சகித்தவர்கள்...

26 Dec 2013

மகளைப் பெற்ற அப்பா


நடக்கத்தான் போகிறதென தெரியும். இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்க வேண்டியதில்லை. பின்னிரவு பொழுது. பக்கத்து வீட்டிலும் யாரையும் எழுப்பி உதவி கேட்கும் அளவிற்கு பெரிதாய் பழக்கமில்லை. மருந்தகங்கள் எதுவும் இவ்வேளையில் திறந்திருக்குமா? அப்படியே இருந்தாலும் கீர்த்தியை இந்த நிலையில், இப்படியே, வீட்டில் தனியே விட்டுப் போகமுடியுமா? யாரையும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாமா? நான்ஸி நியாபகம்தான் முதலில் வருகிறது. அவளும் கொச்சினில்தான் இருக்கிறாள் என்பது மட்டும் காரணமல்ல. பதிமூன்றாண்டு கால தோழி. ஆனால் இந்நேரத்தில் அழைக்கலாமா? ஜான் தவறாக நினைத்துக்கொண்டால்? இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது? ஜான் மொபைலுக்கே அழைத்துவிடலாம்..88436***..... அழைப்பு சென்று.. நீண்டு.. முடியும் தருவாயில் loudspeaker...

"the person you are calling, is currently unavailable to atte...." பீப்

விரக்தி.. இயலாமை ஆட்கொள்ளும் பொழுதுகளின் உச்சம்.. மடமடவென ஒரு கிளாஸ் தண்ணீரை விழுங்கிவிட்டு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைகிறான்.

"கீர்த்திமா, ரொம்ப வலிக்குதாடா?" மிக மெதுவான குரலில்..

" விட்டுவிட்டு வலிக்குதுப்பா"

"கொஞ்சம் பொறுத்துக்கோடா, டேப்லட் எதுவும் கைல இல்ல.. "

"யூரின் போற எடத்துல ப்ளட் வந்துட்டே இருக்குப்பா"

என்ன சொல்வது? எப்படி புரியவைப்பது? ஒன்பது வயது குழந்தை அவள். சமவயது தோழிகளிடம் இதுப்பற்றி பேசியிருக்கக்கூட வாய்ப்புகள் குறைவு. அதுவும் கொச்சினுக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. தோழிகளும் நிறையப்பேர் இருப்பதாய் தெரியவில்லை. மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமா? எதாவது ஒரு பெண் மருத்துவர்? இவ்வேளையில் இருப்பார்களா? இவையெல்லாம்விட முக்கியமான கேள்வி.. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய சம்பவம்தானா இது? குழப்பங்கள் வலுக்கிறது.. வலிக்கிறது.

"ஹாஸ்பிட்டல் போலாமாடா ? "

"வேணாம்ப்பா.. வலி இப்ப இல்ல... நீயும் வந்து படுத்துக்கோ.."

இரத்தம் வந்துகொண்டே இருந்தால் எப்படி தூங்குவாள்? எங்காவது ஓடிப்போய் ஒரு நாப்கின் மட்டும் வாங்கிவந்துவிடலாமா? தனியே விட்டும் செல்ல முடியாதே. பெண் பூப்பெய்தியதிற்கு வருத்தப்படும் தந்தை நானாகத்தான் இருக்கமுடியும். கடவுளே.. குழந்தை கொஞ்சம் தூங்கவாவது வேண்டும் இப்போதைக்கு.. புதிதாய் வாங்கி பிரிக்காமலிருக்கும் பனியன்.. ஆம்.. அளவாய் வெட்டி, கிழித்து, மடித்து நாப்க்கின் செய்துவிடலாம். 

"குட்டிமா, கொஞ்சம் பொறுடா... அப்பா அந்த ரூமுக்கு போயிட்டு வந்துடறேன்"

"ஹ்ம்ம்.. லைட் ஆஃப் பண்ணாதப்பா... அப்டியே இருக்கட்டும்.. பயமா இருக்கு..."

