சகித்தவர்கள்...

26 Nov 2013

இரண்டாம் உலகம்


க்ஸைல் நாவலின் பின்னட்டையில் ஒரு வாசகம் இருக்கும். “சாருவை ஒருவர் ஏற்கலாம், ஏற்காமலிருக்கலாம் ஆனால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது”. அநேகமாய் இதனை சாருவே எழுதிக்கொடுத்திருக்கக்கூடும். அத்தனை நிதர்சனமான வரி. இப்படியான ஏற்றுக்கொள்ளமுடியாதவாறும் அதே நேரம் நிச்சயம் ஒதுக்கித்தள்ளிவைத்துவிட முடியாதவாறும் வெகுசில ஆளுமைகள் இருக்கத்தான் செய்கின்றனர். செல்வராகவன் அப்படியானவர்களில் முக்கியமானவர். அவருடைய படம் பிடிக்கபோவதில்லை என்று தெரிந்துதான் ஒவ்வொரு முறையும் பார்க்கப்போகிறேன். புதுப்பேட்டை மிக நேர்த்தியான ஒன்றாகவும், மயக்கம் என்ன மற்றும் காதல் கொண்டேன் சுமாரான படைப்புகளாகவும் நான் ரசித்தவை. ஆச்சர்யப்படுத்தியவை. மற்றவை பிடிக்கவில்லை. ஆச்சர்யமில்லை.ப்போது இரண்டாம் உலகம். காதல் இல்லை எனில் உலகம் அழிவை நோக்கி செல்லும் என்கிறார். பெண்களை அடிமையாகவும் போகப்பொருளாகவும் மட்டும் காணும் சமுதாயம் சீரழிந்துப்போகும் என்கிறார். அந்த காதல் பரிசுத்தமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கவேண்டும் என்கிறார். அப்படியான உண்மையான காதலுக்குமட்டும்தான் எந்த உலகமாயினும் இசைந்து வழிவிடும் என்கிறார். ஒவ்வொன்றையும் அவ்வாறே அதன் அடிப்படையிலேயே ஏற்கிறேன். இன்னும் கொஞ்சம் போக, மேலும் கவித்துவமாய் உண்மையான காதல் இருக்கும் உலகில்தான் பூக்கள் பூக்கும் என்கிறார். காட்சிப்படுத்தியிருக்கிறார். அணுஅணுவாய் ரசிக்கிறேன். முன்னுரையிலேயே இதற்கான ஒரு வெளிக்கோடு மிகத்தெளிவாய் வரையப்பட்டுவிட்டமையால் படத்திற்குள் அப்படியே வந்துவிட்டேன். தர்க்கரீதியிலான அனுசரனைகளுக்கு என்னை உட்படுத்திக்கொண்டுவிட்டேன். மெல்லிய புன்னைகையோடு முழுப்படத்தையும் அப்படியே ஏற்று வெளியேறினேன்.

காதலை அதற்குரிய எல்லா பரிணாமங்களோடும் சொல்வதில் செல்வராகவன் மிகத்தேர்ந்தவர். காமத்தை காதலின் உயரிய அடையாளமாய் அப்படியே சித்தரிப்பவர். ஒரு பெண் உணர்ச்சிவிளிம்பில் காதலனின் மாரில் எட்டியுதைப்பதாய் காட்சிப்படுத்தியவர். இந்த படத்திலும் ரம்யா ஓர் பின்னரவின் நிலவொளியில் மதுபாலக்கிரிஷ்ணனை சாலையோர திடலில் முத்தத்தால் கொண்டாடுகிறாள். அதற்கு பல காட்சிகள் முன்பு, கிட்டத்தட்ட படத்தின் முதல் காட்சியில், அந்த காட்சியின் அழுத்தத்திற்கான விதைகள் இருக்கும். ஆனால் இதற்கு இடையில் ரம்யாவின் மன ஓட்டங்கள் சம்பந்தமான காட்சிகள் அத்தனையையும் அனுஷ்கா போன்ற சராசரி நடிகை தாங்கிநிற்பது சாத்தியப்படாதவொன்று. சாத்தியப்படவுமில்லை. ஒரு படத்தில் கதாநயாகிக்கு பிரதான பாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்தாலே அவர் நன்றாக நடித்துவிட்டதாக தமிழ் பேசும் நல்லுலகம் ஏற்பது வாடிக்கைதான். ( உ.தா: பொன்வசந்தம்- சமந்தா ) நயன்தாரா நிச்சயம் இவரைவிட சிறப்பாக செய்திருப்பார் என்பது என் எண்ணம். கவர்ச்சிக்காக என்று சொல்லியிருந்தால் ஏதாவது துலாவலாம். தெலுங்கு வணிகம் என்று என்னனமோ சொல்கிறார்கள். விட்டுத்தொலைப்போம். ரம்யாவின் பாந்தமான அழகு வர்ணாவையும் ஏற்க சொல்லி வற்புறுத்துகிறது. சுருங்கிய தொப்புளையும், மறந்து, மன்னித்து ஏற்போமாக.

