சகித்தவர்கள்...

18 Dec 2013

கவியரங்க கசமுசா #2


இந்தப் பதிவினைப் பிரசுரிக்கும் முன்னர், நிறைய முன்குறிப்புகள் சொல்லியாக வேண்டும்.. முதலில் இதனை இத்தனை நாளும் பதிவேற்றாமல் இருந்தமைக்கு காரணம்.. முக்கிய காரணம் என்னவெனில் துளிக்கூட திருப்தியில்லாமல் போனதுதான்... மினக்கெடல் மருந்துக்கும் இல்லை... சனியன்று மதியம் சந்திப்பில் கலப்பது ஊர்ஜிதமாகியது... மாலை பேருந்து... இரண்டிற்கும் இடையில் நடந்த ஒரு வார்த்தை குவியல்தான் இது... கத்தரிப்பு, பின்சேர்க்கை எதுவுமே நடக்கவில்லை... வழக்கம்போல, வாசித்ததும் பெரும்பாலானோருக்கு விளங்கவில்லை... அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்... “அப்றம், என்ன தலைமுடிக்கு இத இன்னைக்கு பதிவேத்துற?” என்ற உங்களின் அறசீற்றம் நியாயமானது... “நல்லாயிருக்கோ இல்லையோ, அன்னைக்கு புரியல... பதிவு போடுங்க.. படிச்சுட்டாவது திட்றோம்” என்ற வாசகவட்டத்தின் வெளிக்குத்தே இதற்கு காரணம்...

புரியாமல் இருக்கும் அளவிற்கு இது தொன்தமிழோ, இலக்கிய ஆர்ப்பரிப்போ, குறியீட்டின் உச்சமோ அல்ல.. புரிந்துகொள்வதற்கு அடிப்படை தகுதி நீங்கள் “பசங்க” திரைப்படம் பார்த்திருக்க வேண்டும்.. படத்தில் முரட்டுவில்லனாக வரும் சிறுவனின் ஆகச்சிறந்த எடுபிடிதான் இங்கே பாடுப்பொருள்.. “பக்கடா”.. படத்திலொரு காட்சி வரும்.. ஹீரோ சிறுவனை பழிதீர்க்க, பக்கடாவின் யோசனை, கருப்புசாமிக்கு காசுவெட்டிப் போடுவது... இப்படியான என் உடன்வந்த பக்கடாக்கள் பற்றிய தொகுப்புதான் இது.. சம்பந்தப்பட்ட பக்கடாகளுக்கு இது பழைய நினைவுகளை சற்று சொரிந்துவிட்டால் தன்யா பாலகிரிஷ்ணன்... ச்சீ.. தன்யனாவேன்..

கவிவடிவத்தை நீங்கள் புரிந்துகொள்ள “அழகிய தமிழ்மகன்” என்ற அமரகாவியத்தைப் பார்த்திருக்கவேண்டும்.. படத்தில் நிஜமாகவே அழகான ஒரு சிறுமி, அழகிய தமிழ்மகன் என்று நம்மைக் கட்டாயப்படுத்தி நம்ப சொன்ன ஹீரோவிடம், பள்ளி போட்டிக்காக ஒரு கவிதை கேட்பாள்.. அதற்கு “நீயும் நானும் ஒன்னு, இது காந்தி பொறந்த மண்ணு...” என்ற ஒரு கவிதையை அழகர் உதிர்ப்பார்.. கிட்டத்தட்ட அதே இலக்கண அடிப்படையில்தான் இந்த கவிதையும் இயற்றப்பட்டுள்ளது... மனச தேத்திக்கோங்க... ஸ்டார்ட் மீசிக்...



வாசித்த நாள்: 01/09/2013 (ஞாயிறு)

கவியரங்கம் என்றொரு மேடை போட்டு
கருத்தாழம் மிக்க சான்றோரை முன்வைத்து
பாடடா தம்பி கவிதையொன்று என கைபிடித்து ஏற்றிவிட்டீர்..
இது நடந்து ஆண்டொன்றும் ஆயிற்று...
கல்யாண ஓலை வாசித்துவிட்டு
கமுக்கமாய் கழன்றவனைக்
கப்சிப்பென்று விட்டுருக்கலாம்..
கரகோஷம் எழுப்பி கடுகுவேறு தாளித்தீர்கள்-  இன்றிந்த
கண்றாவியையும் அனுபவியுங்கள்...
“வர வேண்டும் வேண்டும்” என நின்ற ஆரூர் மூனா அண்ணனிடம்
“வேலை இருக்குது அண்ணே.. வேணாம்” என்று ஒதுங்கியிருந்தேன்..
நகைப்புடன் வெளியான திருவிழா பதிவுகளுக்கிடையே  
புகைப்பட ஆசைக்காட்டி திகைப்படைய செய்திட்ட
கவியாழி அடிகளாரின் கட்டளைக்கு அடிபணிந்து
நுரைதள்ள ஓடிவந்திருக்கிறன்
அரைநாளில் முடித்திட்ட கவிதை என்ற ஒன்றோடு..
குறைபல இருப்பினும் அடியவனை மன்னிக்கோனும்...

