சகித்தவர்கள்...

16 Nov 2013

எத்தனை பெரிய இழப்பெனக்கு?        உலகிற்கு முன்பு நான் இதனை எழுதி சமர்ப்பிக்க தேவையில்லை. எனக்குள்ளே சொல்லி பார்த்திருக்கலாம். பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக்கொண்டிருந்திருக்கலாம். இரவில் போர்வைக்குள்ளேயே அழுதிருக்கலாம். நான் இங்கே எழுதத்தேவையேயில்லை. நவம்பர் பதினைந்தாம் தேதி பின்னிரவில், என்றோ நிறுத்தியிருந்த டைரி எழுதும் பழக்கத்தை புதுப்பிக்க பிரயத்தனப்பட மனமின்றி எனக்கான பக்கத்தில் என் உளறலை, சோகத்தை, ஒப்பாரியை எனக்காகவே கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். தலை கணக்கிற்காக எப்போதும் நான் இழவுவீடுகளுக்கு சென்றதில்லை. எந்த ஒரு இழப்பு எனக்கு வலிக்குமோ, எந்த இழப்பின் தாக்கம் வீரியமுடையதோ, எந்த இழப்பு என் வீணையை அதிரவிடுமோ  அங்குதான் சென்றிருக்கிறேன். இழவு வீடுகளின் சோகத்தை அவ்வாறாக அப்படியே உள்வாங்கிய நினைவினில் சொல்கிறேன். இன்றும் அதே அப்படியான இழவுவழியை உணர்ந்துகொண்டிருக்கிறேன்.


       ஒரு சிட்டுக்குருவி குடியிருப்பில், என் இரண்டாம் வகுப்பின் பிற்பகுதியில் தொலைக்காட்சி எங்கள் வீட்டில் இருக்கும் காரணத்திற்காக அவ்வேளையில் உயர்நிலை பள்ளிவயதில் இருந்த கீழ்வீட்டு சதீஷ் அண்ணன் கிரிக்கெட் போட்டியென்றால் எங்கள் வீட்டில் குடியேறிவிடுவார். புரியாத விஷயம் என்றாலும் அன்றைய தூர்தஷனில் எது ஒளிபரப்பானாலும் பார்த்தாகவேண்டிய நிர்ப்பந்தத்தில் நானும் சேர்ந்துகொள்வேன். அண்ணன் கைத்தட்டினால் நானும் தட்டுவேன். “தம்பி சிக்ஸு டா” என்றாலோ, “செம்ம ஷாட்” என்றாலோ கைத்தட்டும் அளவிற்கு பழகியிருந்தேன். கொஞ்ச நாட்களில் விதிமுறை புரிந்தது. அண்ணனின் புண்ணியத்தில் ஷாட்களின் பெயரும், ஃபீல்டர்களின் இடங்களும் அத்துபடியானது. டெஸ்ட் மேட்ச் புரிதல் சங்கடமாயிருந்தது. இன்னிங்ஸ் என்பது விளங்குவதற்குள் படாதபாடானது. அண்ணனுடன் சேர்ந்து அசாருதீனுக்கு கைத்தட்டியிருந்த நாட்களில், “இவன்லாம் பொடியன்.. எப்டி வெளையுடறான் பாரு” என்று அண்ணன் யாரைக் காட்டினாரோ, அவரைப் பார்த்த மார்க்கத்தில் என்னை அவரோடு உடன்படுத்திக்கொண்டேன்.எப்படி? எதற்கு? என்ன எதிர்ப்பார்ப்பில்? சத்தியமாய் தெரியவில்லை. அண்ணன் ஒன்றும் பெரிதாக அவரை விவரித்தெல்லாம்விடவில்லை. இருக்கலாம். அன்றைய குழந்தையான என் கண்களில், கடவுள் தெரிந்திருக்கலாம். அப்படியும், அவர் என்னுடன் இத்தனை வருடங்கள் உடன்வரப்போகிறார் என்பதை நான் அன்று உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.