னால் இன்னமும் பதில் புலப்படாத ஒரு சாதாரண, ஆனால் அதிமுக்கிய  கேள்வி. எப்படி இதில் ஆர்யா? இரு பாலா படங்களில் நடித்ததெல்லாம் நடிகன் என்பதற்கான தகுதியா? எனக்கு தெரிந்து சமகாலத்தில் தகுதிக்கு மிகமிஞ்சிய அளவில் கொண்டாடப்படுபவர்களில் மிகமுக்கியமான ஒருவர் இவர். வெங்கட் பிரபு வகையறா படங்களுக்கு மட்டுமே பொருந்தும் வசன-உச்சரிப்புவடிவு இவருடைய ஆகச்சிறந்த சொத்து. இரண்டாம் உலகமாக காட்டப்படும் பிரதேசத்தில் தோன்றும் மாவீரனை நீல்தாடை, ஒடுக்கு விழுந்த கன்னங்கள், அகன்ற திம்மென்ற தோள்கள், படிக்கட்டு வயிறு ஆகிய தன்மைகளோடான கிட்டத்தட்ட ஒரு டார்ஸான் போல காட்டவேண்டும் என செல்வராகவன் உத்தேசித்திருந்தால் மட்டுமே இவரைத் தேர்ந்தேடுத்திருக்கக்கூடும். படத்தின் பல இடத்தில் இருந்த, இருந்திருக்கவேண்டிய அழுத்தங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தூக்கிவிழுங்கியிருப்பது இவரது படுதிராபையான வசன-உச்சரிப்புதான். மதுபாலகிருஷ்ணன், மருவன் முறையே தனுஷ் மற்றும் விஷால் நன்றாக செய்திருக்கக்கூடும். இரண்டு பாத்திரங்களையும் அவர்கள் தாங்கியிருக்க முடியாது என்று வைத்துக்கொண்டால் ஜீவாவை வைத்து  பிரமாதப்படுத்தியிருக்கலாம். முதல் உலகத்தில் வரும் மதுபாலக்கிருஷ்ணனின் நண்பர் நல்ல தேர்வு. கனிமொழியே பாடலின் துவக்கத்தில் அவரது வெறுமையான பாவனை அசத்தல். ரம்யாவின் தோழியும் ஏற்றுக்கொள்ளலாம் ரகம். பெரும்பாலான மருத்துவமாணவிகளை அழகிகளாய் காட்டியிருப்பதை ஃபேன்டஸி படத்தில் அனுசரித்துக்கொள்ளப்படும் மற்றுமோர் தர்க்கப்பிழையாக எடுத்துக்கொள்கிறேன். ‘அம்மா’ ஆளும் அந்த இரண்டாம் உலகத்தில் மின்சாரமில்லாமல் இரவுகளில் தீப்பந்தங்கள் மின்னுவது குறியீட்டின் உச்சமென நாமே முடிவுசெய்து செல்வராகவனைக் கோர்த்துவிடலாம். இதுப்போன்ற நகையுணர்வுகளைத் தாண்டிய உணர்ச்சிப்பெருக்கெடுக்கவேண்டிய மற்றக் காட்சிககளை மதுபாலக்கிரிஷ்ணன்/ மருவனின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் சிதைக்க செய்கிறது.

