சகித்தவர்கள்...

26 Nov 2013

இரண்டாம் உலகம்


க்ஸைல் நாவலின் பின்னட்டையில் ஒரு வாசகம் இருக்கும். “சாருவை ஒருவர் ஏற்கலாம், ஏற்காமலிருக்கலாம் ஆனால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது”. அநேகமாய் இதனை சாருவே எழுதிக்கொடுத்திருக்கக்கூடும். அத்தனை நிதர்சனமான வரி. இப்படியான ஏற்றுக்கொள்ளமுடியாதவாறும் அதே நேரம் நிச்சயம் ஒதுக்கித்தள்ளிவைத்துவிட முடியாதவாறும் வெகுசில ஆளுமைகள் இருக்கத்தான் செய்கின்றனர். செல்வராகவன் அப்படியானவர்களில் முக்கியமானவர். அவருடைய படம் பிடிக்கபோவதில்லை என்று தெரிந்துதான் ஒவ்வொரு முறையும் பார்க்கப்போகிறேன். புதுப்பேட்டை மிக நேர்த்தியான ஒன்றாகவும், மயக்கம் என்ன மற்றும் காதல் கொண்டேன் சுமாரான படைப்புகளாகவும் நான் ரசித்தவை. ஆச்சர்யப்படுத்தியவை. மற்றவை பிடிக்கவில்லை. ஆச்சர்யமில்லை.



ப்போது இரண்டாம் உலகம். காதல் இல்லை எனில் உலகம் அழிவை நோக்கி செல்லும் என்கிறார். பெண்களை அடிமையாகவும் போகப்பொருளாகவும் மட்டும் காணும் சமுதாயம் சீரழிந்துப்போகும் என்கிறார். அந்த காதல் பரிசுத்தமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கவேண்டும் என்கிறார். அப்படியான உண்மையான காதலுக்குமட்டும்தான் எந்த உலகமாயினும் இசைந்து வழிவிடும் என்கிறார். ஒவ்வொன்றையும் அவ்வாறே அதன் அடிப்படையிலேயே ஏற்கிறேன். இன்னும் கொஞ்சம் போக, மேலும் கவித்துவமாய் உண்மையான காதல் இருக்கும் உலகில்தான் பூக்கள் பூக்கும் என்கிறார். காட்சிப்படுத்தியிருக்கிறார். அணுஅணுவாய் ரசிக்கிறேன். முன்னுரையிலேயே இதற்கான ஒரு வெளிக்கோடு மிகத்தெளிவாய் வரையப்பட்டுவிட்டமையால் படத்திற்குள் அப்படியே வந்துவிட்டேன். தர்க்கரீதியிலான அனுசரனைகளுக்கு என்னை உட்படுத்திக்கொண்டுவிட்டேன். மெல்லிய புன்னைகையோடு முழுப்படத்தையும் அப்படியே ஏற்று வெளியேறினேன்.

காதலை அதற்குரிய எல்லா பரிணாமங்களோடும் சொல்வதில் செல்வராகவன் மிகத்தேர்ந்தவர். காமத்தை காதலின் உயரிய அடையாளமாய் அப்படியே சித்தரிப்பவர். ஒரு பெண் உணர்ச்சிவிளிம்பில் காதலனின் மாரில் எட்டியுதைப்பதாய் காட்சிப்படுத்தியவர். இந்த படத்திலும் ரம்யா ஓர் பின்னரவின் நிலவொளியில் மதுபாலக்கிரிஷ்ணனை சாலையோர திடலில் முத்தத்தால் கொண்டாடுகிறாள். அதற்கு பல காட்சிகள் முன்பு, கிட்டத்தட்ட படத்தின் முதல் காட்சியில், அந்த காட்சியின் அழுத்தத்திற்கான விதைகள் இருக்கும். ஆனால் இதற்கு இடையில் ரம்யாவின் மன ஓட்டங்கள் சம்பந்தமான காட்சிகள் அத்தனையையும் அனுஷ்கா போன்ற சராசரி நடிகை தாங்கிநிற்பது சாத்தியப்படாதவொன்று. சாத்தியப்படவுமில்லை. ஒரு படத்தில் கதாநயாகிக்கு பிரதான பாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்தாலே அவர் நன்றாக நடித்துவிட்டதாக தமிழ் பேசும் நல்லுலகம் ஏற்பது வாடிக்கைதான். ( உ.தா: பொன்வசந்தம்- சமந்தா ) நயன்தாரா நிச்சயம் இவரைவிட சிறப்பாக செய்திருப்பார் என்பது என் எண்ணம். கவர்ச்சிக்காக என்று சொல்லியிருந்தால் ஏதாவது துலாவலாம். தெலுங்கு வணிகம் என்று என்னனமோ சொல்கிறார்கள். விட்டுத்தொலைப்போம். ரம்யாவின் பாந்தமான அழகு வர்ணாவையும் ஏற்க சொல்லி வற்புறுத்துகிறது. சுருங்கிய தொப்புளையும், மறந்து, மன்னித்து ஏற்போமாக.