வினாடியில் கண்கள் குளமாகிவிட்டன. மீண்டும் சென்று அவள் தலைமுடியை கோதிவிட்டு நெற்றியில் முத்தமிடுகிறான். சிரிக்கிறாள். இது போதும்.. இன்னும் கொஞ்ச நேரமாவது தெளிவாய் இயங்க..  இது போதும்.. நினைத்தது போலவே தற்காலிக ஒப்பேத்தலுக்கு நாப்க்கின் தயாராகிவிட்டது. கொஞ்சமாய் தயங்கி கீர்த்தி இருக்கும் அறையில் நுழைகையில் அவள் தூங்கியிருந்தாள்.. மீண்டும் நெற்றியில் ஒரு முத்தம் மட்டும். ஆனால் நிச்சயமாக தூக்கம் வரப்போவதில்லை. என்ன செய்யலாம்? எப்படி எடுத்துக்கூறுவது? இணையத்திலும் துழாவிப்பார்த்தாகிவிட்டது. கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ சங்கேத மொழிகள் பெரும்பாலும் புரியவில்லை.. அல்லது புரிந்துகொள்ளும் மனநிலை இப்போதில்லை.
விடிந்ததும், நான்ஸிக்கு ஃபோன் செய்து வர சொல்லிவிடவேண்டும்.. இன்று ஒரு நாள் மட்டும் அவளை கீர்த்தியுடன் தங்கியிருக்க சொல்லிக்கேட்கலாம். விஷயத்தை சொன்னால் போதும். அவளே தங்கிவிடுவாள். நன்றாக நினைவிருக்கிறது. தங்கை பூப்பெய்திய நாளில் அம்மா, பெரியம்மா எல்லாம் எப்படி பார்த்துக்கொண்டார்கள் என்பது இருபது வருடங்கள் கடந்தும் நினைவிலிருக்கிறது. குழந்தைக்கு அம்மா இருக்கணும். கீர்த்தியின் அம்மா? சடசடவென நினைவில் காட்சிகள் வந்து விழுகின்றன.. கீர்த்தி வயிற்றிலிருக்கும் போதிலிருந்தே இருந்த கருத்து வேறுபாடுகள், கீர்த்தி பிறந்தது, சரியாக குழந்தை பிறந்த நான்காவது மாதம் ஒரு முற்பகலில் அலுவலகத்தில் இருந்து இவன் வீடு திரும்ப, அவள் அஷோக்குடன் படுத்திருந்தது... ச்சீய்.. பொம்பளையா அவ? அப்படியே கசந்தது.. dirty bitch.. அம்மாவுந்தேவயில்ல.. ஒரு மண்ணுந்தேவயில்ல... என் பொண்ணு.. எதாயிருந்தாலும் நா பாத்துக்கிறேன்... எப்படியோ தூக்கம் வந்துவிட்டது.. 

3.3௦

5.௦௦ 

5.36 

"அப்பா... அப்பா... ஃபோன் அடிக்குது பாரு..."

........


"அப்பா.. ஜான் அங்கிள் ஃபோன் பண்றாரு... ப்பா... எந்திரிப்பா... ஹ்ம்ம்... இந்தா... ஜான் அங்கிள்...."

"ஹஹலோ.. ஜ.ஜான்"

.........

"ஒன்னுமில்ல.. சும்மாதான்... கீர்த்தி ஏஜ்-அட்டன்ட் பண்ணியிருக்கா... "

......

"yeah... thanks John... அதான்...."

......

"இல்ல.. எனக்கு ஒன்னுமே புரியல... நான்ஸிட்ட கேக்கலாமுன்னு ஃபோன் பண்ணேன்.."

.......

"ஹோ, எப்போ? நல்லாயிருக்கான்ல ?"

.......

"வீட்டுக்கு அழச்சிட்டு வந்தாச்சா?"

.......

"எந்த நம்பர்...? பழைய தமிழ்நாடு நம்பர்க்கு பண்ணட்டா?"

.......

"ஓகே ஜான்.... நா பேசறேன்"

.......

"ஹ்ம்ம்.. ஓகே கே ஜான்... நா உங்களுக்கு அப்பறம் பேசறேன்..."