எப்போதும் தலைப்பில்தான் தலைவலி எனக்கு...
தப்பு இலக்கணம் பாடினாலே தக்காளியால் அடிக்கும் கூட்டமிது..
கல்யாணம் முடித்தவன் காதலை வாசித்தால்
கல்லாலடித்தே கொண்டுபோடுவர்..
வாடிக்கிடந்த கற்பனை செடிகளில்
தேடிப்பிடித்த இந்த தலைப்புடன் உங்களின்
நாடிபிடிக்க முயற்சிக்கிறேன்...
தலைப்பை கேளுங்கள்...
“பகுத்தறிவும் பக்கடாக்களும்”
“வறட்சி வரலாம் உன் கற்பனையில் ஆனால்
புரட்சி மிஸ்ஸானால் பெரும்பாவம் தம்பி
மிரட்சி உண்டாக்கும் ஒரு tagline போடு” என்றார் நக்கீரர் அண்ணன்...
மீண்டும் கேளுங்கள் நம் தலைப்பை...
“பகுத்தறிவும் பக்கடாக்களும்”
                      TIME TO READ
குண்டு மிரட்டல் ஏதும் வந்தால்
இரண்டு நொடியில் tagஐ தூக்கிட்டு
தண்டை வளைத்து சரெண்டர் ஆகிறலாம்..
மண்டை உடைத்துக்கொள்ளும் கவலை வேண்டாம்...
அவைப்பெரியோருக்கு வணக்கங்கள்...

எப்பேர்ப்பட்ட பகுத்தறிவாளன் நான்?

பத்தொன்பது வயது வரை
கெத்தான கணேசருக்கு
பித்தான பக்தன் நான்...
கருப்பொன்று சிவப்பொன்றாய் கையிலிரண்டு கயிறு இருக்கும்..
கனமான கணேசன் டாலரொன்று நெஞ்சத்தை தொட்டிருக்கும்...
கமகமக்கும் ஜவ்வாது திருநீறும் நெற்றியிலே இட்டுருக்கும்..
பெண்ணாக நயங்கொண்டு விளக்கேற்றி
பொன்னாக புனித பூசை செய்து
விண்ணால வைத்தேன் வேண்டுதல் பல...
பல வரம் வேண்டிநின்ற எனக்கு
நிலவரம் கொஞ்சம் மோசமாக
கலவரமாகி போனது கணேசனுடன்...
அடிவைத்த படியனைத்தும் சறுக்கிவிட
நொடி கூட பொறுக்கவில்லை...
கொடி பிடித்து கிளம்பிவிட்டேன்...
நானும் நாத்திகனென்று....
ஆம்... அப்படியான சந்தர்ப்பவாத நாத்திகன் நான்...

பக்கடா எண் 1

ஐந்தாம் வகுப்பு மாணவன் எனக்கு ஐந்தாயிரம் பிரச்சனைகள் அந்நாளில்...
பிடிக்காத இட்லியை பூண்டு நாறும் பொடிகொண்டு
கடிக்காமல் கண்மூடி கரைத்துள்ளே தள்ளவேண்டும்
முடிக்காத ஹோம்வொர்க்கை சமாளிக்க மாஸ்டர் ப்ளான் தீட்டவேண்டும்
பிடிக்காத மாஸ்டர் வந்தால் பின்னாடி பிரம்படியும் வாங்கவேண்டும்- அது
வலிக்காது போல நடித்து பிரியாவிடம் இளிக்கவேண்டும்
கிளாஸ் லீடர் பொறுப்பேற்று அவளிடம்
மாஸ் காட்டி மவுசேற்றி மடக்க வேண்டும்...
வீடு திரும்பும் வேளைதனில்
சாரதிக்கு தெரியாமல் ஷகிலா போஸ்டர் பார்க்கவேண்டும்..
ரிபோர்ட் கார்டு வந்துவிட்டால் அப்பாவிடம் தப்பிக்க
சப்போர்ட்டுக்கு ஆள் வேண்டும்...

