்தில், நண்பர்கள்கூட கமென்ட் பாக்ஸில் கை நனைக்காமல் போய்விடுவர்.. அதுகூட பரவாயில்லை “மீண்டு வந்தமைக்கு வாழ்த்துகள், கதை அருமை.. தொடருங்கள்” என டெம்ப்ளேட்டர்கள் புட்டத்தை தேய்க்குமிடமாக அந்த பதிவு மாறிப்போகும்.. காஜல் புகைப்பட (?)கவிதைகளை வாசித்த இலக்கியவாதி ஒருவர், சமீபத்தில் காரிமொழிந்ததும்கூட தயக்கத்திற்கு ஒரு காரணம்... ஆனாலும் விடுவதாய் இல்லை... நடத்துனரைப் பேட்டி எடுத்து பதிவுபோடும் விளிம்புநிலை ரிஸ்க்கெடுக்கவும் தயாராகிவிட்டான்.. அப்படியான ஒரு நெருக்கடியில்,

“excuse me.. is anyone coming here ? ”

கண்களை அகல விரிக்கவேண்டிய கட்டாயம் இவனுக்கு.. பதிலே சொல்லாமல் அந்த கேள்வி வெளிவந்த செவ்வாயையும் அருகிலிருக்கும் பிற பிரதேசங்களையும் மூச்சடக்கி பார்த்துக்கொண்டிருந்தான்... அந்த பெண் கையை இவன் முகத்தின் முன்னாள் விசிறி,

“யாராவது இங்க வர்றாங்களான்னு கேட்டேன்” என்றாள்...

அது அவனுக்கு “யா......ரா.....வ....து  இ........ங்..க... வர்...றா...ங்களா........ன்னு கேட்.....டேன்” என்று ஸ்லோ மோஷனில் தெரிந்தது... இல்லை என்பதுபோல நிஜமாகவே ஸ்லோ மோஷனில் தலையசைத்தான்...

“if u don’t mind, விண்டோ சீட் கொடுக்கறீங்களா?”

சுதாரித்தவனாக, “yes.. ofcourse…” என்று பீட்டர் முடியாவிட்டாலும் பீட்டரின் தம்பியளவிற்காவது ஆங்கிலத்தில் கக்கினான்.. பயணம் எப்படி அமைந்தாலும் பரவாயில்லை, இதை எப்படியாவது ஒரு கதைக்கான கருப்பொருளாய் ஆக்கிவிட வேண்டும் என்று நினைத்த வேகத்தில் அவளைக் கதாநாயகி ஆக்கிவிட்டான்... எடுத்த மார்க்கத்தில் “அவள் விண்டோ கிளாஸை நகர்த்த சிரமப்பட்டாள்.. நான் உதவ முயற்சிக்கையில் முதல் ஸ்பரிசம் ஏற்பட்டது” என்று எழுதிக்கொள்ளலாம் என முடிவு செய்தான்.. அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.. ஆனால் நிஜத்தில் அதற்கான எந்தவொரு சமிக்ஞைகளும் இருப்பதாக தெரியவில்லை...அவளே கிளாஸை நகர்த்திவிட்டு தூரத்தில் ஏர்செல் விளம்பர பதாகையில் இருக்கும் சூர்யாவை நோக்கியபடி இருந்ததில் கொஞ்சம் எரிச்சல்தான்..

எது எப்படி இருந்தால் நமக்கென்ன...? கதை முக்கியம்... கதாநாயகி கிடைத்தாகிவிட்டாள்.. விவரிக்கணும்.. மதப்பெயரால் பப்ளிசிட்டி ஸ்டன்ட்டடித்த நஸ்ரியா புகைப்படத்தை இந்த கதைக்கு பிரயோகிக்கக்கூடாது என்பதுவரை யோசித்துவிட்டான்.. இரவு பயணத்திற்கு முன்பும் குளித்துவிட்டு புறப்படும் ஒரு சிலரில் ஒருவள் போல.. டவ் ஷேம்ப்பூ வாசம்.. காற்றே வராத கோயம்பேட்டு பேருந்து நிலையத்திலும் கூந்தல் அசைகிறது... மெலிதாய் முன்நெற்றியில் புரள்கிறது.. காதில் வெள்ளை நிற கம்மல்.. பிளாட்டினமோ பிளாட்பாரமோ... அவளுக்கு பாந்தமாய்தான் உள்ளது.. உண்மையிலேயே சிவப்பு நிற சுடிதார் அணிந்திருக்கிறாள்.. உஷாராகிவிட்டான்.. “இவ்வளவு கிளிஷே தேவையா?” என்று மெல்போர்ன் நண்பர் சென்ற முறையே கமென்ட்டியிருந்தது நினைவில் இருந்ததால்... “கத்தரிப்பூ நிற சுடிதார்” என்று குறிப்பில் வைத்துகொண்டான்.. “எவ்விடத்திலும் அளவிற்கு அதிகமாய் திமிறாத உடல்வாகு” என்று எழுதலாம் என நினைக்கையில் ஏதோ நெருடியது.. இல்லை இல்லை... அப்படியே இருக்கட்டும்.. இல்லையேல் ஒருசாயலில் பூர்ணா போல இருக்கும் இவளை பூனம்பாண்டே ‘அளவில்’ நண்பர்கள் கற்பனை செய்யக்கூடும்..கிட்டத்தட்ட முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பிவிட்டன.. ஒரு வழியாக ஓட்டுனருக்கு மனதுவந்து பேருந்தை நகர்த்தலாகினார்... இவனும் கதையை நகர்த்தியாக வேண்டும்.. ஏதேனும் பேச்சு கொடுத்து பார்க்கலாமா? தைரியம் தொண்டைகுழி எனும் வேகத்தடையில் அடிபடுகிறது.. ஏதோ சுன்னக்கட்டி நிறத்தில் சாம்சங் மொபைல் ஒன்றை அவள் நோண்டிகொண்டிருக்கும் காட்சியில் குறிப்பெடுக்கும் அளவிற்கு எந்தவொரு அழகும் இவனுக்கு தெரியவில்லை.. “சீட்டே.. சீட்டே” என்று உள்ளே திரிந்துகொண்டிருக்கும் நடத்துனரின் குரல் இவனுக்கு தொந்தரவாகப்பட்டது.. இவனை அவர் நெருங்குகையில்தான் அந்த பயம்.. ஐயோ..! “ஏம்மா, லேடீஸ் பக்கத்துல ஏதும் சீட் வேணுமா?” என்று கேட்டுத்தொலைப்பாரோ.? நல்லவேளை கேட்கவில்லை.. அவளிடம் டிக்கெட்டும் விநியோகிக்கவில்லை.. பேருந்திலிருந்து இறங்கியதும் வண்டிக்கு பின்னால் “தேவதைகளுக்கு இலவசம்” என்றேதும் எழுதியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்...