.......

"ஹ்ம்ம்... பை...""நான்ஸி ஆன்ட்டி நாகர்கோவில் போயிருக்காங்களாம்"

"இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவ் போட்ருட்டுமாப்பா?"

"ஹ்ம்ம்..  monday போய்க்கலாம்"

"செரிப்பா"

.......
6.1௦ 

"அப்பா, யூரின் போகலாமா? ஒன்னு ஆகாதுல்ல?"

" எந்திரிச்சு வாடா, அப்பாவும் கூட வறேன்..."

..........

"அப்பா, பேண்டீ'ல நெறைய ப்ளட்டா இருக்கு, வேற எடுத்துட்டு வாயேன்..."

"கொஞ்சம் பொறுடா.. எந்திரிக்காத... நா எடுத்துட்டு வறேன்.. டிஷ்யு ல கைய தொடச்சுக்கோ.."

.........

"இந்தாடா..."

"ஹ்ம்ம்..."

.....

"ஏம்பா, பனியன வெட்டி உள்ள வெச்சிருக்க? "

"சொல்றேன்...இப்ப போட்டுக்கோ..."

புரிந்துவிட்டது.. அவளுக்கு அதைப்பற்றி அவ்வளவாக புரிதலில்லை என்பது புரிந்துவிட்டது. வீட்டில் பெண் யாரும் இருந்திருந்தால் இதெல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்கும்.. நான்கு மாத குழந்தையிலிருந்து அப்பா வளர்ப்பு. கார்டூன் தவிர டிவியில் எதுவும் பார்ப்பதில்லை.. ஆச்சர்யமில்லை. அப்படித்தானிருப்பாள். நான்ஸியிடம் பேச சொல்லலாம்.

"கீர்த்தி, இப்டி ஒக்காரு..."

"என்னப்பா?"

"நீ பெரியவளாயிட்ட.."

"தெரியுது... ஆனா, ஏன் ப்ளட்லாம் வருது?"

"அப்டிதான் இருக்கும்.. வலி இருக்கும்..."

"எத்தன நாளிருக்கும்..?"

"ஹ்ம்ம்... ஒரு.. ஒரு வாரம்.. பத்து நாள்... சரியா தெரியல..."

"அப்புறம்..?"

"அடுத்த மாசம் திரும்பவும் வரும்...?"

"எல்லா மாசமும் வருமா? ஹ்ம்ம்ம்... என்னப்பா?"

"எல்லாருக்கும் இப்டிதான்டா..."

"அப்புறம் எப்பதான் நிக்கும்...?"

"நான்ஸி ஆண்ட்டிட்ட பேசறியா?"

"இல்ல.. நீயே சொல்லு..."

"அப்பாக்கு நெறையா தெரியாதுமா... ஆண்ட்டிக்கு ஃபோன் பண்ணி தறேன்... பேசு... செரியா?"

"போப்பா..."

மடியில் சாய்ந்துகொண்டுவிட்டாள்.. மணி ஏழாகப்போகிறது.. நான்ஸி விழித்திருப்பாள்.. இந்த நேரத்திலா அவள் தம்பிக்கு ஆக்ஸிடன்ட் ஆகவேண்டும். குடிக்க ஆரம்பித்திருக்கிறான் என்று சென்ற முறை பேசிக்கொண்டிருக்கும்போது நான்ஸி வருத்தப்பட்டது நினைவிருக்கிறது. ஃபோன் செய்யலாமா?

"நான்ஸி..."

......

"ஹ்ம்ம்.. மார்னிங்..."

......

"ஜான் சொன்னாரு.. அதான் இந்த நம்பருக்கு பண்ணேன்"

......
.................
.......................
.........

"குடிச்சிருந்தானா?"

........

"அப்றம் .... கீர்த்தி ஏஜ்-அட்டென்ட் பண்ணியிருக்கா..."

......

"ஹ்ம்ம்.. அதுக்குதான் ஜானுக்கே ஃபோன் பண்ணேன்..."

.....