       96’உலகக்கோப்பை துவக்கவிழாவில் அசாருதீன் இந்திய அணியை முன்னின்று நடத்தி அணிவகுத்து வர, இரண்டாவதாய் இவர் வந்துகொண்டிருந்தார். துணை-கேப்டன். ஏதோவொரு பெரிய நிகழ்வு என்பது புரியுமளவிற்கு வளர்ந்திருந்தேன். போட்டி அட்டவணை செய்தித்தாளில் வர அதை நறுக்கி வீட்டில் இருக்கும் கரும்பலகையில் ஒட்டிவைத்து என்றெல்லாம் அவர் விளையாடுவதைப் பார்க்கப்போகிறோம் என்று குறித்துவைத்திருந்தேன், முதல் போட்டியில்,கென்யாவுடன் சதம். வானுக்கும் கீழுக்கும் குதித்தேன். ஆட்டநாயகன் என் ஆதர்சநாயகன். அடுத்த போட்டி. சரியாக நினைவிருக்கிறது. அது ஒரு ரமலான் நாள். இஸ்லாமிய நண்பர் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தோம். மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியது. கருப்பு வெள்ளை டிவி அவர்களது. கடற்கரை கிராமம் என்பதால் ஆண்டெனா ஒத்துழைப்பு தருவது சாத்தியமில்லை. புள்ளிப்புள்ளியாய் தெரியும் காட்சிகளுக்குள் அவரைத் தேடிகொண்டிருந்தேன். எழுபது ரன் எடுத்த நிலையில் ரன்-அவுட். ரமலான் பதார்த்தங்கள் எதையுமே நான் தீண்டவில்லை. எல்லோரும் காரணம் கேட்டு சூழ்ந்துகொள்ள அழுதேவிட்டேன். உடனிருந்த ஒரு அண்ணன் அதே போட்டியில் லாரா என்ற மற்றொரு இமயம் இருப்பதையும் அவர் இரண்டே ரன்னில் அவுட் ஆகியதையும் சொல்லி சிரித்தார். அப்போதிலிருந்தே எனக்கு ஒப்பீடுகளில் நாட்டமில்லை. ‘எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை. நான் அழுகிறேன்.’ என்பதுதான் என் நிலைப்பாடு. ஹீத் ஸ்ட்ரீக், அட்டா-உர்-ரஹ்மான் போன்ற பெயர்களை சுவற்றில் செங்கல்லால் எழுதி, கருங்கல்லால் அடித்த நாட்கள் இன்னும் நினைவிருக்கிறது. கடைசியாக அரையிறுதியில் கலுவித்தேரனா செய்த காரியம், நினைத்து நினைத்து அழுத சோகம். ஈடன் கார்டன் என்ற பெயர் இப்போதும் ஏதோ மயானக்காடைக் குறிக்கும் சொல்லாகவே புத்திக்கு படுகிறது. அதை 199வது போட்டியும் ஆமோதித்தது.