நெற்றிப்பொட்டில் விரலை அழுத்தி கண்களை மூடி கன்னாபின்னாவென  யோசித்தபடி இருந்தவனை,

எங்கே போறீங்க?” கேட்டேவிட்டாள்...

சென்னை.. ச்சீ... சிதம்பரம்...”

நானும்” என்று சிரித்தபடி முடித்துக்கொண்டுவிட்டாள்.. இவனுக்கு போதவில்லை.. கதைக்காக மேற்படி வசனங்களை மனதிற்குள்ளேயே  தொடர்ந்தான்..

நானும்... “ என்று சிரித்தபடி “தூங்கிட்டேன்னா எழுப்பி விட்ருங்க” என்று அவள் தொடர்ந்தாக கதைவிடலாம்..

நானும் தூங்கிடுவேங்க.. நீங்க முழிச்சிருந்தா என்ன எழுப்பி விட்ருங்க” இருவரும் சிரிப்பதாய் இவ்விடம்..

நேட்டிவ் சிதம்பரமா?”

ஆமாங்க.. நீங்க

நா இங்கதான்.. சென்னை.. அம்மாச்சி வீடு சிதம்பரத்துல இருக்கு.. ச்சும்மா ஒரு விசிட்..

படிக்கிறீங்களா?

ஹ்ம்ம்.. விஸ்காம் செகண்ட் இயர்.. நீங்க?” என்று இவனது கற்பனை குதிரை சிறகை (பறக்கும் குதிரையேதான்) விரிக்க முற்படுகையில்,

ஒரு ஹெல்ப்... சிதம்பரம் வந்து நா தூங்கிட்டேன்னா எழுப்பி விட்ருங்க” உண்மையிலேயே அவள் குரல்.. பதில் சொல்லாமல் ஆச்சர்ய சந்தோஷத்தில் அவளைப் பார்த்தான்..

ஹலோ.. உங்களைதான்.. எழுப்பி விடுவீங்கல்ல..?.."

“sure sure..” மீண்டும் பீட்டரின் தம்பிதான்.. என்ன செய்வான் பாவம்...

குதிரைக்கு வேலையிருப்பதாக தெரியவில்லை.. ஆர்வம் தொற்ற  இருக்கையில் இன்னும் அழுத்தமாய் அமர்ந்துகொண்டான்.. அவளே தொடர்ந்தாள்.. ஆனால் இவன் எதிர்பார்த்த ரீதியில் இல்லை..

நைட் டிராவலுக்கு இப்டி செம்ம ஃபார்மலா ட்ரெஸ் பண்ணிருக்கிங்க?”
சடாரென விழுந்த கேள்விக்கு இவனிடம் பதிலில்லை.. தோள்களை உயர்த்தி, ஆயா போல்.. ச்சீ.. ஆர்யா போல் (ரெண்டும் ஒரே மாதிரிதானே இருக்கும்?) முகத்தில் மிக கேவலமான ஒரு ரியாக்ஷன் கொடுத்து சமாளிக்க வேண்டியதாயிற்று.. இவனுக்கு கொஞ்சம் நிதானிக்க அவகாசமின்றி அடுத்த கேள்வி வந்தது..

“பாட்டு கேக்றீங்களா?” என்றவள், மொபைல் திரையை ஒரு விரலால் மேலும் கீழும் தேய்த்து ஒரு தட்டுத்தட்டி, ஒரு செவிக்கான இயர்ஃபோனை இவனிடம் நீட்டி “ஹ்ம்ம்...” என்றாள்.. சற்று தயக்கத்தோடு அதனை ஏற்று அவளைப் பார்த்தான்.. ஏற்கனவே பாடலைக் கேட்க தொடங்கி கண்களை மூடியிருந்தாள்.. ஏதோ ஓர் மழை பெய்து ஓய்ந்தாற்போன்ற நிலையில் இருந்தான்... திடீரென,

ஆஆஆ.....