" ஒன்னுமே புரியலடா... பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு.. அவளும் கொழந்தல்ல..  வெதுக்குவெதுக்குன்னு முழிக்கிறா... பாவமா இருக்கு.. நைட்லேந்து ஏதோ போட்டு ஒலப்பிட்டு  இருக்கேன்.."

........

"ஹ்ம்ம்.. அதுக்குதான்... பேச சொல்லலாம்ன்னுதான் ஃபோன் பண்ணேன்..."

..........

"இரு கொடுக்கறேன்..."


"கீர்த்தி... கீர்த்திமா... இந்தா.. நான்ஸி ஆண்ட்டி பேசறாங்க..."


"ஆண்ட்டி..."

.......

"ஃபைன் ஆண்ட்டி..."

.......

"ஆமா.. நைட்டுதான்... ரெண்டு மணியிருக்கும்...டாய்லெட் வர்ற மாதிரி இருந்துது... நைட்டே கொஞ்சம் வலி இருந்துச்சு..."

........

"ஹ்ம்ம்.. அப்பா சொன்னாங்க..."

........

"அது எதுக்கு?"

.......

"செரி.. செரி.. அப்பா பனியன் கட் பண்ணி கொடுத்தாரு.."

........

"எல்லா மாசமும் வலிக்குமா?"

.......

"செரி... டேப்லட் போட்டு வராம பண்ணிரலாமா? "

.............
......................
................................
...........
.............

"ஹ்ம்ம்.. "

.............

"பயமா இருக்கு ஆண்ட்டி..."

.........

"ஃப்ரெண்ட்ஸ்கெல்லாம் தெரிஞ்சா கிண்டல் பண்ணுவாங்க.."

..........

"செரி.. அப்பாவ வாங்கிட்டு வர சொல்றேன்..."

.........

"அப்பாட்ட கொடுக்றேன்..."

"நான்ஸி..."

...............

"ஓகே... நா சொல்றேன்..."

.........

"ஹ்ம்ம்... கொச்சின் வந்ததும் சொல்லு..."

.....

"ஹ்ம்ம்.. பை டா"

................

கீர்த்தி இன்னும் குழப்பம் அதிகமானவளாய் தெரிகிறாள்... கண்கள் கலங்கியிருக்கின்றன... தலைமுடி அலங்கோலமாய் இருப்பதும் தெளிவுநிலையை சிதைப்பதாய் தெரிகிறது... 

"கீர்த்திமா... என்னடா?"

"ஆண்ட்டி என்னனமோ சொல்றாங்கப்பா.. பயமா இருக்கு..."

"ஒன்னும் பயமில்லமா... எல்லாருக்கும் இப்டிதான்டா இருக்கும்..."

எல்லோருக்கும் உண்மையிலேயே இப்படிதானா? அம்மா என்றொருத்தி இருப்பாளே? நல்ல அம்மா என்றொருத்தி... பாட்டி..அத்தை... யாரோ ஒருவர்.. கீர்த்திக்கு மட்டும் ஏன் இப்படியொரு சாபம்? எத்தனை அப்பன்கள் இப்படியொரு நிலையைக் கடந்திருப்பார்கள்...

"ப்பா..."

"என்னடா?"

"யூனிஃபார்ம்ல ப்ளட் தெரிஞ்சா, எல்லாருக்கும் புரிஞ்சுடுமாப்பா...?"

"அப்டியெல்லாம் தெரியாதுடா.."

"போ... நா ஸ்கூலுக்கே போகல..."

"செரி.. வேணாம்.. எப்ப தோணுதோ அப்ப போகலாம்..."

"ஒன்னு வேணாம்... நா பையனாவே பொறந்திருக்கலாம்.."

" சரி... அப்பா மெடிக்கல் ஷாப் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்..."

"நானும் வறேன்..."

"இல்ல வேணாம்... டிவி போட்டு பாத்துட்டு இரு..."

"டைரிமில்க்.."

"செரி.."

......

"ஒரு சானிட்டரி நாப்கின்..."

"என்ன பிராண்ட் சார்?"