னால் இன்னமும் பதில் புலப்படாத ஒரு சாதாரண, ஆனால் அதிமுக்கிய  கேள்வி. எப்படி இதில் ஆர்யா? இரு பாலா படங்களில் நடித்ததெல்லாம் நடிகன் என்பதற்கான தகுதியா? எனக்கு தெரிந்து சமகாலத்தில் தகுதிக்கு மிகமிஞ்சிய அளவில் கொண்டாடப்படுபவர்களில் மிகமுக்கியமான ஒருவர் இவர். வெங்கட் பிரபு வகையறா படங்களுக்கு மட்டுமே பொருந்தும் வசன-உச்சரிப்புவடிவு இவருடைய ஆகச்சிறந்த சொத்து. இரண்டாம் உலகமாக காட்டப்படும் பிரதேசத்தில் தோன்றும் மாவீரனை நீல்தாடை, ஒடுக்கு விழுந்த கன்னங்கள், அகன்ற திம்மென்ற தோள்கள், படிக்கட்டு வயிறு ஆகிய தன்மைகளோடான கிட்டத்தட்ட ஒரு டார்ஸான் போல காட்டவேண்டும் என செல்வராகவன் உத்தேசித்திருந்தால் மட்டுமே இவரைத் தேர்ந்தேடுத்திருக்கக்கூடும். படத்தின் பல இடத்தில் இருந்த, இருந்திருக்கவேண்டிய அழுத்தங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தூக்கிவிழுங்கியிருப்பது இவரது படுதிராபையான வசன-உச்சரிப்புதான். மதுபாலகிருஷ்ணன், மருவன் முறையே தனுஷ் மற்றும் விஷால் நன்றாக செய்திருக்கக்கூடும். இரண்டு பாத்திரங்களையும் அவர்கள் தாங்கியிருக்க முடியாது என்று வைத்துக்கொண்டால் ஜீவாவை வைத்து  பிரமாதப்படுத்தியிருக்கலாம். முதல் உலகத்தில் வரும் மதுபாலக்கிருஷ்ணனின் நண்பர் நல்ல தேர்வு. கனிமொழியே பாடலின் துவக்கத்தில் அவரது வெறுமையான பாவனை அசத்தல். ரம்யாவின் தோழியும் ஏற்றுக்கொள்ளலாம் ரகம். பெரும்பாலான மருத்துவமாணவிகளை அழகிகளாய் காட்டியிருப்பதை ஃபேன்டஸி படத்தில் அனுசரித்துக்கொள்ளப்படும் மற்றுமோர் தர்க்கப்பிழையாக எடுத்துக்கொள்கிறேன். ‘அம்மா’ ஆளும் அந்த இரண்டாம் உலகத்தில் மின்சாரமில்லாமல் இரவுகளில் தீப்பந்தங்கள் மின்னுவது குறியீட்டின் உச்சமென நாமே முடிவுசெய்து செல்வராகவனைக் கோர்த்துவிடலாம். இதுப்போன்ற நகையுணர்வுகளைத் தாண்டிய உணர்ச்சிப்பெருக்கெடுக்கவேண்டிய மற்றக் காட்சிககளை மதுபாலக்கிரிஷ்ணன்/ மருவனின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் சிதைக்க செய்கிறது.