“மாங்கு மாங்கன படித்தாலும்
ரேங்கு ரெண்டிலே ஒட்டிக்கிட்டு
தேங்கி நிக்குதேடா பாலாஜி” என்று
வாங்கி தந்தேன் பன்னீர் சோடாவும் பூமர் சவ்வும்..
பில்லி சூனிய கில்லி அவன்...!

“மொட்டை முனியன் குங்குமமும்
கட்டைவிரலின் அரை நகமும்
இரட்டை சொட்டு விரல் ரத்தமும்
சண்டாளன் கணக்கு புக்கில் இட்டுவிட்டு
ரெண்டாவது ரேங்கு கவலையை விட்டுவிட்டு” என்றான்
விரைவாக செய்துவிட்ட சூன்யத்துடன்
நிறைவாக ஏறிட்டேன் அரையாண்டு தேர்வதனை..!
முறையாக திருத்திட்ட விடைத்தாளை
பறையடித்து வாசித்தார் கணக்கு வாத்தியார்...

சென்ட்டம் சண்டாளனைப் போயி சேர்ந்தது..
பிரியாவைப் பார்த்தும் பல்லிளித்தது- தேமே என்றிருந்த
திவ்யாவுக்கும்கூட ஷுரா கிடைத்தது...
ரெண்டு எனக்கு நாலானது...
இதயம் நொறுங்கி தூளானது!
விடுப்பு பத்து நாள் எடுத்து - என்
கடுப்பிலிருந்து எஸ்சானான் பண்டார பக்கடா..!

பக்கடா எண் 2

மீசை சற்றே முட்டி அரும்ப.. மனதில்
மேசை போட்டு ஆடலாகின ஆசை பல..!
எல்லாம் அவள் ஆசைகள்...!

அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் தொடங்கிவிடும்
அதிமுக்கிய டியுஷன் அது...
குதிகாலில் வெந்நீர்விட்டு அரக்கபரக்க பறந்துசென்று
சதிகாரி சைக்கில்தனை பின்தொடரும் கடமை எனக்கு..
உந்தி சென்றால் சிரிப்பாள்! - சற்று
முந்தி சென்றால் முறைப்பாள் – பின்னாளில்
என் சந்தி சிரிக்கப்போகும் அடையாளம் மட்டும் மறைப்பாள் !

வந்துவிட்டான் பக்கடா இங்கும்...!
அறைங்கான் கயிற்றைக் காட்டிலும்
அரையடி நீண்ட கயிறொன்று காட்டி
கரைதுளியின்றி செய்திட்டான் சத்தியமும்...
“வெயில் வரும் முன்னே அவள் சைக்கிளில் இதை கட்டிவிடு
குயில் வரும் உன்னோடு.. ! அமௌன்ட் எனக்கு வெட்டிவிடு” என்றான்...
மதிகெட்டுப்போன நானும்
மதில் சுவரெல்லாம் தாண்டி சென்று
கதிகலங்க முடித்துவந்தேன் காரியத்தை !
விதிவலை புரியாது நின்ற எனை
ரதியவளும் கடந்து சென்று
சதிகலந்த புன்னகையை சிந்திவிட்டாள்..!
வரமொன்று தேடி வருமென எண்ணி
சிரமுயர்த்தி பெருமிதம் கொண்டிருந்த வேளை
கரம் நீட்ட சொன்னவள் ,
சரியாக அதே நிறத்தில்,
அதே நீளத்தில்,
கயிறொன்று கட்டி சொன்னாள்
“ஹாப்பி ரக்ஷாபந்தன்..”
தேரை இழுத்து என் நெஞ்சில் ஏற்றி
ஊரை காலிசெய்து ஓடிப்போனான் - என் காதல்
வேரை அறுத்த பக்கடா பயல்!