"எதாவது ஒன்னு... ஹா.. விஸ்பர்..."

"ஹ்ம்ம்..."

"சின்ன சைஸ் எதுவும் இருக்கா?"

"இதான் சார் ரெகுலர்..."

"இல்ல, கொஞ்சம் சின்ன பொண்ணு..."

"சின்ன கொழந்தன்னா, பேம்பர்ஸ் தான்..."


நினைவிருக்கிறது.. பேம்பர்ஸ் வாங்கி ஏழு வருடம்தான் ஆகிறது.. அதற்குள் பெரிய மனுஷியா? ஒவ்வொரு மாதமும், அவள் கேட்குமாறான நிலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.. எப்பவும் வீட்டில் ஒரு பேக் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 

"ஏம்பா.. இவ்ளோ நேரம்?"

"15 மினிட்ஸ்தானடா ஆகுது"

"இத ஏன் இப்டி போட்டு நியூஸ் பேப்பர்ல மடிச்சு வெச்சிருக்காங்க?"

"எப்டி யூஸ் பண்ணனும்ன்னு தெரியுமா?"

"ஹ்ம்ம்.. ஆண்ட்டி ஃபோன்ல சொன்னாங்க..."

"செரி..."

"இதுக்குதான் பனியன கட் பண்ணி கொடுத்தியா?"

"ஹ்ம்ம்"

.........

"வெந்நீர் போடறேன்... குளிக்கிறியா?"

"இன்னைக்கு thursday.. நீதான் குளிப்பாட்டிவிடனும்... மறந்துட்டியா?"

"இல்ல.. இன்னைக்கு நீ குளி...அப்பாக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு... தூங்கறேன்..."

"பொய் சொல்ற..."

"இல்லடா... இனிமே நீயே குளிக்கணும்.."

"ஒன்னு வேணாம்..."

"கீர்த்தி.. சொன்னா கேக்கமாட்டியா?"

"போ.. குளிக்கிறேன்..."

......

"நீ படுத்துக்கோ..."

இதையெல்லாம் கடக்க இன்னும் எத்தனை நாள் ஆகும். தன்னை பெரிய மனுஷியாகவே எப்போ உணரப்போகிறாள். எத்தனை தூரம் அவளுக்கு ஒவ்வொன்றையும் புரியவைக்கமுடியும்? அவளுக்கே தானாய் புரிய வேண்டும். எத்தனை ஆழம் ஒரு அப்பனால் பேச முடியும்? ஒரு மூன்று வருடங்களுக்கான ஃபாஸ்ட் ஃபார்வட் பட்டன் இருந்தால் நல்லாயிருக்கும். கீர்த்தி பக்குவப்பட்டவளாய்... எல்லாம் புரிந்தவளாய்... பகல் கனவு தூக்கத்தில் முடிகிறது...

"அப்பா... ப்பா..."

"ஹ்ம்ம்.. குளிச்சிட்டியா"

"ம்ம்ம்.. டைரிமில்க்கும் சாப்ட்டு முடிச்சிட்டேன்..."

"ப்ரேக்ஃபஸ்ட்?"

"நீ ஆஃபிஸ் போலையா?"

"இல்ல.."

"அப்போ... லேட்டா சாப்டுறேன்.. கொஞ்ச நேரம் திரும்பவும் தூங்கப்போறேன்.."

"சரி...இங்க வந்து படுத்துக்கோ..."

"ஹ்ம்ம்..."

"கால அப்பா மேல போட்டுக்கோ..."

"ஹ்ம்ம்..."

"ச்சமத்து"

......

"ஏன்டா கால எடுத்துட்ட?"

"வேணாம்ப்பா... ஒரு மாதிரி  uneasyயா இருக்கு"முற்றும் 


42 comments:

கோகுல் said...

தெரியாமலா நடுவரா போட்டாங்க?ம்ம்ம்ம்

அனுஷ்யா said...

கமெண்ட்ல ஒரு "லா" எழுத்துப்பிழை இருக்கு கவனிங்க...

உஷாந்தி said...