நானுணர்ந்த வகையில், செல்வராகவன் ஒரு வீரியமான திரைக்கதையாசிரியர். கதையில் எந்த இடம் அசையவேண்டும், எவ்விடம் பறக்கவேண்டுமென தெளிவாய் செதுக்கும் செய்நேர்த்தியின் உச்சம்தான் புதுப்பேட்டை. ஆனால் அவரே ஒப்புக்கொண்டதைப்போல், அவரொரு சிறந்த இயக்குனரில்லை. கதைமாந்தரிடம் அவருடைய கதைக்கான ஒழுக்கம் எப்போதுமிருக்காது. (தனுஷ் ஒரு விதிவிலக்கு). வசனங்களுக்கிடையே காணப்படும் அத்தியாவசமற்ற இடைவெளி அவரின் காலந்தொட்ட கருஞ்சின்னம். அப்படியானவர் கையில் அனுஷ்கா, ஆர்யா இன்னபிற ஜார்ஜியா மக்கள். கொஞ்சநேரத்தில், இரண்டாம் உலகத்து மக்களின் உடல்மொழி, பேச்சு, பாவனைகள் எல்லாமே நடிக்கத்தெரியாத முதலுலுக மாந்தர் போலத்தான் இருக்கும்போல என நமக்குநாமே நம்பிக்கொள்ளவேண்டியதாயிற்று. முதலுலகம் முழுக்க செல்வராகவன் பிடியிலிருக்க, இரண்டாம் உலகத்தை இரண்டு ‘ஜி’க்கள் தாங்கிப்பிடிக்கின்றன. ஒன்று ஒளியியக்குனர் ராம்ஜி, மற்றொன்று படத்தில் மிகப்பெரிய சொதப்பலாக இருக்கும் என நான் நினைத்திருந்த சி.ஜி. நிஜமாகவே உறுத்தாத சி.ஜி வேலைப்பாடுகள். அந்த சிங்கசண்டை கொஞ்சம் பிசகியிருந்தாலும், சிங்கம் இராமநாராயணன் கூடாரத்திற்கு ஓடியிருக்கும். இப்படியான படத்தில் ஆதாரவிதையாக இருந்திருக்கவேண்டிய இசையை அதற்கான மரியாதை செய்யத்தெரியாத இருவரிடத்தில் கொண்டுப்போனதுதான் சிக்கல். தங்களால் முடிந்த உச்சத்தைத் தொடக்கூட அவர்கள் பிரயத்தனப்படவில்லை. ரஹ்மான் ராஜா ஆகியோரை நெருங்குவதில் செல்வராகவனுக்கு என்ன சிக்கலிருக்கமுடியுமென ஊகிப்பது கடினமாய்படுகிறது. ராஜா குடும்பத்தில் இருந்து விலகுபவர்கள் வைரமுத்து காலில் விழுவதுதான் எழுதப்படாத விதி. கமல்ஹாசன், பாலா வரிசையில் செல்வராகவன். கவிஞர் கலக்கித்தானிருக்கிறார்.