நானுணர்ந்த வகையில், செல்வராகவன் ஒரு வீரியமான திரைக்கதையாசிரியர். கதையில் எந்த இடம் அசையவேண்டும், எவ்விடம் பறக்கவேண்டுமென தெளிவாய் செதுக்கும் செய்நேர்த்தியின் உச்சம்தான் புதுப்பேட்டை. ஆனால் அவரே ஒப்புக்கொண்டதைப்போல், அவரொரு சிறந்த இயக்குனரில்லை. கதைமாந்தரிடம் அவருடைய கதைக்கான ஒழுக்கம் எப்போதுமிருக்காது. (தனுஷ் ஒரு விதிவிலக்கு). வசனங்களுக்கிடையே காணப்படும் அத்தியாவசமற்ற இடைவெளி அவரின் காலந்தொட்ட கருஞ்சின்னம். அப்படியானவர் கையில் அனுஷ்கா, ஆர்யா இன்னபிற ஜார்ஜியா மக்கள். கொஞ்சநேரத்தில், இரண்டாம் உலகத்து மக்களின் உடல்மொழி, பேச்சு, பாவனைகள் எல்லாமே நடிக்கத்தெரியாத முதலுலுக மாந்தர் போலத்தான் இருக்கும்போல என நமக்குநாமே நம்பிக்கொள்ளவேண்டியதாயிற்று. முதலுலகம் முழுக்க செல்வராகவன் பிடியிலிருக்க, இரண்டாம் உலகத்தை இரண்டு ‘ஜி’க்கள் தாங்கிப்பிடிக்கின்றன. ஒன்று ஒளியியக்குனர் ராம்ஜி, மற்றொன்று படத்தில் மிகப்பெரிய சொதப்பலாக இருக்கும் என நான் நினைத்திருந்த சி.ஜி. நிஜமாகவே உறுத்தாத சி.ஜி வேலைப்பாடுகள். அந்த சிங்கசண்டை கொஞ்சம் பிசகியிருந்தாலும், சிங்கம் இராமநாராயணன் கூடாரத்திற்கு ஓடியிருக்கும். இப்படியான படத்தில் ஆதாரவிதையாக இருந்திருக்கவேண்டிய இசையை அதற்கான மரியாதை செய்யத்தெரியாத இருவரிடத்தில் கொண்டுப்போனதுதான் சிக்கல். தங்களால் முடிந்த உச்சத்தைத் தொடக்கூட அவர்கள் பிரயத்தனப்படவில்லை. ரஹ்மான் ராஜா ஆகியோரை நெருங்குவதில் செல்வராகவனுக்கு என்ன சிக்கலிருக்கமுடியுமென ஊகிப்பது கடினமாய்படுகிறது. ராஜா குடும்பத்தில் இருந்து விலகுபவர்கள் வைரமுத்து காலில் விழுவதுதான் எழுதப்படாத விதி. கமல்ஹாசன், பாலா வரிசையில் செல்வராகவன். கவிஞர் கலக்கித்தானிருக்கிறார்.

டத்தில் வெளிப்படையான சிக்கல்களும் நிறைய இல்லாமலில்லை. வேற்று உலகத்தில் மனிதனோடு மனிதனாய் உலவும் ஒருவளை தெய்வமாகக் காட்டியதோடு நில்லாமல் அதே மனிதர்கள் மற்ற பெண்களை அடிமைப்படுத்துவதாகவும் காட்டுவது முரண்பாட்டின் உச்சம். வணிக ரீதியான சிக்கலின்பேரில் மருவன் மற்றும் வர்ணாவைத் தவிர இன்னபிற இரண்டாம் உலகவாசிகள் வெள்ளையர்களாக காட்டப்பட்டாலும், அதனை சரிக்கட்ட இவ்விருவருக்கும் முகத்தில் வெண்சாயம் பூசியிருப்பது சற்றே நெருடலாய்தான் இருக்கின்றது. மருவனுக்கும் அவன் தந்தையான படைத்தளபதிக்கும் ஆறு ஒற்றுமைகள் கண்டுபிடிக்கசொல்லி குமுதத்தில் போட்டியே வைக்கலாம். ஒருவேளை அந்த பிரதேசத்திலுள்ள குடிமக்கள் அனைவரும் காதலில்லா காமத்திற்கே பிறந்ததாக நாம் அனுமானித்துக்கொண்டோமெனில் மருவனும் ஏதோவொரு அப்படியான வன்புணர்வின் மிச்சம்தான். அப்படியாக இருப்பின், செல்வராகவன் அவ்வுலகத்தில் ஒரு சில மாநிற பெண்டிரையும் உலவவிட்டிருந்தால் மக்களிடையே இருக்கும் உருவம், நிறவேற்றுமை குறித்த ஐயம் விலக்கப்பட்டிருக்கலாம். தவிர, தன் காதலி போலவே இருப்பதாலேயே ஒரு பெண்ணின் மீது, ஒரு ஆடவனுக்கு காதல் வந்துவிடாது. இதனைப் பார்த்திபன் கனவில் கரு.பழனியப்பன் அழகாய் சொல்லியிருப்பார். இப்படியான காதலின் மேன்மை தெரியாத, எந்தவொரு பாவனையோ, நெகிழ்ச்சியோ, உணர்ச்சித் ததும்பலோயில்லாத வேற்றுக்கிரக கோணங்கி எதற்காக காதல் பாடம் எடுக்க இரண்டாமுலகத்திற்கு வரவேண்டும்? அந்த கடவுளே, ‘அம்மா’ என்று சொல்லப்பட்டாலும் எல்லோராலும் எளிதில் சந்திக்கக்கூடிய, நடைமுறைக்கு முரணான நிலையில்தான் இருக்கிறார். அவரே முன்னின்று வர்ணாவிற்கு வகுப்பெடுத்திருக்கலாமே? இவ்வாறு, கதையின் முக்கிய ஆடுகளமான இரண்டாமுலகத்தில் உலவும் கதைமாந்தர்களில்தான் பிரதான சிக்கல்களை செல்வராகவன் வைத்துவிட்டார். படத்தை எடுக்க துவங்கும் முன்னரே முழு திரைக்கதையும் விவாதிக்கப்பட்டு இறுதிவடிவத்தை அடைந்திருக்க வேண்டுமென்பதை கதாசிரியர் செல்வராகவன் மீண்டும் மீண்டும் மறுக்கிறார். முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை வரிசையாக படமெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். நாட்கள், பணம் இரண்டையும் விரையமாக்குகிறார். இப்படியாக படம் பதிவுசெய்யப்படும் நாட்களிலும் தொடரும் கதாசிரியரின் பணி இயக்குனரை விழுங்கியிருக்கிறது. ஆயினும், இவற்றையும் மீறி எஞ்சியிருப்பதே, இரசிக்க போதுமாய் இருப்பதுதான் அவரின் தனித்தன்மை.