மனதை தொட்ட பதிவு! அதிலும் அந்த கடைசி வரி! கவிதை மாதிரி இருந்தது.வாழ்த்துக்கள்!

சுரேகா said...

கடைசி வரியைப் படிக்கவே முடியாமல், கண்ணீர்...

துடைத்துவிட்டு படித்தாலும்...

மகளைப்பெற்ற அப்பா!!

Vivek Raja said...

Last line. Top notch. Can feel each and every line.

Seeni said...

Kan kalangi vittathu Sako..

அனுஷ்யா said...

நன்றி

உஷாந்தி
vivek raja
seeni

அனுஷ்யா said...

@ சுரேகா

:)
மெய்யைத் தீண்டி?

Philosophy Prabhakaran said...

நல்லவேளையா நடுவரா போட்டாங்க...

அதுசரி, அதென்ன நான்சி, ஜான்'னு கதாபாத்திர பெயர்கள்... பாக்ஸிங் டே சிறப்பு சிறுகதையா ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல நரேஷன். பால குமாரன் சிறுகதை படித்ததுபோல் அமைந்திருந்தது வாழ்த்துக்கள்
அம்மா பற்றிய குட்டி பிளாஷ் பேக் கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. இது தேவையும் இல்லை என்றே கருதுகிறேன். அவை இல்லாமலே ஒரு இளம் தந்தையின் தவிப்பை உணர்த்தும் , அந்தப் பகுதியை எடுத்துவிட்டாலும் கதையின் போக்கும் நோக்கமும் மாறாது .
மனதில் தோன்றியதை சொன்னேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

Romba naal kalicchu oru nalla pathivu padiccha thiruptthi...:)

வேடந்தாங்கல் - கருண் said...

மகளைப் பெற்ற அப்பாகளுக்கு கடைசி வரி... நிச்சயமாக கண்ணீர்...

ராஜி said...

நேத்து நைட் மொபைல்ல படிச்சேன். கண்ணுல தண்ணி வந்துட்டுது. 14 வயசான என் மகனை நான் அணைச்சுக்கிட்டு தூங்குற மாதிரி, 10வயதில் கூட என் மகள்களை என்னவர் தொடத் தயங்குவார் என்ன சொல்ல!? அருமையான் பகிர்வு மயிலா! வாழ்த்துகள்

Raja rajan said...

Wow... final is really super. .:)

அனுஷ்யா said...

@Philosophy Prabhakaran

//நல்லவேளையா நடுவரா போட்டாங்க...//

அப்படியில்லேனாலும் இந்த கதைய அனுப்பியிருப்பேனான்னு தெரியல.. போட்டின்னா இயல்பு மாறிடும்.. புது முயற்சின்னு எதாவது பண்ணி பல்பு வாங்கிருப்பேன்..

//அதுசரி, அதென்ன நான்சி, ஜான்'னு கதாபாத்திர பெயர்கள்... பாக்ஸிங் டே சிறப்பு சிறுகதையா?//

நிவின்னு வெச்சுதான் எழுதுனேன். அந்த பேரு வேணாம்ன்னு வேற தேடுனேன்.. நம்ம ஜெஸ்சி ஸ்டேட்டஸ்'ல மணி இந்த பேர போட்டிருந்தாரு.. நல்லாயிருந்தது..

அப்புறம் ஜெ. சிறுகதை இலக்கணம் படிச்சீங்க போல.. புக்மார்க் பண்ணதோட இருக்கு.. இது அதுல fit ஆகுதா? இல்ல,நீங்களே சிறுகதைன்னு ஒத்துக்கிட்டீங்களே.. அதான் கேக்றேன்.. :)

அனுஷ்யா said...

@ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று

முதற்கண் நன்றி.. பெரிய வார்த்தைகளுக்கு...