டத்தில் வெளிப்படையான சிக்கல்களும் நிறைய இல்லாமலில்லை. வேற்று உலகத்தில் மனிதனோடு மனிதனாய் உலவும் ஒருவளை தெய்வமாகக் காட்டியதோடு நில்லாமல் அதே மனிதர்கள் மற்ற பெண்களை அடிமைப்படுத்துவதாகவும் காட்டுவது முரண்பாட்டின் உச்சம். வணிக ரீதியான சிக்கலின்பேரில் மருவன் மற்றும் வர்ணாவைத் தவிர இன்னபிற இரண்டாம் உலகவாசிகள் வெள்ளையர்களாக காட்டப்பட்டாலும், அதனை சரிக்கட்ட இவ்விருவருக்கும் முகத்தில் வெண்சாயம் பூசியிருப்பது சற்றே நெருடலாய்தான் இருக்கின்றது. மருவனுக்கும் அவன் தந்தையான படைத்தளபதிக்கும் ஆறு ஒற்றுமைகள் கண்டுபிடிக்கசொல்லி குமுதத்தில் போட்டியே வைக்கலாம். ஒருவேளை அந்த பிரதேசத்திலுள்ள குடிமக்கள் அனைவரும் காதலில்லா காமத்திற்கே பிறந்ததாக நாம் அனுமானித்துக்கொண்டோமெனில் மருவனும் ஏதோவொரு அப்படியான வன்புணர்வின் மிச்சம்தான். அப்படியாக இருப்பின், செல்வராகவன் அவ்வுலகத்தில் ஒரு சில மாநிற பெண்டிரையும் உலவவிட்டிருந்தால் மக்களிடையே இருக்கும் உருவம், நிறவேற்றுமை குறித்த ஐயம் விலக்கப்பட்டிருக்கலாம். தவிர, தன் காதலி போலவே இருப்பதாலேயே ஒரு பெண்ணின் மீது, ஒரு ஆடவனுக்கு காதல் வந்துவிடாது. இதனைப் பார்த்திபன் கனவில் கரு.பழனியப்பன் அழகாய் சொல்லியிருப்பார். இப்படியான காதலின் மேன்மை தெரியாத, எந்தவொரு பாவனையோ, நெகிழ்ச்சியோ, உணர்ச்சித் ததும்பலோயில்லாத வேற்றுக்கிரக கோணங்கி எதற்காக காதல் பாடம் எடுக்க இரண்டாமுலகத்திற்கு வரவேண்டும்? அந்த கடவுளே, ‘அம்மா’ என்று சொல்லப்பட்டாலும் எல்லோராலும் எளிதில் சந்திக்கக்கூடிய, நடைமுறைக்கு முரணான நிலையில்தான் இருக்கிறார். அவரே முன்னின்று வர்ணாவிற்கு வகுப்பெடுத்திருக்கலாமே? இவ்வாறு, கதையின் முக்கிய ஆடுகளமான இரண்டாமுலகத்தில் உலவும் கதைமாந்தர்களில்தான் பிரதான சிக்கல்களை செல்வராகவன் வைத்துவிட்டார். படத்தை எடுக்க துவங்கும் முன்னரே முழு திரைக்கதையும் விவாதிக்கப்பட்டு இறுதிவடிவத்தை அடைந்திருக்க வேண்டுமென்பதை கதாசிரியர் செல்வராகவன் மீண்டும் மீண்டும் மறுக்கிறார். முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை வரிசையாக படமெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். நாட்கள், பணம் இரண்டையும் விரையமாக்குகிறார். இப்படியாக படம் பதிவுசெய்யப்படும் நாட்களிலும் தொடரும் கதாசிரியரின் பணி இயக்குனரை விழுங்கியிருக்கிறது. ஆயினும், இவற்றையும் மீறி எஞ்சியிருப்பதே, இரசிக்க போதுமாய் இருப்பதுதான் அவரின் தனித்தன்மை.

வாதம் வந்தநிலையிலிருக்கும் தந்தைக்கு ஒரு மகன் மலம்கழுவிவிடுவதாக அமைக்கப்பட்டிருந்த காட்சியில், எந்தவொரு சோகப்புராணமும் வாசிக்காமல் அந்த தந்தையை குழந்தையாகவும், மகனைத் தந்தையாகவும் காட்டியது ஒரு தேர்ந்த கதாசிரியருக்கேயான சிறப்பு. அதேப்போல, வேறொருவன் தன்னவளைக் கவர்ந்து செல்லும் நிலையில், உண்டாகும் உணர்ச்சியை, “கூசுது” என சொல்லிக்காட்டுவது செல்வராகவன் பாணி. ஏற்கனவே ‘மயக்கம் என்ன’ சுந்தர் சொல்லியிருந்தாலும், மருவன் சொல்லுமிடத்திலும் அந்தவொரு வார்த்தை ஈர்க்கத்தான் செய்கிறது. பெண்களை வன்முறையால் அடக்கக்கூடாது என்ற மேன்மையான நடுநிலைவாதத்தை வெளிப்படையாய் சொல்லி, அதேநேரம் அவர்களை மதித்து, ஆராதித்து, மேம்படுத்தி வீரியமான காதலைக் கொண்டு அடக்கவேண்டும் என்ற மென்மையான ஆணாதிக்கவாதத்தை, வர்ணா போர்க்களத்தில் வாளைவிடுத்து “போ.. எனக்கு வெக்கமாயிருக்கு” என்று சொல்லும்படியாக குறியீடாய் சொல்லியிருப்பதை வெளிப்படையாய் இவ்விடம் ரசித்துக்கொள்கிறேன்.