பக்கடா எண் 3

முகம் காணாத முகநூல் காதல் பற்றி
அகம் மகிழ்ந்து போயிருந்த அரைவேர்க்காடு பொழுது அது...
நகம்சதையாய் பழகி இருந்த நண்பன்தான் பக்கடா இங்கே...
அரைபோதையில் இருந்த அவன்
தரை தடவி எடுத்திட்டான் பாட்டில் இரண்டு...
அசந்துபோக செய்யும் அந்த காதல் பற்றி
கசந்துபோக செய்யும்படி மொக்கை போட்டு
வசந்தமாளிகை சிவாஜிபோல வசனம் பேசி..
அவர் மகனைப் போன்றொரு மாடுலேஷனில் கர்ஜித்தான்
“ஒன்றெரிந்து மற்றொன்றால் அடித்து உடை
அதன் பின்னே,
‘உன் பிகர் உன் உரிமை’ ”
என் காட்டில் என்ன மழையோ
பாட்டில் உடைந்து தூளானது..
இது நடந்து கொஞ்சம் நாளானது

“சாட்டில் வந்த  பெண்ணவளை
காட்டு காட்டு” என நச்சரித்தான்
லேப்ட்டாப் திறந்து காட்டியவேளை
என் லப்டப் நிற்கும் வார்த்தை சொன்னான்...
“அது என்னோட fake id மச்சான்”
மூன்றாவது பாட்டில் கிடைத்திருந்தால்
மயக்கம் என்ன தனுஷாக மாறியிருப்பேன்...
“பீல் ஆகாதே மச்சி...
நாளானா சரியாய்டும்” என்று சொல்லி கிங்ஸ் ஒன்றும் நீட்டினான்...
கூலாக பதில் சொன்னேன்...
“நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது”

பக்கடா எண் 4

கல்யாணம் முடித்த மூன்றாம் மாதம்
நல்ல சேதி சொல்ல வேண்டுமாம்
வல்லவனான கணவன்மார்கள்.. !
நானோ வல்லவனுக்கு வல்லவன்.. !
“பொண்ணுக்கு என்ன பேரு” என்றான்
புதிதாய் முளைத்த பக்கடா ஒருவன்...
“ஆணோ பெண்ணோ யானறியேன்..
தானே வரட்டும் நேரமது- அதுவரை
மானே தேனே மட்டும் போட்டுக்கொள்வோம்” என நின்றேன்.
“பல மரங்கண்ட தச்சன் மரமொன்றும் வெட்டான்
பல ஃபிகர் கண்ட மச்சான் பெண்பிள்ளைக்கே அப்பன்...”
என்பது பக்கடாவின் நான்காம் விதி...
மகள்களைப் பெற்ற அப்பாக்கள் வரிசையில்
அடியேனும் ஒன்றாவ போவதேன்னி
பெயர் தேடும் படலத்தை தொடங்கிட்டேன்..
பழைய காதலியின் பெயரை வைக்கலாமெனில்
எத்தனை பெயர்கள் வைப்பது?
வருத்தி எடுத்த கடங்காரிகளை மட்டும்
நிறுத்திவைத்தேன் கணக்கிற்குள்...!
ஒருத்திக்கு ஓரெழுத்தாய் உருவியெடுத்தேன்

வெட்டைவிரிச்சோடி வெயில் பிளக்கும்
மொட்டை மாடி ஏறிவந்து
உள்ளாடை காயவைத்து எனை
தள்ளாட வைத்தவள் ஞாபகம் முதலில் நின்றது...
பெயரில் இருந்து “சி”யை உருவினேன்..
சிறு கீற்றாய் திருநீர் இட்டு  
உருமாறும் புன்னைகை ஒளித்து
இரண்டாவது பெஞ்சில் அமர்ந்திருந்தவள்
இரண்டாவதாய் நினைவில் வர
அவள் பெயரில் இருந்து “ரு” வந்தது..
என் பதிவுகளின் கதாநாயகி
சிவப்பு சுடிதார் இல்லாமலா.?.
அவள் பெயரில் இருந்து ‘தி’ மட்டும்..
‘சி’ ‘ரு’ ‘தி’ என்ற உயிர்மெய்களுக்கு இடையே
மெய்யொன்று வேண்டுமன்றோ?.
சமீபத்திய காதலி நஸ்ரியா
விட்டுபோனால் நல்லாவா இருக்கும்...?
‘ஸ்’  வந்தது...

ஆறுவாரம் இழைத்த பெயரை
ஆரவாரம் கூட்டிக்கொண்டு
காரசாரம் சேர்த்து சொன்னேன் மனைவியிடம்

“ ‘சிருஸ்தி’...  எப்டி?”