உங்கள் பார்வையில் நான் அணுகவில்லை என்றுதான் நினைக்கிறேன்.. காரணம் அப்பா, மகள் தவிர வேறு பாத்திரங்களே வேண்டாம் என்று எழுத தொடங்கியது.. அம்மா இறந்துவிட்டாள் என்ற ஊகம் ஒரு தேவையற்ற சோகத்திணிப்பு.. அம்மா பாத்திரம் வந்தது.. நான்ஸி, ஜான் எல்லாமே பின்சேர்க்கைதான்..
எழுதிமுடித்ததும் எனக்கு தேவையில்லாததாக தோன்றியது நான்ஸியின் தம்பி பற்றிய வரிகள்..அதையும் அப்படியே இருக்கட்டும்ன்னு விட்டுட்டேன்..

அனுஷ்யா said...

நன்றி

இம்சைஅரசன் பாபு..
வேடந்தாங்கல் - கருண்
RAJARAJAN

அனுஷ்யா said...

@ராஜி

அக்கா, மூணு வரி கமெண்ட்ல ஒரு கதையே சொல்லீட்டீங்க அக்கா..

Unknown said...

Superb!!!!

கோவை மு சரளா said...

இன்றைய செய்திகள் தரும் பயங்கர அதிர்சிகளில் இருந்து மீண்டு வருவதற்காக ஒரு சூழலை இந்த கதை உருவாக்கியிருகிறது மயிலவன் ...உண்மையில் சகோதரிகள் உடன் பிறந்த ஆண் மகனுக்கும் தாயில்லாமல் மகளை வளர்த்த அப்பாக்களுக்கும் இந்த கதை சமர்பிக்காலாம் மனித உணர்வுகள் மகத்தானதுதான் புரிதல்கள் இருக்கும் வரை படிக்கும் பொழுதே மனதை வலிக்க செய்தது ஒரு தந்தையின் அவஸ்தை ...........

ஒரு சில வக்கிர ஆண்களின் செயல்களால் ஒட்டுமொத்த ஆண்களையும் பலியாக்க முடியாதுதான் ( அவர்களை தந்தை என்று சொல்ல முடியாததால் ஆண் என்று குறிப்பிட்டேன் ) இப்படியான படைப்புகள் ஒரு ஆரோக்கிய சூழலை உருவாகுவதோடு உடலின் மாற்றங்களை இருபாலரும் புரியும் வண்ணம் சொல்லுவதாக இருக்கிறது என்னுடைய வாழ்த்துக்கள்

வெளங்காதவன்™ said...

அன்பின் ம,

இந்தக் கதைக்கு முன்னுரை கேட்காதது எனக்கு வருத்தமளிக்கிறது. பிப்ரவரி மாசம் காப்பி ஷாப்பில் சந்தித்துப் பேசுவோம்.

வெ.

:-)

வெளங்காதவன்™ said...

நல்லாயிருக்குடே!

:-)

அமுதா கிருஷ்ணா said...

மகனைப் பெற்ற அம்மாக்களுக்கு இல்லாத வலி மகளை பெற்ற அப்பாக்களுக்கு...

ஸ்கூல் பையன் said...

மருத்துவரே, கலக்கிட்டீங்க... கண்ல தண்ணி வந்திருச்சு... நானும் மகளைப் பெற்றவன்தான் என்பதாலோ?

சரியாத்தான் நடுவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்....

அரசன் சே said...

எல்லாத்தையும் அவ்வளவு எளிதில் கடந்து விட இயலாது அது போல இந்த படைப்பும் அண்ணாச்சி ...

கூட்டு குடும்பங்களின் வாழ்வியலை உணர்த்திச் செல்கிறது.
1) மனைவிக்கு அவ்வளவு எளிதில் அந்த சூழல் கிட்டியிருக்காது (என்ன தான் வா புட்டி மாட்டினாலும் திருடும் ஆடு திருடத்தான் செய்யும் அவர்கள் விதிவிலக்கு )

2) மகளுக்கு எடுத்துரைக்க யாராவது ஒருவர் இருந்திருப்பர் ....

அனுஷ்யா said...

நன்றி

unknown

அனுஷ்யா said...