செல்வராகவன் சொல்லாடலில் காதல் எனப்படுவதும் நாம் உணர்ந்திருப்பதைத் தாண்டிய வேறொன்று. சற்றே விந்தையானது. இரண்டாம் உலகத்தில் அந்த கடவுள் மனிதரை காதலிக்கிறார். அன்பு செய்கிறார். காக்கிறார். மனிதர்கள் கடவுளை மதிக்கவோ, கண்டு பயப்படவோ செய்கிறார்கள். ஆன்மிகமே பேசினாலும் மனிதரிடையே கடவுளின்பால் இருப்பது அன்போ காதலோ அன்று. அது பக்தி, பயம் இல்லை அதேபோன்றான வேறேதோ வஸ்து என்றுதான் உணரச்சொல்கிறார். இன்னும் ஒரு படி மேலே சென்றால், ஒருவர் மட்டும் கொள்வது காதல் அல்ல. இருவரும் உணர்வதே காதல் என்பதை ஆங்காங்கே அழுத்தமில்லாமல் சொல்லிவிடுகிறார். மருவனின் தந்தை, அரசன் தன் மகனை சிங்கவேட்டைக்கு அனுப்பும்போது கலங்குவது ஒரு தந்தைக்கு மகன் மீதான காதலாய் விளக்க செல்வராகவன் மறுக்கிறார். மருவனுக்கு அப்படியான அன்பு தந்தை மீது இருக்கவேண்டும். இருவரும் அதனை உணரவேண்டும். அதுதான் பரிசுத்தமான அன்பு, அப்போதுதான் பூக்கள் பூக்கும் என்கிறார். குளிரின் காரணமாய் விருப்பமின்றி ஓரிரவு வீட்டில் தங்கும் வர்ணா, மருவனின் படுக்கையை காலினால் சிதைக்க முற்படும்வேளை மருவனது வர்ணாவின் யோனியை நோக்கிய பார்வை, விருப்பமில்லாத பெண் மீதான இச்சையேயின்றி காதலில்லை என்கிறார். கிட்டத்தட்ட கடைசிக்காட்சியில்தான் மருவன் காதலின் புனிதத்தை உணர்கிறான். அதற்கு வெகுசில காட்சிகள் முன்பு வர்ணா காதலென்றாலே என்னவென உணர்கிறாள். அப்போதே பூக்கள் பூக்கவில்லை. இருவரும் மனதொத்த நிலைவரும்போதுதான் மலர்கிறது. இருவரும் தத்தம் நிலையிலிருந்து பரிசுத்தமாய் உணர்தலே காதல் என்கிறார். சபாஷ்.