வாதம் வந்தநிலையிலிருக்கும் தந்தைக்கு ஒரு மகன் மலம்கழுவிவிடுவதாக அமைக்கப்பட்டிருந்த காட்சியில், எந்தவொரு சோகப்புராணமும் வாசிக்காமல் அந்த தந்தையை குழந்தையாகவும், மகனைத் தந்தையாகவும் காட்டியது ஒரு தேர்ந்த கதாசிரியருக்கேயான சிறப்பு. அதேப்போல, வேறொருவன் தன்னவளைக் கவர்ந்து செல்லும் நிலையில், உண்டாகும் உணர்ச்சியை, “கூசுது” என சொல்லிக்காட்டுவது செல்வராகவன் பாணி. ஏற்கனவே ‘மயக்கம் என்ன’ சுந்தர் சொல்லியிருந்தாலும், மருவன் சொல்லுமிடத்திலும் அந்தவொரு வார்த்தை ஈர்க்கத்தான் செய்கிறது. பெண்களை வன்முறையால் அடக்கக்கூடாது என்ற மேன்மையான நடுநிலைவாதத்தை வெளிப்படையாய் சொல்லி, அதேநேரம் அவர்களை மதித்து, ஆராதித்து, மேம்படுத்தி வீரியமான காதலைக் கொண்டு அடக்கவேண்டும் என்ற மென்மையான ஆணாதிக்கவாதத்தை, வர்ணா போர்க்களத்தில் வாளைவிடுத்து “போ.. எனக்கு வெக்கமாயிருக்கு” என்று சொல்லும்படியாக குறியீடாய் சொல்லியிருப்பதை வெளிப்படையாய் இவ்விடம் ரசித்துக்கொள்கிறேன்.

செல்வராகவன் சொல்லாடலில் காதல் எனப்படுவதும் நாம் உணர்ந்திருப்பதைத் தாண்டிய வேறொன்று. சற்றே விந்தையானது. இரண்டாம் உலகத்தில் அந்த கடவுள் மனிதரை காதலிக்கிறார். அன்பு செய்கிறார். காக்கிறார். மனிதர்கள் கடவுளை மதிக்கவோ, கண்டு பயப்படவோ செய்கிறார்கள். ஆன்மிகமே பேசினாலும் மனிதரிடையே கடவுளின்பால் இருப்பது அன்போ காதலோ அன்று. அது பக்தி, பயம் இல்லை அதேபோன்றான வேறேதோ வஸ்து என்றுதான் உணரச்சொல்கிறார். இன்னும் ஒரு படி மேலே சென்றால், ஒருவர் மட்டும் கொள்வது காதல் அல்ல. இருவரும் உணர்வதே காதல் என்பதை ஆங்காங்கே அழுத்தமில்லாமல் சொல்லிவிடுகிறார். மருவனின் தந்தை, அரசன் தன் மகனை சிங்கவேட்டைக்கு அனுப்பும்போது கலங்குவது ஒரு தந்தைக்கு மகன் மீதான காதலாய் விளக்க செல்வராகவன் மறுக்கிறார். மருவனுக்கு அப்படியான அன்பு தந்தை மீது இருக்கவேண்டும். இருவரும் அதனை உணரவேண்டும். அதுதான் பரிசுத்தமான அன்பு, அப்போதுதான் பூக்கள் பூக்கும் என்கிறார். குளிரின் காரணமாய் விருப்பமின்றி ஓரிரவு வீட்டில் தங்கும் வர்ணா, மருவனின் படுக்கையை காலினால் சிதைக்க முற்படும்வேளை மருவனது வர்ணாவின் யோனியை நோக்கிய பார்வை, விருப்பமில்லாத பெண் மீதான இச்சையேயின்றி காதலில்லை என்கிறார். கிட்டத்தட்ட கடைசிக்காட்சியில்தான் மருவன் காதலின் புனிதத்தை உணர்கிறான். அதற்கு வெகுசில காட்சிகள் முன்பு வர்ணா காதலென்றாலே என்னவென உணர்கிறாள். அப்போதே பூக்கள் பூக்கவில்லை. இருவரும் மனதொத்த நிலைவரும்போதுதான் மலர்கிறது. இருவரும் தத்தம் நிலையிலிருந்து பரிசுத்தமாய் உணர்தலே காதல் என்கிறார். சபாஷ்.