//இன்றைய செய்திகள் தரும் பயங்கர அதிர்சிகளில் இருந்து மீண்டு வருவதற்காக ஒரு சூழலை இந்த கதை உருவாக்கியிருகிறது மயிலன் //

அந்த மாதிரியான நோக்கத்தில் எழுதவில்லை எனினும், அப்படியாக நீங்கள் உணர்ந்ததில் மகிழ்ச்சி..

//இப்படியான படைப்புகள் ஒரு ஆரோக்கிய சூழலை உருவாகுவதோடு உடலின் மாற்றங்களை இருபாலரும் புரியும் வண்ணம் சொல்லுவதாக இருக்கிறது என்னுடைய வாழ்த்துக்கள்//

ரொம்பவே நன்றி, கோவை.மு.சரளா.

அனுஷ்யா said...

@வெளங்காதவன்™

அன்பின் வெ,

முன்னுரை எழுதிவாங்கும் அளவிற்கு பொருளாதார சூழல் சரியில்லை. தவிர, என் கவிதைகளுக்கான எலிசபெத் பேரட்'களை மட்டுமே காப்பி ஷாப்பில் சந்திப்பது வழக்கம். நாம் பிச்சாவர இலக்கிய சந்திப்பில், முடிவெடுத்தபடி இந்த கதைக்கான நெகட்டிவ் விமர்சனத்தை நீங்கள் இன்னும் வெளியிடாதது வருத்தமே..

ப்ரியங்களுடன்,
ம.

அனுஷ்யா said...

@ அமுதா கிருஷ்ணா

உண்மையிலேயே நீங்கள் சொல்லவிரும்பியது அவ்வளவான வார்த்தைகள் மட்டும்தானா? அப்படியெனில், விளக்கவும்.. புரிதல் பிழை..மன்னிக்க..

அனுஷ்யா said...

@ ஸ்கூல் பையன்

ஏம்பெருசு எல்லாரும் சுத்தி சுத்தி அந்த நடுவர் போஸ்ட்டுக்கே வர்றீங்க? ஏற்கனவே கூச்சமா இருக்கு..

அனுஷ்யா said...

ரொம்பவே நன்றி அரசன்

அருணாவின் பக்கங்கள். said...

Very touching story except for the 'mom' part

அனுஷ்யா said...

கண்டிப்பாக அம்மாவை நல்லவளாகத்தான் காட்டவேண்டுமா?

Gowripriya said...

lovely mayilan!!!

ஜீவன் சுப்பு said...

//போட்டின்னா இயல்பு மாறிடும்.. // Same thought ...!

போட்டின்னா ஜெயிக்கணும் .. அதுக்காக என்னா வேணா பண்ணலாம்னுதான் mind போயிடும் /போயிடுது ...! கலை இயல்பான ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்பதே என் கருத்தும் ...

நடுவரா ...? என்ன ஜி reality show judge ஆகீட்டீங்களா ...?

அம்மாவை பற்றிய வரிகள் தேவையில்லையோன்னுதான் நானும் நினைக்கிறேன் ...!


Padmanaban Chinnaraj said...

அருமை..

அனுஷ்யா said...

Thank u

Gowri akka
Padmanaban

அனுஷ்யா said...

@ jeevan subbu

//நடுவரா ...? என்ன ஜி reality show judge ஆகீட்டீங்களா ...?//

ஆக்கிட்டாங்க
வெட்டி ப்ளாக்கர் சிறுகதை பற்றிய ேபேச்சு அது...

jk said...

It's a good and important story. Single parenting to opposite sex is terribly challenging. As usual u rocked it.

Father - daughter, their conversation, In between few paras and then the. Final touch. You could have made everything else little more grey.

(Copied from the mail)

திவ்யா said...

எல்லோரையும் அழவச்சி பார்க்கிறதுல அப்படி ஒரு சந்தோசம் உமக்கு..!! ;)

R.Umayal Gayathri said...

http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_6.html
தங்களை வலைச்சரத்தில் அறிமுக செய்து இருக்கிறேன் பாருங்கள் சகோ

Reena Sangamithirai said...

Rocking. Story made me cry n I adore my appa, for everything he is doing (from the day we lost our mom), even after me becoming a mother of a child..

Wishes for the way to go...