      ஏழாம் வகுப்பு படித்திருந்த வேளை அம்மாவின் தம்பி மரணித்துவிட, அதைத் தொடர்ந்த நாட்களில் பள்ளிமுடிந்து வீட்டிற்கு வரவே விருப்பமிருக்காது. வீட்டின் கடைசி இடுக்குவரை அப்படியொரு சோகம் அப்பிக்கிடக்கும். வார கணக்கில் சமையல் ஆகவில்லை. அப்பா ஹோட்டலில் வாங்கிவருவார். டிவியில் சிலந்திவலை கட்டியிருக்கும். அம்மா எப்போதாவது பேசுவார். பள்ளிக்கு போனாலும் அதன் பிம்பங்கள் எனக்குள் அதிர்ந்துகொண்டேயிருக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்மாவைத் தேற்றிக்கொண்டிருப்பர். உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். இந்த நிலை அப்படியேதான் தொடரப்போகிறது என நம்பியிருந்தேன். சமவயது பக்கத்துவீட்டு தோழி டிவி பார்க்கலாமென்று அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்வாள். அதிலும் நாட்டம் சேரவில்லை. ஒரிரவு ஏழரை மணிக்கு, அவளின் அண்ணன் கிரிக்கெட் பார்க்க அழைத்துப்போனார். ஷார்ஜா கோப்பை. இறுதிப்போட்டிக்கான தகுதிப்போட்டி. என் சங்கடங்களுக்காகவே அவர் கருப்பு பேன்ட் அணிந்து விளையாடுவதாய் எனக்கு தெரிந்தது. சதம் அடித்தார். அவர் சிரிக்கவே இல்லை. ஃபிலேமிங்கின் பந்தில் கீப்பருக்கு கேட்ச் போக, அம்பையர் அவுட் தரவில்லை. எனினும், அவர் வெளியே நடக்கதொடங்கியிருந்தார்.அவருக்கு தெரிந்திருக்கும். என்னைத் தேற்ற போதுமானதை அவர் செய்து முடித்திருந்தார். சென்றுவிட்டார். ஒரு தேவதை போல. எனக்கானவே ஒரு தேவதை போல. எனக்கும் அவருக்குமான உலகத்தை நான் இப்படித்தான் சிருஷ்டித்துகொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து, அந்தந்த வயதிற்கேற்ப வரும் சோகங்களில் இருந்து பெரும்பாலும் அவர்தான் என்னை மீட்டெடுத்திருக்கிறார். எனக்காக விளையாடுகிறார். என்னை சந்தோஷப்படுத்த சிரத்தையெடுக்கிறார். என் கவலைகளை சிக்ஸ்ர்களாய் சிதறடிக்கிறார். அம்மை நோய் வந்து நான் துவண்டு கிடக்கையில் ஒவ்வொரு வைரஸாக பேடல்-ஸ்வீப் செய்கிறார். எனக்காக காயங்களைப் பொறுத்துக்கொள்கிறார். அறுவைசிகிச்சை முடித்து மறுஅவதாரம் எடுக்கிறார். அவரின் தந்தை இறந்த மறுநாள் வந்து, மட்டையை உயர்த்திக்காட்டுகிறார்.