இல்ல.. ச்சும்மா தூங்கிட்டீங்களான்னு செக் பண்ணத்தான் வால்யூம் ரைஸ் பண்ணேன்...பயந்துட்டீங்களா?” என்று சிரிக்க தொடங்கினாள்...

“.......!!!!!”

“பின்ன.. journey ஸ்டார்ட் ஆனதும் தூங்கிட்டீங்கன்னா? எனக்கு போர் அடிக்குமே.. அதான்”

இதற்கும் பதிலில்லை அவனிடம்... மூச்சு அவன் அறியாமலே வெப்பமாகிக்கொண்டிருந்தது.. இவளை சித்தரிப்பது சிரமமாக இருக்குமே என்ற கதை குறித்த பயமும் இருக்கத்தான் செய்தது... எழுத்து சற்று பிரண்டால் கூட, தவறானவளாக காட்டிவிடும் அபாயமுண்டு... ஏற்கனவே கதை என்ற பேரில், நினைப்பது ஒன்று, வருவது ஒன்றாய்தான் காலத்தை ஓட்டியிருக்கிறான்.. “சமாளிப்போம், இப்போதைக்கு சம்பவத்தை கவனிப்போம்” யோசனையில் இருந்தவனை,
ஹலோ.. என்னாச்சு...”

இல்ல.. ஒண்ணுமில்ல...”

“am நிவி” என்று கை நீட்டினாள்..

இதுவரை பெயர்களே பரிமாறிக்கொள்ளவில்லை என்பதே இப்போதுதான் அவனுக்கு உரைத்தது.. அறிமுக படலங்கள் முடிந்தேறின.. சகஜநிலைக்கு ஒரு வழியாய் வந்தடைந்தான்.. பீருக்கு பின்னான மோர் குடித்தது போல கொஞ்சம் தெளிவு வர தொடங்கியதும், அவனால் அவளை ரசிக்க முடிந்தது... முன்னால் சரியும் கூந்தலை அடிக்கடி வருடி காதின் பின் செருகவேண்டியிருக்கிறது அவளுக்கு.. கழுத்தில் இருக்கும் சிலுவை டாலர் பக்கத்தில் ஒரு நிஜமாகவே கருப்பான மச்சம், விவகாரம் திசை திரும்பிவிடும் என்ற சுதாரிப்பில் இவன் திரும்பிகொண்டான்..
வசனம் வேண்டுமே...?

சிதம்பரத்துல வீடு எங்க உங்களுக்கு?”, கேட்டே விட்டான்.

இல்ல, கஸின் சிஸ்டர் கல்யாணம் நெக்ஸ்ட் வீக் அதுக்குதான்”

“கஸின் வீடு எந்த ஏரியா?..”

“ஐயோ, ஏன் போர் அடிக்றீங்க? இன்ட்ரெஸ்ட்டிங்கா எதாவது பேசுங்க, உனக்கு பாய்ஃபிரென்ட் இருக்கா, அந்த மாதிரி எதாவது...”

ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை... அவளின் வேகம், குறும்பு, பேசும் தொனி அனைத்திற்கும் மேலாக அழகு, இவனை சற்று முக்குதிக்காட... ச்சீ.. திக்குமுக்காட செய்தது...

“ஹா.. உங்களுக்கு பாய் ஃப்ரென்ட் யாரும் இருக்காங்களா?” என்றிவன் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தாள்...

அம்மா புள்ளையா நீங்க?”

“ஏங்க, நீங்கதானே அப்டி கேக்க சொன்னீங்க?” என்றதும் அவளின் சிரிப்பு தொடர்ந்தது...முடிவில்,

சரி.. ஆமா... ‘மன்சூர் அலி’ன்னு ஒரு பாய் எனக்கு ஃப்ரெண்டா இருக்காரு..” என்று மொக்கை போட்டு அவனை கலாய்த்தாள்..

இவளை சித்தரிப்பதில் இருக்கும் சிரமம் அதிகமாகிக்கொண்டே போவதாய் தெரிந்தது... இவன் ஒரு நேர்கோட்டில் கதையை நகர்த்த முயற்சிக்க அவள் சகட்டுமேனிக்கு ட்விஸ்ட் வைத்து இவனைத் திணறடித்தாள்.. ஒற்றை புருவம் உயர்த்துவது, உதட்டை சுழிப்பது, பழிப்பு காட்டுவது, சிரிக்கும் கன்னத்தில் குழிதோண்டிவைப்பது என அடிக்கடி மன உபத்திரவங்கள் செய்தவள் மிக சொற்ப முறைகள் துப்பட்டாவையும் சரி செய்துகொண்டாள்.. பேருந்து புறப்பட்டு இரண்டரை மணி நேரங்கள் ஆகிவிட்டதாய் கடிகாரம் சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறது.. நம்பமுடியவில்லை...

கை நீட்டும் இடத்தில் எல்லாம் ஆட்களை ஏற்றிக்கொள்வார்கள் போல... எந்த ஊர் என்றே தெரியாத இடத்தில இருவர் ஏறிக்கொண்டனர்.. திடீரென,
பாஸ், பாஸ், உங்கள யாரோ கூப்புடறாங்க...” என்று வெளியே கை காட்டினாள்..

எட்டிப்பார்த்தால், ஆரஞ்சு கலர் புடவையில் அடர்த்தியாய் உதட்டுச்சாயம் பூசிய ஒருத்தி மனிப்பர்ஸை மடக்கி மாரிடுக்கில் செருகி இவனைப் பார்த்து கண்ணடித்தாள்.. கொஞ்சம் பதறிப்போய் இருக்கைக்கு பின்வாங்கினான்.. பேருந்தும் புறப்பட்டது... வெடித்து சிரிக்க தொடங்கினாள்...