ருகாலத்தில் இத்தாலியர்கள் அதிகமாக மேற்கத்திய படங்களை இயக்கத்துவங்க அவ்வகையறா படங்களை “ஸ்பகெட்டி வெஸ்டர்ன் மூவிஸ்” என்று அழைத்தார்களாம். அதாவது, இத்தாலியர்களின் அடையாளங்களும், சாயல்களும் ஊடுருவிய மேற்கத்திய படங்கள் (ஸ்பகெட்டி என்பது ஒருவகை இத்தாலிய சேமியா உணவு). கிட்டத்தட்ட இதையும் செல்வராகவன் இயக்கிய ஒரு “வடைகறி வெஸ்டர்ன் மூவி”யாக நான் நினைக்கவில்லை. இது ஒரு ஹாலிவுட் முயற்சியும் அல்ல. ஃபேன்டஸி களத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஒரு தமிழ் இயக்குனரின் படம். அவ்வளவே. இதில் ட்ராகனையும், ஏலியனையும், அவதாரையும் நான் எதிர்ப்பார்த்துசெல்லவில்லை. செல்வராகவன் என்ற கதைசொல்லி ஃபேன்ட்ஸி உலகத்தில் எப்படி பயணிப்பாரோ அப்படியே பயணித்திருக்கிறார். அவருக்குரிய அடையாளங்களைத்தான் கதை சுமந்து செல்கிறது. “ஃபேன்டஸி படமே எடுத்தாலும் காதலைத்தான் சொல்லியாகனுமா?” என்று படத்தின் மூலதனத்திலேயே கைவைப்பது  விதண்டாவாதம் என்பதால் முன்னுரை கேட்குமிடத்திலேயே அந்த கேள்வியை விட்டுவிட்டேன். அவர் எதையோத்தான்  சொல்லவேண்டுமென நாமே முடிவுசெய்துகொண்டதுதான் பிரச்சனை. “படம் ஆங்கிலப்பட உருவல், fountain, back to future, parallel universe .. but,  ஸ்க்ரீன்ப்ளேதான் சொதப்பல்” என்கிற உலகப்பட விமர்சகர்களுக்கும், “படத்துல ஒரு எழவும் புரியல” என்கிற “சி” சென்ட்டர் ரக ரசிகர்களுக்கும், இடையே இருக்கும் அரைவேர்க்காடான எனக்கு இப்படம் பிடித்துப்போய்விட்டது. ஒருவர் அதிக நாள் உழைத்து, மிகுந்த பொருட்செலவில் எடுக்கும் படம் அவருடைய மிகச்சிறந்த படமாக  இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. கதாசிரியர் செல்வராகவனுக்கு இயக்குனர் செல்வராகவன் நிறைய இடங்களில் துணைநிற்காத இந்த படத்தை செல்வராகவனுக்கான என் பட்டியலில் மயக்கம் என்ன’விற்கும், காதல் கொண்டேன்’ற்கும் இடையில் என்னால் எளிதில் ஏற்றுக்கொண்டாடமுடிகிறது. ஆனால் அதற்காகவே யாரையும் இழுத்து சென்று தியேட்டர் நாற்காலியில் வழுக்கட்டாயமாக கட்டிப்போடும் உரிமை எனக்கில்லை.


42 comments:

ஜீவன் சுப்பு said...

பதிவை ஒருமுறை வாசிச்சேன் ... கிர்ர்ருங்குது ....!

ஒருவேளை இந்தப்பதிவே A & B சென்டர் , இல்லை இரண்டிற்கும் இடைப்பட்டவர்களுக்கு போல ...!

//ஒரு படத்தில் கதாநயாகிக்கு பிரதான பாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்தாலே அவர் நன்றாக நடித்துவிட்டதாக தமிழ் பேசும் நல்லுலகம் ஏற்பது வாடிக்கைதான் & அம்மா அவதானிப்பு // :)

கோவை ஆவி said...

Ippadathai rasiththu tholaiththu vitta innoru araivekkaagu inge!

அனுஷ்யா said...

ஜெயமோகன் ரசிகரா நீங்கள்?

அமுதா கிருஷ்ணா said...

மயிலன் நல்லாயில்லை என்றால் நல்லாயில்லை என்று ஏன் தான் இந்த இளைய சமூகம் ஒத்துக்கவே மாட்டேங்கிறீங்க.என் பையனையும் சேர்த்து. ப்ளீஸ் 67 கோடி ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. எவ்ளோ நல்ல கதைகள் இருக்கு.புரியற மாதிரி எடுக்கலாமே.புரியாத மாதிரி எடுத்தால் தான் சூப்பர் டைரக்டர் என்று ஏன் நினைக்க வேண்டும்?

அனுஷ்யா said...

நான் செல்வராகவன் அடிமை அல்ல. தவிர இப்படம் இரண்டாம் வகுப்பு குழந்தைக்குக்கூட புரியும் தன்மையுடையது,

அனுஷ்யா said...

:)

ஸ்கூல் பையன் said...

எனக்கென்னவோ படம் புரிந்தது... ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுவையைத் தவிர்த்து காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக வந்திருக்கும்...

ஜீவன் சுப்பு said...

பாஸ்...! எந்த ரிப்ளை யாருக்கு ...? ஒர்ரே கண்பியூசு ...!

அனுஷ்யா said...

படத்தின் வெற்றி தோல்விகள் பற்றி எனக்கென்ன கவலை வேண்டிக்கிடக்கு? என் 100 ரூபாய்க்கு, i am satisfied.

அனுஷ்யா said...

பதில்களைப் பின்தொடரும் தன்மைக்கு நன்றி.. எந்த பதிலில் உங்களுக்கு குழப்பம்

ஜீவன் சுப்பு said...

பாஸ் ...! எல்லா பதில்களுமே யாருக்குன்னு புரியமாட்டீங்குது ....!