ருகாலத்தில் இத்தாலியர்கள் அதிகமாக மேற்கத்திய படங்களை இயக்கத்துவங்க அவ்வகையறா படங்களை “ஸ்பகெட்டி வெஸ்டர்ன் மூவிஸ்” என்று அழைத்தார்களாம். அதாவது, இத்தாலியர்களின் அடையாளங்களும், சாயல்களும் ஊடுருவிய மேற்கத்திய படங்கள் (ஸ்பகெட்டி என்பது ஒருவகை இத்தாலிய சேமியா உணவு). கிட்டத்தட்ட இதையும் செல்வராகவன் இயக்கிய ஒரு “வடைகறி வெஸ்டர்ன் மூவி”யாக நான் நினைக்கவில்லை. இது ஒரு ஹாலிவுட் முயற்சியும் அல்ல. ஃபேன்டஸி களத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஒரு தமிழ் இயக்குனரின் படம். அவ்வளவே. இதில் ட்ராகனையும், ஏலியனையும், அவதாரையும் நான் எதிர்ப்பார்த்துசெல்லவில்லை. செல்வராகவன் என்ற கதைசொல்லி ஃபேன்ட்ஸி உலகத்தில் எப்படி பயணிப்பாரோ அப்படியே பயணித்திருக்கிறார். அவருக்குரிய அடையாளங்களைத்தான் கதை சுமந்து செல்கிறது. “ஃபேன்டஸி படமே எடுத்தாலும் காதலைத்தான் சொல்லியாகனுமா?” என்று படத்தின் மூலதனத்திலேயே கைவைப்பது  விதண்டாவாதம் என்பதால் முன்னுரை கேட்குமிடத்திலேயே அந்த கேள்வியை விட்டுவிட்டேன். அவர் எதையோத்தான்  சொல்லவேண்டுமென நாமே முடிவுசெய்துகொண்டதுதான் பிரச்சனை. “படம் ஆங்கிலப்பட உருவல், fountain, back to future, parallel universe .. but,  ஸ்க்ரீன்ப்ளேதான் சொதப்பல்” என்கிற உலகப்பட விமர்சகர்களுக்கும், “படத்துல ஒரு எழவும் புரியல” என்கிற “சி” சென்ட்டர் ரக ரசிகர்களுக்கும், இடையே இருக்கும் அரைவேர்க்காடான எனக்கு இப்படம் பிடித்துப்போய்விட்டது. ஒருவர் அதிக நாள் உழைத்து, மிகுந்த பொருட்செலவில் எடுக்கும் படம் அவருடைய மிகச்சிறந்த படமாக  இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. கதாசிரியர் செல்வராகவனுக்கு இயக்குனர் செல்வராகவன் நிறைய இடங்களில் துணைநிற்காத இந்த படத்தை செல்வராகவனுக்கான என் பட்டியலில் மயக்கம் என்ன’விற்கும், காதல் கொண்டேன்’ற்கும் இடையில் என்னால் எளிதில் ஏற்றுக்கொண்டாடமுடிகிறது. ஆனால் அதற்காகவே யாரையும் இழுத்து சென்று தியேட்டர் நாற்காலியில் வழுக்கட்டாயமாக கட்டிப்போடும் உரிமை எனக்கில்லை.


16 Nov 2013

எத்தனை பெரிய இழப்பெனக்கு?        உலகிற்கு முன்பு நான் இதனை எழுதி சமர்ப்பிக்க தேவையில்லை. எனக்குள்ளே சொல்லி பார்த்திருக்கலாம். பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக்கொண்டிருந்திருக்கலாம். இரவில் போர்வைக்குள்ளேயே அழுதிருக்கலாம். நான் இங்கே எழுதத்தேவையேயில்லை. நவம்பர் பதினைந்தாம் தேதி பின்னிரவில், என்றோ நிறுத்தியிருந்த டைரி எழுதும் பழக்கத்தை புதுப்பிக்க பிரயத்தனப்பட மனமின்றி எனக்கான பக்கத்தில் என் உளறலை, சோகத்தை, ஒப்பாரியை எனக்காகவே கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். தலை கணக்கிற்காக எப்போதும் நான் இழவுவீடுகளுக்கு சென்றதில்லை. எந்த ஒரு இழப்பு எனக்கு வலிக்குமோ, எந்த இழப்பின் தாக்கம் வீரியமுடையதோ, எந்த இழப்பு என் வீணையை அதிரவிடுமோ  அங்குதான் சென்றிருக்கிறேன். இழவு வீடுகளின் சோகத்தை அவ்வாறாக அப்படியே உள்வாங்கிய நினைவினில் சொல்கிறேன். இன்றும் அதே அப்படியான இழவுவழியை உணர்ந்துகொண்டிருக்கிறேன்.