“என்னங்க இப்டி பண்ணிட்டீங்க? ஒரு செகன்ட் பயந்துட்டேன்”

“ஹோ, சார் அவ்ளோ அம்மாஞ்சியா?” என்று வயிற்றில் கைவைத்து திணறித்திணறி சிரித்தாள்...

இவனும் கூச்சசுபாவம் உள்ளவனைப் போல கொஞ்சம் ஓவராக்டிங் செய்துகொண்டிருந்தான்... இடைவெளி விட்டு விட்டு அவள் சிரித்துகொண்டே இருக்க, தர்மசங்கடத்தில் நெளிந்தபடி சமாளித்துகொண்டிருந்தான்.. இளையராஜா பாடல்கள் வலது செவிக்குள் மாறிக்கொண்டே இருந்தன... ஒரு சமயத்தில், “காதலின் தீபமொன்று” வர, ரிப்பீட்டில் போட்டுவிட்டு கண்ணயர்ந்துவிட்டாள்..  இவனுக்கு ஏதோ ஹேங்கோவரில் இருப்பதைப் போன்ற எண்ண சிதறல்கள், குழப்பங்கள்... மனதை நிலைநிறுத்த கடும் சிரத்தை மேற்கொண்டிருந்த வேளை, தூங்கியிருந்தவள் மெதுவாய் சரிந்து இவன் தோளில் சாய, மனம் சட்டென வெறுமையடைந்தது... ஜக்கி சாமியார் அளந்துவிடும் சமாதிநிலை, லிங்கம் வெள்ளியங்கிரி, எல்லாமே ஒரு வெள்ளை கலர் பஸ்ஸில் கிடைத்தால் எப்படியிருக்கும்? கண்கள் தெரியவில்லை, பேருந்து சத்தமே கேட்கவில்லை... அட, தூங்கியே போய்விட்டான்...

மடமவென ஏதோ சத்தம் கேட்க விழித்துப்பார்த்தால், “பஸ்ஸு பத்து நிமிஷம் நிக்கும் சார், டிபன் சாப்டறவங்க சாப்ட்ருங்க...” விழுப்புரம் மோட்டல்கள்... பேருந்து சுவரை தட்டி, ஒருவன் எல்லோரையும் எழுப்பிக்கொண்டிருக்க, முழுதாய் விழித்துவிட்ட இவனுக்கு DVD கடைக்காரனின் ஒலிபெருக்கியில் ஓங்கியொலிக்கும் கானா பாடல்கள் ஒருவித அசூயையை உண்டாக்கியது..

காதில் தொடர்ந்து கேட்டுகொண்டிருந்த பாடலில், “நேற்று போல் இன்று இல்லே.. இன்றுபோல்...” ஐ கவனித்தான்... ‘எஸ்.பி.பி ஏன் ‘இல்லை’யை ‘இல்லே’ என பாடியிருக்கிறார்.. ராஜா இதையெல்லாம் அனுமதிக்கமாட்டாரே?’ என்று அவன் அறிவுஜீவித்தனம் சம்பந்தமேயில்லாமல் நள்ளிரவில் கேள்விகேட்கிறது.. அவளும் லேசாக விழிக்க பிரயத்தனப்படுகிறாள்.. தோளில் இவ்வளவு நேரம் சாய்ந்திருந்தமைக்கு ஏதும் சாரி சொல்வாள் என எதிர்பார்த்தால்.... ம்ஹும்ம்..

எந்த ஊரு?” துப்பட்டா துளிக்கூட சரிசெய்யப்படவில்லை இன்னும்..

விழுப்புரம் பக்கமா வந்தாச்சு”

“பசிக்கலையா உங்களுக்கு?” கொஞ்சம் சரிசெய்யப்பட்டுவிட்டது..

இல்ல... சாப்ட்டுதான் பஸ் ஏறுனேன்” என்று உண்மையை சொன்னாலும், ஒரு முறை இப்படியான ஒரு மோட்டலில் முப்பது ரூபாய்க்கு சாப்பிட்டு, ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டி, எஞ்சிய இருபதை கடைக்காரனே டிப்ஸாக்கிக்கொண்டு சலாம் வைத்த காயம் இவனுக்கு இன்னும் வலித்துகொண்டுதான் இருக்கிறது..

“நீங்க.... ச்சுச்சா போகலையா?” சிரிக்காமலே கேட்டுவிட்டாள்...

“என்ன?” என்பது போன்ற பதற்றமான பாவனை.

“இல்ல, ச்சுச்சா போகலையான்னு கேட்டேன்” என அழுத்தம்திருத்தமாகவும், கொஞ்சம் சிரித்துக்கொண்டும் சொல்ல, சுற்றியும்முற்றியும் பார்த்துகொண்டு, எதும் பதில் சொல்லாமல் அல்லது என்ன சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தான்..

“இல்ல, நீங்க கீழ போனா, எனக்கொரு Lays வாங்கிட்டு வாங்க, அதுக்குத்தான்...”