ஆவிக்கு அடுத்து வர்றது நேக்கா ...?

Satisfaction - ஸ்.பை.க்கா ...?

ப்ளீஸ் பெயர் போட்டு போடுங்களேன் ...!

ஜீவன் சுப்பு said...

அசிங்கப்படுத்தியதற்கு மன்னிச்சு . அடுத்தமுறை நடவாது ...!

அனுஷ்யா said...

ஜெமோ பதில் ஆவிக்கு.
பதில்கள் அவரவர் பின்னூட்டத்திற்கு கீழேதானே வருகிறது.

அனுஷ்யா said...

???

கோவை ஆவி said...

தமிழ் தட்டச்சு செய்ய முடியாத நிலையில் அப்படி ஒரு தவறு நேர்ந்து விட்டது.. அதற்காக ஜெ.மோ ரசிகர் என்றெல்லாம் சொல்லி மனத்தைக் கஷ்டப்பட வைத்துவிட்டீர்கள்.. :)

கலாகுமரன் said...

அப்படியானால் முகநூலில் நிறையபேரு உலாவுராங்களே....என்செய்ய

கலாகுமரன் said...

take it easy.

Philosophy Prabhakaran said...

ஜீவன் சுப்பு,

தமிங்கிலத்தில் எழுதியதால் ஜெமோ ரசிகரா என்று கேட்கிறார்... கப்பென பிடித்துக்கொள்ள வேண்டாமா ?

Philosophy Prabhakaran said...

அமுதா கிருஷ்ணா,

நீங்கள் சொல்வது போல படம் புரிந்துக்கொள்ள முடியாமல் இல்லை...

படம் பிடிக்கிறது என்று சொல்பவர்களை தான் புரிந்துக்கொள்ள முடியவில்லை...

Philosophy Prabhakaran said...

மயிலன்,

முன் ஜாமீன் போட்டு எழுதுறதுல நீர் ஸ்பெஷலிஸ்ட் ஆயிட்டீர் போல :) அவ்வ்வ்வவ் :))))

இப்ப எழுத்துரு சரியான அளவுக்கு வந்திருக்கு... எழுத்தும் நல்லாயிருக்கு...

J Mariano Anto Bruno Mascarenhas said...

சில சின்ன சின்ன விஷயங்கள் என்னை கவர்ந்தன

உதாரணமாக

ஆரம்ப காட்சிகளில் வர்ணா காளான் பொறுக்குகிறார்

ஏன்

அந்த உலகில் பூக்கள் மலர்வதில்லை
எனவே காய்களோ கனிகளோ கிடையாது

பூ இல்லாமல் வளரும் தாவரங்கள் தான் - காளான் தான் உணவு

J Mariano Anto Bruno Mascarenhas said...

அறுவை அரங்கினுள் மது பால கிருஷ்ணன், அறுவை அரங்கின் உடையை போட்டு விட்டு வருவது போல் ஒரு காட்சி

அவர் எப்படி வந்தார் ?

அவர் வரவில்லை

அது ரம்யாவின் கற்பனை

அனுஷ்யா said...

விமர்சகரை விமர்சிக்கக்கூடாதுன்னு தத்ஸ் விட்ட பிரபா எங்கே எங்கே எங்கே? :)

அனுஷ்யா said...

கடைசியில் பிரபாவிடமிருந்தும் 'அவ்வ்வ்வ்' வா? வவ்வால் சகவாசத்தைக் குறைத்துக்கொள்ளவும் :)

விமர்சனத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்காது. நிறைய பேருக்கு இல்லை. எழுதவேண்டாமென நினைத்ததை எழுத முற்படும்போது தானாகவே முன் ஜாமீனும் ஒரு பகுதியாகிவிடுகிறது.

எழுத்துரு உங்களின் suggestion. நன்றி

அனுஷ்யா said...

அட்டகாசம்...

J Mariano Anto Bruno Mascarenhas said...

மருவன் அடி பட்டதற்கு பதறுவதை விட
மது பால கிருஸ்ஷ்ணன் அடி பட்டதற்கு வர்ணா அதிகம் பதறுகிறார்

எந்த தாயும் தன் கணவனுக்கு அடிபட்டதை விட தன் குழந்தைக்கு அடி பட்டதற்கு தான் அதிகம் பதறுவார்

அனுஷ்யா said...