       ஒரு சிட்டுக்குருவி குடியிருப்பில், என் இரண்டாம் வகுப்பின் பிற்பகுதியில் தொலைக்காட்சி எங்கள் வீட்டில் இருக்கும் காரணத்திற்காக அவ்வேளையில் உயர்நிலை பள்ளிவயதில் இருந்த கீழ்வீட்டு சதீஷ் அண்ணன் கிரிக்கெட் போட்டியென்றால் எங்கள் வீட்டில் குடியேறிவிடுவார். புரியாத விஷயம் என்றாலும் அன்றைய தூர்தஷனில் எது ஒளிபரப்பானாலும் பார்த்தாகவேண்டிய நிர்ப்பந்தத்தில் நானும் சேர்ந்துகொள்வேன். அண்ணன் கைத்தட்டினால் நானும் தட்டுவேன். “தம்பி சிக்ஸு டா” என்றாலோ, “செம்ம ஷாட்” என்றாலோ கைத்தட்டும் அளவிற்கு பழகியிருந்தேன். கொஞ்ச நாட்களில் விதிமுறை புரிந்தது. அண்ணனின் புண்ணியத்தில் ஷாட்களின் பெயரும், ஃபீல்டர்களின் இடங்களும் அத்துபடியானது. டெஸ்ட் மேட்ச் புரிதல் சங்கடமாயிருந்தது. இன்னிங்ஸ் என்பது விளங்குவதற்குள் படாதபாடானது. அண்ணனுடன் சேர்ந்து அசாருதீனுக்கு கைத்தட்டியிருந்த நாட்களில், “இவன்லாம் பொடியன்.. எப்டி வெளையுடறான் பாரு” என்று அண்ணன் யாரைக் காட்டினாரோ, அவரைப் பார்த்த மார்க்கத்தில் என்னை அவரோடு உடன்படுத்திக்கொண்டேன்.எப்படி? எதற்கு? என்ன எதிர்ப்பார்ப்பில்? சத்தியமாய் தெரியவில்லை. அண்ணன் ஒன்றும் பெரிதாக அவரை விவரித்தெல்லாம்விடவில்லை. இருக்கலாம். அன்றைய குழந்தையான என் கண்களில், கடவுள் தெரிந்திருக்கலாம். அப்படியும், அவர் என்னுடன் இத்தனை வருடங்கள் உடன்வரப்போகிறார் என்பதை நான் அன்று உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.


       96’உலகக்கோப்பை துவக்கவிழாவில் அசாருதீன் இந்திய அணியை முன்னின்று நடத்தி அணிவகுத்து வர, இரண்டாவதாய் இவர் வந்துகொண்டிருந்தார். துணை-கேப்டன். ஏதோவொரு பெரிய நிகழ்வு என்பது புரியுமளவிற்கு வளர்ந்திருந்தேன். போட்டி அட்டவணை செய்தித்தாளில் வர அதை நறுக்கி வீட்டில் இருக்கும் கரும்பலகையில் ஒட்டிவைத்து என்றெல்லாம் அவர் விளையாடுவதைப் பார்க்கப்போகிறோம் என்று குறித்துவைத்திருந்தேன், முதல் போட்டியில்,கென்யாவுடன் சதம். வானுக்கும் கீழுக்கும் குதித்தேன். ஆட்டநாயகன் என் ஆதர்சநாயகன். அடுத்த போட்டி. சரியாக நினைவிருக்கிறது. அது ஒரு ரமலான் நாள். இஸ்லாமிய நண்பர் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தோம். மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியது. கருப்பு வெள்ளை டிவி அவர்களது. கடற்கரை கிராமம் என்பதால் ஆண்டெனா ஒத்துழைப்பு தருவது சாத்தியமில்லை. புள்ளிப்புள்ளியாய் தெரியும் காட்சிகளுக்குள் அவரைத் தேடிகொண்டிருந்தேன். எழுபது ரன் எடுத்த நிலையில் ரன்-அவுட். ரமலான் பதார்த்தங்கள் எதையுமே நான் தீண்டவில்லை. எல்லோரும் காரணம் கேட்டு சூழ்ந்துகொள்ள அழுதேவிட்டேன். உடனிருந்த ஒரு அண்ணன் அதே போட்டியில் லாரா என்ற மற்றொரு இமயம் இருப்பதையும் அவர் இரண்டே ரன்னில் அவுட் ஆகியதையும் சொல்லி சிரித்தார். அப்போதிலிருந்தே எனக்கு ஒப்பீடுகளில் நாட்டமில்லை. ‘எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை. நான் அழுகிறேன்.’ என்பதுதான் என் நிலைப்பாடு. ஹீத் ஸ்ட்ரீக், அட்டா-உர்-ரஹ்மான் போன்ற பெயர்களை சுவற்றில் செங்கல்லால் எழுதி, கருங்கல்லால் அடித்த நாட்கள் இன்னும் நினைவிருக்கிறது. கடைசியாக அரையிறுதியில் கலுவித்தேரனா செய்த காரியம், நினைத்து நினைத்து அழுத சோகம். ஈடன் கார்டன் என்ற பெயர் இப்போதும் ஏதோ மயானக்காடைக் குறிக்கும் சொல்லாகவே புத்திக்கு படுகிறது. அதை 199வது போட்டியும் ஆமோதித்தது.