லேசாய் சிரித்தவன், “இருங்க, வாங்கிட்டு வர்றேன்”

கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு இருந்தவனிடம், “ரெட் கலர் வேணாம், ப்ளூ கலர்ர்ர்ர்ர்...” பேருந்திலிருந்தபடியே கத்தினாள்.. மீண்டும் சுற்றிமுற்றி பார்த்தான்.. யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.. சிரித்துக்கொண்டே பாக்கெட்டை மாற்றி கொடுத்து வாங்கிவந்தான்...

“வேணுமா?”

“இல்ல, நீங்க சாப்டுங்க”

“ஒரு ஃபார்மாலிட்டிக்குதான் கேட்டேன்... கேட்டாலும் தரமாட்டேன்” என்று ஆட்காட்டி விரலை மடித்துக்காட்டி சிறுவயது ரம்யாவின் நினைவுகளை அதிரவைத்தாள்... மூச்சு முட்டியது இவனுக்கு... இவளை உள்வாங்கமுடியாமல் திணறிக்கொண்டுதான் இருக்கிறான் இன்னமும்... சிப்ஸ் பாக்கெட் காலியானதும் உள்ளே காற்றை ஊதி அவள் வெடிக்க ஆயத்தமாக, “ஐயோ வேணாம், யாராவது திட்ட போறாங்க” என்று தாவி இடைமறித்தேவிட்டான்.. முகத்தை கொஞ்சம் சோகமாய் வைத்துக்கொண்டவள், “ஓகே... சிதம்பரத்துல இறங்கினதும் வெடிச்சுக்கிறேன்” என்று சொல்லி நிறுத்தாமல் அதை நான்காய் மடித்து அவன் சட்டை பாக்கெட்டில் செருகி, இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.. அவளையே வைத்த கண் வாங்காமல் இவன் பார்த்துகொண்டிருக்க, மீண்டும் இயர்ஃபோனை நீட்டினாள்.. அதே பாடல்...

“பாட்டு மாத்தணுமா?”

“இல்ல, இதே இருக்கட்டும்” என்று இவன் சொன்ன மறுநொடி,எந்தவொரு தயக்கமுமின்றி இவனது வலதுகரத்தைப் பற்றி, தோளில் சாய்ந்து, கன்னத்தை அழுத்தமாய் பதித்து, கண்களை மூடி “குட் நைட்” என்றாள்..

நடந்துமுடிந்த காட்சிகளை எண்ணத்திரையில், ரீவைண்ட், ப்ளே, ஸ்லோ மோஷன், ரீவைண்ட், அல்ட்ரா ஸ்லோ மோஷன், குறிப்பாக கடைசியில் தோளில் சாய்ந்ததை தேர்டு அம்ப்பையர் போல முன்னும் பின்னுமாய் ஓட்டிக்கொண்டு, சிரித்து, ரசித்து, எடிட்டிங் செய்ய முடியாமல் திண்டாடி, ஏதோவொரு பொழுதில் அவனறியாதே ரெட் லைட் விழ நித்திரை கொண்டுவிட்டான்..

ம்பி, சிதம்பரம்தானே கேட்டீங்க...எறங்கல ?” நடத்துனர் பொறுப்பை நெருப்பாய் காட்டி எழுப்பிவிட்டார்... சற்று தடுமாற்றத்துடன் கண்விழித்து,

“என்ன?”

“சிதம்பரம்ப்பா”

அவளைக் காணவில்லை.. பின்னும் முன்னும் சுற்றிப்பார்த்தான்... நிஜமாகவே காணவில்லை..

“இங்க இருந்தவங்க..??”

“யாரு?”

“ஒரு பொண்ணு, அவங்களும் சிதம்பரம்தான்...எறங்கிட்டாங்களா?”

“பொண்ணா?”

“சென்னையில ஏறுனாங்களே.. ரெட் சுடிதார்... கொஞ்சம் ஷார்ட்டா.. நீங்க கூட அவங்ககிட்ட டிக்கெட்டே கொடுக்கல...” என்று இவன் சொல்லும்போது ஓட்டுனர் திரும்பி நடத்துனரை சற்று சந்தேகமாய் பார்த்தார்..

“யோவ், இந்த பையந்தான் ஒளர்றான்னா, நீயும் ஒரு மாதிரி வேற பாக்குற” என்றவர் இவனிடம் திரும்பி, “தம்பி மொதல்ல நீ எறங்கு” என்று அதட்டி தோளைப் பிடித்து எழுப்பினார்...

“இல்லங்க... இதே விண்டோ சீட்... எப்டி என்ன தாண்டி எந்தரிச்சு போனாங்கன்னு தெரியல..”

“யோவ்... சொல்லிக்கினே இருக்கேன்... அப்டி யாரும் ஏறவேயில்லன்னு... என்ன? தனியா ஒக்காந்திக்கினு பஸ்லயே நைட்டு சரக்க போட்டியா?“

இவனுக்கு எதுவுமே விளங்கவில்லை... மனதின் ஏதோவொரு இருளோரத்தில் கூட அவளைத் திருடியாக கற்பனை செய்து பார்க்க முடியவில்லையெனினும், பர்ஸ், மொபைல், பேக் எல்லாம் சரியாகயிருப்பதை ஊர்ஜிதபடுத்திக்கொண்டான்.. இருக்கையிலிருந்து எழும்பவேயில்லை... பின்னாலிருந்து இறங்க வந்துகொண்டிருப்பவரை “சார், நீங்க பாத்தீங்களா?” என அப்பாவியாய் கேட்க, அந்த மனிதர் குழப்பமாய் இவனைப் பார்க்க, நடத்துனர் சுள்ளான் பட பசுபதி போல கொடூரமாய் முறைத்தார்...