“பையனென்றால்!!!!!?” , புருவம் உயர்த்தினாள் ..
“பெண்தான்! பெண்ணேதான்!!..”
தங்கமீன்கள் டிரைலரில் அடித்து சத்தியம் செய்தேன்
படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் போனதுதான் மிச்சம்...
மாதம் எட்டு கடந்தபின்னும் – பால்
பேதம் பற்றி சிந்தனையில்லை அவளுக்கு...
வாதம் செய்ய விரும்பாதவள்
மீதமுள்ள மாதம்தனில் எத்தனை ஸ்கேன் மிச்சமென்றாள்...
“ஒன்று” என்றேன்
“என்று?” என்றாள்
அன்றே அறிய ஆயத்தமானோம்..
கருப்புவெள்ளை ஸ்கேன் திரையில்
நெருப்பு போன்றொரு ஆண்மகன் அசைய
பருப்பு வெந்து போனதெனக்கு...
பகுத்தறிவல்ல..
படித்த மருத்துவமும்
பக்கடாக்கள் முன்பு
துக்கடாதான்
அக்கடான்னு இருந்த வேளை- வந்து
சிக்கடா- என்று நின்றது பதிவர் திருவிழா அழைப்பொன்று

வெற்றிக்கோடு ஒருவர் போட
சேட்டை அதிலே ரோடு போட
இதழில் ஒருவர் கவிதையெழுத
“புக்கேதும் வெளியிடலையா?” –என்று
கொக்கிப்போட்டார்  அரசன் நேற்று..

பதில் சொல்லும் நேரமிது..
“பத்து மாதம் பதிப்பிலிருந்த- என்
முத்தான முதல் கவிதை- நாளை வருகிறான்
கெத்தாக இவ்வுலகிற்கு...
நான் சொத்தாக நினைப்பதெல்லாம்
சான்றோர் உங்களின் வற்றாத வாழ்த்தினைதான்”


எப்போதும் உங்களின் ஆசி வேண்டி..
அனுஷ்யா


சென்ற ஆண்டு சம்பவம்: கவியரங்க கசமுசா


9 comments:

கோகுல் said...

எனது பக்கடாக்களின் நினைவுகளில் இன்று உறக்கம் கடிது

கோகுல் said...

முதல் கவிதையின் பெயர்?

அனுஷ்யா said...

ரிஷி வர்தன்

அமுதா கிருஷ்ணா said...

இன்று தான் நிறைய விஷயம் புரிந்தது...

ராஜி said...

பாடடா தம்பி கவிதையொன்று என கைபிடித்து ஏற்றிவிட்டீர்.
>>
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கால்களில் விழாதக் குறையா கெஞ்சி மேடை ஏறி கவிதை வாசித்துட்டு இன்னா பில்டப் குடுக்குறே தம்பி!!

Sathyaseelan Rajendran said...
This comment has been removed by the author.
Sathyaseelan Rajendran said...

இவர் எழுதும் கவிதைகளின் முன்னுரையை மட்டும் யாரும் படிக்க வேண்டாம். ஏனெனில் அதில் என்றுமே உண்மை இருந்ததில்லை. தன்னைத் தாழ்த்தி தாழ்த்தி அப்படி என்ன சுகம் தான் இவர் காண்பரோ ? திறமை இருக்கும் பொழுது அதனை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் ஒரு தமிழனுக்கு அழகு தான். அதை என்று தான் இவர் உணர்வாரோ ? அது வரை இவரும் எனக்கு விரோதி தான்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

அரசன் சே said...

பக்கடா எண் - 2ம் 4ம் ... சூப்பர் அண்ணாச்சி ... போன வருடம் இருந்த துல்லியம் இந்த வருடம் இல்லாமல் போனதின் காரணம் அரங்கின் ஒலி அமைப்பும் ஒரு வகையில் காரணம் ... இந்த வகையறா நீண்ட கவிதைகளை தெளிவான ஒலி அமைப்பில் கேட்டிருந்தால் நன்றாக விளங்கி இருக்கும் ...

முதல் தொகுப்புக்கு பெயர் சூப்பர் ..

அண்ணாச்சியை இகழ்ந்து கருத்திட முனைந்த ராஜி அக்காவை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்பதை அடங்கா சந்தோஷத்துடன் அறிவித்து கொள்கிறோம் ...

மயிலனார் பேரவை
அரியலூர் கிளை ...
(குறும்படம் வெற்றிக்குப் பின் பட்டம் வழங்கி பெருமை சேர்ப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் )

அனுஷ்யா said...

வீடியொ அனுப்புறேன்னு சொன்னியலே?