      ஏழாம் வகுப்பு படித்திருந்த வேளை அம்மாவின் தம்பி மரணித்துவிட, அதைத் தொடர்ந்த நாட்களில் பள்ளிமுடிந்து வீட்டிற்கு வரவே விருப்பமிருக்காது. வீட்டின் கடைசி இடுக்குவரை அப்படியொரு சோகம் அப்பிக்கிடக்கும். வார கணக்கில் சமையல் ஆகவில்லை. அப்பா ஹோட்டலில் வாங்கிவருவார். டிவியில் சிலந்திவலை கட்டியிருக்கும். அம்மா எப்போதாவது பேசுவார். பள்ளிக்கு போனாலும் அதன் பிம்பங்கள் எனக்குள் அதிர்ந்துகொண்டேயிருக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்மாவைத் தேற்றிக்கொண்டிருப்பர். உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். இந்த நிலை அப்படியேதான் தொடரப்போகிறது என நம்பியிருந்தேன். சமவயது பக்கத்துவீட்டு தோழி டிவி பார்க்கலாமென்று அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்வாள். அதிலும் நாட்டம் சேரவில்லை. ஒரிரவு ஏழரை மணிக்கு, அவளின் அண்ணன் கிரிக்கெட் பார்க்க அழைத்துப்போனார். ஷார்ஜா கோப்பை. இறுதிப்போட்டிக்கான தகுதிப்போட்டி. என் சங்கடங்களுக்காகவே அவர் கருப்பு பேன்ட் அணிந்து விளையாடுவதாய் எனக்கு தெரிந்தது. சதம் அடித்தார். அவர் சிரிக்கவே இல்லை. ஃபிலேமிங்கின் பந்தில் கீப்பருக்கு கேட்ச் போக, அம்பையர் அவுட் தரவில்லை. எனினும், அவர் வெளியே நடக்கதொடங்கியிருந்தார்.அவருக்கு தெரிந்திருக்கும். என்னைத் தேற்ற போதுமானதை அவர் செய்து முடித்திருந்தார். சென்றுவிட்டார். ஒரு தேவதை போல. எனக்கானவே ஒரு தேவதை போல. எனக்கும் அவருக்குமான உலகத்தை நான் இப்படித்தான் சிருஷ்டித்துகொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து, அந்தந்த வயதிற்கேற்ப வரும் சோகங்களில் இருந்து பெரும்பாலும் அவர்தான் என்னை மீட்டெடுத்திருக்கிறார். எனக்காக விளையாடுகிறார். என்னை சந்தோஷப்படுத்த சிரத்தையெடுக்கிறார். என் கவலைகளை சிக்ஸ்ர்களாய் சிதறடிக்கிறார். அம்மை நோய் வந்து நான் துவண்டு கிடக்கையில் ஒவ்வொரு வைரஸாக பேடல்-ஸ்வீப் செய்கிறார். எனக்காக காயங்களைப் பொறுத்துக்கொள்கிறார். அறுவைசிகிச்சை முடித்து மறுஅவதாரம் எடுக்கிறார். அவரின் தந்தை இறந்த மறுநாள் வந்து, மட்டையை உயர்த்திக்காட்டுகிறார்.