ஒருவழியாய் இறங்கியேவிட்டான்... சர்வநிச்சயமாக கனவு இல்லை என  ஆசுவாசபடுத்திகொண்டான்.. ஒரு டீக்கடையில் கொஞ்சம் தண்ணீர் வாங்கி முகத்தைக் கழுவிய பின்னரும் அடர்த்தியாய் வியர்க்கிறது... கைக்குட்டையை எடுக்க சட்டைப்பையில் கை விட, அது இருக்கிறது... ஆம்... நிஜமாகவே இருக்கிறது... Lays பாக்கெட்... நான்காய் மடித்து செருகப்பட்ட அதே நீலநிற Lays பாக்கெட்.. இவனுக்கு கிறுக்கேபிடிக்கிறாற்போல் இருக்கிறது.. பேருந்தை நோக்கி மீண்டும் பதறியடித்து ஓடுகிறான்... வண்டியைக் காணவில்லை.. இன்னும் கொஞ்சம் தூரம் ஓடிப்பார்க்கிறான்.. காணவேயில்லை... கிளம்பியிருக்கலாம்...

தோல்வியோ குழப்பமோ இயலாமையோ ஏமாற்றமோ என எதுவென்றே தெரியாத ஒரு மனநிலை.. மீண்டும் பேருந்திருந்த திசை நோக்கி ஓட கால்கள் தனிச்சையாக பணிக்கின்றன.. நிகழ்காலத்தின் மீதான அவநம்பிக்கை ஓங்கிக்கொண்டிருக்கிறது.. ஓட்டம் மெல்ல தேய்ந்து நடையாகிறது .. நடை கொஞ்சம் சீக்கிரமே பலவீனமாகிறது...

மனசாட்சி சும்மாயிருக்காமல்,

டேய் தம்பி, கதை என்னாச்சு..கதை?” என ஒரண்டையை ஆரம்பிக்கிறது... உஷ்ணத்தின் உச்சமடைகிற இவன், கையிலிருந்த பையை வீசியெறிந்து,

கதையும் வேணாம்... த்தா... ஒரு மயிரும் வேணாம்...” என கிட்டத்தட்ட விசர் பிடித்தவனைப் போல, வேகமாக நடக்கத்தொடங்குகிறான்..

“உன்னை நான் தேடித் தேடி என்னிடம் கண்டுகொண்டேன்....” இளையராஜா தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறார்.. இன்னமும் அதே வலது செவியில் மட்டும்...

முற்றும்


24 comments:

ராஜி said...

கல்யாணம் ஆகி புள்ளைக்குட்டி பெத்தும் இன்னும் கனவு தெளியலையாக்கும்!!

வெளங்காதவன்™ said...

சூப்பரு

dr.ram said...

சிறுவயது ரம்யா......

இராஜராஜேஸ்வரி said...

மயிலிறகாய் வருடி வந்து கடைசியில் மயிலிறகை திருப்பி அடித்ததுபோல் அதிர்ச்சி தந்தது..!

ரிஷபன் said...

சுவாரசியமாய் கொண்டு போய் கடைசியில் .. இப்படி கனவா நிஜமா ஆக்கிட்டீங்களே.. எனிவே ரைட்டிங்க் சூப்பர் !

s suresh said...

அருமையாக சுவாரஸ்யம் குறையாமல் சென்றது கதை! கடைசியில் கனவாய் வழக்கம் போல முடித்தது மட்டும் குறை! அருமையான பகிர்வு! நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அனுஷ்யா said...

சிலர் முடிவைக் கனவு என்று புரிந்துகொண்டதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்... நான் அப்படி முடிக்க வில்லை.. முடிவைத் திறந்துதான் வைத்திருக்கிறேன்...
-அனுஷ்யா

திவ்யா said...

*அவன் முக்குதிக்காடிய விதம் ஏனோ மனதிற்கு 'ஜெய்' கதப்பாத்திரத்தை நினைவூட்டீயது..
*அவளைத் தவறானவளாக காட்டிவிடாமலிருக்க மெனக்கிட்டது- அழகு. இவளது துறுதுறுப்பை துருவாகப் பார்க்கும் பலர் இன்றும் உண்டு.
*பலரது விமர்சனங்களின் தாக்கம் பல இடங்களில் தெரிகிறது. அதற்காக சிவப்பை ஊதா நிறமாக்கியது ஒட்டவில்லை..
*நல்ல வேளை.. கனவென்று சொல்லி சப்பென்று முடிக்காமல் விட்டீரே.. அவனது பயணம் தொடர வாழ்த்துகள்..!!! :)

அனுஷ்யா said...

ரிஷபன்
சுவாரசியமாய் கொண்டு போய் கடைசியில் .. இப்படி கனவா நிஜமா ஆக்கிட்டீங்களே.. எனிவே ரைட்டிங்க் சூப்பர் !//

புரிதலுக்கு முதல் நன்றி
வாழ்த்திற்கு நன்றிகள் பல..

அனுஷ்யா said...

திவ்யா

*//அவன் முக்குதிக்காடிய விதம் ஏனோ மனதிற்கு 'ஜெய்' கதப்பாத்திரத்தை நினைவூட்டீயது.. //

நீ சொன்னதுக்கப்றம் எனக்கும் லேசா அப்டிதான் தோனுது

//பலரது விமர்சனங்களின் தாக்கம் பல இடங்களில் தெரிகிறது. அதற்காக சிவப்பை ஊதா நிறமாக்கியது ஒட்டவில்லை..//

Auto-Fiction உத்தியைக் கையாடுவதில் உள்ள சிக்கலது..