        எங்கள் குடும்பத்தில் எல்லோருமே மெல்லினங்கள். சட்டென உடைந்துபோகிறவர்கள். என்னை மையமாக வைத்தே எந்தவொரு அசைவையும் மேற்கொள்பவர்கள். என்னைவிட அதிகமாக என் வலியை உணர்பவர்கள். என் கஷ்டங்களுக்கு ஆறுதல் சொல்ல அவர்களுக்கு பலம் இருப்பதாய் ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அதற்காகவே, வலியை மறைக்க நானும் பழகிப்பக்குவப்பட்டுக்கொண்டேன். வலிமிகுதியில் தடம்புரள ஆயத்தமாகும் போதெல்லாம் அவர்தான் என்னை ஆட்கொண்டிருக்கிறார். வடிகாலாய் வேறேதும் வந்து விடாமல் குறுக்கே நின்றிருக்கிறார்.2009இன் பிற்பாதியிலிருந்து2010இன் துவக்க மாதங்கள் வரையிலான பொழுதுதான் சந்தேகமேயில்லாமல், இதுவரைவரையிலான என் வாழ்வின் பேரிடர் நாட்கள்.குடும்பம், தனிப்பட்ட விருப்பங்கள், தொழிற்துறை என மும்முனை கனஇடிகள் உலுக்கிபோட்டிருந்தது. நாற்காலி, மேசை, காற்றாடி போல வீட்டில் நானும் ஏதோ ஒன்றாய் அடைந்திருந்தேன். நிச்சயமாய் ஒரு படி கூட நகரமுடியும் என்று நினைத்திருக்கவில்லை. இப்பவும்கூட அந்தவொரு பொழுதில் என்னைப் பொருத்திப்பார்க்க மனம் அச்சப்படுகிறது. விசைப்பலகையில் விரல்கள் நிச்சயமாய் நடுங்குகின்றன. துவண்டுகிடந்த ஒரு மதியத்தில்தான் என் தேவதை, ஒரு சதமடித்து சிரமுயர்த்தி எனைப் பார்த்தது. ஆன்ஹிடோனியாவின் உச்சத்திலிருந்த எனக்கு அது துளியும் போதாது என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. மேலும் தொடர்ந்தார். என் காயங்கள் டேல் ஸ்டெய்னின் பந்துகளாய் வடிவமாறின. அடித்து துவைத்து 200-ஐ நிகழ்த்திக்காட்டி, “இப்போதைக்கு இதைப் பற்றிமட்டும் யோசித்துக்கொள்” என்றார். எங்களுக்குள்ளான சம்பாஷனைகள் இப்படித்தான் நிகழ்ந்துகொண்டிருந்தன. குறைந்தது என் ஒரு மணி நேரத்தையாவது அன்றொரு சந்தோசம் நிரப்புவது சாத்தியப்பட்டதென்பது துளியும் ஐயமின்றி ஒரு தரிசனத்திற்கு நிகர். இதில் மற்றவருக்கு முரண்பாடுகள் தெரியலாம், நகைக்க தோன்றலாம். இது பால்யவயதிலிருந்து எனக்காக நான் உணர்ந்து கொண்டிருக்கும் உண்மை. யாருடைய உடன்பாடையும் நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இது எனக்கான சுயப்பரிசீலனை. இது இப்படித்தானிருக்கும்.


       உலகத்திற்கு அவர் சாதனையாளர், அடுத்த பிரேட்மேன், இந்தியாவின் அடையாளம், கிரிக்கெட்டெனும் மதத்தின் கடவுள்... இன்னும் என்னவெல்லாமோ. ஆனால், எனக்கு அவர் ஓர் உறவு. எப்படியான தர்க்கரீதியில் ஆய்ந்தாலும் இப்படித்தான் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆம், ஓர் உறவு. எனக்கான வல்லினமான உறவு. இருபத்தியொரு வருடங்கள் தேசம் தேசமாய் பறந்து, மைதான பேதமின்றி ருத்ரதாண்டவம் ஆடி, என்னோடு உடன்வந்த, காயங்கலைந்த, ஒழுக்கங்கற்பித்த, தாங்கிநின்ற, தடவிகொடுத்த, தட்டியெழுப்பிய ஓர் உறவு, அப்படியேகொத்தாக இன்று அறுந்துவிழுகிறது. இது நிகழும் என தெரிந்திருந்தும் நான் இதற்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. நிகழப்போகிறது என்ற உண்மையை சம்பவிக்கவிடாமல் செய்யமுடியாதென அறிந்தும் ஏற்றுக்கொள்ள துளியும் இசையமுடியாமல் இன்னலனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நேற்று வரையிலான நிகழ்காலத்தை இன்றைய இறந்தகாலமாய் நம்ப சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நிரப்பமுடியாத வெறுமையொன்று சுற்றிநின்று, விவரிக்கமுடியாபெருங்கைகளை அகலவிரித்து வெளிச்சம் மறைத்து, அடர்ந்து இருள செய்துக்கொண்டிருக்கிறது. இதுவரை உணர்ந்திடாத இதனை வகைப்படுத்த திணறிக்கொண்டிருக்கிறேன். எழுத்துகள் தடுக்கி எழுகின்றன. நொண்டியடிக்கின்றன. மேலும் எழுத எத்தனிக்காமல்,அப்படியே நிறுத்திவிடுகிறேன்.                                             

15 comments:

ராஜி said...