        எங்கள் குடும்பத்தில் எல்லோருமே மெல்லினங்கள். சட்டென உடைந்துபோகிறவர்கள். என்னை மையமாக வைத்தே எந்தவொரு அசைவையும் மேற்கொள்பவர்கள். என்னைவிட அதிகமாக என் வலியை உணர்பவர்கள். என் கஷ்டங்களுக்கு ஆறுதல் சொல்ல அவர்களுக்கு பலம் இருப்பதாய் ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அதற்காகவே, வலியை மறைக்க நானும் பழகிப்பக்குவப்பட்டுக்கொண்டேன். வலிமிகுதியில் தடம்புரள ஆயத்தமாகும் போதெல்லாம் அவர்தான் என்னை ஆட்கொண்டிருக்கிறார். வடிகாலாய் வேறேதும் வந்து விடாமல் குறுக்கே நின்றிருக்கிறார்.2009இன் பிற்பாதியிலிருந்து2010இன் துவக்க மாதங்கள் வரையிலான பொழுதுதான் சந்தேகமேயில்லாமல், இதுவரைவரையிலான என் வாழ்வின் பேரிடர் நாட்கள்.குடும்பம், தனிப்பட்ட விருப்பங்கள், தொழிற்துறை என மும்முனை கனஇடிகள் உலுக்கிபோட்டிருந்தது. நாற்காலி, மேசை, காற்றாடி போல வீட்டில் நானும் ஏதோ ஒன்றாய் அடைந்திருந்தேன். நிச்சயமாய் ஒரு படி கூட நகரமுடியும் என்று நினைத்திருக்கவில்லை. இப்பவும்கூட அந்தவொரு பொழுதில் என்னைப் பொருத்திப்பார்க்க மனம் அச்சப்படுகிறது. விசைப்பலகையில் விரல்கள் நிச்சயமாய் நடுங்குகின்றன. துவண்டுகிடந்த ஒரு மதியத்தில்தான் என் தேவதை, ஒரு சதமடித்து சிரமுயர்த்தி எனைப் பார்த்தது. ஆன்ஹிடோனியாவின் உச்சத்திலிருந்த எனக்கு அது துளியும் போதாது என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. மேலும் தொடர்ந்தார். என் காயங்கள் டேல் ஸ்டெய்னின் பந்துகளாய் வடிவமாறின. அடித்து துவைத்து 200-ஐ நிகழ்த்திக்காட்டி, “இப்போதைக்கு இதைப் பற்றிமட்டும் யோசித்துக்கொள்” என்றார். எங்களுக்குள்ளான சம்பாஷனைகள் இப்படித்தான் நிகழ்ந்துகொண்டிருந்தன. குறைந்தது என் ஒரு மணி நேரத்தையாவது அன்றொரு சந்தோசம் நிரப்புவது சாத்தியப்பட்டதென்பது துளியும் ஐயமின்றி ஒரு தரிசனத்திற்கு நிகர். இதில் மற்றவருக்கு முரண்பாடுகள் தெரியலாம், நகைக்க தோன்றலாம். இது பால்யவயதிலிருந்து எனக்காக நான் உணர்ந்து கொண்டிருக்கும் உண்மை. யாருடைய உடன்பாடையும் நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இது எனக்கான சுயப்பரிசீலனை. இது இப்படித்தானிருக்கும்.


       உலகத்திற்கு அவர் சாதனையாளர், அடுத்த பிரேட்மேன், இந்தியாவின் அடையாளம், கிரிக்கெட்டெனும் மதத்தின் கடவுள்... இன்னும் என்னவெல்லாமோ. ஆனால், எனக்கு அவர் ஓர் உறவு. எப்படியான தர்க்கரீதியில் ஆய்ந்தாலும் இப்படித்தான் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆம், ஓர் உறவு. எனக்கான வல்லினமான உறவு. இருபத்தியொரு வருடங்கள் தேசம் தேசமாய் பறந்து, மைதான பேதமின்றி ருத்ரதாண்டவம் ஆடி, என்னோடு உடன்வந்த, காயங்கலைந்த, ஒழுக்கங்கற்பித்த, தாங்கிநின்ற, தடவிகொடுத்த, தட்டியெழுப்பிய ஓர் உறவு, அப்படியேகொத்தாக இன்று அறுந்துவிழுகிறது. இது நிகழும் என தெரிந்திருந்தும் நான் இதற்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. நிகழப்போகிறது என்ற உண்மையை சம்பவிக்கவிடாமல் செய்யமுடியாதென அறிந்தும் ஏற்றுக்கொள்ள துளியும் இசையமுடியாமல் இன்னலனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நேற்று வரையிலான நிகழ்காலத்தை இன்றைய இறந்தகாலமாய் நம்ப சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நிரப்பமுடியாத வெறுமையொன்று சுற்றிநின்று, விவரிக்கமுடியாபெருங்கைகளை அகலவிரித்து வெளிச்சம் மறைத்து, அடர்ந்து இருள செய்துக்கொண்டிருக்கிறது. இதுவரை உணர்ந்திடாத இதனை வகைப்படுத்த திணறிக்கொண்டிருக்கிறேன். எழுத்துகள் தடுக்கி எழுகின்றன. நொண்டியடிக்கின்றன. மேலும் எழுத எத்தனிக்காமல்,அப்படியே நிறுத்திவிடுகிறேன்.