//*நல்ல வேளை.. கனவென்று சொல்லி சப்பென்று முடிக்காமல் விட்டீரே..//

நன்றி

கலியபெருமாள் புதுச்சேரி said...

சத்தியமாய் சொல்கிறேன் இவ்வளவு நீளமான பதிவை ஒரு வார்த்தை விடாமல் முழுமையாக இதுவரை படித்ததில்லை..சுவாரஸ்யம் குறையாமல் சூடேற்றிச் சென்றது அருமை நண்பா.

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - கதை நன்று - இரசித்துப் படித்தேன் - கனவென்ற முடிவு எதிர் பாரா திருப்பம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அனுஷ்யா said...

:( கனவு என்று நான் முடிக்கவில்லை ஐயா..

ஸ்கூல் பையன் said...

ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமான எழுத்து நடை....

//நிவாரண நிதி கேட்குமளவிற்கு கற்பனை வறட்சி//
//தைரியம் தொண்டைகுழி எனும் வேகத்தடையில் அடிபடுகிறது//
//இவளை சித்தரிப்பதில் இருக்கும் சிரமம் அதிகமாகிக்கொண்டே போவதாய் தெரிந்தது//

மிக மிக ரசித்தேன்....

ஸ்கூல் பையன் said...

//இதுவரை பெயர்களே பரிமாறிக்கொள்ளவில்லை என்பதே இப்போதுதான் அவனுக்கு உரைத்தது..//

நாயகனுடைய பேரை சொல்லவே இல்லையே...

ஸ்கூல் பையன் said...

// காஜல் புகைப்பட (?)கவிதைகளை வாசித்த இலக்கியவாதி ஒருவர், சமீபத்தில் காரிமொழிந்ததும்கூட தயக்கத்திற்கு ஒரு காரணம்//

இவர் யாரோ? யாருக்கான குறியீடு இது? (கொஞ்சம் வத்தி வச்சுப் பாப்போம்)

ஸ்கூல் பையன் said...

//சுரத்து சற்று கம்மியாக இருக்கும் பட்சத்தில், நண்பர்கள்கூட கமென்ட் பாக்ஸில் கை நனைக்காமல் போய்விடுவர்.. அதுகூட பரவாயில்லை “மீண்டு வந்தமைக்கு வாழ்த்துகள், கதை அருமை.. தொடருங்கள்” என டெம்ப்ளேட்டர்கள் //

இதுக்கு மேல இருக்கிற வார்த்தைகள் தேவையான்னு தோணுது...

அனுஷ்யா said...

நன்றி ஸ்கூல் சரவணர்...

பெரும்பாலும் இது போன்ற கதைகளத்தில் நாயகனுக்கு நான் பெயரிடுவது இல்லை... :)

அப்றம், குறியீடுகள் ஆய்வுக்குறியவை... எழுதுனவன்கிட்டயே கேக்கப்டாது.. :)

னீங குறிப்பிடும் வரி வரலேன்னா இதைப் பின்நவீனத்துவ இலக்கியத்துல சேத்துக்கமாட்டாங்க பாஸ்... ;)

Philosophy Prabhakaran said...

// இரண்டு முறை பார்த்த “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் புரிந்த குறியீடுகளைக் கொஞ்சம் விவரித்து எழுதலாம் என்று நினைப்பதற்குள் //

போடுங்க பாஸ்... நாங்களும் தெரிஞ்சிப்போமில்ல...

// காஜல் புகைப்பட (?)கவிதைகளை வாசித்த இலக்கியவாதி ஒருவர், சமீபத்தில் காரிமொழிந்ததும்கூட தயக்கத்திற்கு ஒரு காரணம்... //

யார் ?

// அவளிடம் டிக்கெட்டும் விநியோகிக்கவில்லை.. //

இதான் நாட் போல இருக்கு... முதல்முறை வாசித்தபோது கவனிக்கவில்லை...

வாசித்து முடித்தபின் ஒருமுறை காதலின் தீபம் ஒன்று பாடலைக் கேட்டு கன்பார்ம் பண்ணிக்கொண்டேன்...

அப்புறம், முக்கியமான விஷயம்... படிச்சியா இல்லையா என்றெல்லாம் என்னிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை... நான் உங்களுடைய பதிவுகளை தவற விடுவதில்லை... பிரச்சனை என்னவென்றால் பதிவுகளை மொபைலில் பேருந்து பயணம், லஞ்ச், டின்னர் என்று இடைஇடையே படித்துவிடுவேன்... ராத்திரி வந்து பின்னூட்டமிடலாம் என்றால் மறந்துவிடுவேன்...

ஜே கே said...

தல சூப்பர், அருமை எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இப்ப மாட்டருக்கு!... உங்கட காதல் போர்ம் அப்பிடியே இருக்கு. உங்கட கதைகளும் பஸ் பிரயாணத்திலேயே இருக்கு!