பெரிய இழப்புதான். துக்கத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வாங்க மயிலன்!

வேடந்தாங்கல் - கருண் said...

ஒரு மருத்துவருக்கு இப்படியும் ஒரு உணர்வா?... கிரேட் சச்சின்.

RAJATRICKS - RAJA said...

தனது தந்தையின் இறுதி சடங்கை முடித்துவிட்டு மறுநாளே உலககோப்பை ஆட வந்த உன்னத கலைஞ்சன் அவர். . .

வெளங்காதவன்™ said...

மாப்ளேய்!

உம்பட எழுத்து பூப்பெய்திய குமரிபோல, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டும், விரிந்து கொண்டும் போகிறது.

சூப்பரோ சூப்பர்.

*

கி.ச.திலீபன் said...

ஆத்மார்த்தமான உறவு.... நமக்குத் தொடர்பே இல்லாத மனிதர்கள் நமது உணர்வுகளோடு ஒன்றிப் போய் கிடக்கிறார்கள்... ஒவ்வொருவருக்கும் இது போல் நிச்சயம இருக்கும்

மாணவன் said...

சச்சினுடன் வளர்ந்த... உணர்வுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டுள்ளீர்.

சமகாலத்தில் யாரும் தன்னை நெருங்க முடியாத சாதனைகளைப் படைத்திருக்கும் போதிலும் சற்றே தளர்வான நிகழ்காலத்திற்குப் பொறுப்பேற்று ஒரு கசப்பான சூழ்நிலையில் தன் ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகனாகிய ஒவ்வொருவருக்கும் வேதனையாக இருந்தாலும்....தனது "அசாதாரண" சாகசங்களையெல்லாம் தன் உழைப்பால் மட்டுமே சாத்தியமாக்கிய "சாதாரண மனிதன்"!! இந்த மனிதனின் ரசிகன் என்கிற வகையில் இறுதிவரை மிஞ்சப்போவது பெருமை மட்டுமே..!!

சசிமோஹன்.. said...

உங்கள் எழுத்துகளில் அவ்வளவு நெகிழ்ச்சி அருமை மயிலன் ...

Philosophy Prabhakaran said...

இதெல்லாம் டூ மச் என்று சொல்ல நினைத்துக்கொண்டே படிக்க தொடங்கினால் பதிவை படிக்க படிக்க உணர்வுப்பூர்வமாக உள்ளே இறங்கிவிடுகிறது...

குறிப்பாக முதல் பத்தி இப்பதிவிற்கு யாரும் எதிர்வினையாற்ற முடியாதபடி கட்டமைக்கப் பட்டுள்ளது...

ரொம்ப நாளா கேட்கணும்'ன்னு நினைச்சேன்... ஃபான்ட் சைஸ் ஏன் இவ்வளவு பெருசா இருக்கு ? மொபைலில் வாசிக்கும்போது சரியா இருக்கு...

அனுஷ்யா said...

நான் பிறவியிலேயே மருத்துவர் இல்லயே.. உங்கள் ஒப்பீட்டின் தன்மை விளங்கவில்லை

அனுஷ்யா said...

பத்திகள் பெருசா இருக்றதால font size சின்னதா வெச்சா அடச்ச மாதிரி ஆயிடுது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தேர்ந்த எழுத்தாளர்களுக்கே உரிய நரேஷன்.வாழ்த்துக்கள்

சே. குமார் said...

நெகிழ்வான பகிர்வு.

அனுஷ்யா said...

சிலருக்கு இளையராஜா அப்படி.. வாழ்வின் ஒரு அங்கம்..

Anonymous said...

தேசத்திற்கே பெரிய அதிர்ச்சிதான்..கடந்துதான் போகவேண்டும்..

Dr.Kumaravel said...

sir.. i'm also sachin fan but after reading this.. " No words, Amazing, sachin did sach a great things to his fans"..