சிலர் மதுபாலக்கிருஷ்னனும் மருத்துவன் என அவர்களே நியமித்து விமர்சனம் எழுதிவிட்டு, ஒன்னுமே புரியல என பொரிந்திருக்கின்றனர்.

அனுஷ்யா said...

எழுத்தாளர் செல்வாவின் அழுத்தத்தை இயக்குனர் கோட்டைவிட்ட இடங்களில் இதுவுமொன்று. இந்த ஒரு காட்சி மட்டும் இன்னும் சிரத்தையெடுத்து பதிவாக்கியிருந்தால் படம் இரண்டு படி மேலே வந்திருக்கும்.

Dineshsanth S said...

பெரும்பாலான
மருத்துவமாணவிகளை அழகிகளாய்
காட்டியிருப்பதை ஃபேன்டஸி படத்தில்
அனுசரித்துக்கொள்ளப்படும் மற்றுமோர்
தர்க்கப்பிழையாக எடுத்துக்கொள்கிறேன்//இலங்கையில் மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன்.இந்தியாவிலுமா??

Vignesh Om said...

நல்ல பதிவு

Ramesh Rajamoni said...

நல்ல ஒரு விமர்சனம் படித்த திருப்தி

ஜீவன் சுப்பு said...

பெரும்பாலும் பின்னூட்டங்களை மின்னஞ்சல் வழி மட்டுமே படிப்பேன் , தளத்திற்கு போவதில்லை . so, பெயர் போடாம போடும்போது கொஞ்சம் சிரமமாக இருக்கு புரிந்துகொள்ள . That's all .

ஜீவன் சுப்பு said...

//??????//

இது எனக்காக என்று யூகித்து ....

தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது அசிங்கம் என்பதைப்போலவே ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதும் அசிங்கம் தானே ....?

ஜீவன் சுப்பு said...

@ பிரபாகர்


பளிச்சுன்னு நேரே சொன்னாலே நேக்கு புரியாது , இதுல குறியீடெல்லாம் வச்சு சொன்னா எங்கபோயி கப்புன்னு புடிக்குறது ? .

உங்க எழுத்துக்களையெல்லாம் வாசிக்குரதுனால இன்னும் கொஞ்ச நாள்ல நானும் “கப்”பிருவேன்னு நெனைக்குறேன் :) . BTW இந்த “கப்”புங்குறது தமிழ் வார்த்தையா ....?

அனுஷ்யா said...

உலக ஒறுமைப்பாடு என்பது இதுதான்

அனுஷ்யா said...

மன்னிக்க...

அனுஷ்யா said...

மிகச்சரி... ஓரிரு வார்த்தைகள் ஆனால் ஓ.கே தான். இந்த ஓ.கே போல :)

அனுஷ்யா said...

நன்றி

அனுஷ்யா said...

நன்றி

திவ்யா said...

இவ்வளவு நுணுக்கமாக கதாசிரியரே யோசித்திருப்பாரா எனத் திகைக்குமளவிற்கு எழுதப்பட்டிருக்கும் இப்படைப்பினை படம் பார்த்துவிட்டு மீண்டும் வாசித்தே ஆக வேணும்..! பிரபாகரன் அவர்கள் சொல்வது போல முன்ஜாமின் சற்று அதிக அளவில் தான் போய்க்கொண்டிருக்கிறது. உங்கள் எழுத்துக்களில் நான் ரசிக்கும் அந்தத் திமிர் குறைந்துவிட்டதில் சற்று வருத்தம்தான்!!!

அனுஷ்யா said...

நன்றி... :)

பார்துட்டு படிச்சிட்டும் சொல்லு..

Arjith thala said...

//கொஞ்சநேரத்தில், இரண்டாம் உலகத்து மக்களின் உடல்மொழி, பேச்சு, பாவனைகள் எல்லாமே நடிக்கத்தெரியாத முதலுலுக மாந்தர் போலத்தான் இருக்கும்போல என நமக்குநாமே நம்பிக்கொள்ளவேண்டியதாயிற்று// சரியாக சொன்னீங்க அதை அப்படியே தொடர்ந்து பார்த்தேன் :)