விவரணங்கள், அதிலே அழகியல் சேர்ப்பது உங்கட ஸ்ட்ரோங் ஏரியா. அடிச்சு ஆடி இருக்கிறீங்க. இந்த கதை காதல் கதை இல்ல. ஆனா அழகான பெண்ணையும் விவரணத்தையும் எடுத்து ஆளவேண்டிய கட்டாயம். இதே கதையை அறுபது வயது முதியவர் செய்யும்போது, பக்கத்தில இறந்து போன அவள் மனைவி இருந்தால் ... கதை பீறிடும் என்பது என் எண்ணம். நீங்களும் எழுதியிருப்பீங்கள். அந்த நம்பிக்கை உங்களுக்கு கூடிய சீக்கிரமே கிடைக்கோணும் எண்டு வேண்டுகிறேன்!

ஒப்பீடு இல்லை. ஆனால் பாத்திரங்கள் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இன்செப்ஷன் ஹீரோவின் மனைவி பாத்திரமும் இத்தகையதே. நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள தயங்கும் பாத்திரம். நாங்கள் இருப்பது வண்ணாத்துப்பூச்சியின் கனவிலா அல்லது எங்கள் கனவில் வண்ணாத்துப்பூச்சியின் கனவிலா என்ற குழப்பத்துக்கான விடையை எங்கள் வசதிக்கேற்றபடி தீர்மானிக்கும் பாத்திரம் உள்ள கதை. அது அப்படியே வாசகனுக்கு போய்ச்சேர காதலும் பாத்திரத்தின் பல குணங்கள் மயிலனை ஒத்ததாக இருப்பதும் கொஞ்சம் தடையே!

நீங்க எழுத சொன்னத அப்படியே போட்டிடன்! இதுக்கு மேலே எழுத ஏலாது!!

அனுஷ்யா said...

பிரபாவிற்கு...

ஓநாய் இப்பக்கூட எழுதலாம், ஏன்னா டிவில நிறைய பேர் படத்த பார்திருக்காங்க.. ஆனா நா பார்த்து நாளாச்சு... சூடா அப்பவே எழுதியிருக்கனும்... நிறைய யோசிச்சு வெச்சிருந்தேன்...

அந்த ஆள் யாருன்னு உங்கக்கிட்ட தனியா சொல்றேன்.. :) பதிவர் சந்திப்புல நடந்த சம்பவம் அது..

அப்றம் பாடலைக் கேட்டு என்ன கன்பார்ம் பண்ணீங்க? 'இல்லே' மேட்டரா?

உங்களின் கடைசி பத்தி விளக்கத்தில் ஏகப்பட்ட நெகிழ்ச்சி... நன்றிகள் பல :)

அனுஷ்யா said...

ஜேகேவிற்கு,

உங்களிடம் நான் எதிர்பார்ப்பதும் இந்த கன்ஸ்டிரக்ட்டிவ் க்ரிட்டிசிஸத்தைதான்.. ஆகா, சூப்பர் அல்ல என்ற விதத்தில் உங்களின் கமென்ட்டில் நினைத்தது கிடைத்த மகிழ்ச்சி..

பேருந்து இரண்டாவது முறைதானெனினும் எனக்கே பல முறை பிரயோகித்த ஒன்றாய் தோன்றுவதுதான் சிக்கல்.. அடுத்தடுத்த கதைகள் என்பதுக்கூட காரணமாய் இருக்கலாம்.. அப்றம் இந்த வடிவிலான காதல்.. அழகியல் பேசுறது... ரெண்டையும் நிறுத்தியே ஆகணும்ன்னு நினைக்கிறேன்... அப்போ நீங்கள் சொன்ன வடிவிலான கதைகள் சாத்தியப்படும்..

ஒப்பீடு விஷயத்தில் தோழி ஒருத்தி டலாஷ் படம் பற்றி பேசினாள்.. அந்த படம் நான் பார்க்கவில்லை என்பதால் விளங்கவில்லை.. ஆனா நீங்க புடிச்சிட்டீங்க.. இன்செப்ஷன் இறுதியில் அந்த நிற்காமல் சுத்தும் பம்பரம்தான் இந்த முடிவும்.. ஆனா அதிலே கொஞ்சம் ஆட்டோ-ஃபிக்ஷன் ஊறுகாய் போட போய் இப்படியாகிட்டுது..

நன்றி ஜேகே..

ஜீவன் சுப்பு said...

அழகான ஒரு குறும்படம் பார்த்த உணர்வு . நிவியை பற்றியதான வர்ணிப்புகளும் , வார்த்தைளும் , விவரிப்புகளும் வாசிப்பவனை நேசிக்கவைத்துவிடுகின்றது ....!

நிவி போன்ற கதாபாத்திரம் எதார்த்தத்தில் உங்களுக்கு காணக்கிடைத்திருக்கின்றார்களா...?

பின் நவீனத்துவனம் , குறியீடு இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டா மண்டைக்குள்ள மாவாட்டுற உணர்வு .செம்ம ரசனையான எழுத்து ...!
( நானும் தேய்த்துவிட்டேனோ :))

அனுஷ்யா said...

ஜீவன் சுப்புவிற்கு,

நிவியை பற்றி எழுதிய பத்திகள் சற்று பெரியது எனினும் கத்தரிக்கவில்லை.. கொஞ்சம் உள்வாங்க ஏதுவாய் அமைந்தமைக்கு காரணமாக அது இருக்கலாம்.. பல எதார்த்தங்களின் கலவைதான்..ஒரு பெண்ணை முழுதாய் கற்பனை செய்வது எனக்கு சாத்தியப் படாது..

பின் நவீனத்துவத்தின் இலக்கணம் அடியேனும் அறிந்ததில்லை... :) சும்மா லுல்லாயீ....

நன்றிகள் பல...